1948: கொடக்கன் பிள்ளை வழக்கு!
1948இல் குடியுரிமை பறிப்பும், அதனைத் தொடர்ந்து வாக்குரிமைப் பறிப்பும் ஏற்படுத்திய அரசியல் விளைவுகள் சாதாரணமானதல்ல.
இதனை எதிர்த்து கொடக்கன் பிள்ளை தொடுத்த வழக்கின் தீர்ப்பில் குடியுரிமைச் சட்டமும் செல்லாது, தேர்தல் சீர்திருத்த சட்டமும் செல்லாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

ஆடிப்போனது சேனநாயக்க அரசாங்கம். 50,000 இந்தியத் தமிழர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு எஞ்சிய அனைவரையும் விரட்டிவிடுவதே அவரின் திட்டமாக இருந்தது. இவ்வாறு அவர் சொன்ன கதையை அன்று பண்டாரநாயக்க பகிரங்கமாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இறுதியில் இந்த வழக்கு லண்டனில் கோமறைக் கழகத்தில் (Privy Council) விசாரிக்கப்பட்டு கொடக்கன் பிள்ளைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் குடியுரிமை சட்டமும், தேர்தல் திருத்த சட்டமும் இன்னும் வலுவாக நிலை நிறுத்தப்பட்டது.

அந்த வழக்குத் தீர்ப்புத் தான் சுதந்திர இலங்கையில் முதலாவது அரச பயங்கரவாதத்துக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கியது. அதன் பின்னர் பல்வேறு வழக்குகளுக்கும் இந்த வழக்கை ஒரு முன்னுதாரண தீர்ப்பாக அரசு பயன்படுத்தி வந்தது.
இந்த வழக்கைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் பலர் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். அவர்கள் தேடித் பிடிக்கப்பட்டு சட்டவிரோதக் குடியேறிகளாக நாடு கடத்தபட்டார்கள். அச்செய்திகள் அன்றைய பத்திரிகைகளிலும் அடிக்கடி வெளிவந்தன. இங்கே உதாரணத்துக்கு அன்றைய இந்து சாதனம் பத்திரிகையில் (1-.07.1951) வெளியாகியிருந்ததை பகிர்ந்திருக்கிறேன்.
இந்த வழக்கைப் பற்றிய விரிவானதொரு பெரிய கட்டுரைக்காக பல ஆதாரங்களை திரட்டி கடந்த சில நாட்களாக எழுதி வந்தேன். இன்று விடிய 5 மணிக்குத் தான் அதன் இறுதி வடிவத்தை சுமார் 3200 மேற்பட்ட சொற்ககளைக் கொண்டு முடித்துவிட்டு நித்திரையானேன்.
இதற்காக நான் பயன்படுத்திய பல்வேறு நூல்களில் Ramnath, Kalyani. எழுதிய Boats in a Storm: Law, Migration, and Decolonization in South and Southeast Asia, 1942–1962. என்கிற நூல் எனக்கு மிகவும் பயன்பட்டது. அதில் பயன்படுத்தியிருந்த மூலாதாரப் பட்டியல் (Reference Sources) மூலாதாரங்களைத் தனியாகத் திரட்டுவதற்கு வழிசமைத்தது.
இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளின் மூலப்பிரதிகளும் பயன்பட்டன. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களும் அவரின் வழக்கறிஞர் தோழர்களும் இந்த வழக்கில் கொடக்கன் பிள்ளைக்கு ஆதரவாக போராடியதும் அவர்கள் முன்வைத்த வாதங்களும் வரலாற்றில் மறக்கக்கூடாத அத்தியாயம்.
பின்வந்த இனவிடுதலைப்போராட்டத்துக்கு ஏதோ ஒரு வகையில் அத்திவாரமிட்ட வழக்கு இது.
கட்டுரை வெளிவந்ததும் பகிர்கிறேன் தோழர்களே.

Leave a Reply
You must be logged in to post a comment.