நீதித்துறை
நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்கிய நீதிபதி!
வியந்து போகிறேன்…!
எத்தனை உயர்ந்த பதவியில் எத்தனை மோசமான பொய்கள்!
நீதிபதி பதவி என்பது பொய் சொல்வதற்காக தரப்பட்ட அங்கீகாரமல்ல.
உண்மையான வரலாற்றை மறைத்து பொய் வரலாற்றை திணிக்கும் அதிகாரத்தை நீதிபதி பதவிக்கு நமது அரசியல் சட்டம் வழங்கவில்லை.
உதயநிதி ஸ்டாலின், ”சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

இதற்கு பாஜகவின் அமித்மாளவியா என்பவர், ”இது சனாதனிகளை இனப் படுகொலை செய்யும் பேச்சு” என பதிவிட்டு இருந்தார்.
அமித்மாளவியாவின் பேச்சுக்கு திமுக வழக்கறிஞர் அணி கே.ஏ.வி.தினகரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் தர, காவல்துறை வழக்கு பதிவு செய்ய, அந்த நபர் வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை கோர்ட்டுக்கு போக அது இந்துத்துவ ஆதரவு நீதிபதி ஸ்ரீமதி வசம் போய்விட்டது.
என்னைப் பொறுத்த வரை உதயநிதியின் பேச்சை திமுக அரசியல் ஆயுதமாக வளர்த்தெடுத்து அதற்கான ஆழ்ந்த, அர்த்தமுள்ள விளக்கங்களை அரசியல் மேடைகளில் தந்திருக்க வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் அந்த இயக்கத்தில் நிறையவே உள்ளனர்.
மாறாக, உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின் தமிழகத்தின் மூன்று பிரபல ஜீயர்களை தன் வீட்டிற்கு வரவழைத்து தன் மகனோடு ”பரிகாரம் செய்கிறேன்.. ”பாதபூஜை செய்தது தவிர்த்திருக்க வேண்டிய மானக்கேடாகும்.
அமித்மாளவியாவுக்கு அரசியல் மேடையிலும், சோசியல் மீடியாவிலும் பதில் சொல்லாமல் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்க வேண்டியதில்லை. திமுகவினர், ‘எங்களுக்கு ஆதரவாக காவல்துறை இருக்கு’ எனக் காட்டப் போய், அவர்கள், ‘எங்களுக்கு ஆதரவாக நீதித்துறை இருக்கு’ எனக் காட்டிவிட்டனர்.

ஒரே வரியில், ”அமித் மாளவியா தண்டிக்கப்பட வேண்டியவரல்ல. மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று என நீதிபதி ஸ்ரீமதி கடந்து போனால் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் படு அபத்தமாக பேசி இருக்கிறார்.
# சனாதன தர்மம் ஒழிப்பு எனில், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பது அர்த்தமாம். எனில், அது இனப் படுகொலையைக் (genocide) குறிக்கிறதாம்!
அப்படியானால், ”பாஜக ஒழிக” , ”திமுக ஒழிக” என்பதெல்லாம் அரசியல் மேடைகளில் சர்வசாதரணமாக பேசப்படுகிறதே.. இப்படி பேசுவதெல்லாம் அந்தந்த கட்சிக்காரர்களை அழித்தொழிக்கும் முயற்சி என கொலை வழக்கு பதிவு செய்வீர்களா?
# உதயநிதி ஸ்டாலினின் பேச்சு 80% இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சாம்!
சனாதன தர்மம் என்பது முன்று சதவிகித பார்ப்பனர்களின் மதமாகும். சைவம், வைணவம், சாக்தம்,கெளமாரம், காண்பத்யம், செளரம்.. பல மதங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதே இந்து மதமாகும்.
இந்து மதத்திற்கு சனாதன தர்மத்தை அத்தாரிட்டியாக காட்டும் உரிமை நீதிபதி உள்ளிட்ட யாருக்கும் இல்லை. அந்தந்த மதங்களை பின்பற்றக் கூடிய உரிமையை மறுத்து அனைவரையும் சனாதன தர்மத்தினர் என்றால், ஏன் பூணூல் போடும் வாய்ப்பும், கோவில் அர்ச்சகர் வாய்ப்பும் மற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது…?
# ‘காமராஜர் சனாதனத்துக்கு எதிரானவர் இல்லை; அவர் தீவிர இந்து பக்தர்; முருகன் பக்திப் பாடல்களைப் பாடுகிறவர்…’ என போகிற போக்கில் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார், நீதிபதி.
காமராஜர் எத்தீஸ்ட் ( கடவுள் நம்பிக்கையற்றவர்) என்பதற்கு அவரே பேசியுள்ள பல பதிவுகள் உள்ளன. வீரபாண்டியன் எழுதிய, ‘ஆகட்டும் பார்க்கலாம்’, கோபண்ணாவின், ‘காமராஜ் ஒரு சகாப்தம்’ ஆகிய நூல்களில் இதற்கான ஆதாரங்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளன.
# புத்தர் வேதகால நடைமுறைகளை மட்டுமே எதிர்த்தவரேயன்றி, புத்தர் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்லவாம்!
தனக்கு சரியான புரிதல் இல்லாமலோ அல்லது புளுகினால் என்ன ஆகிவிடப் போகிறது? என்ற தைரியத்தாலோ, நீதிபதி இவ்வாறு பேசி இருக்கிறார்.
சனாதனத்திற்கு முற்றிலும் எதிராவும், மாற்றாகவும் உருவானதே புத்த மதம். பார்ப்பனர்களை பெரியாரைக் காட்டிலும் தோலூரித்துக் காட்டியுள்ளார், புத்தர் கனம் நீதிபதி அவர்களே..
# சைவ சமயத்தைச் சேர்ந்த வள்ளலார் முக்தி அடைய சனாதன தர்மத்தைப் பின்பற்ற சொன்னவராம்!
வேத ஆகமங்கள் என்று வீண் ஆடுகின்றீர்
வேத ஆகமத்தின் விளைவறியீர் ; சூதாகச்
சொன்னதல்லால் உண்மை உரைத்தலில்லை.
என்ன பயனோ இவை;
என சனாதனத்தின் சல்லி வேரான வேத, ஆகமங்கள் உண்மையில்லை, சூதாகச் சொல்லப்பட்டவை. ..என கிள்ளி எறிந்தவரன்றோ. வள்ளலார்?
இதுமட்டுமா? மேலும்
சாதியும், மதமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!
எனப் பாடிய வள்ளலாரை சனாதன ஆதரவாளர் என்று மனசாட்சியில்லாமல் சொல்லக் கூடாது.
# அரசு தரப்பு தெரிவிப்பது போல மகாத்மா காந்தி, சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியவர் இல்லை. அவர் ஒரு சனாதன இந்து என தன்னை அறிவித்தவராம்!
ஒ..அப்படியானால். அவரை சனாதனிகள் கொலை செய்ய வேண்டும்? ஏன் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியும், செயல்பட்டும் வந்தார் காந்தி.ஆகவே அவர் கொல்லப்பட வேண்டியவர் என கோட்சே நீதிமன்றத்தில் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்?
இப்படி பல அபத்தமான பொய்கள் நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பில் உள்ளன.
மேலும், பெரியார் காலத்தில் நடந்தவற்றையெல்லாம் வெறுப்பை தூண்டும் விதத்தில் மீண்டும் நினைவுபடுத்தி பேசி இருக்கிறார் நீதிபதி. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாதவற்றை – இன்றைய சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடியவற்றை – பேசக் கூடாது.
இது மிகவும் துர் அதிர்ஷ்டவசமானது. நீதிபதியின் பேச்சு இந்துத்துவ அரசியலுக்கான ஆர்.எஸ்.எஸ்சின் குரலாக வெளிப்படுகிறது.
சாவித்திரி கண்ணன்

Leave a Reply
You must be logged in to post a comment.