
கந்தபுராணம் இராமாயணத்துக்கு எதிராக எழுதப்பட்ட கற்பனைக் கதை
கந்த புராணம் உண்மையில் நடைபெற்ற ஒரு வரலாறு அன்று, அதே போன்று கந்த புராணத்தில் இடம்பெறும் (சூரன் உட்பட்ட) கதை மாந்தர்கள் உண்மையில் வாழ்ந்த மனிதர்களுமல்ல. கந்த புராணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் (CE 12th cent) கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கதையாகும். {கந்தபுராணத்தின் தன்மைகளைச் சீர்தூக்கி மு. அருணாசலம் 14ஆம் நூற்றாண்டு என்னும் முடிவுக்கு வருகிறார் – `மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு`}. ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களைத் தழுவியே தமிழில் கந்த புராணம் படைக்கப்பட்டது.
சைவ – வைணவ முரண்கள் நிலவிய காலத்தில், கம்ப ராமாயணத்திற்குப் போட்டியாக, சைவத்தின் புகழை நிலை நாட்டுவதற்காகவே கந்தபுராணம் படைக்கப்பட்டது. பின்வரும் ஒற்றுமைகள் இதனைப் படம்பிடித்துக் காட்டும்.
கம்பராமாயணமும் கந்த புராணமும் ஒற்றுமைகள் :::
1.கம்பன் இராமனின் புகழ் பாடினால், கச்சியப்பர் ஸ்கந்தன் புகழ் பாடுவார். இரண்டுமே போர்க்கடவுளாகவே இராமனையும், கந்தனையும் உருவகப்படுத்தும்.
2. இரண்டிலும் காண்டங்கள் ஆறு.
3. இராமயணத்தில் அனுமான் தூதுவன், கந்தபுராணத்தில் வீரபாகு தூதுவன்.
4. அங்கு இராவணன், இங்கு சூரன் (முறையே தம்பிமார்களும், மகன்களும் ).
5. அங்கு குரங்கினமே படைகள், இங்கு பூத கணங்கள்.
6. அங்கு சீதை சிறைவைப்பு & மீட்பு, இங்கு ஜயந்தன் சிறைவைப்பு & மீட்பு.
7. அங்கே போருக்குக் காரணம் இராவணின் தங்கையான சூர்ப்பனகை கொடுமைக்குள்ளாதல் , இங்கு போருக்குக் காரணம் சூரனின் தங்கை அசமுகி அடித்துத் துரத்தப்படல்.
8. அது வடமொழி வால்மீகி ராமாயணத்தின் தழுவல், இது ஸ்கந்த புராணத்தின் தழுவல்.
இத்தகைய ஒற்றுமைகளைக் கொண்டு பார்த்தால், கம்ப ராமாயணத்திற்குப் போட்டியாகவே கந்த புராணம் இயற்றப்பட்டது தெளிவாகும். இதன்படி பார்த்தால், கம்ப இராமாயணத்தில் இராவணன் எவ்வாறு இலங்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றானோ – அவ்வாறே சூரனும் இலங்கையுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றான்.
சூரன்போரில் குறிப்பிடப்படும் ஏமகூடம் என்பது ஈழத்தையே குறிக்கும்.
“முஞ்சு தானைக ளார்ப்பொடு குழீஇக்குழீஇ முருகேசன்
செஞ்ச ரண்முனம் பணிந்துதம் மினத்தொடுஞ் செறிகின்ற
எஞ்ச லில்லதோ ரெல்லைநீர்ப் புணரியில் எண்ணில்லா
மஞ்சு கான்றிடு நீத்தம்வந் தீண்டிய மரபென்ன
கருணை யங்கட லாகியோன் கனைகடற் கிறையாகும்
வருணன் மாமுக நோக்கியே வெய்யசூர் வைகுற்ற
முரணு றுந்திறல் மகேந்திர நகரினை முடிவெல்லைத்
தரணி யாமென உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான்”
மேலுள்ள கந்த புராணப் பாடல்களில் தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஈழ ஊரையே கடலுள் மூழ்கடித்த கதையினைக் காணலாம். மேற்கூறியவற்றைக் கொண்டு பார்க்கும்போது, சூரன் ஈழத்தினைச் சார்ந்தவராக உருவகப்படுத்தப்படுவதனைக் காணலாம். ஆனால், இது எல்லாம் கதையே. சூரன் இறந்து மயில் வாகனம் ஆனான் என்றால், அதற்கு முன்பே எப்படி, மாம்பழத்திற்கு மயிலேறி உலகம் சுற்றமுடியும்? என்றொரு கேள்வியிலேயே , இந்தக் கற்பனைக் கதையில் ஏரணம் (Logic) இடிக்கும்.
மேற்கூறிய தரவுகளிலிருந்து சூரன் ஈழத்தினைச் சார்ந்தவனாக , உருவகப் படுத்தப்படுவது தெளிவாகின்றது. ஆனால் `தமிழன்` என்பதற்கான நேரடித் தரவுகளில்லை. சூரன் சிவனிடம் வரம் பெறும் நிகழ்வு குறிப்பிடப்படுவதனைக் கொண்டு, தமிழனாக உய்த்துணரலாம் {இலங்கையிலுள்ள மற்றைய இனத்தவர்களான சிங்களவர்கள் சிவனை வழிபடுவதில்லை}. இங்கு சூரனின் தந்தையான காசிபனின் தந்தையாக பிரம்மன் குறிப்பிடப்படுவதனைக் கொண்டு குழம்பத் தேவையில்லை, ஏனெனில் பிரம்மனாலேயே எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் என்பது அவர்களின் வைதீகக் கோட்பாடாகும்.
மேலும், சிங்களத்திலுள்ள ஒரு தொன்மக் கதையில் `அசுரய` என்ற பெயர் கொண்ட ஒரு தமிழ்த் தலைவனையே ஸ்கந்தன் கொன்றதாகக் குறிப்பிடப்படுகின்றது {கெப்பிட்டி பொலசாமி எழுதிய கதிர்காமத் தெய்யோ ஐதீகக்கதை}.
முடிவாக, கந்த புராணக் கதையின்படி சூரன் என்ற கதை மாந்தன் தமிழனே ஆவான். ஆனால் இது எல்லாம் சமஸ்கிரத ஸ்கந்தனின் கதையிலேயே. தமிழ் மரபில் சூரன்போர் எதுவுமில்லை. ஏன்?, சூரனின் ஊர்தியே மயில் அன்று. இதனைக் கீழுள்ள இணைப்பில் காண்க.

Leave a Reply
You must be logged in to post a comment.