இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது? ஒரு பார்வை!

அரசியல் ஆய்வாளர் என்றறியப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவின் , இலக்கியா இணைய இதழில் வெளியான ‘நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?’ என்னும் கட்டுரையினை வாசித்தேன். இது ஓர் அரசியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. மேலோட்டமான சில உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்தி எழுத்து. இதில் இலங்கை ஒப்பந்தம் பற்றியும், 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றார். இருந்தாலும் நாம் ஏன் தோற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்பதற்குரிய முக்கிய காரணங்களை இக்கட்டுரையில் காணவில்லை.

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது?

முக்கிய காரணங்கள்:

1. சக அமைப்புகளுக்கிடையிலான மோதலக்ள்.

2. இயக்கங்களுக்கிடையில் நிகழ்ந்த உட்பகையும், மோதல்களும்.

3. அமைதிப்படையாக நுழைந்தபோது வரவேற்ற இந்தியப் படையினருடனான மோதல்கள். மோதல்களுக்கான அடிப்படைக்காரணங்கள் எவையாகவிருந்திருந்தாலும், அவை கண்டறியப்பட்டு , முளையிலெயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் அம்மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்றுவரை மாகாணசபை இயங்கிக்கொண்டிருந்திருக்கும்.

4. ஜனதிபதி பிரேமதாசவுடன் இணைந்து, ‘நாங்கள் அண்ணன் தம்பிகள். அன்னியருக்கு இங்கென்ன வேலை? எம் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்’ என்று இயங்கியமை.

5. தேர்தலில் மீண்டும் இந்தியப்பிரதமராக ராஜிவ் காந்திவரவிருந்த நிலையில், இந்திய மக்களின் அமோக அவர் மீதான ஆதரவு உச்சத்திலிருந்த சமயத்தில் அவரைப் படுகொலை செய்தமை. இதற்குக் காரணங்கள் அக்கால உபகண்டச் சூழல், சர்வதேச சூழல், இவற்றின் விளைவாக சர்வதேச , உபகண்ட அரசியல் சக்திகள் தம் நலன்களுக்காக விடுதலைப்புலிகளைப் பாவித்ததானால் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம். அதே சமயம் புலிகளும் தம் நலன்களுக்காக இதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ? ராஜிவ் படுகொலை என்பது 2009இல் விடுதலைப்புலிகளை யுத்தத்தில் இலங்கை அரசு வெல்வதற்குரிய முக்கிய காரணமாக அமைந்து விட்டதை அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்திய அரசின் இலங்கைத் தமிழர் மீதான அணுகுமுறை மாறியது. இந்தியாவின் கடற்படை புலிகளுக்கு வந்திறங்கும் ஆயுதக்கப்பல்களை இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தாக்கி அழிப்பதற்கு மிகவும் உதவியாகவிருந்தது.

6. நோர்வே அனுசரணையுடன் , சர்வதேச நாடுகளுளின் ஆதரவுடன் 2001இல் உருவான போர் நிறுத்தம். போர் நிறுத்தம் ஆரம்பமானபோது விடுதலைப்புலிகள் மிகவும் பலமான நிலையில் இருந்தார்கள். அதனைத்தடுப்பதற்கு இலங்கை அரசுக்கு இப்போர் நிறுத்தம் உதவியது. இப்போர் நிறுத்தக் காலத்தில் தொடர்ச்சியாக இலங்கை அரசு படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து வந்தது. ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. ஆகாய, கடற்படையை நவீனமயப்படுத்தி வந்தது. படையினரின் கட்டுப்பாட்டில் விடுதலைப்புலிகள்,அவர்களது ஆதரவாளர்கள் இல்லாத நிலையினை ஏற்படுத்தியது. அக்காலகட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கொல்லப்பட்டாரக்ள். ஆரம்பத்தில் புலிகளின் அரசியல் அமைப்பை இயங்க அனுமதித்த இலங்கை அரசு விரைவிலேயே அந்நிலையை மாற்றியது. விளைவு? புலிகளின் அரசியல் அமைப்பு வன்னிக்குத்தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. புலிகள் வன்னிக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்விதம் அவர்கள் ஓரிடத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில், இறுதியில் எல்லாப்பக்கங்களிலிருந்தும் இலங்கைப் படையினர் அவர்களைச் சூழ்ந்தபோது ஒன்றுமே செய்ய முடியாது போயிற்று.

7. இலங்கை அரசின் ஆழ ஊடுருவும் படையினர் மூலம் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆளுமைகள் கொல்லப்பட்டனர்.

8. விடுதலைப்புலிகளிலிருந்து கருணாவைப் பிரித்தெடுப்பதில் இலங்கை அரசு பெற்ற வெற்றி.

9. மாவிலாறு நீரினை விவசாயிகள் பெறாமல் புலிகள் தடுத்தமை. இதுவே கிழக்கில் யுத்தம் தொடங்க வாய்ப்பாக அமைந்தது. 2006இல் தொடங்கிய யுத்தத்தில் அரசுக்குக் கிடைத்த எதிர்பாராத வெற்றிகள் அரசு யுத்தத்தைக்கிழக்கிலிருது வடக்குக்கு விஸ்தரிக்க வைத்தது. விளைவு – முள்ளிவாய்க்காலில் 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் வெற்றிகளை ஆரம்பத்தில் இலங்கை அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத வெற்றிகள் கிடைத்தபோது அரசின் வெற்றி மீதான நம்பிக்கை அதிகரித்தது. வெற்றிக்கான சாத்தியத்தை உணர்ந்த இலங்கை அரசு யுத்தத்தைத் தொடர்ந்தது.

10. துரோகிகளாக்கப்பட்டு மனித சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் பலர் கொல்லப்பட்டமை.

11. தென்னிலங்கையின் முற்போக்கு அரசியல் சக்திகளுடன் , தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து செயற்படாமல் போனமை.

12. முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை. (சுட்டிக்காட்டிய சந்திரபாலன் சாமிநாதருக்கு நன்றி)

இவை போன்று இன்னும் பல காரணங்களை உண்மையான அரசியல் ஆய்வாளர்கள் கண்டறியலாம். இவையெல்லாம் கண்டறியப்பட்டு, வெற்றி , தோல்விக்கான பொறுப்பினை ஏற்று, நவகால அரசியலை முன்னெடுக்காத வரையில், தொடர்ந்தும் வெற்றுக்கோசங்களால மக்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் எனறு எண்ணி, தமிழ்க் கட்சிகள் செயற்படும் வரையில் , தமிழர்தம் அரசியலில் முன்னேற்றம் சாத்தியமில்லை.

சமகால அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு , ஆக்கபூர்வமாகச் செயற்படுவது அவசியமானது. அதுவே ஆரோக்கியமானது. கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடங்கள் படிப்பது எதிர்கால நல் வாழ்வுக்கு அவசியமானது. படிக்காவிட்டால் தொடர்ந்தும் உணர்ச்சி அரசியலுக்குள் மூழ்கிக்கிடக்க வேண்டியதுதான்.

யதீந்திராவின் கட்டுரை – நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா – நன்றி: https://ilakkiyainfo.com/…/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99…/

Be the first to comment

Leave a Reply