கிவுல் ஓயா தொடர்பாக தமிழர்கள் ஏன் அச்சமடைகின்றோம்?![]()
![]()
பா.குமுதன்.
ஊடகவியலாளர்
அரசின் அபிவிருத்திக்கு தமிழர்கள் தடையா…? KIBULOYA RESERVOIR..?
கிவுல்ஓயா தொடர்பாக பேசமுன்பு அந்த திட்டம் இடம்பெறவுள்ள மகாவலி “எல்” வலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு பெயர்மாற்றம் செய்யப்பட்ட தமிழர்களின் பூர்விக கிராமங்களை கடந்துசெல்ல முடியாது…அவற்றில் சில![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மணலாறு- வெலிஓயா,
மண்கிண்டிமலை-பன்சல்கந்த.
முந்திரிகைகுளம்-நெலும்வெவ,
ஆமையன்குளம்- கிரிப்பென்வெவ,
மயில்குளம்- மொனரவெவ,
கொக்கச்சாங்குளம்- கலாபோகஸ்வெவ,
கச்சல்சமனங்குளம்- சபுமல்கஸ்கந்த.
அந்தரவெவ- திரிவைச்சகுளம்
தற்போது விடயத்திற்கு வருவோம்… கிடப்பில் இருந்த “கிவுல்ஓயா” திட்டத்தை நடைமுறைப்படுத்த அநுரஅரசின் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ள நிலையில் அது பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தமிழ்மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் தமிழர்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படும் இந்த சூழலில் தமது பக்க நியாயங்களையும்,ஆதங்கத்தினையும் பேசவேண்டிய சூழலில் தமிழர்கள் உள்ளனர்.
“கிபுள்ஓயா” வவுனியா மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உற்பத்தியாகும் ஒரு பருவகால ஆறு. மா ஓயாவின் கிளை ஆறுகளில் ஒன்று. அதனை மறித்து “வெலி ஓயாவை”(மணலாறு) அண்டியபகுதியில் ஒரு பாரிய அணைத்தேக்கம் கட்டப்படவுள்ளது.அதுவே முன்மொழியப்பட்ட “கிவுல்ஓயா” நீர்த்தேக்கம்.
1950களில் கட்டப்பட்ட “பதவியா” திட்டத்திற்கு அடுத்ததாக, மகாவலி “எல்” வலயத்தில் அமைக்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய பிரதான நீர்த்தேக்கமாக இது இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், “கிவுல்ஓயா” ஆற்றைமறித்து சுமார்
4.41கிலோமீற்றர் நீளம் கொண்ட ஒரு பாரியஅணை மற்றும் 12.9 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகாவலி “எல்” வலயத்தின் முன்னோட்ட பணிகள் 1983இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் 1988இல் அது சிறப்பு அரசாணை மூலம் வர்த்தமானியில்பிரகடன ப்படுத்தப்பட்டது. அதன் பிரதான நோக்கமாக முல்லைத்தீவு,வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே என்று அன்று கூறப்பட்டது. ஆனால் மகாவலி நீர் வரமுன்பே அங்கு நடந்தது என்ன என்பது விடயம் அறிந்தவர்களுக்கு தெரியும்…
மகாவலியின் கிளைநதியான “அம்பன்” ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதும் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான
“மொரகஹகந்த” அணையிலிருந்து வெளியேறும் நீரை வடமத்திய மாகாணத்தின் கால்வாய்கள் (NCP Canal) மூலம் திசைதிருப்பி வன்னிமாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைஅபிவிருத்திசெய்து குடியேற்றம் செய்யும் வகையில் மகாவலி “எல்”வலயத்திட்டம் முன்மொழியப்பட்டது.
இருப்பினும், மொரஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அளவில் கால்வாய்கள் மூலம் பெறக்கூடிய நீர்ப்பாசன திறன் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.இப்படி இருக்கும் போது எல் வலயத்திற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரே1983ஆம் ஆண்டுமுதல் முல்லைத்தீவு மற்றும்,வவுனியா வடக்கின் எல்லைப்பகுதிகளில் மணலாறு உட்பட பலஇடங்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பெரும்பாண்மை சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
இன்று மணலாறு
“வெலிஓயா” என்ற பெயரில் தனிபிரதேச செயலாளர் பிரிவை கொண்டுள்ளது. அவற்றில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் பூர்விக காணிகளும் அடங்கும் .(இது முடிந்த வரலாறு
“எல்”வலயத்திற்கு மொரகஹந்த அணையிலிருந்து நீரைகொண்டுவரும் திட்டம் தோல்வியடைய அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் பெருக்கம்,காணியற்ற உபகுடும்பங்களின் அதிகரிப்பு(வன்னியில் காணியற்ற உபகுடும்பங்கள் ஆயரக்கணக்கில் உள்ளது) மற்றும் அவர்களது நிச்சயமற்ற வாழ்வாதார நிலையினை கருத்தில் கொண்டு, நீர்ப்பாசன அமைச்சு உள்நாட்டு நீர்வள அபிவிருத்தியை (IN-BASIN WATER RESOURCES DEVELOPMENT) அடிப்படையாகக் கொண்டு மாற்றீடாக புதிய “கிபுள்ஓயா” திட்டத்தை செய்வதற்கு முன்மொழிந்தது .
“கிவுல்ஓயா” திட்டத்தின் நீரேந்து பகுதியாகி பாதிக்கப்படும் வவுனியா வடக்கு பிரதேசத்தின் தமிழ்க்கிராமங்களுக்கு இதனால் எந்தவிதமான பிரயோசனமும் இத்திட்டத்தினூடாக கிடையாது. (நீர் எந்த மக்களுக்கும் அவசியமான ஒன்று எனவே அது ஒரு புறம் இருக்கட்டும்)
மாறாக, வெலிஓயா வலது கரையில் அமைந்துள்ள 1,700 ஹெக்டேர் புதிய விவசாய நிலங்கள் உட்பட நிகவெவ,எஹடுகஸ்வெவ,, கிறி இப்பன்வெவ, ஹெலெம்பே வெவ ஆகிய சிங்கள குடியேற்றப்பகுதிகளில் உள்ள நெல் வயல்கள் என மொத்தமாக 2400 ஹெக்டேர் நிலங்களுக்கு கூடுதல் பாசன நீர் வழங்கப்படும். இதனை இருபோகமும் வழங்குவதே இலக்கு.அத்துடன்
1700 ஹெக்டேர்(4200 ஏக்கர்) நிலங்களில் புதிய குடியிருப்பாளர்கள் குடியேற்றப்படுவர்
இதுவெ திட்டத்தின் மதிப்பீடு.
மேல் கூறப்பட்ட இடங்கள் ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்கள் வசிக்கும் பகுதி.
இதில் புதிதாக 1700 ஹெக்டேர் அளவில் இவர்கள் குடியேற்றப்போவது
எந்தபகுதிமக்களை என்பதே இங்குள்ள பிரச்சனை.![]()
![]()
![]()
“எல்”வலயம் என்ற போர்வையில் ஏற்கனவே நிலம் சூறையாடப்பட்டுள்ளமையால் தமிழ்மக்கள் இவ்விடயத்தை சந்தேக கண்கொண்டு பார்ப்பதை தவிர்க்க இயலாது..
இதேவேளை இவ், முன்மொழியப்பட்ட நீர்த்தேக்கத்தால் நீரில் மூழ்கும் பகுதி உட்பட, சுமார்
2,500ஹெக்டேர்(6177 ஏக்கர்) இயற்கை வாழிடங்கள் இழக்கப்படும் என திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுள்வவுனியா வடக்கின் தமிழ் மக்களது பூர்வீக கிராமங்களானமருதோடை,வெடிவைத்தகல்,காட்டுப்பூவசரங்குளம்,காஞ்சூரமோட்டை,கூழாங்குளம் போன்ற தமிழர்கிராமங்கள் நீரில் மூழ்கும்.அபாயம் உள்ளது.
அத்துடன் இந்த காட்டுப்பகுதி அழிவு நிலையில்உள்ள மிருகங்கள் உட்பட, வளமான நில வாழ் தாவரங்களையும் கொண்டுள்ளது.அவை அழிக்கப்படும். திட்டப்பகுதியில் குறைந்தது
47 தொல்பொருளியல் பகுதிகள் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்குள்ள கேள்வி என்னவெனில் வடகிழக்கில் தமிழர் பகுதியில் உள்ள தொல்பொருள் பிரதேசங்களில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் மக்கள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் வனவளத்திணைக்களம் ஆகியன இந்த திட்டத்திற்கு பச்சைகொடி காட்டியுள்ளது.இதன் பின்னால் உள்ள அரசியலே தமிழர்களை சஞ்சலமடைய செய்துள்ளது.
திட்ட முன்மொழிவுகளில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் திட்டம் என கூறப்பட்டாலும் 1983ம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்ற பகுதியான மகாவலி “எல்”வலயத்தின் நீர்த்தேவைக்காகவே “கிபுள்ஒயா” திட்டம் கொண்டுவரப்படுகிறது.அதனை மகாவலி அதிகாரசபையின் திட்ட மதிப்பீட்டு அறிக்கையை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.(நெல்லுக்கு இறைத்தநீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். அப்படி எதும் தமிழர்களுக்கு கிடைத்தால் தான் உண்டு)
இவை அனைத்தும் முன்னைய அரசின் காலங்களில் முன்மொழியப்பட்ட திட்டங்களே. எனவே தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசு,இத்திட்டத்தை எப்படி செய்து முடிக்கப்போகின்றது என்பதே மக்கள் முன்னுள்ள அச்சம். இது தொடர்பாக இந்த பகுதியின் பூர்விக மக்களோடோ அல்லது அரசியல் தலைமகளோடோ எந்த விதமான வெளிப்படையான கலந்துரையாடல்களையும் எந்த ஒரு அரசும் இதுவரை நடாத்தவில்லை.
எனவே முன்னைய ஆட்சியாளர்கள் போல அனுர அரசும் பௌத்தமேலாதிக்க சிந்தனையில் தமிழர்நிலங்களை அபகரிக்கும் கபட நோக்கத்தில் செயற்ப்படப்போகின்றார்களா அல்லது நேர்மையான தூரநோக்கத்தைக்கொண்ட ஒரு அபிவிருத்தி திட்டத்தைசெய்யப்போகின்றார்களா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply
You must be logged in to post a comment.