தனித் தமிழ் இயக்கம்
இலங்கநாதன் குகநாதன்
மொழிகளில் கலப்பு என்பது இயல்பானதே, ஆனால் தமிழில் கலக்கப்பட்ட சமற்கிரதச் சொற்கள் அவ்வாறு இயல்பாக வந்தவையல்ல; அவை திட்டமிட்டுக் கலக்கப்பட்டவை, எனவே அவை அகற்றப்பட வேண்டியவை. தமிழில் எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே, விகுதிகள் கூடத் தனித்துப் பொருள் தர முடியாதவை என்றாலும், சொற்களுடன் சேர்ந்து பொருள் தருவனவே. ஒரு சொல்லினைப் பிளந்து கொண்டு போனால் கூட, இறுதி வேர்ச் சொல் மூலங்கள் கூட ஒரு பொருளார்ந்த முறையிலேயே முடிவுறும். இது பற்றிய பல வேர்ச் சொல் அகராதிகளுள்ளன.
அத்தகைய பெருமை மிகு மொழியினைப் பேணி, எம் மீது ஏற்பட்ட திணிப்புகளை நீக்குவோம்.
இந்த நிலையில் ஈழத்தில் போராளிகளால் வெளியிடப்பட்ட இரு நூல்களை இங்கு மீண்டும் நினைவுபடுத்தவுள்ளேன்.
தமிழில் கலக்க வைக்கப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கான, தூய தமிழ்ச் சொற்களைக் கொண்ட கையேடு. இதனைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
https://tamileelamarchive.com/…/%E0%AE%A8%E0%AE%9F%E0…
தமிழிலேயே தமிழர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற நோக்கில் போராளிகளால் வெளியிடப்பட்ட கையேடு இதுவாகும். இதில் 46000 பெயர்கள் (தமிழ்ப் பெயர்கள்) உள்ளடகப்பட்டுள்ளன.
https://tamileelamarchive.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0…
போராளிகள் அந்த நெருக்கடியான காலகட்டத்தில் கூட, இத்தகைய நூல்களை வெளியிட்டதுடன் மட்டும் நிற்காமல், அதனைத் தாம் கடைப்பிடித்தார்கள். `கலாச்சாரம்` என்ற சொல் `கலை-பண்பாடு` ஆனது , `விவசாயம்` என்ற சொல் `உழவு` எனப் பழைய தனது இயல்பான நிலைக்குத் திரும்பியது. ஆட்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டன {ஆஞ்சநேயர், சந்திரிக்கா, பேபி சுப்பிரமணியம், தினேஸ் ஆகிய வடமொழிப் பெயர்கள் முறையே இளம்பரிதி, தமிழினி, இளங்குமரன், தமிழ்ச் செல்வன் எனத் தமிழாக்கப்பட்டன}.
குறிப்பு – இனத் தூய்மைவாதம் வேறு, மொழியின் தற்காப்பு வேறு. தலை சிறந்த இடதுசாரியான லெனினே தனது மொழியில் ஏற்படுத்தப்பட்ட பிறமொழிக் கலப்பினை விரும்பவில்லை.
அவர்களின் கனவு இன்று எந்த நிலையிலுள்ளது? இனியாவது விழித்துக் கொள்வோம், அதுவே நாம் எமக்காகத் தமது உயிர்களைத் தந்தவர்களுக்குச் செய்யும் உண்மையான நினைவு வணக்கமாகும்


Leave a Reply
You must be logged in to post a comment.