“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

(இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம், தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி, மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அதிகாரம், ஆட்சிலிருக்கும் தேசியமக்கள் சக்தியின் செயற்பாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல விடயங்களையும் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ. சுமந்திரனுடன் உரையாடினோம். இலங்கை அரசியற்பரப்பிலும் தமிழர்களின் அரசியலிலும் சுமந்திரனின் அடையாளமும் குரலும் முதன்மையானது. என்பதால் அனைத்துத் தரப்பினரோடும் உரையாடக்கூடியவராகவும் அனைத்துத்தரப்பினரும் உரையாடும் ஒருவராகவும் சுமந்திரன் காணப்படுகிறார். இது அவரைக் குறித்த கவனத்தையும் அதேவேளை சில சர்ச்சைகளையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணல் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.)
— கருணாகரன் —
1. இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினைகளாகத் தொடரும் இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குத் தீர்வைக் காண்பது எப்படி? இதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஆட்சியாளர்களால் முடியாதிருப்பது ஏன்?
எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், இந்தத் தீவில் சிங்கள பெளத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் உலகிலும், ஏன் இந்தப்பிராந்தியத்திலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். எனவே அவர்களுக்கு இயல்பாகவே ஒரு பீதி – உளவியல் ரீதியான அச்சம் – இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் பௌத்தத்திற்கும் சிங்களத்திற்கும் முதலிடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பொருளாதார விடயங்களிலும் தங்களை மற்றவர்கள் விழுங்கி விடுவார்கள் என்ற பயம் உள்ளது, இது சுயாதீனமாக முடிவுகள் எடுப்பதைத் தடுக்கிறது. ஆட்சியாளர்கள், மக்களுக்கு அவர்களது பயம் நீங்கும்படியான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றமும் தீர்வும் முன்னேற்றமும் நிகழும்.
2. மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது எதற்காக?
முழுமையாக அப்படிப் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்ல முடியாது. ஒரு சில தருணங்களில் அதிகாரப் போதை காரணமாக மக்களது உணர்வுகளையும் தேவைகளையும் ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள்.
3. அப்படிச் சொல்ல முடியாதே! மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டதால்தானே நாட்டில் பிரச்சினைகள் மேலும் மேலும் கூடிச் சென்றிருக்கின்றன. புதிய பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது உலக வழமை. பழைய – பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதற்குக் காரணம், மக்களுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டதனால்தானே?
மக்களுடைய உணர்வுகள் மதிக்கப்படுவதால் மாத்திரம் பிரச்சனைகள் தீராது. பல சந்தர்ப்பங்களில் இவை இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மாறாக சில சமயங்களில் மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க நினைப்பதனாலேயே பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருக்கும்.
4. பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமிழந்த ஒன்றாக மாறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதற்கும் காரணம் மக்கள்தான். அவர்கள் பொறுப்போடும் தூர நோக்கோடும் தங்களது தெரிவுகளை மேற்கொண்டால் பாராளுமன்றத்தில் ஜனநாயகம் மேலோங்குவதைக் காணலாம். குறுகிய நோக்கங்களுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்தால் பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்றதாக மாறி விடும்.
5. மாற்றத்துக்கான ஆட்சி, System Change என்றெல்லாம் சொல்லி அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மெய்யாகவே மாற்றத்திற்கான வழியில்தான் பயணிக்கிறதா?
ஓரளவு மாற்றம் தெரிகிறது. இது ஆரம்பம் மட்டும்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களது பல செயற்பாடுகள் மாற்றத்தை நோக்கினதாகவே தென்படவில்லை. இதுவும் பழைய குருடி கதவைத் திறடி என்றுதான் முடியும்.
6. அவ்வாறில்லை என்றால், அதைச் சரியான திசையில் செலுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? இதில் எதிர்க்கட்சிகளின் திறனும் அர்ப்பணிப்பும் எப்படி உள்ளது? எப்படி அமைய வேண்டும்?
எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான திறனோ அர்ப்பணிப்போ பிரதான எதிர்க் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
7. நாட்டின் தேவை, மக்களின் எதிர்பார்ப்பு, சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ் பேசும் சமூகங்களின் நியாயமான உரிமைகளில் எல்லாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடும் செயற்பாடும் (நடைமுறைகள்) எப்படி உள்ளது?
தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களை இந்த அரசு நியாயமான முறையில் அணுகுவதாக தெரியவில்லை. அப்படி ஒரு தேசிய இனப்பிரச்சனை இருப்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் எந்தச் செயற்பாடும் அதை ஒட்டியதாக இல்லை.
8. முன்னைய ஆட்சியாளர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன? ஒன்றுமைகள் என்ன?
தீர்க்கப்படாத இனப்பிரச்சனை ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாடு முன்னைய ஆட்சியாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. ஊழல் விவகாரங்கள் மிக குறைவாக காணப்படுவதுதான் வேற்றுமை.
9. ஒப்பீட்டளவில் ‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பரவாயில்லை. முன்னேற்றகரமானது’ என்ற அபிப்பிராயம் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் உண்டு. இப்படியான சூழலில் இந்த அரசாங்கத்தோடு பல விடயங்களில் சேர்ந்து செயற்படும் வாய்ப்புள்ளது அல்லவா!
ஆம். ஆனால் எவரையும் சேர்த்து செயற்படும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு அறவே கிடையாது.
10.அப்படியென்றால், இது கதவைச் சாத்திக் கொண்டு மூடப்பட்ட அறைக்குள் குடித்தனம் நடத்துவதைப்போன்ற ஒரு ஆட்சியா? அரசியல் சொல்லாடலில் இதை ஏகத்துவத்தின் சர்வாதிகார இயல்பு (The authoritarian nature of monotheism) என்று சொல்லலாமா?
ஆம். நிச்சயமாக அப்படித்தான்.
11. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி எத்தகைய அணுமுறையைப் பேண விரும்புகிறது? ஏனென்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேசிய மக்கள் சக்தியுடன் சிநேகபூர்வமானதொரு உறவு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்தது. அந்த உறவை ஆட்சியிலிருக்கும்போது மேலும் வளர்த்தெடுக்க முடியாமலிருப்பது ஏன்?
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களோடு தனிப்பட்ட சிநேகிதம் இருந்தது. ஆனால் ஆட்சியாளர்களான பின்பு அவர்களது அரசியல் நகர்வுகள் பலவற்றை நாம் பகிரங்கமாக எதிர்க்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. அதை நாம் செய்கிறபோது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம் உள்ளவர்களாகத் தெரியவில்லை. அந்தச் சூழலில் முன்னர் இருந்த சிநேகிதத்தைப் பேண முடியாதுள்ளது.
12. தமிழ் அரசியற் தரப்பினர் கோருகின்ற – எதிர்பார்க்கின்ற – வலியுறுத்துகின்ற அரசியல் அதிகாரத்தை(சமஸ்டி உள்ளடங்கலான தீர்வை) வழங்குவதற்கான அரசியல் உளநிலை ஆட்சியாளர்களிடத்திலும் இல்லை. ஆட்சிக்கு வெளியே உள்ள சிங்கள அரசியலாளர்களிடத்திலும் சிங்களச் சமூகத்திடமும் இல்லை. அரசியலமைப்பு மாற்றம், அரசியற் தீர்வு ஆகியவற்றை எட்டுவதாக இருந்தால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறான ஒரு சூழலில் எப்படித் தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வைப் பெறுவது?
எந்த அரசியல் தீர்விற்கும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அது இல்லாமல் எந்த தீர்வும் நீடித்து நிலைக்காது. அது முடியாத காரியமல்ல. ஆட்சியிலிருக்கும் கட்சியும் நாமும் கூட்டாக மக்கள் முன் சென்று தீர்வை விளக்கினால் இது இலகுவாக சாத்தியப்படும்.
13. ‘தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்‘ என்ற கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியமென்ன?தற்போது இந்த விடயத்தில் ஒரு இணக்க மனநிலை– ஐக்கியத்துக்கான சூழல் – தென்படுகிறது. அதேவேளை ‘இது நேர்மையான உறவாக இருக்கப்போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டு’ என்ற பேச்சுகளும் சமாந்தரமாக உள்ளது. மெய்யாகவே தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை உருவாக்குவதற்கு உங்களுடைய உளப்பூர்வமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் என்ன?
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு அணியில் சேர்ந்து இயங்குவது சாத்தியமான ஒரு விடயமே. தங்கள் கட்சிகளின் தனித்துவத்தை இழந்து விடாமல் அரசியல் தீர்வு விடயத்தில் இணங்கிச் செயற்படலாம். தேர்தல் கூட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீர்வு விடயத்தில் இணைந்து செயல்படுவது அத்தியாவசியமானதும் கூட.
14. தமிழரசுக் கட்சி, கட்சிக்கு உள்ளே (ஒழுக்காற்று நடவடிக்கைகளில்) இறுக்கமாகவும் வெளியே ஏனைய அரசியற் தரப்புகளோடு இணக்கமாகவும் செயற்படுகிறது. புதிய தலைமையில் ஒரு பண்பு மாற்றத்தை உணர முடிகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் குறித்து நிதானமாகச் சிந்திப்போரிடத்திலும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலைப் பற்றி அக்கறைப்படுவோரிடத்திலும் இதற்கு எத்தகைய வரவேற்புண்டு?
இதற்கு பாரிய வரவேற்பு உண்டு. இப்போதுதான் கட்சி கட்டுப்பாட்டோடு செயற்படுகிறது என்பது அனைவருடைய கருத்தாக உள்ளது. ஒற்றுமையில் பலம் உண்டு என்பதனால் மற்றைய கட்சிகளோடு இணக்கமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதையும் அனேகமானோர் புரிந்து வைத்துள்ளார்கள்.
15. பாராளுமன்றத்தினால் செய்ய முடியாத ஆட்சி மாற்றச் சூழல் ஒன்றை மக்கள் தமது ‘அரகலய’ (2022 Sri Lankan protests) போராட்டத்தின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் . இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட முக்கியமான வேலைகளையும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதைத்தானே பிந்திய நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அப்படியென்றால் மக்கள் போராட்டத்தோடு நீங்களும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமல்லவா?
அரகலயவில் நாமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அந்த வேளைகளில் நான் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆனால் அரசியலமைப்பு மாற்றம் இறுதியில் ஒரு சட்ட முறைமையினூடாகத் தான் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மக்களோடு சேர்ந்து அறகல போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஒன்று. ஆனால் மற்றைய எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்பது வித்தியாசமானது. யாரோடு எதற்காக இணைவது என்பது முக்கியமானது.
16. தமிழ்த் தேசியவாத அரசியலில் புத்துணர்வற்ற – புதிய சிந்தனைகளற்ற சம்பிரதாயத்தன்மையே மேலோங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலக மாற்றங்களையும் பிராந்திய – உள்நாட்டு நிலவரங்களையும் உய்த்துணர்ந்து செயற்படக் கூடிய தன்மை போதாதென்றும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன?
தமிழ்த் தேசியவாத அரசியல் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த போது ஜனநாயகப் போராட்டம் எப்படி இருந்ததோ, அதே பாணியில் போருக்குப் பின்னரான அரசியலையும் நகர்த்தியதே இதற்குக் காரணம். அதே பாணியில் பயணிப்பதற்கு வலுவான காரணங்கள் இருந்த போதும் 3 தசாப்த இடைவெளியை அனுசரித்து சில அணுகுமுறை மாற்றங்களை செய்திருக்க வேண்டும்.
17. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள், பிரதானிகளோடு பேசிவரும் உங்களுடைய அனுபவத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றுக்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றனவா?
ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு நிச்சியமாக அவர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதை அடைவதற்கு போர்க்குற்ற விசாரணையை உபயோகிப்பார்கள்.
18. பௌத்த விரிவாக்கம், சிங்கள மேலாதிக்கம் போன்றவற்றை நடைமுறையிலும்(ஆட்சிமுறையிலும்) அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தியும் வைத்திருப்பது பன்மைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் அல்லவா!இதைக்குறித்துத்தானே வெளியுலகச் சமூத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டும். அப்படித் தமிழ்த்தரப்பு எங்கேனும் செயலாற்றியுள்ளதா?
ஆம். எல்லாத் தருணங்களிலும் இதை உதாரணமாக எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
19. இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் அரசியமைப்பு மாற்றத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் புத்திஜீவிகள், பல்கலைக்கழத்தின் அரசியல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் துறையினரின் பரிந்துரைகள் எதையும் முன்வைப்பதில் அக்கறையற்றிருப்பது ஏன்?
போர்ச் சூழலில் அப்படியானவர்கள் ஒதுங்கி இருக்கவே விரும்பினார்கள். இப்போதும் சமூக வலைத்தளங்களினூடாக செய்யப்படும் அவதூறுகள் காரணமாக பலர் இப்படியான பொது விடயங்களில் ஈடுபட விரும்புவதில்லை.
20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன?
இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.
21. தமிழரசுக் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கிறது. ஆனாலும் அது முன்வைத்த அரசியல் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இடையில் பல தலைவர்களின் காலம் கடந்து விட்டது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வும் தமிழ்ப் பிரதேசங்களின் மேம்பாடும் உங்களுடைய தலைமைத்துவத்தில் எட்டப்படுமா? அதற்கான புதிய பொறிமுறைகளை வகுத்துள்ளீர்களா?
ஆம். எமது கட்சியின் இலக்கு விரைவில் எட்டப்பட வேண்டும். அது இலங்கை மக்களின் பெரும்பான்மையவரின் இணக்கத்தோடு மட்டுமே அடையப்படலாம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த வருடத்தோடு SWRD பண்டாரநாயகா இலங்கைக்கு சமஷ்டி என்ற எண்ணக் கருவை அறிமுகம் செய்து 100 ஆண்டுகள் நிறைவாகின்றது. அதை மையமாக வைத்து இந்தவேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அது சிங்கள மக்கள் பலரது ஆதரவையும் பெற உதவும் என்பது எனது நம்பிக்கை.
20. ஆட்சியிலிருக்கும் தரப்பின் ஒத்துழைப்போடு தீர்வுக்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டாலும் எதிர்த்தரப்பிலுள்ள கட்சிகளின் ஆதரவின்றி இது சாத்தியமாகுமா? சமஸ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளக்கூடிய உளநிலை சிங்களத் தரப்பிடமுண்டா?
சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில் மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பகிர்வு முறையை அடைய வேண்டும். அதற்கு நிச்சயமாக எதிர்த் தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்.
21. அரசியற் தீர்வில் முஸ்லிம்களின் பங்கேற்பும் ஆதரவும் வேண்டுமே?
அதிகாரப் பகிர்வுக்குமுஸ்லிம்களின் ஆதரவுஎப்போதுமே இருந்திருக்கிறது. அலகு விடயத்தில் அவர்களுடன்ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தாகவேண்டும்.
22. மாகாணசபைத் தேர்தல், மாகாணசபைகளின் இயங்குமுறை, அதற்கான அதிகாரம் என்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு என்ன? அதை எவ்வாறு எட்டுவது?
தற்போது அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை இழந்துவிடாமல் அவற்றையாவது நிறைவேற்றச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையிலிருந்துதான் அடுத்த நிலைக்குச் செல்லலாம். அதற்கு முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அது நடந்தால் மாகாண சபைகளை உபயோகித்து அரசியலமைப்பிலுள்ள முழு அதிகாரத்தையும் பெற வேண்டும்.
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்) –
Post navigation
இலங்கை: பொருளாதாரத்தை பாதுகாக்கத்தவறிய அரசியல்..! (மூன்றாவது கண்: III)

Leave a Reply
You must be logged in to post a comment.