தீபாவளி என்றால் என்ன? தந்தை பெரியார்
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் – தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித் ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.
வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல் கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லு கிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
அசுரன் என்றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
_ இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட் பவனை, ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும் நாள்,
மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்,
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீ என்று விடுவிரே!
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .
இது ஓர் தீபாவளிக் கதை
பாவம் நரகாசுரன்
இன்று தீபாவளி.அடிக்கடி நண்பர்களும்,மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது
கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே?
ம்கிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்
மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில் 1940 களில் இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர் தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை
நாங்களும் வீட்டில் இதனைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை
எமக்கு அன்று கொண்டாட்டம்,சித்திரைமாதப் புது வருடம்தான்.
அன்றுதான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள்
/முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள்
குடும்பங்களின் விழா அது. கிராமங்களின் விழா அது
புது உடுப்புகளை காலையில் முதலில் தென்னம் பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா
தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம்
இயற்கையை நேசித்த மனிதர்கள் அன்று
சித்திரை நாள் எஙக்ளுக்குப் பெரும் கொண்டாட்ட நாள்
தைப் பொங்கலும் கொண்டாட்ட நாள்தான்.
அதனை விவசாயிகள் கொண்டாடுவர்.ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர்
ஆனால் சித்திரை வருடமளவு அது அன்று பெரும் கொண்டாட்டமில்லை
சின்ன வயதில் தமிழ் நாட்டிலிருந்து
கல்கி தீபாவளி ஆண்டுமலர்,
ஆனந்த விகடன் தீபாவளி ஆண்டுமலர்
கலைமகள் தீபாவளி ஆண்டுமலர்
அமுதசுரபி தீபாவளி ஆண்டுமலர்
எனச் சில தீபாவளி மலர்கள் பள பளப்பான தாளில் கவர்ச்சிகரமான வர்ணப்படங்களுடன் பெரிய பெரிய அளவில் ஆண்டு தோறும் தீபாவளி நாளில் வெளிவரும்
அவற்றின்மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம்
அதன்மூலம்தான்
தலைதீபாவளி,
கங்காஸ்னானம்.
அத்திம்பேர்.
தீபாவளிச் சீடை,முறுக்கு
.விசிறியச் சுழட்டும் குடும்பிவைத்த பூணூல் போட்ட தத்தாமார்
,மடிசார்வைத்த பெண்கள்
எனப் பல தீபாவளி சார்ந்த சமாசாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன
தீபாவளிச் சிறு கதைகள் வேறு அவற்றை மனதில் அழுத்தின
நரகாசுரனை சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையும் எம்மனதில் வேரூன்றியது
நரகாசுரன் பூமியை மீட்க விஸ்ணு வராக அவதாரம் அதாவது பன்றி அவதாரம் எடுத்து பூமியை மீட்டகதையும்,தன்னைமீட்ட வராக அவதாரத்தின் மீது பூமாதேவி காதல் கொள்ள விஸ்ணுவுக்கும்,பூமாதேவிக்கும் பிறந்தவனே நரகாசுரன் எனும் கதையும் அவன் கொடுமை பொறுக்க முடியாமல் தந்தையே பிள்ளையைக்கொல்லும் நிலை உருவானது எனும் கதையும் உருவானது
சற்று வளர்ந்த பின் எனது 15 ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துக்களுக்கு அறிமுகமானபோது நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது.
நரகாசுரன் என்பவன் நரன்
அதாவது மனிதன்
அசுரன என்பதன் அர்த்தம் சுரன் அல்லாதவன்.
சுரர் என்றால் தேவர்
தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள்.அவர்கள் சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைகப்பட்டனர்.
திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள்
,மது அருந்தாதோர். ஆகவே அசுரர் என்றால் சுரம் அருந்ததோர் என்பது அர்த்தம் என்ற கருத்துகள் கூறப்பட்டன
(அ+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக் கழக நூல்கள் தந்தபோது இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம்
இவற்றையெல்லாம் தாண்டி மெல்ல மெல்ல தமிழகத் தீபாவளி மட்டக்களப்புத் தமிழ்ப்பண்பாட்டினுள் புகத் தொடங்கி சித்திரை வருடத்திற்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம் பெறலாயிற்று
1960 களில் பேரதனைப் பல்கலைக்க்ழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எமக்கு
சமணத் தமிழ் இலக்கியங்கள்,
சமணர் எழுதிய இலக்கணங்கள்,
சமணப்புலவர்களின் தனிப்பாடல்கள்
என்பன அறிமுமமாகின.
அவர்கள் பிராமண மதத்திற்கு,வைதீக மதத்திற்கு எதிரானவர்கள்
.நால்வகை வருணப்பகுபாட்டை விரும்பாதவர்கள்.
அற ஒழுக்கக் கருத்துகளை மிக அதிகமாக வற்புறுத்தியவர்கள்
சாதாரண
மக்கள் பால் நின்றவர்கள்.
தமிழ் நாட்டின் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள் என்ற விபரங்களும்
சமண தலைவரான ம்ஹாவீரர்,
அவர் ஸ்தபித்த சம்ணமதம்,அதன் தத்துவங்கள் என்பனவும் அறிமுகமாகின
இவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள்
பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை,வித்தியானந்தன்,கைலாசபதி ,வேலுப்பிள்ளை ஆகியோராவர்
கைலாசபதி வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார்
வேலுப்பிள்ளையும் தமிழ்ச்சமணம்,த்மிழ்ப்பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார்
சமண தீர்தங்கரரும் மஹா ஞானியுமான மகாவீரர் மீது ஓர் மதிப்பும் உண்டாயிற்று
மூத்த பேராசிரியரான கணபதிப்பிளையின் வகுப்புகள் வெகு சுவராஸ்யமானவை.
சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை மிக எளிமையாகக் கூறிசெல்வார்
ஒரு நாள் அவர் எங்களுக்குப் படிப்பித்துக்கொண்டிருக்கையில்
“உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா’
என்று கேட்டார்
நாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம்
“அதெவெல்ல்லாம் புழுகடா.சமண மதத்தின் தலைவரான மஹாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவுகூர பல தீபங்களை ஏற்றிவைத்து சமணர் கொண்டாடிய சமண விழாவை சைவர்கள் தம் வசப்படுத்திக் கொண்ட கதைதாண்டா தீபாவளி.அதற்காக உருவாக்கப்பட்ட கதைதான் நரகாசுரன் கதை”
என்றார்
சைவம், சமண மததிலிருந்து பல விடயங்களைத் த்ம்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறி
“இதுவும் அதில் ஒன்றடா”
என்றார்
எங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று
தீபாவளின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளைகூட தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது
ஆனால் அது கண்டுகொள்ளப்படவில்லை
காலங்கள் பல கடந்து விட்டன
இன்று 2017 ஆம் ஆண்டு
இன்று மட்டக்களப்பில் தீபாவளி பெரும் கொண்டாட்டம்
.நரகாசுரனை அழித்த கதை பாடசாலகளிலும்,சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதரணமாக சொல்லப்படுவதாயிற்று
அரசியல் வாதிகளும்,
ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும்
சமயத் தலைவர்களும்
இது நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிகின்றனர்
நரகாசுரன் அழிவு மக்கள் மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது
நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது
பெரும் சமயக் கொண்டாட்டமுமாகிவிட்டது
இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரிக்கமுடையாது
காரணங்கள் பல
ஒன்று
இது ஓர் பெரும் சமய விழாவாகிவிட்டது
இரண்டு
இதுஓர்பெரும்கொண்டாடமாகிவிட்டது.
கொண்டாட்டமானமையினால் மக்கள் கூடுதல், அதனால் கிடைக்கும் பெரு மகிழ்ச்ச்சி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனித குலம் விரும்பும் அடிமன நல் இயல்புகள் இதில் உள்ளன
மூன்று
பெரும் வணிக நிறுவனங்களின் லாபம் இக்கொண்டாட்டத்தில் அடங்கியுள்ளது,சேலை உடுப்பு,பட்டாசு,பலகர வகைகளுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும்
.நான்கு
கோயில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளது
ஐந்து
பத்திரிகளைன் தீபாவளி மலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது
ஆறு
தொலைக்காட்சி ,போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை அவற்றால் அவை அடையும் பெரு வருமானமும் இன்னொருபுறம் உள்ளது
ஏழு
இவ்வூடகங்களின் அழைப்பை விரும்பி ஏற்றுக் காசிகளில் தோன்றிப் புகழ் பெறச்செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொருபுறம் பெருவாரியாகக் காணப்படுகிறர்கள்
எட்டு
இது குழந்தைகல் மத்தாப்புக் கொழுத்தி விளையாடும் ஒரு பெரு விழாவாகவும்,அவர்கள் புத்துடை அணியும் விழாவாகவும் கட்டமைக்கப்பட்டு விட்டது.குழந்தைகளின் மகிழ்ச்சிக்காப் பெற்றோர் எதனையும் செய்வர்
எனவே தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படி சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது
அது இந்து மக்கள் கொண்டாட்டமாகிவிட்டது
கொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம்
மக்கள் இணைகிறார்கள் மக்கள் மகிழ்கிறார்கள் என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஓர் புது வியாக்கியானம் அளிக்கிறார்கள்
ஆனால் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் சுரண்டலையும் பேதங்களை மறக்க வைக்கும் போதை நிலையையும் அவர்கள் தோலுரித்துக்காட்டுவதில்லை
தீபாவளியைக் கட்டுடைத்துப் பார்ர்க்கலாம்
அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்றுபார்க்கலாம்
தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியை கட்டுடைத்துப் பார்க்கலாம்
இவையாவும் ஒரு புலமைத்துவ இன்பப் பயிற்சியுமாகும் (Intellectual pleasure exercise)
தீபாவளி அன்றையபோல் இன்றில்லை.
நிறைய மாறிவிட்டிருக்கிறது.
இன்னும் மாறும்
இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன்
பாவம் நரகாசுரன்
அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
சி.மௌனகுரு



Leave a Reply
You must be logged in to post a comment.