
செப்தெம்பர் 28, 2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 11 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ்மக்களது மரபுவழி தாயகமான வட – கிழக்கில் வாழ்க்கையே போராட்டமாகவும் போராட்டமே வாழ்க்கையாகவும் நீடிக்கிற நிலமை தொடர்கிறது. தமிழ் மக்கள் தெருவில் இறங்கிப் போராடத நாட்களே இல்லை என்று சொல்லுமாறு நாளும் பொழுதும் அங்கு போராட்டங்கள் இடம் பெறுகின்றன. வலிந்து காணாமல் போனோர்களது உறவினர்கள் தொடர் போராட்டம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு போராட்டம், மக்களது வழிபாட்டு உரிமைக்கானப் போராட்டம், தனியார் காணிகளில் சட்டத்துக்கு முரணாக கட்டப்பட்ட பத்த விகாரையை அப்புறப்படுத்துமாறு மக்களும், காணி உரிமையாளர்களும் போராட்டம், மன்னாரில் மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் காற்றலைகளை நிறுவுவது மற்றும் கனிம மணல் அகழ்வதுதற்கு எதிரான போராட்டம் எனப் பட்டியல் நீண்டு போகிறது. இதனால் தமிழ் மக்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செப்தெம்பர் 28, 2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடந்த 11 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
(1) வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக ஒரு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும். உள்ளூர் பொறிமுறையை தமிழ்மக்களும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் நிராகரித்து விட்டன.
(2) கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து முப்படைகள் பிடித்து வைத்திருக்கும் 28 ஆயிரம் ஏக்கர் காணிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இதில் 2400 ஏக்கர் காணி வலி வடக்கு மக்களுக்குச் சொந்தமான காணிகளாகும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவேறிய பின்னர் நூறு ஏக்கருக்கும் குறைவான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
(3) முப்டைகளின் பிரசன்னம் வட கிழக்கில் தொடர்கிறது. மொத்தம் உள்ள 19 இராணுவப் பிரிவுகளில் 12 வடக்கிலும் 3 கிழக்கிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வட கிழக்கில் இராணுவப் பிரசன்னம் மக்கள் தொகைக்கேற்பக் குறைக்கப்பட வேண்டும்.
(4) தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை, வன விலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவை மக்களது காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கிறது. அவற்றில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்தக் காணி அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்படுவதோடு அந்தக் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப் படவேண்டும்.
(5) 1978 இல் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
(6) வடக்கும் கிழக்கும் பவுத்த மயமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளை, குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையை கனடா ததேகூ கேட்டுக் கொள்கிறது.
(7) எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வட கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. இதனால் மக்களது சனநாயக உரிமைதொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த மாகாணங்களுக்கான தேர்தல்களை மேலும் தாமதிக்காது உடனடியாக நடத்தப் பெற வேண்டும் என ததேகூ கேட்டுக்கொள்கிறது.
(8) மன்னாரில் மக்களின் அன்றாட வாழ்வியலையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் காற்றலைகளை நிறுவுவது மற்றும் கனிம மணல் அகழ்வதுதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை நடாத்திய தாக்குதலை கனடா ததேகூ வன்மையாகக் கண்டிக்கிறது. சனாதிபதி அனுர குமார திசநாயக்கா ஒருபுறம் தனது அரசு மக்களுக்கான அரசு என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுத்து தான்தோன்றத்தனமாக நடந்து கொள்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடி இந்தச் சிக்கலுக்கு சுமுகமான தீர்வை எட்டுமாறு சனாதிபதியை கனடா ததேகூ கேட்டுக்கொள்கிறது.
(9) இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அளைத்துலக சட்டங்களுக்குப் புறம்பான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத பின்னணியில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 51/1,மற்றும் 60/1 தீர்மானங்களை முழுமையாக சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
(10) சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் அது பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் புரையோடிப் போய்விட்ட தேசிய இனச் சிக்கலே ஆகும். இதனால் 2022 இல் நாடு வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு ஒழிக்கப்பட்டு, குடிமக்கள் யாவரும் ஒத்த உரிமை உடையவர்கள், சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை உறுதி செய்யும் மதசார்பற்ற இணைப்பாட்சி அடிப்படையிலான புதிய யாப்பு காலதாமதமின்றி வரையப்பட வேண்டும் என கனடா ததேகூ கேட்டுக்கொள்கிறது.
-0-
Leave a Reply
You must be logged in to post a comment.