அநுரவின் ‘யாழ்பாண பொங்கல்” பேச்சு தமிழர்களுக்கு எதை உணர்த்துகிறது?

தமிழர் அரசியல் திசைமாறி அமானுசியம் ஆகிறதா?

தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை அதிகார பரவலாக்கத்தை இன்னும் பாராமுகத்துடன் தான் இன்றைய அரசுகளும் கையாளுகின்றன என்பதும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளினால் வெறுப்படைந்த மக்கள் அலைகளுள் கட்டுண்டு போகிறார்கள். ஆக எம் உரிமைகளை வென்றெடுக்கும் நீண்ட நெடிய போராட்டத்தில் புதிய தமிழ்தேசிய அரசியல் வீறுகொண்டெழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ——————————————————————————

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மதிப்பிற்குரிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததும் அங்கு பெரும் மக்கள் மத்தியிலே பொங்கல் விழாவில் ஈடுபட்டு மகிழ்ந்ததும் பின்னர் போதை ஒழிப்பு செயல்திட்ட நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பாகவும் எதிர்காலத்தில எவ்வாறான நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது பற்றியும் இக் கட்டுரையின் வாயிலாக விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் வடமாகாணத்தின் பொங்கல் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் யாழ் மண்ணில் கால்பதித்து தீவகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று மக்களுடன்நேரடியாக தொடர்பு கொண்டார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியிலும் போதைக்கு எதிரான முழக்கக் கூட்டத்தத்தில் ஆற்றிய உரை பற்றி தமிழர்கள் மிக நுண்ணியமாக ஆராய வேண்டும்.

அவருடைய உரை இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில்புலம்பெயர் தேசங்களிலும் சிலர் அவற்றை மேலோட்டமாகப் பார்த்து ஆழமாக புரிந்து கொள்ளாமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பகிர்ந்து வருவதையும் காண முடிகிறது. ‘ஆஹா ஓஹோ இதுவல்லவா” என்ற பார்வையில் சிலர் அதனை அணுகுகின்றனர். ஆனால் தமிழ் மக்களாக நாங்கள் இவ் விடயங்களை மேலோட்டமாக அல்லமிக உன்னிப்பாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டிய கட்டாயத்திலும் பொறுப்புடன் ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்திலும் இன்று நிற்கிறோம்.

தமிழ் மக்களே என்று விளித்து ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையில் என்ன கூறியிருந்தார் என்றால் முன்னர் இருந்த ஆட்சிகளில் சிங்களமக்களும்தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுடைய அரசு என்று உணரவில்லை. ஆனால் இப்போது எங்களுடைய அரசை அனைத்து மக்களும் தங்களுடைய அரசாக கொண்டாடுகிறார்கள், கொண்டாடடி மகிழ்கிறார்கள். மற்றும் இன்னுமொரு விடயத்தை மிகவும் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார். அது என்னவென்றால் முன்பு தமிழர்களுக்கு தனியாக ஒரு தேசம் வேண்டும் என்றும் சகல அதிகாரங்களோடு கூடிய ஒரு கட்டமைப்பு தேவை என்றும் (உதாரணமாக சொல்லப்போனால் ஒரு தனியான சமஸ்ட்டி அலகுதனி நிர்வாக அலகு வேண்டும்) என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.

ஆனால் இப்போது அவை எதுவும் தேவையில்லை. ஒரே இலங்கையர்கள் ஒரே சட்டம்ஒரே அரசு என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு வடமாகாண மக்கள் பயணிக்கிறார்கள் என்று சாரப்பட அவர் அடிக்கோடு இட்டு பேசியிருந்தார். இதைக்கேட்டு பல தமிழர்கள் கைதட்டிகொண்டாடினர். உடலில் புல்லரிப்பு ஏற்பட்டு மயிர் கூச்செறிந்திருந்தார்கள். ஆம் இதன் பின்னால் இருக்கக்கூடிய ஆபத்துக்களை நாம் தீவிரமாக பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

முன்னர் இருந்த அரசுகளை விட இது எப்படியான ஒரு ‘சைலன்ற் கில்லர்” (silent killer) ஆகஇருக்கிறது. என்பதைக் கவனிக்க வேண்டும். முன்னர் இருந்த அரசுகள் ரணில்மைத்திரி கோத்தபாய அரசுகளாக இருக்கட்டும் ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரேமதாச போன்றவர்களாக இருக்கட்டும் அவர்கள் யாராக இருந்தாலும் நேரடியாக தமிழ் மக்கள் மீது பிரிவினை வாதத்தை வெளிப்படுத்தினார்கள். அவை எல்லாம் தெரிந்த பூதங்கள். இவர்கள் இவ்வாறுதான் எங்களை ஒடுக்குவார்கள். எங்களுடைய கோரிக்கைகளைநசுக்குவார்கள்தமிழ் மக்களுடைய உரிமைகளையும்சலுகைகளையும் பெறவிடாமல் வழித்துடைப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாக இருந்தது. அதனால் அந்த அரசுகளுக்கு எதிராக நாம் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினோம்.

ஆனால் இப்போது அமைந்துள்ள அரசாங்கம் வேறொரு முகத்துடன் செயல்படுகிறது. அரசு போதை ஒழிப்பில் சிறப்பாக செயற்படுகிறது. மக்களின் நலன்களில் கவனம் செலுத்துகிறது. பொருளாதார கட்டுமானத்தில முன்னேறுகிறது, சர்வதேச நலன்களை கருத்தில் எடுக்கிறது. அதேபோல் இலங்கையை சுற்றுலா துறையிலும் பிற துறைகளிலும் வளர்த்தெடுக்க முயற்சிக்கிறது. முதலீடுகளை ஊக்குவிக்கிறது. இவை அனைத்தையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால் அதே நேரத்தில்தமிழ் மக்கள் மீது இருக்கும் பல அடிப்படை கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தையிட்டி உணர்ச்சி பிரவாகத்துக்குள்மிதப்பதும் அல்லது வெளிப்புறத்தில் காட்டப்படும் கவர்ச்சிகர அரசியல் பேச்சு நகர்வுகளை பார்த்துவிட்டு உணர்ச்சி பிரபாக நிலைக்குள் மூழ்கி விடுவது தமிழர்களுக்கு பெரும் ஆபத்தான நிலை. இப்படியாக எடுபட்டு போகும் தமிழ் மக்கள் தான் மிக அதிக ஆபத்தானவர்கள். இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் அவர் பல விடயங்களை கூறியிருந்தார். அதில் சில உரையாடல்களில் தையிட்டி விகாரை தொடர்பாக சில குழுக்கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட விகாரையை முன்னிலைப்படுத்தி இனவாதத்தை பேச முயல்கிறார்கள் என்றும்இப்படிப்பட்ட செயல்கள் உண்மையில் தேவையா என கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாண மண்ணிலே நின்று கொண்டு இதனை பேசியிருந்தார். நாம் இந்த விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த உரையில் அவர் எங்கேயாவது இராணுவம் அடாத்தாக பிடித்த தமிழர்கள் காணிகளை விடுவிக்க போகின்றோம் என்றோ சட்டத்துக்கு புறம்பாக இனிமேல் விகாரைகள் கட்டப்படமாட்டாது என்றோஅரசியல் கைதிகள் துரிதமாக விடுவிக்கப்படுவார்கள் என்றோ இராணுவம் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என்றோ இனிமேல் இராணுவ மயமாக்கம் இருக்காது என்றும் பௌத்தர்கள் இல்லாத பகுதிகளில் புதிய பௌத்த மயமாக்கம் இனிமேல் நடைபெறாது என்றும்காணாமல் போனவர்களுக்கு எந்த வகையான செயற்பாடுகள் அமுல்படுத்தப்படபோகின்றன என்றோ இவற்றில் எதையாவது அவர் தெளிவாகப் பேசினாரா என்பதே இங்கே தமிழர்களிடையே எழும் அடிப்படை கேள்வி.

அதைத்தவிர இந்த நாடு உள்நாட்டு போருக்கு உள்ளானமைக்கும் இன முரண்டுபாடுகளுக்குமான ஒரு முடிவாக ‘ஒரே இலங்கையர்கள்’ என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு எந்த அரசியல் தீர்வை நாம் தயாரித்துக் வருகிறோம் ஆட்சி அதிகாரங்களை பரவலாக்கி பகிர்வோம்அதற்கு எந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்பது பற்றி அவர் மூச்சுக் கூட விடவில்லை.

இத்தனைக்கும் மத்தியில் தையிட்டி புகழாங்கிதம் அடைந்து மகிழ்கின்ற அத்தனை கோடி தமிழர்களும் உலகம் எங்கும் பரந்து வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும்இந்த நிலையை உள்ளாந்தமாகவும் ஆத்மார்த்தமாகவும் நின்று சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எங்களுடைய உரிமைப் போராட்டத்தில் பலவற்றை இழந்தோம். இருக்கட்டும் ஆனால் காணிகளை எப்படி விடுவிப்பது, தமிழர்களுக்கான தீர்வை வழங்கும் ஒரு புதிய அரசியலமைப்பை இன்று பாராளு மன்றத்தில் மூன்று இரண்டுபெரும்பான்மையோடு நீங்கள் ஏன் இன்னும் உருவாக்க்க பாடுபடவில்லை. எல்லா முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் உங்களால் முடியாதா உந்த பெரும்பாண்மை பலத்தோடு புதிய அரசியலமைப்பை தமிழர்களுக்கு வழங்குவதற்கு? அதை பற்றிய எந்தவித பேச்சுக்களும் இல்லை.

ஆட்சி அமைந்து ஒன்றரை வருடம் ஆகப்போகின்றது. தமிழர் தீர்வு விடயத்தில் எவ்வித முயற்சியோ அல்லது முன்னேற்பாடுகளோ உள்ளதாக தெரியவில்லை. ஆனால் அவரின் உரை எவ்வாறு அமைந்திருந்தது என்றால் “முன்னர் தமிழர்களுக்கு தனியான நிர்வாகம் தேவை எனக் கேட்கப்பட்டிருந்தது ஆனால் இப்பொழுது தேவையில்லை எல்லாம் ஒரே அரசாக ஆட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழர்களால் கொண்டாடப் படுகிறது” என்ற அர்த்தத்தில் தான் அமைந்த்திருந்தது அவரது உரைப்பகுதி. இந்த விடயம் மிக ஆபத்தான விடயம். இதுவே ‘சைலன்ட் கில்லர்ஸ்’ என்ற வகையில் மெதுவாக விடுதலையும் சுயநிர்ணயமும் வேண்டி நிற்கும் மக்களின் மனங்களை ஆக்கிரமித்து எந்த தீர்வும் தேவையில்லை என்பதற்கான அரசியல் சூழ்நிலை உருவாக்கப் படுவதாகும். 35 ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக்காக நிகழ்ந்த ஆயுதப் போராட்டமும் வீணானது முள்ளி வாய்க்காலில் அத்தனை இனப்படுகொலையைச் சந்தித்த அனைத்தும் வீணானது என்று சின்ன வார்த்தைகள் செயல் மாயங்கள் மூலம் பூசி மெழுகி நவீன இளைஞர் யுவதிகளை கவர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் திட்டம் மிக நுணுக்கமாகவும், லாவகமாகவும் இராஜதந்திரமாகவும் அரங்கேற்றப் படுகின்றது.

இது தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் நிகழும் மிகப் பெரிய ஆபத்தான நிலையாகும். அவர்களுக்கு சார்பான அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் வேறு நபர்கள் மூலம் தமிழ் தேசியத்தை மெதுவாக அழிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதே சமயம் மக்கள் கவனத்தை வேறு திசைக்கு திருப்பும் நடவடிக்கைகளும் நிகழ்த்தப் படுகின்றன. இந்த நிகழ்வுகள் தமிழர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தான மற்றும் நுணுக்கமான அரசியல் சூழல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி அவர்கள் போதைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது வடமாகாணத்திற்கு தேவையானது. எமக்கு அதற்கு மாற்று கருத்து இல்லை. அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்போம். ஆனால், போதையை ஒழிப்பதை மட்டும் முன்னிறுத்தி மற்ற முக்கியமான தமழர் அடிப்படை பிரச்சனைகள், சுயநிர்ணய கோரிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்கள் விவகாரங்கள்அரசியல் கைதிகள் விடுதலை என்பன புறக்கணிக்கப்படுகின்றன. மொத்தத்தில்இந்த நடவடிக்கைகள் ஒரு நுணுக்கமானஆபத்தான அரசியல் திட்டமாக தமிழர் தேசிய உரிமைகள் மீது செயல்படுகின்றன. ஒவ்வொரு தமிழ் குடிமகனும் இவற்றை துல்லியமாக ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஜனாதிபதி வருகையின் போது தமிழ் பேசும் நபர்களை ஒருங்கிணைத்து அவர்களை புதிய அரசியல் நிகழ்வுகளில் இணைத்து சிலர் பிரச்சாரக் கூட்டாளர்களாக மாறுகின்றனர். இவர்கள் தமிழ் தேசிய அரசியலின் அடிப்படை விடயங்களை புரிந்து கொள்ளாதவர்கள் ஆனால் சமூக ஊடாகங்களில் தொடர்ந்து பரப்பப்படுகின்ற தகவல்கள் மூலம் நிகழ்வுகளை மக்கள் முன்னிலையில் காட்டுகின்றனர். எனினும்ஜனாதிபதி மக்களோடு நேரில் பழகுவது வரவேற்கப்பட வேண்டியதுநாங்கள் அவரை புதிய அரசியல் நகர்புள்ள ஜனாதிபதியாக கருதுகிறோம். ஆனால்இதற்கிடையில் தமிழர்களின் உரிமைகள்சுயநிர்ணயக் கோரிக்கைகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுயலைகாணமல் போனோர்களது நிலைகாணி விடுவிப்பு புறக்கணிக்கப்படப் கூடாது. இந்த உண்மையை தமிழ் மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் புலம்பெயர் தமிழரும் இதனை நுணுக்கமாக புரிய வேண்டும். முதலில் அநுர அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முன்னர், அவர் எந்தக் கருத்துக்களை தெரிவித்தார் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நாம் ஊடகங்கள் மூலம் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் தனியார் ஊடக நேர்காணல்களில் பங்குபற்றிய அநுர அவர்கள் தமிழர் உரிமைகள் பற்றி கரிசணை கொண்டு கருத்துரைத்திருக்கிறார் காணாமல் போனவர்களின் தாய் தந்தையர்களின் வேதனை எனக்கு தெரியும் அவர்களுக்கு என்ன நடந்தது என சொல்ல வேண்டுமல்லவா. அப்பாவி அரசியல் கைதிகள் விடுதகை செய்ய வேண்டும், தமிழ் மக்கள் சுய உரிமையோடு வாழும் உரிமை உண்டு என்றெல்லாம் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். ஆனால் இன்றோ அவர் ஜனதிபதியாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வடமாகாணத்துக்கு வந்த பிறகுஅவர் அதுபோன்ற தமிழ் மக்களின் அடிப்படை சித்தாந்தங்கள் பற்றி எந்தவித வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் செயற்பட்டு வருகிறார்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக நாகதீபத்தினுடைய பிரதான விகாராபதியே எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜனாதிபதி அவர்கள் அது சிலரின் இனவாத அரசியல் நடவடிக்கை என சொல்லாடுகிறார். இவ்வாறு யாரும் தமிழர் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை பேசினால் தமிழர்களே இன்று என்.பி.பி உறுப்பினர்களாக மாறி அது இனவாதம் என விசம பிரச்சாரம் செய்யும் அரசியல் வக்குரோந்து நிலைக்குள் வந்திருக்கிறோம். சிலர் தமிழ் தேசியம் சம்பந்தமான விவகாரங்களில் பேசினால், அவர்களை இனவாதம் பேசுகிறார்கள் என முத்திரை பதியப்படுகிறது.

முதலாவது கடந்த அனுர அலைக்குள்ளால் வெளிக்கிளம்பிய நவீன தமிழ் தோழர்கள் தமிழ்தேசியம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “தமிழ் தேசியம்” என்பது நமது நில புல எல்லைகளுக்குள் வாழும் தமிழ் பேசும் தேசிய இனத்தின் சுயாதீனசுயநிர்ணய அதிகாரத்துடன் தங்களை தாங்களே ஆளும் கோட்பாடு. இது இனவாதம் அல்ல. இனவாதம் என்றால் ஒரு இனத்தை பிடுங்கி அதனுடைய அதிகாரத்தை பிடித்தல் ஆகும். எனவே, தமிழ் தேசிய கோட்பாடு மற்றும் இனவாதங்களின் வித்தியாசங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவர் வழங்கிய வாக்குறுதிகள் எப்படி இருந்தன. என்பதைப் பார்க்கும் போது சில காணிகள் மற்றும் தெருக்கள் விடுவிக்கப்பட்டிருக் கின்றன. யாழில் ஆற்றிய உரையிலும் கூட சில விடயங்களைப் பற்றி கூறியிருந்தார். நாங்கள் பலாலி விமானத்தை நவீனப்படுத்துவோம். காங்கேசந்துறை துறைமுகத்தையும் மேம்படுத்துவோம் என்று. வளர்ச்சி நிகழட்டும். அதற்கு நாங்கள் எந்தவிதமான தடையும் இல்லையென்று கூறலாம். போதை மாபியாவை ஒழிக்கிறீர்கள் உங்களுடைய செயற்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால்புதிய தமிழ் தலைமுறை ஆனது வெளித் தோற்றங்கள் வெளிப்பாடுகளை கவர்ச்சிகர அரசியல் வித்தைகளை மட்டும் சமூக ஊடகங்களில் பார்த்து ஈர்க்கப்படுவது போல் இல்லாமல்அவர்களுடைய பெற்றோர்கள்சமூகத்தில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் தமிழ் இன வரலாற்றை விளக்கி சொல்ல வேண்டும். அப்போதுதான் உண்மை நிலைத் தெளிவாக தெரியுமென்பது உறுதி. மாயமான கவர்ச்சிகர பூசிமெழுகுதல்களுக்குள் அகப்பட்டு போகாது எங்களுடைய அடிப்படை கோரிக்கைகள் மற்றும் தமிழர் உரிமைப் போராட்டம் ஏன் நடந்தது ஏன் இனப்படுகொலைகள் நடந்தன. ஏன் இந்த இனம் முள்ளிவாய்க்கால் வரை சென்றது என்ன தேவை எங்களுடையது ஏன் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டது என்பதையெல்லாம் பார்க்கின்ற மக்களாக இல்லாமல் உணர்கொன்ற மக்களாக இருக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உரிமைக்கான போராட்டத்தை உங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். இல்லையென்றால்தமிழ் தேசியம் சிதைந்து போய்விடும். இவை மிக நுண்ணியமாகவும்திட்டமிட்ட முறையிலும் நகர்த்தப்பட்டு வருகிறது. என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நீதி உரிமைகள்மற்றும் காணாமல் போனோர் விசாரணைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை. கடந்த பல வருடங்களாக முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைஅரசியல் கைதிகள் விடுவிப்பு மற்றும் காணிகள் மீட்புக்கு தமிழர்கள் போராடி வருகின்றனர்.

தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என்ன? என்பது பற்றி எதுவுமே இல்லை! ஜனாதிபதியின் யாழ் பொங்கல் உரையின் வார்த்தைகள் தமிழர்களுக்கு தனி நிர்வாக கட்டமைவு தேவையிலை அதிகார பரவலாக்கம் தேவையில்லை என்ற கருத்து உட்பொசிந்ததாகத் தான் அமைகிறது. ஆட்சியாளர்கள் மக்கள் மனதை மயக்குகின்ற “brain wash” விதமாக பேசுகிறார்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுடைய இனிமையான வார்த்தைகளாலும்செயல்களாலும் தமிழ் மக்கள் அடிப்படை அபிலாசைகளை நீர்த்து போகச்செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் மனதில் குழப்பம் உருவாகி சரிதவறு விளங்காமல் உண்மையான நிலைமை மறைமுகமாக்கப்பட்டுவெளியில் தெரியாமல் போய்விடுகிறது. தமிழர்களின் நீதி போராட்டம் காணிகள் மீட்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு இன்னும் தொடர்கிறது. மக்களின் உரிமைகள் மறக்கப்பட கூடாது என்றும்சர்வதேச நீதி அரசியலமைப்பினூடான தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கம் என்பவை தமிழர்களின் வேணவா!

இதில் தமிழ் மக்களையோ அரசையோ மட்டும் குறை கூறிப் பயனில்லை. எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் விட்ட பிழைகளும்நீண்ட தொலைநோக்கு இல்லாத அரசியல் செயற்பாடுகளும் இன்று மக்களை கடுமையான விரக்திக்குள் தள்ளியுள்ளன. அதனால்தான் மக்கள் ஒரு புதிய முகத்தை, புதிய அரசியலை தலைமையை தேட ஆரம்பித்துள்ளனர். தமிழ் இளம் புதிய தலைமுறைக்கு தமிழ் தேசிய அரசியலுக்குள் மேலெழும்புவதற்கும் வரவேற்பு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. அன்றிருந்த தமிழ் அரசியல் வாதிகளே இன்றும் அதே முகங்கள்அதே கண்கள்அதே சொற்பிரயோகங்கள் அதே காட்சிகளே மேடைகளிலும் ஊடகங்களிலும்அட்டைப்படங்களிம் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இதனால் மக்கள் ஏற்கனவே இந்த அரசியல் செயற்பாடுகளின் மீது முழுமையாக விரக்தி அடைந்துவிட்டார்கள். ஆகவே அவர்கள் புதிய தலைமுறையினரை தேடுகிறார்கள். உண்மையில் தமிழர் இனப்பற்றுருதியுடன் அரசியல் தொலைநோக்குடன் இயங்கும் ஒரு புதிய தலைமுறை இருந்தால் மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள்.

ஆனால் இன்றோ தமிழர் மத்தியில் தேவையற்ற அரசியல் அறிவிலிகளும், சமூகத்துக்கு ஒப்புவையல்லா வார்த்தை பிரயோகமும் அரசியல் அறிவற்ற பேச்சுத் திறன்கால் அற்றஇனத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்காத அரசியல் பிரதிநிதிகள் மட்டுமே உருவாகியுள்ளனர்.

ஒரு பக்கம் இந்திய இழுவைப்படகுகள் வந்து வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டிருக்கின்றன. அதற்கு எந்த தீர்வும் இல்லை. மீனவர்கள் அழுகிறார்கள். சட்டவிரோத விகாரைகள் நில அபகரிப்புகள் என்று பிரச்சனைகள் தொடர்கின்றன. ஆனால் இதற்கெல்லாம் உறுதியான அரசியல் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி இனியும் மனம் வைக்கலாம். ஆனால் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இன்னும் உறுதியாகவும் பொறுப்புடன் அரசியல் செய்ய வேண்டிய காலம் இது. அத்தோடு தமிழ் மக்களும் வெளிக் காட்சிகளையும், வண்ண ஜாலங்களையும்கவர்ச்சி வார்த்தைகளையும் பார்த்து மயங்காதீர்கள். வெளிப்புறத் தோற்றங்கள் இனிமையான பேச்சுகள் மட்டும் கண்டு உங்கள்தமிழ் தேசிய அடையாளத்தை காற்றில் பறக்க விடாதீர்கள். அது போதையை விட கூட அதிக ஆபத்தானது. இனத்தை கூறு போடுவதும்இனப்பற்றையும், இனத்துக்குரிய அங்கீகாரத்தையும் விற்று பிழைப்பதும் எதிர்கால தலைமுறைகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். அரசியல் என்பது இன்றைக்கானது அல்ல அதுவருங்கால தலைமுறைகளுக்காக செய்யப்படவேண்டிய ஒரு பொறுப்பு வாய்ந்த செயல். அந்த அரசியல் பார்வை தான் இன்று மிகவும் தேவை.

ஆக தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை அதிகார பரவலாக்கத்தை இன்னும் பாராமுகத்துடன் தான் இன்றைய அரசுகளும் கையாளுகின்றன என்பதும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளினால் வெறுப்படைந்த மக்கள் அலைகளுள் கட்டுண்டு போகிறார்கள். ஆக எம் உரிமைகளை வென்றெடுக்கும் நீண்ட நெடிய போராட்டத்தில் புதிய தமிழ்தேசிய அரசியல் வீறுகொண்டெழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Be the first to comment

Leave a Reply