சித்தர் பாடல்களில் காணப்படும் சாதி-மத எதிர்ப்புணர்வு
சித்தர்கள் என்றாலே புரட்சிக்காரர். புரட்டிப்போடுவதுதான் புரட்சி எனும் போது, சித்தர்கள் எமது குமூகத்தில் காணப்படும் சாதி-மதம் எனும் பிற்போக்குத்தனங்களைப் புரட்டிப் போடாமல் விடுவார்களா என்ன? அத்தகைய சில சித்தர் பாடல்களையே இப் பதிவில் பார்க்கப் போகின்றோம்.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே” : திருமூலர்
.மேலுள்ள பாடலில் `ஒன்றே குலம்` என்பதன் மூலம் எல்லோரும் ஒரே குலத்தினைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிச் சாதிய வேற்றுமைகளை மறுக்கின்றார், அடுத்த வரியான `ஒருவனே தேவன்` என்பதன் மூலம் எல்லோருக்கும் ஒரே கடவுள்தான் எனச் சொல்லுவதன் மூலம் வெவ்வேறு மதங்களை முன்வைத்து, ஒவ்வொரு மதத்துக்கும் எனத் தனித்தனிக் கடவுள்களைக் கற்பித்து, மதச் சண்டைகளில் ஈடுவதனைச் சாடுவதுடன், நல்லதே நினைக்க வேண்டும் அதுவும் நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் நல்லதே நினைக்க வேண்டும் எனத் திருமூலர் கூறுகின்றார்.
புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் சிவவாக்கியர் தன்நிகரற்ற சித்தர் அவரது பாடல்கள் சில வருமாறு.
“ பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே”
சிவவாக்கியர்
.எலும்பு, தோல் ஏதாவதில் சாதிக்கான இலக்கம் ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்கின்றார் சிவவாக்கியர்.
“சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ”
சிவவாக்கியர் சாதியை மட்டுமல்லாமல் மத வேற்றுமை பார்ப்போரையும் பின்வருமாறு சாடுவார்.
“ எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.”
வேதங்களின் மேலாதிக்கத்தினையும் சிவவாக்கியர் கேள்விகேட்கத் தவறவில்லை.
“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ”
சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை பழிக்கப்படுகின்றது.
“ நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பந் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ “
{ சுவை மிகுந்த உணவினைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின் சுவையினை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வமென்று பெயரிட்டு ப் பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையேயாகும் என்கிறார். }
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
{ஒரு கல்லினைக் கடவுள் எனப் பூசிப்பதும், இன்னொரு கல்லைப் படிக்கட்டாக மிதித்துக் கொண்டும் இருப்பதனைச் சுட்டிக்காட்டுகின்றார் }
பூசையும் எள்ளலுக்குத் தப்பவில்லை
“பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே”
புலால் மறுத்தலையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றார்.
“புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)
“மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)
புலால் உண்ணலாம், மாட்டிறைச்சி மட்டும் கூடாது என்போரையும் சிவவாக்கியர் விட்டுவைக்கவில்லை.
“ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது”. (160)
(ஆட்டின் இறைச்சியை பார்ப்பனர் இன்று உண்பதில்லை. ஆனால் ஆட்டைப் பலியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டுச் செய்தது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டுச் செய்கின்றார்கள். மாட்டிறைச்சி தின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே).
‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலரின் கருத்தினையும் சிவவாக்கியர் வழிமொழிவார்.
“கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”
குதம்பைச் சித்தரும் சாதி ஒழிப்பில் அக்கறை கொள்வார்.
“சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்று
ஓதி யுணர்ந்தறிவாய் – குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய்”.
“
ஆண்சாதி, பெண்சாதி ஆகும் இருசாதி,
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற வெல்லாம் “
“பார்ப்பர்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும்
தீர்ப்பாய்ச் சொல்வதென்ன குதம்பாய்,
தீர்ப்பாய்ச் சொல்வதென்ன”
பாம்பாட்டிச் சித்தரும் தன் பஙகுக்குச் சாதி-மத அடித்தளத்தினை ஆட்டங்காண வைப்பார்.
“சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக்களுக்கோ”
(பாம்பாட்டி சித்தர்)
`சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்` எனவும் பாம்பாட்டிச் சித்தர் கொதிக்கின்றார்.
இவை மட்டுமன்றி, மேலும் சில சித்தர்களின் பாடல்கள் அறத்துக்காக சாதி-சமயங்களைக் கண்டித்துப் பாடப்பட்டுள்ளன, விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகின்றேன்.
அறத்துக்காகப் பாடிய சித்தர்களைப் போற்றுவோம், அற வழியில் நடப்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.