திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் தாமரை அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!
நக்கீரன்
ஆண்டுதோறும் தமிழ் மிறர் நடாத்தும் Gala Night விருது விழா கடந்த நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் மார்க்கம் நகரில் நடைபெற்றது. இது 20 அவது ஆண்டு விழாவாகும். ஒரு விழா நாடாத்துவதே பெரிய சாதனை. ஆளணி, அம்பு, நேரம், பணம் தேவை. அப்படியான ஒரு விழாவை தொடர்ந்து 20 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது அசுர சாதனை.
இந்த விருது விழாவை நடத்துபவர் தமிழ் மிறர் ஆங்கில மாத ஏட்டின் பிரதம ஆசிரியர் திரு சார்ல்ஸ் தேவசகாயம் அவர்கள் ஆவர். இந்த விழாவில் பல துறைகளில் சாதனை நிகழ்த்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கி மதிப்பளிக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக இசைக் கலைஞர்கள் அழைக்கப்படுவது வழக்கம். இம்முறை திரைப்பட கவிஞர் தாமரை முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
கவிஞர் தாமரை அவர்களுக்கு கடந்த நொவெம்பர் 26 ஆம் நாள் இங்குள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள் , நண்பர்களால் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கனடா எழுத்தாளர் இணைய உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கவிஞர் தாமரை கனடா வந்தது இது முதல் தடவை அல்ல. 2010 ஆண்டும் வந்திருந்தார். அவரோடு அவரது மகன் சமரன் (போர்வீரன்) அவர்களும் வந்திருந்தார். இவர் தனது தாயைப் போலவே ஒரு பொறியியல் பட்டதாரி ஆவர். அம்மாவைப் போல பிள்ளையும் ஒரு கவிஞராக வர முயற்சிக்கிறார். அவர் எழுதிய சில பாடல் வரிகளை அநாயசமாக பாடிக் காட்டினார்.
கவிஞர் தாமரை அவர்களது தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியவர்.
“ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்” என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். “சந்திரக் கற்கள்”, “என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.
கவஞர் தாமரை திரைப்பட பாடல் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினாலும் அவர் ஏனைய திரைப்பட பாடல் ஆசிரியர்கள் போல் புகழ் பெறவில்லை. பணம் சம்பாதிக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
தான் எழுதும் பாடல்களில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக ஆங்கிலச் சொற்களை கலந்து எழுத மாட்டார். இரட்டை அர்த்தப்படும் பாடல்களையும் எழுதமாட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆபாசப் பாடல்களை எழுதமாட்டார். புகை, மது, போதை இவற்றைத் தூக்கிப் பிடிக்கும் பாடல்களுக்கு அறவே மறுப்பு! இந்த நிலையான நிபந்தனைகளை இயக்குநர்களிடம் முன்வைப்பதால் பாடல் எழுதும் வாய்ப்புகள் நழுவிப் போய்விடுகிறது.
வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ…” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். திரையிசைத் துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.
இயக்குநர் சீமானின் “இனியவளே” திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் 1998 இல் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். தொடர்ந்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (“மல்லிகைப் பூவே”), தெனாலி (“இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ”) போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.. ஆனால் 17 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய “ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மின்னலே திரைபட்டத்தில் இவரது பாடல் “வசீகரா” மிகவும் புகழ் பெற்று அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அவர் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, நீருக்குள் மூழ்கிடும் தாமரை “ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!
நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!
இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்…)
தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!
என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)
படம்: வாரணம் ஆயிரம்
வெளிவந்த ஆண்டு: 2008
இயற்றியவர்: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா
காதலனாக நடிக்கும் சூர்யா மிக நன்றாக நடித்திருப்பார்.
கவிஞர் தாமரை அடிப்படையில் ஒரு இயந்திரப் பொறியியல் பட்டதாரி. கை நிறையச் சம்பளம். இளவயதிலேயே தமிழ்மீதுள்ள காதலால் தமிழ்ப் படித்து அதில் புலமை பெற்றார். தமிழகத்தில் வெளிவரும் பல கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசு பெற்றிருக்கிறார். இதன் காரணமாக திரையுலகில் ஒரு பாடலாசிரியராக வர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஆறு ஆண்டுகளில் பொறியாளராக இருந்த பதவியைத் துறந்து ஒந்றைப் பெட்டியுடன் சென்னைக்குக் குடியேறினார். இந்தத் துணிவு, தன்னம்பிக்கை ஒருவருக்கு இலேசில் வந்து விடாது. அவரிடம் காணப்பட்ட ஆழ்ந்த தமிழ்ப் பற்றுத்தான் அதற்குக் காரணம்.
மிகச் சிறு வயதிலேயே இருந்த படிப்பார்வம், இலக்கியத் தேடல் பின்னாளில் அவரை சென்னை கொண்டு சேர்த்துப் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற அவரது நெடுநாள் கனவை நனவாக்கிவிட்டன!
கவிஞர்கள் பிறக்கும் போதே கவிதை புனையும் ஆற்றலோடு பிறக்கிறார்களா? அதாவது ஒருவர் பிறவிக் கவிஞரா இல்லை தமிழ்ப் பண்டிதர்களிடம் காரிகை கற்று கவிதை எழுதினார்களா? எனது அவதானிப்பில் கவிஞர்கள் பிறக்கும் போதே கவித்துவத்தோடு பிறக்கிறார்கள். அருணகிரிநாதர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி போன்ற கவிஞர்கள் சான்றாக இருக்கிறார்கள்.
கண்ணதாசன் புலவர் முதலாண்டு வரைதான் படித்திருக்கிறார். பட்டுக்கோட்டையார் 3 ஆம் வகுப்பு. வாலி படிக்கவேயில்லை. விதி விலக்காக கவிப்பேரரசு வயிரமுத்து எம்.ஏ தமிழ் படித்திருக்கிறார்.
இளமையில் படியாத குறையை பின்னர் சங்க இலக்கியங்கள், கம்பராமாணம் திருக்குறள் போன்ற நூல்களைப் படித்து தங்கள் தமிழ்ப் புலமையை வளர்துள்ளார்களள்.
திரைப்படங்களுக்கு பாடல் எழுத தனித் திறமை வேண்டும். அது எல்லோராலும் முடியாது. ஒரு படத்தின் உதவி இயக்குநர் பாடலுக்கான சூழ்நிலையை விளக்க, அதற்கான மெட்டை இசையமைப்பாளர் மெட்டை வாசிக்க பாடலாசிரியர் வரிகளை எழுத வேண்டும். சில சமயம் பாடலாசிரியர் எழுதிய பாடலுக்கு இசையமைப்பாள் மெட்டு அமைக்கக் கூடும்.
2006 ஆம் ஆண்டு வன்னியில் போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்த போது அங்க சென்று தலைவர் பிரபாகரனை நேர்காணல் காண முயற்சித்ததாகவும் அந்த முயற்சி பலிக்கவில்லை என்பதையும், தன்னை ஒரு உளவாளியாக இருக்கலாமோ என அய்யப்பட்டதாகவும் அதனால் தன்னை வீட்டு காவலில் வைத்து விட்டதாகவும் தாமரை சொன்னார். பாரதி கண்ட புரட்சிப்பெண் போல வாழ்பவர் கவிஞர் தாமரை.
தாமரை.ஒரு கவிஞரை, அதிலும் ஒரு பெண் கவிஞரை அழைத்து மதிப்பளிப்பது மூலம் அவரை அல்ல அவரது தமிழ்ப் பற்றையும் தமிழ் உணர்வையும் ஒப்புவது போல இருக்கும். அவருக்க புதிய உற்சாகத்தை கொடுக்கும். கவிஞர் தாமரையில் பாடல்கள் நூல்களாக வெளிவரவேண்டும். அதற்கு கனடா வாழ் எழுத்தாளர்கள், கை கொடுப்பார்கள் என நம்பலாம்.
நிகழ்ச்சி முடிவில் கவிஞர் தாமரை அவர்களின் இரசிகர்கள் அவருக்கு அன்பளிப்புச் செய்தார்கள்.

Leave a Reply
You must be logged in to post a comment.