திருமலைப் புத்தருடன்

மீண்டும் தொடங்கும் தமிழ்க் கட்சி அரசியல்!

————————————————————————–

நேற்றுப் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச பேசும்போது எடுக்கப்பட்ட காணொளியைப் பார்த்தபோது சந்திரிகா கொண்டு வந்த அரசியலமைப்பு யோசனைகளைப் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எரித்த காட்சி நினைவுக்கு வந்தது.

எதிர்க்கட்சிகளின் தலைவர் சஜித் அவருக்கு முன் உரையாற்றிய தயாசிறீ ஜயசேகரவுக்குத் தாமும் சளைத்தவரல்ல என்பதற்கோ அல்லது தமது அணிக்குள் உள்ள குழப்ப நிலையில் தம்மைத் தக்கவைக்கவோ என்னவோ அவர் பேசிய பேச்சு அமைந்திருந்தது- என்று கொண்டாலும்

தமக்கு வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்களையும் தமது அணியிலிருந்த தமிழ் முஸ்லிம் மலையக அணிகளையும் தாம் ஒரு எதிர்க்கட்சிகளின் தலைவர் என்பதையும் அவர் மறந்த நிலையில் பேசியதாகவே தெரிகிறது.

பண்டா -செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினுள் முதற் கிளம்பியவர் ஜே.ஆர். ஜயவர்த்தன.உட்கட்சிப் பிரச்சினையில் தமது தலைமையைத் தக்கவைக்கத் தானும் சளைக்கவில்லை என்று தமிழ் மக்களின் மதிப்பைப் பெற்றிருந்த டட்லியும் இறங்கினார் என்பது இனத்துவ அரசியலில் பழைய கதை. அது இன்னும் தொடர்வது ஆச்சரியத்துக் குரியதொன்றல்ல.

முன்னாள்- பாராளுமன்ற உறுப்பினர் அமரர் துரைரத்தினத்திடம் ‘தமிழரசுக் கட்சி ஏன் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கிவந்தது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதில்லை?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் ‘ஆற்றைக் கடக்கையில் ஆற்றங்கரையில் இரண்டு வத்தைகள் கரையிலிருந்தால், அவற்றில் எது தாழும் வாய்ப்புக் குறைந்தது என்று பார்க்கவேண்டும். எங்களுக்கு யுஎன்பியும் சுதந்திரக் கட்சியும் அப்படித்தான்..அதோட ஆற்றின் பெருக்கையும் பார்க்கவேண்டும்- என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் மலையக முஸ்லிம் கட்சிகள் எடுத்த முடிவும் துரையர் சொன்ன கதைக்கு ஒப்பான வை. அவர்களின் முடிவைத் தொடர்ந்து கடைசியாகத்தான் தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. துரையர் சொன்னதுபோல ஆற்றையும் பார்த்துத் தான் போலும்.

டட்லியின் வயிற்றில் மசாலவடை- என்று இடதுசாரிகள் தமிழரசுக் கட்சியினைப் பகிடிபண்ணியமை ( தமிழரசு- டட்லியின் யு.என்.பியுடனான உறவை) பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கே துரைரத்தினம் அப்படி உவமானக் கதையைச் சொல்லியிருந்தார்.

காலம் காலமாகப் பொதுத் தேர்தல்களின் போது தமிழர்கள்- வடக்குக் கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்க் காங்கிரஸுக்கும் ஆதரவும் வழங்கியவேளையில் தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே தமது வாக்குகளையுமளித்து வந்தனர்.

1977 தேர்தலில் வடக்குக் கிழக்கில் தமிழ் ஈழத்துக்கு ஆணையாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு தெற்கில் ஐ.தே.க வுக்கு ஆதரவை நல்கினர்.

1977 பொதுத் தேர்தல் முடிந்த கையோடு இடம்பெற்ற இனவன்செயலில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் ஜே.ஆர் ஜயவர்த்தன – ‘ போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்று தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் சேர்த்துப் போர்ப்பிரகடனம் செய்தார்.

நேற்றைய சஜித்தின் பேச்சு தமிழ் மக்களுக்கு குறிப்பாகத் தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு பாடத்தைக் தந்திருக்கவேண்டும்.

எதிர்க்கட்சியாகவுள்ள அவரைப் பாவிப்பதும் கூட துரையர் சொன்ன ஆற்றைக் கடக்கும் வித்தையையே ஒத்தது.

தமிழ்க் கட்சிகள் இனியாவது தங்கள் ‘ஈகோக்களை’, உளரீதியான வேறுபாடுகளை விட்டு- மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகக் காத்திரமான முடிவினை எடுக்கவேண்டும்.

பிரிந்து சிதறிச் சின்னாபின்னமானால்

தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை இன்று சாதாரண குடிமக்களே சொல்கிறார்கள்‌. அவர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

ஒருவரை ஒருவர் சாடி மீண்டும் பேசத் தொடங்கினால், மக்கள் வெறுப்பில் வாக்களிக்காமல் விடும் வாய்ப்புக்கே வழியுண்டு என்பது- நான் பேசிய சில ஊடகர்கள் முதற்கொண்டு சமூக ,பொதுச் செயற்பாட்டாளர்கள் வரையான கருத்து. பொதுத்தேர்தலில் தே.ம.சக்திக்கு இரண்டு உறுப்பினர்கள் கிடைக்கும் என்றவர்களே இவர்கள்‌.

நான் அப்போது நம்பவில்லை.

இவர்களின் கருத்துப்படி -வடக்குமாகாண சபைத் தேர்தலில் மீண்டும் ஒரு ‘ கடந்த பொதுத்தேர்தல் முடிவுகளை’ எதிர்பார்த்தாலும் ஆச்சரியம் இல்லை.

‘இவங்களுக்கு அவர்கள் ஒருக்கால் வந்தால்தான் சரி. அப்படியும் படிக்கமாட்டாங்கள் வரதன்- என்றார் மூத்த பத்தியாளரான ஊடகர் மிகுந்த சலிப்புடன்.

மாகாண சபைகள் தேவையில்லை என்ற பிரேரணையைக் கூட வடக்கு மாகாண சபை பிரேரித்து நிறைவேற்றலாம்.

நல்லாட்சிக் காலத்தில் ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் தமக்கு ஆளுநரின் அதிகாரங்கள் தேவை என்று கோரியிருந்தனர்.

ஆனால் இனி வரும் மாகாண சபைகளில் அந்த ஏழும் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் வந்தால்..

அவர்கள் ஏழு பேரின் கோரிக்கையும் வேறாக அமையலாம். மாகாண சபைகள் தேவையில்லை என்பதே ஜே.வி.பியின் அடிப்படைக் கொள்கை. அதனால் மாகாண சபை அறிமுகம் செய்யப்பட்டபோது, மாகாண சபைத் தேர்தலிற் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் கொல்லப்பட்ட கதைகளும் உண்டு.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அது எப்படியும் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கையில் வரும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் ஏனைய ஏழுடன் வடக்கிலிருந்தும்- ஒரு தீர்மானமாக-‘ மாகாண சபை முறைமை இந்த நாட்டின் கட்டமைப்பு பொருளாதாரம் என்பவற்றிற்கான அடிப்படையில்

வீணான செலவு என்ற காரணங்களைக் காட்டி அவசியமில்லாதது; மாவட்ட அபிவிருத்திக் குழுக்களே போதுமானது என்றவகையில்- ஒரு பொதுத் தீர்மானத்தை ஏற்படுத்தினால்..

ஏழு மாகாண சபைகளும் சேர்ந்து மொழி ரீதியான மத ரீதியான கட்சிகள் இந்த நாட்டில் அவசியமில்லை என்று தீர்மானத்தை சமர்ப்பித்தால்..

பாராளுமன்றத்திற்கு மீண்டும் அதிகாரத்தைக் கையளித்ததாய் முடியும்.

நீலன் திருச்செல்வம்- அஷ்ரப் கொண்டு வந்த அரசியலமைப்பு வரைபின் அடிப்படையில் சந்திரிகா கொண்டு வந்த பிராந்திய சபைகளுக்குள்ள அதிகாரங்கள் பற்றிய விடயங்களைத் திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு அல்லது அவ்வேறுபாட்டிற்கு முரணாக எதையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்போது – அப்படி நிறைவேற்றும் சட்டம் எதுவும் பிராந்திய சபைகளின் முறைப்படியான சம்மதத்தைப் பெறாமல் நடைமுறைக்கு வரமுடியாது- என்றிருந்தது.

*சந்திரிகா ஆலோசனையின் சரத்து (101(2))

குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டாலும் அது நடைமுறைக்கு வருவதற்குப் பிராந்திய சபைகளின் சம்மதம் அத்தியாவசியமானது.

அதிகாரப் பரவலாக்கலில் -சில அதிகாரங்களையும் பாராளுமன்றமே கொண்டிருக்க வேண்டும் – என்பதே ஒற்றையாட்சியின் அடிப்படை!

பாராளுமன்றத்தின் தீர்மானத்தைத் தடை செய்யும் ‘ இரத்து’ அதிகாரம் பிராந்திய சபைகளுக்கு வழங்கப்படுவது என்பது ஒற்றையாட்சியைக் கைவிடுவதாகும்.

1972 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்பிலும் 1978 இரண்டாம் அரசியலமைப்பிலும் ‘ இலங்கை ஒற்றை ஆட்சி’ நாடு என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

சந்திரிகாவின் அரசியலமைப்பு ஆலோசனைகளிலும் நல்லிணக்க அரசின் அரசியல் யாப்பு வரைபிலும்(ஏக்கிய ராஜ்ஜிய) அது நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்ட சந்திரிகாவின் பொதுசன ஐக்கிய முன்னணியின் சீர்திருத்த ஆலோசனையில் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் சட்டம் தொடர்பாக பிராந்தியங்களுக்கு வழங்கியுள்ள ‘ரத்துச்’ செய்யும் அதிகாரத்தை அந்தப் பிராந்தியங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அப்போது திருத்தம் ஒன்றை முன் வைத்தது.

மேலோட்டமாக இது பிரச்சினை இல்லை என்று பார்த்தாலும் மீண்டும் பாராளுமன்றத்திற்கே – ஒற்றையாட்சி முறைக்கே – அதிகாரத்தை வழங்கும் முறையாக அது அமையும்.

திருமலைப் புத்தர் சிலை விவகாரத்தில் அமைதியாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி விமர்சனங்கள் கருத்துகள் இப்போது சாராமாரியாகப் பொழியப்பட்டு வருகின்றன.

ஐ.தேக.வின் அன்றைய யோசனையை சந்திரிகா ஏற்று- பாராளுமன்றத்தில் பிராந்தியங்களின் அதிகாரக் குறைப்பு அல்லது நீக்கம் தொடர்பாக ரத்துச் செய்யும் அதிகாரம் பிராந்தியங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்று அரசில் உள்ள தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிராந்திய சபைகள் தொடர்பான அதிகாரக் குறைப்பு , நீக்கம் தொடர்பான சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது என்ன செய்வார்கள் -என்பதை இப்போது உணரமுடிகிறது. அவர்கள் கட்சித் தலைமை சொல்வதற்குக் கட்டுப்படுபவர்களாகவேயிருப்பர் என்பதே அரசியலில் யதார்த்தம்.

அரசாங்கக்கட்சிகளிலிருந்து அதில் அமைச்சர்களாகவும் பா.உக்களாகவுமிருந்த தமிழர்கள் அரசாங்கம் தமிழர்களுக்கெதிராகக் கொண்டுவந்த தரப்படுத்தல், பயங்கரவாதத் தடைச்சட்டம் 13 இலுள்ள அதிகாரங்களை மீளப்பெறல் எனப் பல தீர்மானங்கள் வந்தபோதெல்லாம் அரசுடனேயேயிருந்தனர்.

பதவி விலகவில்லை.

நேற்றைய திருமலைப் புத்தர் சிலை விவகாரம் அந்தப் பாடத்தையும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கியுள்ளது.

காமினி திசாநாயக்க கொண்டு வந்த அரசியலமைப்பு யோசனையில் 13 ஆம் திருத்தத்தில் – மாகாண சபைகள் தமக்குள்ள அதிகாரங்களை தமக்குத் தேவையான நேரத்தில் தம்வசப்படுத்திக்கொள்ள ஜனாதிபதிக்கோ பாராளுமன்றத்திற்கோ உள்ள அதிகாரங்களை யாப்புச் சீர்திருத்தம் ஒன்றின் மூலம் இரத்துச் செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. அவர் பதவிக்கு வந்திருந்தால் அதனைச் செய்திருப்பாரோ என்பது வேறு விடயம்.

ஆனால் சந்திரிகாவின் யோசனையில் நிதி, நீதிமன்ற நடவடிக்கைகள் , நீதிமன்ற அதிகாரப்பரவலாக்கல், மாகாண நிறுவனங்களுக்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல், அதற்கான வசதிகளை அதிகரித்தல் போன்ற விதிமுறைகள் மிகவும் சிறப்பாயிருந்தமை குறிப்பிடவேண்டியது.

நீலன்-அஷ்ரப்- பீரிஸ் வரைபில் நீதிமன்ற அதிகாரப் பரவலாக்கம் என்பது காணி, குடியேற்றம் தொடர்பான அத்துமீறல்களில் முக்கியமானதொன்றாக விதந்து பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பி மாகாண சபைகளை மட்டுமன்றிப் பொது சன ஐக்கிய முன்னணியின் ( சந்திரிகாவின்) யோசனைகளை ஆரம்பம் முதலே எதிர்த்தது.

ஐ.தே.கட்சியானது சந்திரிகா சமர்ப்பித்த யோசனையைத் தான் ஏற்கவில்லை என்றும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைத் தக்க வைக்க ( அதிலுள்ள சில விதிகள்) வஞ்சகமான ஏற்பாடு என்றும் சொல்லி எதிர்த்தது.

பாராளுமன்றத்தில் ஐ.தே.க வின் சில உறுப்பினர்கள் அந்தச் சட்ட மூலத்தை எரித்தார்கள்.

ஜே.வி.பி யும் சிஹல உறுமயவும்,

அது நாட்டைப் பிரிக்கும் யாப்பு – என்று குறிப்பிட்டு எதிர்த்தன.

2002 ஆம் ஆண்டு களனி விகாரையில் ஆற்றிய சுதந்திர தின உரையில் ரணில் விக்ரமசிங்க ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு அமையும்- என்றார்.(தினகரன் 05/04/2000)

2002.04.27 இல் மல்வத்தை ,அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு ஒற்றையாட்சிதான் தமது தீர்வு என உறுதி வழங்கியிருந்தார்.

ஒஸ்லோத் தீர்மானத்துக்குப் பிறகும் ஐ.தே.கவின் மூத்த அமைச்சரான எம்.எச் முகம்மட் ஒற்றையாட்சியின் கீழ் நிலையான சமாதானத்தை நடைமுறைப்படுத்தவே விரும்புகிறோம் -என்று பேசியிருக்கிறார்( டெய்லி நியூஸ் 28/12/2002).

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் என்றும், அதில் 13 ஆம் திருத்தம் இருக்காது என்றும்- அரசு தரப்பில் அறிவிக்கப்படுகிறது. முழுதாகப் புதிதாக ஏற்படுத்தப்படும் அரசியலமைப்பில் 1) அது உள்வாங்கப்படலாம். 2) முற்றாக இல்லாமலும் போகலாம். அது வேறு கதை.

ஆனால் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன் அது பல குழுநிலை ஆலோசனைகளை நடத்தும் என்றும் ஆளுந்தரப்பில் சொல்லப்படுகிறது. அது எவ்வளவு மாதங்களுக்கோ என்பது அவர்களுக்கு குறிப்பாக ஜே.வி.பிக்கு மட்டும் தான் தெரியும்.

தப்பித்தவறி, எப்படியோ மாகாண சபைகள் தேர்தல் நடைபெற்று அதில் ஏழு மாகாண சபைகளிலும் உரிய அளவில் வெற்றிபெற்று , புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம்/ மாகாணசபைகள் பற்றிய ஆலோசனையையும் முக்கியமான கருத்தாய்க் கொள்ளப் புறப்பட்டால்.. -அதற்காக எடுக்கும் கால அளவும் கூடலாம்.

புதிதாக வரும் ஏழு முதலமைச்சர்களும்

மாகாண ஆளுநரின் அதிகாரங்களைத் தமக்குத் தரும்படி கேட்கும் முதலமைச்சர்களாயிருக்கமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும்.

அவர்களோடு வடக்கு மாகாண சபை முதலமைச்சரும் சேர்ந்தால்? என்று சொல்ல வாய்ப்பில்லை.‌ அப்படி வருவதற்கான சூழ்நிலை இருந்தாலும் புத்தபிரான் திருமலைச் சம்பவம் மூலம் இல்லாமற் செய்துவிட்டார் என்று கொண்டாலும் கூட, தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர் சமூகமும் சில புலம்பெயர் ஊடகங்களும் அப்படியொரு நிலையை உருவாக்குமோ என்ற சூழ்நிலை ஒன்று உருவாகுவது போலத் தோன்றுகிறது.

எனது அண்மைய உள்ளூர்த் தொடர்பாடல்கள் அத்தகைய உணர்வையே தந்தன.

“இன்னுமொரு முறை அவங்கள் வந்தால்தான் இவர்கள் படிப்பார்கள்!’- என்பதே அவர்கள் கூறியதன் சாரம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்க் கட்சிகள் தமக்குள் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வந்து வேட்பாளர்(கள்) விடயத்தில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக்க தூர நோக்குடன் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

மீண்டும் தனிப்பட்ட ஒருவரை , இருவரை, சிலரை, கட்சியை, கட்சிகளைத் தாக்குவதை வசைபாடுவதை நிறுத்த வாவது திருமலைப் புத்தர் அருள்பாலிக்க வேண்டும்.

இன்றுள்ள அரசாங்கத்துடன் உரிய லகையில் ஊடாடி அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ளக் கூடிய, நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை ( ஜனாதிபதி)கையாளக்கூடிய அதிகாரப்பரவலை விரிவுபடுத்தக்கூடிய ஆளுமையும் அரசியல் அனுபவமும் மிக்க வேட்பாளர்களை ஒன்றிணைந்து நிறுத்தவேண்டியதே தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமையும் வரலாற்றுப் பொறுப்புமாகும்!

இது திருமலைப் போதி சத்துவனார் தந்த ஞானம் எனக் கொள்வார்களாக!

ம.வரதராஜன்

18/11/25

Be the first to comment

Leave a Reply