மன்னாரில் காற்றாலைகள் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம்
சிவா சின்னப்பொடி
மன்னாரில் இந்திய நிறுவனமான அதானி குழுமத்தால் காற்றாலைகள் அமைக்கப்படும் திட்டம் ஒரு சிக்கலான விடயமாகும். இது இலங்கையின் எரிசக்தித் தன்னிறைவுக்கு உதவினாலும், அதன் ஒப்பந்த முறைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள்மீதான தாக்கம்குறித்து கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்தத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் முன்மொழியப்பட்டன. போட்டி ஒப்பந்தங்களைக் கோராமல், நேரடியாக அதானி குழுமத்திற்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதற்காக இலங்கை மின்சார சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தத் திட்டத்தால் பல தரப்பினர் வெவ்வேறு வழிகளில் பயனடைவதாகக் கூறப்படுகிறது:
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்: திட்டத்தைச் செயல்படுத்தும் முக்கிய நிறுவனம் இதுவாகும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு விற்பதன் மூலம், இந்நிறுவனம் பிரதான நிதிப் பயனாளியாக இருக்கிறது
இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த புதைபடிவ எரிபொருட்களை (நிலக்கரி, டீசல்) சார்ந்திருப்பதைக் குறைத்து, நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.

2030-க்குள் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலங்கையின் இலக்கை அடைய இந்தத் திட்டம் உதவும் என்றும் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் பெருமளவு அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும். என்றும் கூறப்படுகிறது
கோட்பாட்டளவில், தூய்மையான மற்றும் நிலையான மின்சாரம் கிடைப்பதன் மூலம் பொது மக்கள் பயனடைய வேண்டும். மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அதானி நிறுவனம் விற்கும் மின்சாரத்தின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இந்த வாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
மன்னார் மக்கள் இதற்கு எதிராகப் போராடுவது சரியா?
மன்னார் மக்களின் போராட்டம் பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் எழுந்துள்ளது. எனவே, அவர்களின் பார்வையில் இந்தப் போராட்டம் சரியானது.
போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள்:
சூழலியல் பாதிப்புகள்: மன்னார் பகுதி, மத்திய ஆசியப் பறவைகள் வலசை செல்லும் பாதையில் ஒரு முக்கிய இடமாகும். இங்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. காற்றாலைகள் இந்தப் பறவைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், வங்காலை சரணாலயம் போன்ற பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதிக்கும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
வாழ்வாதார இழப்பு: இப்பகுதி மக்களின் முக்கிய தொழில்களான மீன்பிடி மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுவதால், பாரம்பரிய வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடும் என்பது அவர்களின் முக்கிய கவலை.
ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை: போட்டி ஒப்பந்தங்களைக் கோராமல், அவசரகதியில் இந்தத் திட்டம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான கலந்தாலோசனை இல்லாமை: திட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் உள்ளூர் மக்களிடம் முறையான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை .
இந்தப் பின்னணியில், தமது வாழ்வாதாரத்தையும், தமது வாழ்விடத்தின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மக்கள் போராடுவது ஜனநாயக ரீதியில் ஒரு நியாயமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள்
சாதகங்கள்
தூய்மையான ஆற்றல்: கார்பன் வெளியேற்றம் இல்லாத, தூய்மையான மின்சார உற்பத்தி.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை: புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உதவும்.
இறக்குமதி சார்பு குறைதல்: எரிபொருள் இறக்குமதியைக் குறைத்து, நாட்டின் பணத்தை சேமிக்கலாம்.
அந்நிய முதலீடு: நாட்டிற்கு அந்நிய முதலீட்டைக் கொண்டுவருகிறது.
பாதகங்கள்
பல்லுயிர் பாதிப்பு: வலசை போகும் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தல்.
வாழ்வாதார இழப்பு: மீன்பிடி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்கள் பாதிக்கப்படும்.
அதிக மின்சாரக் கொள்முதல் விலை: அதானி நிறுவனம் விற்கும் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நுகர்வோருக்கு மின் கட்டணம் குறையுமா என்பது சந்தேகமே.
ஒப்பந்தத்தில் முறைகேடு குற்றச்சாட்டுகள்: வெளிப்படைத்தன்மை இல்லாததால், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.
நிலப் பயன்பாட்டு சிக்கல்கள்: மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயம்.
சுருக்கமாக, மன்னார் காற்றாலைத் திட்டம் என்பது இலங்கையின் தூய்மையான எரிசக்தி தேவைக்கும், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அப்பகுதியின் தனித்துவமான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இடையேயான ஒரு பெரிய போராட்டமாகும்.
——————————————————————————————————————-
இரவில் சொந்த வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கும் மக்கள் – இலங்கை மன்னாரில் என்ன நடக்கிறது?

- எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி,பிபிசி தமிழுக்காக
- 29 ஆகஸ்ட் 2025
”இந்த காற்றாலையால் பிள்ளைகளுக்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற பீதியான நிலைமை தான் இப்போது இருக்கின்றது. 62 வயதான எங்களுக்கே இப்படியான நிலைமை என்றால், சின்ன சின்ன பிள்ளைகள் எங்களுடைய வயது வரும் வரை வளர்வார்களா? என்ற ஒரு கேள்விக்குறி இருக்கின்றது. சின்ன சின்ன பிள்ளைகளுக்கு இடையில் காது கேட்காத நிலைமை வந்து விட்டது. அவர்களுக்கு வடிவாக படிக்க இயலாது. நாங்கள் அனுபவித்ததை அவர்கள் அனுபவிப்பார்களா?” என்று பிபிசி தமிழிடம் பேசிய மன்னாரைச் சேர்ந்த 62 வயதான அருணேசன் யோகமலர் தெரிவித்தார்.
மன்னார் – நறுவிலிக்குளம் பகுதியில் சில காற்றாலை மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு செயற்பட்டு வருகின்றன. காற்றாலை மின்சார விசிறிகளுக்கு அருகிலுள்ள வீடுகளில் வாழும் தாம் மிகுந்த துயரங்களை அனுபவித்து வருவதாக நறுவிலிக்குளம் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
நறுவிலிக்குளம் பகுதியில் இரவு வேளைகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றமையினால், மின்சார உற்பத்தி செய்யும் விசிறிகளின் வேகமும் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனால், இரவு வேளைகளில் தமக்கு தூக்கமின்மை காணப்படுவதாக தெரிவித்து, கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் தந்தையர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் அங்கிருந்து நாளாந்தம் வெளியேறி தமது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
இரவு வேளைகளில் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் இவர்கள், பகல் வேளையில் மீண்டும் வீட்டிற்கு திரும்புவதை வழமையான நடவடிக்கையாக கொண்டுள்ளனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
நிம்மதியான தூக்கத்திற்காக இவ்வாறு நாளாந்தம் தனது மகனின் வீட்டிற்கு செல்லும் அருணேசன் யோகமலரின் கதையே இது.

”எங்கள் மீனவ சங்க ஆட்கள் மற்றும் வீட்டுக்கார ஆட்கள் சென்று பேசினார்கள். அம்மா இயலாமல் இருக்கின்றார். இரண்டு குழந்தைகளும் நித்திரை கொள்ளுதில்லை. இந்த சத்தத்தை குறைத்தோ இல்லாது செய்தோ ஏதோ செய்யுங்கள் என்று சொன்னார். சரி நாங்கள் ஏதாவது செய்கின்றோம் என்று சொன்னார்கள். அன்றிரவு அங்கு வேலை செய்கின்ற பெரியவர்கள் வந்தார்கள். என்னை பார்த்தார்கள். ஏன் முதலில் சொல்லவில்லை என்று கேட்டார்கள். நாங்கள் ஏதாவது உதவி செய்திருப்போமே என்று சொன்னார்கள். என்னுடைய மகன் சொன்னார். எங்களுக்கு உதவி தேவையில்லை. எங்களிடம் எல்லாம் இருக்கின்றது. நாங்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்கவில்லை. அம்மாவிற்கு சுகம் கிடைக்க வேண்டும். அது தான் எங்களுக்கு முக்கியம். இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். இந்த சத்தங்கள் வரக்கூடாது என்று மகன் சொன்னார்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
“‘நாங்கள் இந்த வேலைகளை ஆரம்பித்து விட்டோம். அதனால் ஒன்றுமே செய்ய முடியாது. அம்மாவிற்கு பாதுகாப்பு என்றால், உங்கள் வீட்டில் கண்ணாடி அறையொன்று செய்து, ஏ.சியை பொருத்தி தாறோம். அம்மாவை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.’ என்று கூறினர். என் மகன் அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.” என அவர் கூறுகின்றார்.
தனது சொந்த இடமான நறுவிலிக்குளத்தில் வாழ முடியாமல் யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்தே சிகிச்சைகளை பெற்று நோயை ஓரளவு குணப்படுத்திக் கொண்டதாக அருணேசன் யோகமலர் குறிப்பிடுகின்றார்.
2023-ஆம் ஆண்டு நடுப் பகுதியிலேயே தாம் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான நறுவிலிக்குளம் பகுதிக்கு வந்த போதிலும், இங்கு நிம்மதியான பழைய வாழ்க்கையை வாழ முடியவில்லை என அவர் கூறுகின்றார்.
அதனால், சிறிது காலம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது தாயின் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், சில காலமாகவே மீண்டும் சொந்த இடத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், தனக்கு பழைய வாழ்க்கையை மீண்டும் வாழ முடியாத சூழ்நிலை இங்கு காணப்படுவதாக மன்னார் – நறுவிலிக்குளம் பகுதியைச் சேர்ந்த அருணேசன் யோகமலர் கூறுகின்றார்.
” எனக்கு நான்கு பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் இங்கு இருப்பதில்லை. இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள். இரவில் படுக்கமாட்டார்கள். அப்படி படுக்கப் போட்டாலும் எழும்பி எழும்பி கத்திக் கொண்டிருப்பார்கள். காதுகள் எல்லாம் கேட்காத மாதிரி இருக்கின்றது.” என அருணேசன் யோகமலர் தெரிவிக்கின்றார்.
காற்றாலை மின்சார உற்பத்தி விசிறிகளினால் ஏற்படும் தனிப்பட்ட பாதிப்புகள் தொடர்பிலும் அருணேசன் யோகமலர் பிபிசி தமிழுக்கு தெளிவுப்படுத்தினார்.
”சத்தம் தொடங்கினால் இருக்க இயலாது. அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாது. வெளியில் வந்து இப்படி தோட்டங்கள் செய்துக் கொண்டிருப்பேன். சில நேரத்தில் கோவில்களுக்கு சென்று இருப்பேன். அந்த சத்தத்தை கேட்க இயலாது. காற்றாலையை நிறுத்தும் நேரத்தில் பாரிய சத்தமொன்று கேட்கும். அந்த நேரம் படப்படப்பாக இருக்கும்.” என அருணேசன் யோகமலர் கூறினார்.

தொடர் சுழற்சி போராட்டத்தில் மன்னார் மக்கள்
மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி மன்னார் மாவட்ட மக்கள் சுழற்சி முறையிலான தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் தீவுப் பகுதியில் 36 காற்றாலைகள் தற்போது இயங்கி வருகின்ற நிலையில், தொடர்ந்தும் புதிய காற்றாலைகளை பொருத்த வேண்டாம் என வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கான ஆயத்தங்கள் இந்த மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, புதிய காற்றாலைகளை பொருத்தும் நோக்கில் மன்னார் நகருக்குள் பாரிய லொறிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்ட பின்னணியில், அதனை நகருக்குள் செல்ல விடாது பிரதேச மக்கள் இரவு இரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காற்றாலை திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
எனினும், மன்னார் நகருக்குள் கொண்டு விடாது தடுத்து வைக்கப்பட்ட பொருட்களை மாத்திரம், நகருக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, அந்த பொருட்கள் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மன்னார் மாவட்ட மக்கள் மன்னார் நகர் மத்தியில் சுழற்சி முறையிலான தொடர் போராட்டத்தை ஆரம்பித்து 20 நாட்கள் கடந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் கூறுவது என்ன?
மன்னார் நகரில் தொடர் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
”காற்றாலை மின்சாரத்தின் மண் அகழ்வு காரணமாக மழை காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால், எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. கனிய மண் அகழ்வதனாலும், காற்றாலை நிரூவுவதனாலும் பாரிய பள்ளங்கள் ஏற்படுத்தி, அதனை மூடுவதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோடாது எங்களுடைய காணிகள் தேங்கி நிற்கின்றது. ” என சிறிதரன் அந்தோணி அம்மாள் தெரிவிக்கின்றார்.
”இந்த காற்றாலையை பற்றி எங்களுக்கு முன்னாடி தெரியாது. கொண்டு வந்து பூட்டினார்கள். இப்போது சொல்லும் போது தான் தெரிகின்றது எங்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்று. சுற்று சூழல் எல்லாம் பாதிப்பாக இருக்கின்றது. கடற்றொழிலுக்கு போறவங்க, வெறும் கையில் வரும் போது எங்களுக்கு சரியான கவலையாக இருக்கின்றது. அதை வைத்து தான் அவர்களின் வாழ்வாதாரம் நடக்குது. பிள்ளைகளின் படிப்பு எல்லாம் பாதிக்கின்றது. அத்திப்பட்டி கிராமம் அழிந்தது மாதிரி, எங்களுடைய மன்னார் மாவட்டமும் அழிய கூடாது.” என மன்னாரைச் சேர்ந்த ரோகினி குறிப்பிடுகின்றார்.

”எங்களுடைய மன்னார் மாவட்டம் மூன்று விதமான பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றது – கடல் வளம், விவசாயம், பனை உற்பத்தி. இது மூன்றுமே பாதிக்கப்படுகின்றது. 100 அடி ஆழத்திற்கு கீழ் காற்றாலை அமைப்பதற்கு கிடங்கு எடுக்கின்றீர்கள். அந்த மண்ணையும் நீங்கள் கொண்டு போய் விடுகின்றீர்கள். நிலம் வந்து கொத்தும் போது அது அதிர்வாகிவிட்டால், அதை திரும்ப பழைய நிலைமைக்கு வராது. மன்னாரில் தான் கடலுக்கு பக்கத்தில் நல்ல தண்ணீரும் இருக்கின்றது. இப்போது அந்த தண்ணீரே மாசடைந்து விட்டது. இங்கு பெயர் சொல்லும் அளவிற்கு இருந்தது முருங்கை உற்பத்தி, ஆனால் இப்போது முருங்கை உற்பத்தியே வருதில்லை. காற்றாலைகளை அமைக்கும் போது 100 அடிக்கு தோண்டப்படுகின்றது. அதனால், வெள்ளம் ஊருக்குள் வருகின்றது. எனக்கு 40 வயதாகின்றது. நாங்கள் இதுவரை வெள்ளம் பார்த்ததில்லை. ஆனால், இப்போது வெள்ளத்தை பார்க்கின்றோம். ஏன்? இந்த காற்றாலை அமைத்ததனால். வெறும் 75000 மக்கள் தான் இந்த மன்னார் தீவில் இருக்கின்றோம். இதுவரை மன்னார் தீவை யாரும் கணக்கெடுக்கவில்லை. இப்போது இவ்வளவு வளம் இருக்கின்றமையினால் மன்னார் தீவு தேவைப்படுகின்றது. அபிவிருத்தி என்பது மக்களின் தேவைக்காக. அது மக்களையே பாதிக்கின்றது என்றால் அந்த அபிவிருத்தி எதற்கு” என மன்னாரைச் சேர்ந்த ஆர்த்தி கேள்வி எழுப்புகின்றார்.
”உண்மையில் மன்னாரில் இந்த 36 காற்றாடிகளை பூட்டும் போது எங்களுக்கு அது தொடர்பான அறிவு இருக்கவில்லை. நான் உட்பட எல்லாருக்குமே. ஆனால், பொருத்தப்பட்டதன் பின்னர் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக கண்டு அதனை அனுபவித்தோம். அதற்கு பிறகு தான் இந்த காற்றாலை வேண்டாம் என்ற கோஷத்திற்காக ஆறு வருடங்காக போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய பிரஜைகள் குழுவுடன் இணைந்து போராடுகின்றோம்.” என ஞானபிரகாசம் மரியசீலன் தெரிவிக்கின்றார்.
சூழலியலாளர்கள் என்ன சொல்கின்றார்கள்?
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை திட்டத்தினால் மக்களுக்கு நேரடி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சூழலியலாளர் மேரிநாதன் எடிசன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”காற்றாலை அமைப்பதனாலும், கனிய மண் அகழ்வினாலும் மன்னார் மாவட்டத்தின் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், வாழ்விடத்திற்கும், சூழலுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. முதலாவது கட்டமாக மன்னார் மாவட்டத்தில் 30 காற்றாலைகளும், 6 காற்றாலைகள் தீவுக்கு வெளியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இது எமது தெற்கு கடற்கரையில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றது. நடுகுடாவிலிருந்து அஞ்சு தென்னம்பிள்ளையடி என்று சொல்வோம். அங்கு வரை தான் இந்த திட்டம் இருக்கின்றது. கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் பேசாலை என்ற பெரிய நகரம். அடுத்தது பறவைகள் வருவதில்லை. வெள்ளப் பெருக்கு வந்ததால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும். அதோடு சேர்த்து தொழில் இன்மை, வறுமை இது எல்லாம் சேர்ந்துள்ளது. பறவைகள் வருகின்ற சரியான வழியில் இந்த காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளமையினால் பறவைகளின் வருகையிலும் பிரச்னை இருக்கின்றது. சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பு இருக்கின்றது. சுற்றுலாவில் தாக்கம் செலுத்துகின்றது. மக்களின் வாழ்விடத்திலும் நேரடியான தாக்கத்தை செலுத்துகின்றது.” என சூழலியலாளர் மேரிநாதன் எடிசன் குறிப்பிடுகின்றார்.

தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவிப்பு
2020-ல் தொடங்கப்பட்ட மன்னார் காற்றாலை திட்டத்தை இலங்கை அரசின் இலங்கை மின்சார சபை செயல்படுத்தியது. அதன்படி, மன்னார் தீவில் 36 காற்றாடிகள் பொருத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தை விரிவுபடுத்தும் இரண்டாவது கட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதானி குழுமம் இத்திட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இரண்டாவது கட்ட மன்னார் காற்றாலை திட்டத்தை உள்நாட்டைச் சேர்ந்த தனியார் பங்களிப்புடன் இலங்கை அரசே செயல்படுத்த முனைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 20 மெகாவோர்ட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவோர்ட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கடந்த 13-ஆம் தேதி சந்தித்ததை அடுத்தே இந்த திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக இங்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அந்தக் காலகட்டத்தில், பிரச்னைகளை ஆராய்ந்து விரைவாக தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கூறியது என்ன?
இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
”நாங்கள் இரண்டு விடயங்களை மாத்திரமே முன்வைத்திருந்தோம். மன்னார் மாவட்டத்திலிருந்து காற்றாலை திட்டத்தை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இரண்டாவது- மணல் அகழ்வு. ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்வதற்கு இந்த மன்னார் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் 14 காற்றாலைகளை அமைப்பதற்கு அமைச்சர்கள் அனுமதி கேட்ட போது, அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோம். காற்றாலைகளை அமைப்பதற்கு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள பொருட்களை உள்ளே அனுமதிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் அனுமதிக்கவில்லை. அன்றிரவு நடந்த போராட்டத்திற்கு அமைய நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் 5 வாகனங்களை மாத்திரம் உள்ளே விட்டிருக்கின்றோம். ஏனைய வாகனங்கள் 14 நாட்களுக்கு இந்த தீவுக்குள் வரக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருக்கின்றது. அதன்பின்னர் மன்னார் மாவட்டத்தில் இருந்த பதற்றமான நிலையை பார்த்த ஜனாதிபதி அவர்கள் எங்களை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய தரப்பிலிருந்த எல்லா விடயங்களையும் சொன்ன போது, மின்வலு உற்பத்திகள் தேவை என்று அவர்கள் தரப்பு மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருந்தார்கள். ஆனால், எங்களுடைய தரப்பின் கருத்துகளை உள்வாங்கிய பின்னர் ஒரு மாதத்திற்கு எல்லா திட்டங்களும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் வாக்களித்தார். அத்தோடு கனிய வளம் தொடர்பில் எந்த பேச்சுக்களும் இல்லை என்று சொன்ன அவர், அது தொடர்பான ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகள் எதிராக வந்தால் அதை தொடர மாட்டோம் என்று அவர் சொன்னார். அவர் செய்ய மாட்டேன் என்று சொன்னதை அந்த இடத்தில் அவதானிககக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது.” என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையிலும், மன்னார் மாவட்ட மக்களினால் இந்த சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Leave a Reply
You must be logged in to post a comment.