ஆரிய திராவிடப் பகையென்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பு தங்களுக்கு வசதியும் உயர்வும் பாதுகாப்பும் கிடைக்கக் கூடிய வகையில் பிராமணர்கள் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்திக் கொண்டு கோலோச்சிய சங்க காலத்தின் பிற்பகுதியில் ஒருநாள். கரிகால் சோழ மன்னனின் மகனான நலங்கிள்ளியின் உறையூர் அரண்மனையிலே பிராமணப் புலவரான தாமப்பல் கண்ணன் என்பவரை நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான் கண்டுவிடுகின்றான்.

வறுமையின் பிடியிலே சிக்கி ஏதாவது பரிசில் பெற்று வாழ்கையை நகர்த்த நினைத்துப் பாட்டோடு வரும் தழிழ்ப் புலவர்களுக்கிடையே சாத்திர மரபுகளைக் காட்டித் தன் அண்ணனை ஏமாற்றிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் பிராமணப் புலவர்களைக் காணும் போதெல்லாம் அவன் மனம் வெறுப்பின் உச்சத்துக்கே போகும். அன்றும் அப்படித்தான்.

தாமப்பல் கண்ணனைக் கண்டவுடன் என்ன புலவரே அண்ணனிடம் வந்தீர்களா. எனக்குப் பொழுது போகவில்லை. வாருங்கள் சற்றுத் தாயம் விளையாடலாம் என்று அழைத்தான் மாவளத்தான்.

பதவியில் இல்லாவிட்டாலும் அரசனுக்குத் தம்பி. புலவரால் மறுக்க முடியவில்லை. தரும சங்கடமான நிலை. பிராணமணர்கள் பஞ்சமாபாதகங்கள் என்று ஒதுக்கிய ஐந்தில் ஒன்று சூது. அதை ஆடச் சொல்லிக் கேட்கின்றான் மாவளத்தான்.

தன் விதியை நொந்து கொண்டு புறத்தே புன்னகையும் அகத்தே கடுங்கோபமும் என்ற இரட்டை நிலைப்பாட்டோடு புலவர் தாயம் ஆடினார். கோத்தினால் நிதானமிழந்து ஆடிய புலவரால் மாவளத்தானை பல சுற்றுக்களில் வெல்ல முடியவில்லை. மாவளத்தான் பார்க்காத சமயத்தில் அடுத்து அவன் வெல்ல இருந்த தாயக் கட்டை ஒன்றைப் புலவர் எடுத்து மறைத்து வைத்துவிட்டார்.

தாமதமாகத் தன் வெற்றிவாய்ப்புத் திருடப்பட்டதை கண்டுகொண்ட மாவளத்தானுக்கு ஏற்கனவே இருந்த பிராமணத் துவேசத்தோடு கோபமும் சேர்ந்து கொண்டது. தன் கையிலே இருந்த தாயக் கட்டையால் வயது முதிர்ந்த பிராமணர் என்றும் பார்க்காமல் நெற்றியை அடித்து உடைத்துவிட்டான்.

அவனின் செயலால் ஆத்திரமடைந்த புலவர் உன் முன்னோர்கள் பிராமணர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் துன்பம் செய்ய மாட்டார்கள். நீ இப்படிச் செய்துவிட்டாய். நீ கரிகால் வளவனுக்குத்தான் பிறந்தாயா இல்லை வேறு யாருக்காவது பிறந்தாயா என்று கேட்டு விடுகின்றார். மன்னர் குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல மனித குலத்திலே பிறந்தவர்கள் யாருமே காதால் கேட்கக் கூடாத வார்த்தைகள் இவை.

மாவளத்தான் அமைதியாகத் தலைகவிழ்ந்து இருந்தான். நினைத்திருந்தால் கையிலே ஆயுதம் இருந்தது. புலவரின் தலையை அவன் சீவியிருக்கலாம். அப்படி அவன் நினைக்கவில்லை. ஒருவேளை அண்ணனிடம் வந்தவனைத் தாக்கிவிட்டோமே என்று கூட அவன் நினைத்திருக்கலாம்.. தன் தவறை உணர்ந்து அவன் அப்படி இருக்கிறான் என்று நினைத்து புலவர் அவனைப் புகழ்ந்து பாடல் ஒன்று எழுதினார். அந்தப் பாடல் புறநானூற்றிலே 43 வது பாடலாகக் காணப்படுகின்றது.

நிலமிசை வாழ்ந ரலமர றீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

காலுண வாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா வீகை யுரவோன் மருக

நேரார்க் கடந்த முரண்மிகு திருவிற்

றேர்வண் கிள்ளி தம்பி வார்கோற்

கொடுமர மறவர் பெரும கடுமான்

கைவண் டோன்ற லைய முடையேன்

ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது

நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி

நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்

நீபிழைத் தாய்போ னனிநா ணினையே

தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்

இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்

காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின்

யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்

மிக்கு வரு மின்னீர்க் காவிரி

எக்க ரிட்ட மணலினும் பலவே.

இப்பாட்டில் தாமற்பல்கண்ணனார் உனது குடிப்பிறப்பின் மீது சந்தேகம் கொள்கிறேன். ஆத்தியால் செய்த மாலையை அணிந்த உன் முன்னோர்கள் யாவரும் பார்ப்பனர் வருத்தம் கொள்ளும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். எனவே இத்தகைய செயல் உனது தகுதிக்கு ஏற்றதோ என்று நீ வெறுக்கும்படி கூறினேன்.

உன்னிடம் நான் செய்த தவற்றிற்கு கோபப்படுவாய் என்றாலும் நீ தவறு செய்தது போல மிகவும் வெட்கப்பட்டாய். இவ்வாறு உன்னிடம் தவறிழைத் தவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தலைவனே

உனது இந்தக் குலத்தில் பிறந்தோரிடம் எளிமை காணப்படும் என காட்சி தரும் வலிமை உடையோனே

நீ கருணை காட்டியதனால் நானே பிழைத்ததை என்ன சொல்வேன் பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரியின் மணல்மேடுகளில் உள்ள மணலை விட அதிகமாக உனது வாழ்நாள் சிறப்பதாக என சோழன் மாவளத்தானைப் பாராட்டுகின்றார்.

தவறை நான்தான் முதலில் செய்தேன் செய்தேன் என்று தாமப்பல் கண்ணனார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். அது தாய வட்டை மறைத்த சிறு குற்றமா அல்லது உண்மையான ஏதாவது பெருங்குற்றத்தை மறைக்க புனையப்பட்ட இடைச் செருகலா என்பது தெரியவில்லை

இந்தப் பாட்டிலே தாயம் விளையாடியது பற்றி ஒரு செய்தியும் எந்த இடத்திலுமே இல்லை பிராமணர் ஏதோ தப்புச் செய்ததும் அதனால் கோபங்கொண்டு மாவளத்தான் அவருக்கு ஏதோ துன்பம் செய்ததும் அதற்காக நீ சரியான அப்பனுக்குத் தான் பிறந்தியோ என்று புலவன் தப்பான வார்த்தையை விட்டதும் அதைப் பொறுத்துக் கொண்டு ஏதோ காரணத்துக்காக மாவளத்தான் அமைதியாக இருந்ததும் ஆகிய செய்திகள் மட்டுமே சொல்லப்படுகின்றன.

புறநானூறு தொகுக்கப்பட்ட போதும் உரை எழுதப்பட்ட போதும் தான் இந்தத் தாயம் விளையாடிய செய்தி சொல்லப்படுகின்றது. பாட்டில் இல்லாத இந்தச் செய்தி பிராமண வர்க்கத்தைப் பாதுகாக்க உண்மை ஒன்று கொன்று புதைக்கப்பட்டுவிட்டது என்பதை மட்டுமே சொல்லி நிற்கின்றது. பிராமண எதிர்ப்பு என்பது பெரியாரால் தோற்றுவிக்கப் பட்டதல்ல அது புறநானூறு காலத்திலேயே தோன்றிவிட்டது என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த சான்றாகும்.

இரா.சம்பந்தன்.

கனடா தமிழர் தகவல் இதழில் (5.102025) வெளியான கட்டுரை

Be the first to comment

Leave a Reply