தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இனியாவது பூர்த்தி செய்ய வேண்டும்
24 Aug, 2025
பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் அக்கறையுள்ள தரப்பினர் தற்போதைய அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாறுபட்ட கோணத்தில் செயற்படும் என்று ஆரம்பத்தில் எதிர்வு கூறப்பட்டது. இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் நன்கு அறிந்து செயற்படும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் மேலோங்கியிருந்தது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கங்களைப் போன்றே ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது தற்போது உணரப்பட்டிருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும் தேசிய மக்கள் சக்தியானது உறுதிமொழி வழங்கியது.
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. கடந்த காலத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் உரிய அக்கறை காண்பித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் அக்கறை கொண்டிருக்கவில்லை.
இதனால் கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகள் மீது வெறுப்புக்கொண்டிருந்த தமிழ் பேசும் மக்கள், தேசிய மக்கள் சக்தியை கடந்த தேர்தல்களில் ஆதரித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இத்தகைய நிலைமை உருவாகியிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலைவிட, பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பேராதரவு தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருந்தது. வடக்கில் சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்திக்குத் தமிழ் மக்கள் பெரும்பான்மை ஆதரவை வழங்கியிருந்தனர். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இத்தகைய ஆதரவு வழங்கப்பட்டது.
தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் பெருவாரியாக தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருந்தனர். கடந்த கால அரசாங்கங்களைப் போல் அல்லாது முன்னேற்றகரமான நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்புத் தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்பட்டது.
பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏதோ ஒரு வகையில் தமக்கு இந்த அரசாங்கம் நீதியை பெற்றுத் தரும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதுவரை அமைந்திருக்கவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றிருந்தார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் போது 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த முன்னெடுப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உடனடியாகவே கடுமையாக எதிர்த்திருந்தது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கட்டமைப்பையும் கடுமையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்த்திருந்தது. பிரேரணை மேலும் ஒரு வருட காலம் நீடிக்கப்படக் கூடாது என்று அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றவுடனேயே இவ்வாறு பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்மறையான செயற்பாட்டை மேற்கொண்டிருந்தது.
இதனைவிட நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அத்துடன் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அலுவலகத்தை அமைப்பதற்கான செயற்றிட்டமும் இந்தக் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அதற்கான இடைக்கால அலுவலகம் அமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இந்தச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. அரசாங்கத்தின் இத்தகைய முடிவு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை மேலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியம் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியமும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தமாக அமைய வேண்டியதன் அவசரமும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் அக்கறையற்ற தன்மை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் விசனம் தெரிவித்திருக்கின்றது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது முதல் நல்லிணக்கம் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைத் தம்வசம் வைத்திருக்கும் அவரது அரசாங்கம் யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்றிட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது. இலங்கையின் மனித உரிமைகள் சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும் கரிசனைக்குரிய முக்கிய மனித உரிமை விவகாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று மிகப் பாரதூரமான அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பொறுத்தமட்டில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்கின்றது என்றும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் பொறிமுறையின் மூலம் கடந்த நான்கு வருடங்களில் சுமார் 34 ஆயிரம் தரவுகள் மற்றும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக ஆணையாளர் வோல்கர் டேர்க் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு ஆதாரங்கள் திரட்டப்பட்டு வரும் நிலையிலேயே ஐ.நா.வின் பொறுப்புக்கூறல் திட்ட அதிகாரிகளை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
உண்மையிலேயே பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கமானது தான்தோன்றித்தனமாகச் செயற்படாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
கடந்தகால அரசாங்கங்களைப் போன்று சிங்கள பெளத்த தேசிய வாதத்திடம் அடிபணிந்து அரசாங்கம் செயற்படுமானால் அதனால் நாட்டுக்கு பாதகமான விளைவுகளே ஏற்படும்.
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு இனங்களுக்கிடையே சகோதரத்துவம் உருவாக்கப்பட வேண்டுமானால் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்பட வேண்டும். மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயங்களில் அரசாங்கம் இனியாவது அக்கறையாகச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.