ஏமகூடத்தில் ஒரு சூரன்போர் (1969ஆம் ஆண்டுச் சூரன் போர் ) :-
(மாவிட்டபுரத்தில்) `கந்தன் கருணை` நாடகம் :-
கீழுள்ள பதிவு 1969ஆம் ஆண்டுக் காலத்தில் எழுதப்பட்ட `கந்தன் கருணை` என்ற நாடகத்தின் சுருக்கமான வடிவம். தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆக்கத்தில் உருவான நாடகம். யாழ் மாவிட்டபுரம் கோயிலில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நாடகமாகும்.
நாரதர் – `வேலவா, வடிவேலவா, வடிவேலா வா! வடிவேலா வா!`
(நாரதர் முருகன் கொலுவீற்றிருக்கும் அலங்கார மண்டபத்தை வந்தடைகிறார்)
முருகன்: நாரதரே, வருக! வருக!! எங்கிருந்து வருகிறீர்?
முருகன்: நாரதரே பண்பாட்டின் பிறப்பிடம் என்று முன்னொரு காலத்தில் போற்றப்பட்ட இந்தியாவிலே தோன்றிய நாகர்கள், தமக்குத் தன்னாட்சி உரிமை கோரிக் கலகம் செய்து வருகின்றார்கள். இந்திய அரசு தனது படை பலத்தால் நாகர்களின் கிளர்ச்சியை நசுக்க முயன்று வருகின்றது. நாகர்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர். அவர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு வள்ளி அங்கு சென்றுள்ளாள்.
முருகன்: பூலோகத்தில் என்ன நடக்கிறது நாரதரே!
நாரதர் : பூலோகத்தில் சாதியமைப்புத் தோன்றிவிட்டது. உலகம் உய்ய உழைக்கும் உத்தமர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பவர்கள், தங்களைத் தாங்களே, உயர்சாதியினர் என்று கூறிக் கொண்டு, உண்டு கொழுத்து வாழ்கிறார்கள்: திமிர் பிடித்துத் திரிகிறார்கள். உண்மையான உழைப்பாளிகள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். நசுக்கப்படுகிறார்கள்.
முருகன்: (கோபத்துடன்) எங்கே நடக்கிறது இதெல்லாம்?
நாரதர்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பன போன்ற உயர்ந்த கோட்பாடுகளினடிப்படையில் வாழ்ந்த தமிழரிடையேதான் இந்தக் கொடுமை நடக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உனது கோயிலில்தான் முருகா! இக் கொடுமை நடக்கின்றது.
முருகன்: என் கோயிலிலா?
நாரதர்: ஆம்,முருகா! உன் கோயிலில்தான்! மாவைக் கந்தன் ஆலயத்தில்தான்! { மாவிட்டபுரம்}
நாரதர்: கோயிற் கதவுகளை இழுத்து மூடி, பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். போதாததற்கு கோயிலைச் சுற்றிச் சண்டியர்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.
{ நாரதர் மேலும் தொடர்ந்து நிலைமையினை விளக்குகின்றார். கோயிலில் சென்று பற்றாளர்கள் வழிபடுவதனைத் தடுக்கவே சண்டியர்கள் கூடியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் என உழைக்கும் மக்களைக் கோயிலுக்குள்ளே சென்று வழிபட, சுரண்டல்காரர்கள் விடுகின்றார்கள் இல்லை. அரசு எல்லோரும் வழிபடலாம் எனச் சட்டம் இயற்றியுள்ளது, அதனை எதிர்த்தே கோயிலைப் பூட்டி வைத்து விட்டு, சண்டியர்களைக் கோயிலைச் சுற்றிக் குவித்து வைத்துள்ளனர் சுரண்டல் சாதியினர்.
முருகன்: நாரதா! அண்மையில்தான் ஆட்சியாளர் இச்சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ?
நாரதர்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்த சட்டம் இது. சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்று அதற்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். (1956ம் ஆண்டளவில்)
முருகன்: மயானங்களில், இறந்தவர்களின் பிணத்தை எரிப்பதற்குக் கூட இந்த மக்களுக்கு உரிமை கிடையாதா?
நாரதர்: கிடையாது வேலவா! வில்லூன்றி என்ற மயானத்தில், ஓர் உறவினரின் பிணத்தை எரிக்கச் சென்ற முதலி சின்னத்தம்பி என்பவனை அங்கேயே வைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிணமாக்கி விட்டார்கள், பாதகர்கள்!
முருகன் – எவ்வளவு காலமாக இக் கொடுமைகள் நடக்கின்றன.
நாரதர் – பல ஆண்டுகளாக இக் கொடுமை நடக்கின்றது. இப்போது சூரன்போரினைப் பார்த்த பின்பு இப்போது ஒடுக்கப்பட்ட மக்களும் தமக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளனர்.
அடுத்த காட்சி :-
நாடகம் தொடருகின்றது. மாவிட்டபுரத்தில் சூரன் ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் விடாமல் தடுத்துச் சண்டித்தனம் செய்து வருகின்றான்.
இளைஞன் 1 :
தெய்வச் சன்னதியிலை ஏனையா உள்ளே, வெளியே எண்டு பாக்கிறியள்?
சூரன் : எளிய சாதி உள்ளை போறதில்லை. வெளியாலை நிண்டுதான் கும்பிடோணும்.
இளைஞன் 2 :
சாதியை எழுதி நெத்தியிலை ஒட்டியிருக்குதோ? நீ என்ன சாதி எண்டு கண்டுபிடிக்கிறது?
சூரன் : என்னடா கதைக்கிறாய்? என்னை யாரெண்டு தெரியாதோடா? (கோபத்துடன்) போங்கடா அங்காலை! அங்கை இருந்து பாடுறவங்களோடை போய் நீங்களுமிருந்து பாடுங்கோடா!
இளைஞன் 3 :
என்ன? மரியாதையில்லாமல் எடா, புடா எண்டு கதைக்கிறீர்? பெரிய படிப்பாளி எண்டு சொல்லுறாங்க… இது தானோ படிப்பின்ரை இலட்சணம்? மனிதக் குணத்தைக் கொஞ்சமும் காணேல்லையே…?
முருகனும் நாரதரும் கோயில் வாசலை நோக்கி வருகிறார்கள். அருகில் வந்ததும்)
சூரன் : எங்கை போறியள்?
நாரதர் : நாங்கள் சுவாமி கும்பிட வந்தனாங்கள்… உள்ளுக்கை போய்க் கும்பிடவேணும்!
சூரன் : உள்ளை போகேலாது. இதிலை நிண்டு கும்பிடுங்கோ… இல்லாட்டி…
நாரதர் : இல்லாட்டி?
சூரன் : அங்கையிருந்து பசனை வைக்கினம். அவையோடை போயிருந்து நீங்களும் பசனை வையுங்கோ!
முருகன் : நாங்கள் பசனை வைக்க வரேல்லை. கந்தனைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். கதவைத் திறந்து நாங்கள் உள்ளை போக வழி விடுங்கோ!
சூரன் : அப்படி விடேலாது.
நாரதர் : ஏன் நந்தி மாதிரி வழி மறிச்சுக் கொண்டு இருக்கிறியள்?
சூரன் : நளம், பள்ளுகள் வந்தால் வழி மறிக்கத்தானே வேணும்!
நாரதர் : நந்தனாருக்கு வழிமறிச்சது போல?
சூரன் : ஓ! அந்தப் பறைக்கூட்டமும் உதுக்கை இருக்குதுகள்.
நாரதர் : அது, அந்தக் காலம்! நந்தனாரை வழிமறிச்சு, அவரை அக்கினி பகவானுக்குப் பலி கொடுத்திட்டுச் சிவலோகம் அனுப்பியாச்செண்டு கதை கட்டி விட்டியள்… இப்ப அப்படி நடக்காதெண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ!
சூரன் : என்ன, கனக்க கதைக்கிறாய்?
நாரதர் : நீங்க முரட்டுக் கதை கதைச்சால், நாங்கள் அதுக்குப் பதில் சொல்லத்தானை வேணும். நந்தி மாதிரி நிக்காதீங்க. வழி விடுங்க!
சூரன் : வழி விடேலாது.
நாரதர் : (முருகனைத் தொட்டுக் காட்டி) இவர் ஆரெண்டு தெரியுதே? இவர்தான் உள்ளை இருக்கிற கந்தன். அவரையே மறிச்சு வைச்சிருக்கிறிங்க…
சூரன் : ஹ… ஹ… ஹா கந்தன்! இந்தக் கந்தனுகள், வேலனுகள்தான் இப்ப கோயிலுக்கை போகத் துடிக்கினம். கந்தனாம், கந்தன்!
நாரதர் : அவர் குடியிருக்கிற கோயிலுக்கை அவர் போகத்தானை வேணும். தடுக்கிறதுக்கு நீ யார்?
முருகன் : வழிவிடுங்கள். நாங்கள் மட்டுமல்ல, இங்கே முருக நாமம் பாடிக்கொண்டிருக்கிற பக்தர்கள் அனைவரும் கந்தனை வழிபட வழிவிடுங்கள்!
சூரன் : முடியாது. அங்காலே போங்கள்!
{ முருகன் போராட்டக்காரர்களைச் சந்தித்துக் கூறுகின்றார்}
முருகன்: உங்கள் போராட்டம் வெல்லட்டும்! கந்தன் உங்களுக்கு அருள் பாலிப்பான். நாம், இதோ போய் வருகிறோம்.
நாரதர் : முருகா, பார்த்தீர்களா? இந்த நாரதன் சொன்னதைக் கண்முன்னே கண்டீர்கள்தானே!
முருகன்: ஆம், நாரதரே! யாவும் அறிந்தோம்! இந்தப் பக்தர்கள் சாந்தி வழியிலே தமது கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். இந்த மார்க்கம், ஒரு போதும் அவர்களுக்கு வெற்றியளிக்கப் போவதில்லை. நான் அவர்களுக்கு என் வேலைக் கொடுத்து அதன் மூலம் வெற்றியீட்ட அருள் புரிகிறேன். இதோ!
முருகன் தனது வேலினை ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமைக்காகப் போராடும் போராட்டக்காரர்களின் கைகளில் கொடுத்து விட்டு மறைகின்றார் .
திரை![]()
{ வரலாற்றில் கோயில் நுழைவுப் போராட்டம் வென்றது, `அடங்கா`ச் சாதி வெறியனான சூரன் தோற்கடிக்கப்பட்டார்}
நன்றி – `கந்தன் கருணை` நாடகம்

Leave a Reply
You must be logged in to post a comment.