தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள்

Bun, Butter, Jam என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் தமிழ், தமிழ், தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என்ற முழக்கம் மறுபுறம் ஒரு திரைப்படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டும் கேவலம். தமிழ்நாடு என்ன செய்கிறது?

இன்னொரு படத்துக்குப் பெயர் Bomb. இதனை யாரிடம் சொல்லி அழ.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு டாக்டர், டான், பிரின்ஸ் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தனர்.

விஜய் நடித்த ஒரு படத்தின் பெயர் Beast. இரஜினி நடித்த படத்தின் பெயர் Jailor.

தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, தமிழ் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புகளை சூட்டுவது அதிகரித்திருந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால், வரி விலக்கு அளிப்பதாக அவர் அறிவித்த பிறகு, பல திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது நடந்தது. சில பேர் தூய தமிழ்ப் பெயர்களைக் கூடச் சூட்டினார்கள்.

அப்படி தமிழ்ப் பெயர்களை சூட்டியதால் எந்த விதத்திலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்படவில்லை.

ஆக, தமிழ்ப் பெயரை சூட்டுவதற்கும் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஒரு விதத்தில் எண்பிக்கக் கலைஞர் எடுத்த நடவடிக்கை காரணமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து கடைசி நேர அவசரத்தில் கூட பல தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்ட்டன.

ஆனால், அண்மைக்காலமாக மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறிவிட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்த் திரைப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை சூட்டுவது மீண்டும் அதிகரித்திருக்கிறது. கலைஞர் கருணாநிதிக்கு இருந்த தமிழ்ப்பற்று மு.க. ஸ்டாலினிடம் இல்லை.

Master, Captain Miller, Love Today, Bombay Express, Dragon, Gossip, Girls, Gentlemen, Goat, Retro, Good, Bad, Ugly . Thug Life, Leo, இம்மாதிரியான ஆங்கில பெயர்களை சூட்டுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத்தில் இருந்து கடந்த 1990-கள் வரை நல்ல தமிழ்ப் பெயர்கள் தலைப்பாக வைக்கப்பட்டன.

நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவில், பாசமலர், ஒருதலை ராகம், கடற்கரை தாகம், கடலோரக் கவிதைகள், முள்ளும் மலரும், புதுப்புது அர்த்தங்கள், ஆனந்த பூங்காற்றே, ஆசையில் ஒரு கடிதம்… இப்படி பலவற்றைச் சொல்லலாம்.

ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழிதான். ஆனால் தமிழினத்தின் அடையாளமான தமிழ்மொழி படத் தலைப்புகளில் தொலைந்து கொண்டிருக்கிறது.

மொழிப்பற்றாளர்கள் ஒன்று செய்யலாம். இந்தப் படங்களை திரையில் மட்டுமல்ல தொலைக் காட்சியிலும் பார்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் படத் தயாரிப்பாளர்களுக்கு தக்க பாடம் படிப்பிக்கலாம். தண்டனை வழங்கலாம்.

Be the first to comment

Leave a Reply