ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த தென்னிலங்கையின் இடதுசாரி தலைவர்களில் ஒருவர். அவர் தொழிற்சங்கவாதியும் கூட.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் அவர் போட்டியிட்டாலும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அந்தத் தெற்கு தலைவரை வாக்களித்து வரவேற்கும் வாய்ப்பு வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்குக் கிட்டுவதில்லை.
அந்தந்த சமயங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் போக்கை ஒட்டித் தமிழ்த் தலைமைகள் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்கள். தமிழ் தலைமைகளுக்கும் தெற்கில் இவ்வாறு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தலைவர்களை மதிக்கும் எண்ணமோ சந்தர்ப்பமோ இருப்பதில்லை.
அத்தகைய தென்னிலங்கை தலைவரான சிறிதுங்க ஜெயசூரிய யாழ்ப்பாணத்தில் வந்து சில முற்போக்கான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அவை கவனிக்கத்தக்கவை. அவர் கூறியவற்றின் சாரம் இதுதான்:-
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது.தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே அநுர அரசும் பாடுபடுகின்றது.
அநுர ஒரு சந்தர்ப்பவாதி. அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நாட்டை சீரழிக்கும் ஒருவர். அமெரிக்கா என்ன நினைக்கின்றதோ அதையே நாட்டில் முன்னெடுத்து வருகின்றார்.
இதேநேரம் சர்வ அதிகரம் கொண்ட அநுரவுக்கு நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினையை தீர்க்க ஒரு கையொப்பம் போதும். ஆனால் அதை அவர் செய்யமாட்டார்.
யாழ் மக்களுக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அவசியமாக இருந்தாலும் அதைவிட அவசியமானவை எண்ணற்ற அளவில் இருக்கின்றன. ஆனால் அநுர அரசு மைதானத்தை காட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்க முயல்கிறது.
வடக்கில் இருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றாலும் அவர்களில் ஒருவருக்குக் கூட அமைச்சராக பொறுப்புக் கொடுக்காத அரசு இது.
வடக்கில் வந்து பேதங்கள் அற்ற ஆட்சி செய்வதாக கூறும் அநுர, தனது ஆட்சியில், அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை ஓரங்கட்டி வைத்திருக்கின்றார்.
இதேநேரம் யாழ்ப்பாணம் சாரா ஒருவரை யாழ்பாணத்தின் அமைச்சராக்கி யாழ். மக்களை இழிவுபடுத்தும் செயலே முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்குக் காரணம் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்சரானால் தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்த தீர்வுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதால்தான் அமைச்சு கொடுக்கபடவில்லை. இதுவே உண்மை.
பலஸ்தீனத்ததை ஆதரித்து ஐ.நாவில் கருத்துக் கூறும் அநுர இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ள மாட்டார். ஏனெனில் அநுர ஓர் இனவாதக் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர்.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதித்திட்டத்தை முன்னெடுக்கின்றது. இதை முறியடிக்க வேண்டும்.
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது வடக்கு கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதுடன் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மக்களின் பாரம்பரிய பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க இந்த அரசு முயற்சி செய்ய வேண்டும். – இப்படி அவர் வலியுறுத்தினார்.
தமிழ்த் தலைவர்கள் கூற வேண்டியவற்றை எல்லாம் தென்னிலங்கைச் சிங்களத் தலைவர் ஒருவர் துணிச்சலுடன் – வெளிப்படையாக – கூறியிருக்கின்றார்.
அதனால் தெற்கில் அவருக்கு எதிர்ப்பு நிச்சயம். ஆனால் பாவம் மனிதர். பரிதாபத்துக்குரிய தமிழர்களுக்காக உண்மைகளை அப்பட்டமாக – துணிச்சலாக – பேசும் அவரை வடக்கு, கிழக்கு தமிழர்களும் ஏறெடுத்துப் பார்க்கின்றார்கள் இல்லை. தங்களுக்காக நட்டாமுட்டித்தனம் பண்ணும் அரசியல் தலைவர்களைத்தான் தமிழ் மக்கள் வாக்களித்து அங்கீகரிப்பார்கள் போலும்.
கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்ட முடிவு அவர்களின் யோக்கியதைக்கு நல்ல சான்று…!
Leave a Reply
You must be logged in to post a comment.