#இனப்பிரச்சனையின்_ஆதியும்_அந்தமும்_002
டச்சுக்காரர்கள் வசமிருந்த பகுதிகளை பிரித்தானியர்கள் 1795 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.கோட்டை மற்றும் யாழ்ப்பாண ராஜியங்களின் கவர்னராக #ரோபட்_பிறவுன்றிக் நியமிக்கப்பட்டார்.
அப்போது அவர் குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் “புத்தளம் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவற்றுக்கு வடக்கே உள்ள சகல பகுதிகளிலும் வாழும் மக்கள் தமக்கு உரிய மொழியான தமிழைத் தான் பேசுகிறார்கள் அதனால் தமிழ் மொழியை சிங்களத்துக்குசமமான அதே நிலையில் பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் அதுவரை சுயாதீனமாயிருந்த கண்டி ராஜ்ஜியம் 1815 இல் பிரித்தானியர் வசமாகியது. கண்டியின் கடைசி மன்னனாகிய ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழனாவான்.அவனைப் பிக்குகளும் பிரபுக்களும் இணைந்து காட்டிக்கொடுக்க பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான்.அதன் பின் பிரித்தானியர்கள் கண்டிய பிரபுக்களுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கண்டியையும் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர். அந்த ஒப்பந்தத்தில் கண்டிய பிரபுக்கள் தமிழிலேயே கையொப்பமிட்டிருந்தனர்.
1833 பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டிருந்த #கோல்புறூக் ஆணைக்குழு முழு இலங்கையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது ஆங்கிலத்தை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தது. பிரித்தானியர்கள் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றிணைத்து மனிதர்கள் என்ற போர்வையில் ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு ஒன்றும் யோக்கியர்கள் இல்லை.
அவர்கள் தமது நிர்வாக வசதிக்காகவே இந்த அநியாயத்தைச் செய்தார்கள்.
தமிழர்கள், கரையோரச்சிங்களவர்கள்,கண்டியச் சிங்களவர்கள் தத்தமது மொழி கலாசாரம் பழக்கவழக்கங்கள் சமயம் முதலியவற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துவமாகப்பேணி வாழ்ந்தவர்கள். ஆகையினால் அவர்களால் ஒன்றிணைந்து தாம் நிருவகிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் ஒருபோதும் அவர்களுக்கு இருந்ததில்லை.கண்டிராஜியத்தைக்காட்டிக்கொடுத்த பிரபுக்களும் பிக்குகளும் கூட கண்டிய இராஜ்ஜியம் தனித்துவமாக சுயாதீனமாக இருப்பதையே விரும்பினர். ஒற்றையாட்சி என்பது பிரித்தானியர்கள் வலிந்து திணித்து ஒன்று.ஆனால் இன்று அவர்கள் இலங்கை விடயத்தில் நடிக்கும் நடிப்பு உலகமகா நடிப்பு.
கண்டியைக் கைப்பற்றியதன் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி #சிங்கள_முஸ்லிம்_இனக்கலவரமாக மாறியது அதில் பல சிங்களத் தலைவர்கள் பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

இராமநாதன் லண்டன் வரை சென்று அவர்களுக்காக வாதாடி அவர்களின் விடுதலையை பெற்றுக் கொடுத்தார்.அவர் கப்பலின் மூலம் லண்டனிலிருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது அவரை ஒரு #தேரில்_ஏற்றி சிங்களத் தலைவர்கள் கருவாக்காடு வரையிலும் தேர் வடம் பிடித்து இழுத்து வந்து தங்களுடைய நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.இவ்வாறு சேர்.பொன்.இராமனாதன் அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களே பின்னாலில் தமிழர்களுக்கு ஆப்பிறுக்கிய வித்தைக்காரர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்தியாவில் தேசிய சுதந்திரப் போராட்டம் வலுவடைந்தது. இங்குள்ளவர்கள் பலர் அதனால் கவரப்பட்டனர்.இந்திய அரசியிலின் செல்வாக்கு காலாகாலமாய் இலங்கையை பாதிப்பதை மறந்துவிடக்கூடாது.எனவே அன்று
#சேர்_பொன்_அருணாசலம் தலைமையில் #இலங்கை_தேசிய_காங்கிரஸ் 1917 தோற்றம் பெற்றது. சிங்களத் தலைவர்களும் அதில் இணைந்து கொண்டனர்.சிங்களத் தலைவர்களும் தமிழ் தலைவர்களும் இணைந்து தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் அரசகரும மொழிகள் ஆக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைத்தனர்.பின்னாலில் வரலாற்றை மறந்த பேரினவாதிகள் தமிழைப்புறக்கணிக்க முடிவெடுத்து பூகம்பத்தை உருவாக்கினர்.
லண்டனில் சட்டப்படிப்பை முடித்து 1920இல் இலங்கை திரும்பிய எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா இரு மொழி பேசும் இனங்கள் வாழும் நாட்டுக்கு #சமஸ்டி முறையே சாலச்சிறந்தது என்கின்ற அபிப்பிராயத்தை முதன் முதலில் முன்வைத்தார்.இவரே பின்னாளில் சிங்களத் தரப்பில் இருந்து வலுவான முறையில் இனப்பிரச்சனை ஒன்றுக்கான அத்திவாரத்தையுமிட்ட அதிமேதாவி ஆவார்.
இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தால் அனைத்து இன மக்களும் சரிநிகர் சமமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை காரணமாக இலங்கை தேசிய காங்கிரஸை தோற்றுவித்த சேர் பொன் அருணாசலம் சிங்களத் தலைவர்களின் இனவாதப் போக்கை கண்டு மனம் வருந்தினார். 1924இல் இந்த அமைப்பில் இருந்து வெளியேறினார். தமிழருக்குரிய பிரதேசங்களான தமிழ் பிரதேசங்களை பலப்படுத்துவதன் மூலமே தமிழர்களின் வாழ்வும் வளமும் வலுப்பெறுமென அவர் தூரநோக்குச் சிந்தனையுடன் வெளிப்படையாக அன்றே கூறியிருந்தார். தந்தை செல்வாவுக்கு முன்னரே நீங்கள் வேறு நாடு நாங்கள் வேறு நாடு என்று உரக்கச் சொன்ன தலைவர் அருணாச்சலம் ஆவார்..

Leave a Reply
You must be logged in to post a comment.