வட மொழி – தமிழ் மொழி இலக்கியங்களில் பெண்கள் – ஒரு ஒப்பீடு
இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து வரும்போது இராமன் அவளை அயோத்திக்கு அழைக்கிறான். ஆனால் மீண்டும் ஒரு நிபந்தனை. “உனது கற்பை பரிசோதிக்க தீக்குழித்து வா” என்கிறார். இதனைக் கேட்ட சீதை ஒரு சந்தேகப் பேயோடு வாழ்வதை விட இறப்பதே மேல் என்று எண்ணி தன்னை பூமாதேவி ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். பூமி பிளந்து அவளை அரவணைத்துக் கொள்கிறது.
*இது ராமாயணம்*
ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு வயதுபோன கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து “நான் இவளோடு கூட வேண்டும்” என்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*.
*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*…
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், ‘அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா’ என்று.
*இது சிலப்பதிகாரம்*.
அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
*இது மணிமேகலை*
அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்.
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.
மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது,
‘இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்’ என்று.
யோசிக்கிறாள்.
இறுதியாக கணவனிடம் பேசுகிறாள்,
“நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்தக் கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு” என்று.
“அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா” என்று கணவனும் சொல்ல,
சுற்றுகிறாள்.
முதல் சுற்று,
இரண்டாம் சுற்று,
மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
*இது குண்டலகேசி*
*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*…
ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.
அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
*அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.
தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.
வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.
உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.
*சங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.
தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூடக் கிடையாது.
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூடப் பெண்களுக்கு உரிமை கிடையாது.
ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்த கொருட்கள் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் படைத்திருந்தது.
ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்.
தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்..
Leave a Reply
You must be logged in to post a comment.