அனுதாப நாடகங்கள் தாண்டி பதில் சொல்வாரா சிறீதரன்?

Jan 25, 2026

அனுதாப நாடகங்கள் தாண்டி பதில் சொல்வாரா சிறீதரன்?

புருஜோத்தமன் தங்கமயில்

கணக்காளர் நாயகமாக இராணுவ அதிகாரியை நியமிப்பதற்கு ஆதரவாக அரசியலமைப்புப் பேரவைக்குள் வாக்களித்தமை தொடர்பில் சிவஞானம் சிறீதரன் விளக்கமளிப்பார் என்று தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு கடந்த ஒரு மாத காலமாக காத்திருக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மூத்தோர் வாக்கு. சிறீதரன் பொங்கலுக்குப் பிறகாவது தன்னுடைய நியாயப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என்று நினைத்தால், அவர் பொங்கிப் படைத்து உண்டு கழித்ததோடு சரி, விடயம் தொடர்பில் வாயே திறக்கிறார் இல்லை. மாவீரர் நாளுக்கு விளக்கேற்றி அஞ்சலித்துவிட்டு அடுத்த சில நாட்களிலேயே, இராணுவ கேணல் தர அதிகாரிக்காக ஆளுங்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து ஆதரவாக வாக்களித்தமை என்பது, தமிழ்த் தேசிய அரசியல் மீது நம்பிக்கை கொண்டோரின் நோக்கில் துரோகத்தனமானது. ஏனெனில், இராணுவ மயமாக்கல் என்பது தமிழ் மக்களை நாளும் பொழுதும் ஆக்கிரமித்து அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. சிவில் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடும், அத்துமீறலும் இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினையாக தொடர்கின்றது. அப்படியான கட்டத்தில், இராணுவ அதிகாரியை சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் முக்கிய கூறாக, அதுவும் நாட்டின் காணக்காளர் நாயகமாக நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஒத்தூதுவது என்பது அபத்தமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனை, சிறீதரன் ஏன் செய்தார் என்பதை அறியும் உரித்து தமிழ் மக்களுக்கு உண்டு. ஆனால், அவரோ காலத்தை இழுத்தடித்து நாடகமாட முயல்கிறார்.

கடந்த வியாழக்கிழமை சிறீதரனுக்கு எதிராக தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்துக்குள் நீண்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகளின் சார்பில் அரசியலமைப்புப் பேரவைக்குள் அங்கம் வகிக்கும் சிறீதரன் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றமை என்பது, எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிரானது. அதுவும், இராணுவ அதிகாரியை சிவில் நிர்வாக நடவடிக்கைகளின் கூறாக இணைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தமை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம். அதுபோல, பூநகரி சூரிய மின்திட்டம் தொடர்பில் சிறீதரனும், அவர்  சார்பானவர்களும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பவை, தயாசிறியின் குற்றச்சாட்டுக்கள். அடுத்த நாளே, அதாவது கடந்த வெள்ளிக்கிழமை தயாசிறிக்கு பதிலளித்து பாராளுமன்றத்துக்குள் சிறீதரன் உரையாற்றினார். அதில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி, விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். அதுபோல, தனக்கு எதிராக கடந்த காலங்களில் இராணுவம் மேற்கொண்ட அத்துமீறல்கள் தொடர்பிலும் உருக்கமாக பேசினார். தற்போது தனக்கு எதிராக கேள்விகளை எழுப்பும் யாரும் தனக்கு ஆதரவாக அப்போது நின்றதில்லை என்றும் குறைபட்டார். இப்போது, தன்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக பல தரப்பினரும் இணைந்து ஓரணியில் செயற்படுகிறார்கள். ஆனால், தான் பனங்காட்டு நரி, சலசலப்புக்களுக்கு அஞ்சமாட்டேன் என்றார். ஆனால், இறுதி வரைக்கும் தன் மீதான பிரதான குற்றச்சாட்டான இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் சிறீதரன் விளக்கமளிக்கவில்லை. அவர், தன்னைச் சுற்றி சதி வலை பின்னப்படுவதாக ஒரு வகையிலான அனுதாப ஆட்டத்தை தன்னைச் சுற்றி கட்டமைக்கிறார். அதன் மூலம், அவர் பிரதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பி ஓடலாம் என்று நம்புகிறார். ஏனெனில், கடந்த காலங்களில் அவ்வாறான அனுதாப நாடகங்களின் வழியாக இலகுவான வெற்றிகளைக் கண்டவர் அவர்.

அரசியலமைப்புப் பேரவைக்குள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றமை, குறிப்பாக இராணுவ அதிகாரியை கணக்காளர் நாயகமாக நியமிக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் விளக்கம் கோரிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு, சிறீதரனை அந்தப் பதவியில் இருந்து விலகுமாறும் கோரியது. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் கட்சியான தமிழரசுக் கட்சி இராணுவ மயமாக்கலுக்கு ஒருபோதும் ஒத்துழைக்காது என்பது, தன்னுடைய நிலைப்பாடு என்று அறிவித்திருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான சிறீதரன் தொடர்ந்தும் இவ்வாறான வரம்பு மீறிய செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்க வல்லது. அரசியலமைப்புப் பேரவைக்குள் சிறீதரனின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி தன்னுடைய நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி, கேள்விகளை எழுப்பிய பின்னரும் அவர் அமைதி பேணுகிறார். அவர், திட்டமிட்டு தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டங்களைத் தவிர்க்கிறார்.

பொய்களிலும் புரட்டுக்களிலும் ஊறித் திளைத்த ஒருவராக சிறீதரன் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றார். அனுதாப முகம் காட்டினால் மக்களை ஏமாற்றி வாக்கு அரசியலில் நிலைபெற்றுவிடலாம் என்று அவர் நம்புகிறார். அதனை அவர் தொடர்ச்சியாக வெற்றிகரமாக செயற்படுத்தியும் வந்திருக்கிறார். ஆனால், இப்போது அவர் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கருவி மாதிரி அரசியலமைப்புப் பேரவைக்குள் செயற்படும் நிலை என்பது, சிறீதரன் மீதான அடுக்கடுக்கான சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. “..கிளிநொச்சிக்கு ஒரு எம்.பி  தேவை, அதற்காக சிறீதரனுக்கு வாக்களிக்கிறோம்..” என்று கூறும் கணிசமான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த நிலைப்பாடுகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய பதவிக்காக – வாக்கு அரசியல் நிலைத்திருப்புக்காக யாரை வேண்டுமானாலும் பலிகொடுக்கலாம் என்ற நிலையில் சிறீதரன் நிற்கிறார். அவருக்காக கடந்த காலங்களில் ஆதரவாக நின்ற யாருக்காகவும் சிறீதரன் ஆதரவாக நின்றதில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வின் போது அவருக்காக பிரச்சாரம் செய்த கணிசமானவர்கள், கட்சியை விட்டுச் செல்லும் நிலை வந்தது. ஆனாலும் அவர்களுக்காக அவர் ஒருபோதும் நிற்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலில், தனக்கு ஆசனம் கிடைத்தால் போதும் என்ற ஒற்றை நிலைப்பாட்டில் மாத்திரமே அவர் நின்றார். அவருக்கு ஆதரவாக நின்றவர்கள் அரசியல் அனாதையாகிப் போனார்கள்.

கடந்த பொதுத் தேர்தலிலும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவன் என்கிற முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், தான் சுயேட்சைக் குழுவாக களமிறங்கியது சிறீதரனின் ஏற்பாட்டில்தான் என்று கூறி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தத் கடிதத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராய வேண்டியது அவசியமானது. ஆனால், அது தொடர்பிலும் சிறீதரன் வாயே திறக்கிறார் இல்லை. ஏனெனில், கிளிநொச்சி ஜீவன், கடந்த காலங்களில் சிறீதரனின் பிரதான ஆதரவாளாக இருந்தவர். அவருக்காக வேலைகளைச் செய்தவர். அவருக்காகவே, தமிழரசுக் கட்சியின் தலைமையோடு தொடர்ச்சியாக முரண்பட்டு வந்தவர். இதுவெல்லாம், கிளிநொச்சி மக்களுக்கும் தெரியும். ஆனாலும், இவற்றையெல்லாம் கடப்பதற்கு அனுதாப நாடகம் நடத்தினால் போதும் என்பது சிறீதரனின் எண்ணம். ஆனால், அது எல்லாத் தருணத்திலும் அவருக்கு கைகொடுக்காது. இப்போது, சிறீதரனுக்கு தமிழரசுக் கட்சியை விட்டால் வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை. ஏனெனில், அவரை யாரும் நம்பிச் செயற்படத் தயாராக இருக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக கட்சிக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எதிராக செயற்பட்டுவிட்டு, தேர்தல் காலங்களில் தலைமையோடு ஒட்டி உறவாடி ஆசனத்தைப் பெற்றுவிடலாம் என்று சிறீதரன் நினைத்தால், அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கும், அதன் தற்போதைய தலைமைக்கும் தெரியும் தங்களை விட்டால், சிறீதரனுக்கு இனி வேறு தெரிவுகள் இல்லை என்பது. அதனால், கிளிநொச்சி வாக்குகள் இழக்கப்பட்டுவிடும் என்கிற கதைகளை எடுத்துக் கொண்டு சிறீதரனால் நீண்ட தூரம் ஓட முடியாது. தற்போது, கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறீதரனையும் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பதனால்தான், அவர் இன்னமும் கட்சிக்குள் இருக்கிறார். ஆனால், கட்சியினதும், தமிழ்த் தேசிய அரசியலினதும் நிலைப்பாடுகளுக்கு மாறாக சிறீதரன் தொடர்ந்தும் செயற்படுவாரானால், சிவஞானத்தினாலும் சிறீதரனைக் காப்பாற்ற முடியாது. இதுதான் யதார்த்தம்.

இராணுவ கேணலுக்கு ஆதரவாக சிறீதரன் வாக்களித்தமை தொடர்பில் கேள்வி எழுப்பி, இந்தப் பத்தியாளர் ஏற்கனவே ஒரு பத்தியை ஒரு மாதத்திற்கு முன்னராக எழுதினார். அப்போதும், தார்மீக ரீதியாக சிறீதரன் விளக்கமளித்து விடயங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தார். அப்படியான கோரிக்கைகள் தமிழ்த் தேசியப் பரப்பில் தொடர்ச்சியாக எழுந்திருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் தட்டிக்கழித்துவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அவர் பாராளுமன்றத்துக்குள் அனுதாப நாடகம் போட்டமைதான், அவரை நோக்கி மீண்டும் இந்தப் பத்தியை எழுதத் தூண்டியது. தென் இலங்கையின் ஆக்கிரமிப்புக்கள், பிராந்திய வல்லரசுகளின் தலையீடுகள் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலைக் காப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கின்றது. மதம், சாதி, பிரதேசவாதம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியலை பிரித்தாளும் தந்திரங்கள் நாளும் பொழுதும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அதிலும், நிறுவன ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசியத்திற்காக அர்ப்பணித்த மக்கள், ஏமாற்றமடைந்து அமைதியாகிறார்கள். அப்படியான சூழலில், சிறீதரன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இராணுவ மயமாக்கலுக்காக ஒத்துழைக்கின்றமை, தமிழ் மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றமடையவே வைக்கும்.

அரசியலமைப்புப் பேரவைக்குள் தன்னை மீறி விடயங்கள் நிகழ்கின்றன. தனக்கு சிங்களமும், ஆங்கிலமும் தெரியாது. அதனால், அங்கு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பல நேரங்களில் தெளிவு இருப்பதில்லை என்று கூறி சிறீதரன் விடயங்களை கடக்க முயலலாம். ஆனால், அரசியலமைப்புப் பேரவைக்குள் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பில், மொழிப்பிரச்சினையைக் காரணங்காட்டி சிறீதரன் ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில், பல தடவைகள், அரசியலமைப்புப் பேரவைக்குள் இருந்த தமிழ் தெரிந்த உறுப்பினர்கள் சிறீதரனுக்கு விளக்கமளித்த பின்னரும், அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்பதுவும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டு எவ்வகையானது என்றால், “சிறீதரனுக்கு சிங்களமும், ஆங்கிலமும் பிரச்சினை. அதனால்தான் அவர் மாறி வாக்களித்துவிட்டார் என்று நினைத்து, அடுத்தடுத்த தருணங்களில் நாங்கள் தமிழில் அவருக்கு விளக்கினோம். ஆனால், அவர் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கண்ணசைவில் இயங்குகிறார். எங்களின் விளக்கத்தைக் கேட்பதில்லை…” என்ற குற்றச்சாட்டாகும். இந்தச் குற்றச்சாட்டின் உண்மைத்தன்னை தொடர்பிலும் சிறீதரன் வாய் திறக்கிறார் இல்லை. அவர், தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆங்கிலம் தெரியாமல் மாட்டிக் கொண்டுவிட்டேன் என்று கூறி சமாளிக்க முயல்கிறார். ஆங்கிலம் தெரியாமல் ஒருமுறை தவறலாம். ஆனால், எட்டு முறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமை என்பது மொழிப்பிரச்சினையால் நிகழ்ந்தது அல்ல. அது, அரசாங்கத்திற்காக ஏதோவொரு கடப்பாட்டினை சிறீதரன் நிறைவேற்ற முயல்கின்றமையினால் நிகழ்வதாகும். அதன் உச்சமே, இராணுவ அதிகாரிக்கு ஆதரவாகவும் வாக்களித்தமையாகும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது நீண்ட அர்ப்பணிப்புக்கள், தியாகங்களினால் நிலைத்திருப்பது. அதன் மீது கரும்புள்ளிகளை யார் குத்தினாலும், அவர்களை காலம் மன்னிக்காது. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது வயிற்றுப் பிழைத்தலுக்கான அரசியல் அல்ல. உரிமைக்கும் உரித்துக்குமான போராட்டத்தின் கூறாக எழுந்தது. அதனை, அனுதாப நாடகங்கள் தாண்டி சிறீதரன் புரிந்து கொள்ள வேண்டும்.

-காலைமுரசு பத்திரிகையில் ஜனவரி 25, 2026 வெளியான பத்தி.

Be the first to comment

Leave a Reply