தேன் கூட்டில் கல்லெறியும் அநுர?

தேன் கூட்டில் கல்லெறியும் அநுர?

நாடு எதிர்கொண்டிருக்கின்ற பிரதான பிரச்சினைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேன் கூட்டில் கல்லெறியும் வேலைகளை அநுர அரசாங்கம் செய்து கொண்டிருக் கின்றதோ என்கிற சந்தேகம்  ஏற்படுகின்றது. 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்துக்குப் பின்னராக, தேசிய மக்கள் சக்திதான்  தனித்து மூன்றில் இரண்டு  பெரும் பான்மையை பெற்று ஆட்சியமைத்திருக்கின்ற தனிக் கட்சியாகும். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னராக தென் இலங்கை முழுவதும் போர் வெற்றி முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்ட ராஜபக்ஷக்கள்கூட  தனியொரு  கட்சியாக நின்று மூன்றில் இரண்டு  பெரும்பான்மையைப்  பெற்றிருக்கவில்லை. அவர்கள் சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிக் கூட்டணியாக  நின்றே அந்த  வெற்றியைப் பெற்றார்கள்.

ஆனால், அரகலயவின் குழந்தையாக ஆட்சி பீடமேறியிருக்கின்ற தேசிய மக்கள்  சக்திக்கு  கிடைத்திருக்கின்ற  பெரும்பான்மை என்பது யாரினாலும்  சவாலுக்கு உட்படுத்த முடியாதது. அநுர அலை தென் இலங்கையில் மாத்திரமல்ல, வடக்கு – கிழக்கிலும் சில கட்சிகளை ஆட்டங்காணச் செய்தது.  பாரம்பரிய  அரசியல்வாதிகளைப்  பெருமளவில்  புறந்தள்ளி, சாமானியர்களை அரசியல் அதிகாரத்தில் இருத்தியது. ஆனால், அப்படியாக வழங்கப்பட்ட மக்கள்  ஆணையை  அநுரவும் தேசிய மக்கள் சக்தியும் கோட்டை விடுகிறார்கள் என்கிற எண்ணம் மேலொங்கிச் செல்கின்றது.

குறிப்பாக, இந்த நாடு சுதந்திரமடைவதற்கு முன்னிருந்து  எதிர்கொண்டிருப்பது  அரசியல் பிரச்சினையாகும். இன – மத சிறுபான்மையினர்  (எண்ணிக்கைச்  சிறுபான்மையினர்)  பேரினவாத சக்திகளினாலும்,  அரசினாலும் அடக்கி  ஒடுக்கப் பட்டு  வந்திருக்கிறார்கள். இன்றளவும் அந்த நிலை மாறவில்லை. நாடு நீண்ட ஆயுத  மோதல்களை எதிர்கொண்டு பெரும் அழிவைச் சந்தித்திருக்கின்றது.  உயிரிழப்புக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, அங்கவீனம் என்கிற ஈடுசெய்ய முடியாத  இழப்புக் கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அத்தோடு பொருளாதார,  புலமைத்துவ  இழப்பு என்பது இலங்கையை சில தாசப்தங்கள் பின்னுக்கு தள்ளி  விட்டிருக்கின்றது.  அப்படியான நிலையில், நாடு எதிர் கொண்டிருக்கின்ற  அடிப்படைப் பிரச்சினையான  இனமுரண்பாடுகள் –  அதுசார் அரசியல்  பிரச்சினைகளுக்கு  தீர்வு காணுதலே  முதன்மையாக இருக்க வேண்டும். இலங்கை வரலாற்றிலேயே, தேசிய மக்கள்  சக்திதான்  ஒட்டு மொத்த நாட்டு மக்களினதும் ஆணையைப் பெற்று ஆட்சி  அமைத்திருக்கின்றது என்று, அநுரவும் அவரது அமைச்சர்களும் பெருமிதம் பேசு கிறார்கள். அந்தப் பெருமித பேச்சில் குறிப்பிட்டளவு உண்மையும் இருக்கின்றது.  அப்படியான நிலையில்,  இனப்பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதுதான், அர்ப்பணிப்புள்ள அரசியல் தலைவரும் கட்சியும் செய்ய வேண்டியது.

அநுரவும், தேசிய மக்கள் சக்தியும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில்  புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வந்து இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று திரும்பத் திரும்ப வலுயுறுத்தியிருக்கின்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒருவருடமாகின்றது, அநுரவிடமோ தேசிய மக்கள் சக்தியிடமோ  புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது தொடர்பிலான எந்தவொரு  எண்ணப் பாடையும் காண முடியவில்லை. மாறாக, வழக்கமான கவனக்  கலைப்பான்  அரசியலையே அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தென் இலங்கை அரசியல் களம் எப்போதுமே இனவாத – மதவாத சிந்தனைகளினால் ஆட்கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றியினால், அந்தச் சிந்தனைகள் அடித்து ஒழிக்கப்பட்டுவிட்டன என்று யாராவது நம்பினால், அவர்கள் இந்த நாட்டின் அரசியலை, இயங்கு நிலையை புரிந்து கொள்ளாதவர்கள். ஏனெனில், இன்று ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியினரே, மக்கள் விடுதலை முன்னணியாக (ஜே.வி.பி.) நின்று  விதைத்த இனவாத  சிந்தனைகள்  எந்தவொரு  பாரம்பரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இந்த நாட்டில் விதைத்த  இனவாத சிந்தனைகளைப் போன்றுதான் ஜே.வி.பி.யின் தேர்தல் அரசியலுக்கான வருகையும் இனவாத விதைப்பின் மூலமே நிகழ்ந்தது. ராஜபக்ஷக்களை ஆட்சியில் ஏற்றுவதற்காக ஜே.வி.பி நிகழ்த்திய இனவாதப் பிரச்சாரம் என்பது அச்சமூட்டக்  கூடியது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை பயங்கரவாதமாக சித்தரித்த வரலாறு அந்தக் கட்சிக்கு உண்டு. இன்றைக்கு தேசிய மக்கள் சக்தி முகத்தோடு, அரகலயவின் குழந்தையாக ஜே.வி.பி. ஆட்சி பீடம் ஏறிவிட்டது.  கொரோனா தொற்றுக் காலமும், அரகலயவும் இல்லையென்றால், தேசிய மக்கள் சக்தியினால் ஆட்சி பற்றிய கனவைக்  கண்டிருக்கவே முடியாது. கொரோனா தொற்றுக் காலம், நாட்டின் உண்மையான பொருளாதார பின்னணியை வெளிப்படுத்த போதுமாக இருந்தது. நாட்டு மக்களின் பசி என்கிற வயிற்றுப் பிரச்சினைதான்,  அரகலயவுக்கு வலுச்  சேர்த்தது. அதுதான் ராஜபக்ஷக்களை அகற்ற உதவியது. அதற்கு உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள்  உதவின என்பதை மறைப்பதற்கு இல்லை. ஆனால், அரகலய திரட்சி, பொருளாதார நெருக்கடிகளினால் எழுந்தது.  அப்படியான நிலையில், தென் இலங்கையில் இருந்து இனவாத மதவாத அரசியல் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று நம்ப வேண்டியதில்லை.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, பொதுத் தேர்தலோடு ஒப்பிடும்போது கணிசமான வாக்கு இழப்பைச் சந்தித்தது. இது, அநுரவையும் அரசாங்கத்தையும் சலனப்படுத்திவிட்டது. அதனால்தான்,  தென் இலங்கையில் கவனக் கலைப்பான் வேலைகளைப் பார்த்து வருகின்றது. ரணில் மீதான ஊழல் வழக்கும், அது தொடர்பிலான கைதும் அதில் பிரதானமானது. அதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்களை  இரத்து செய்யும் சட்டமூலத்தினை நிறைவேற்றியிருக்கின்றது. அதன்மூலம், சந்திரிக்கா, மஹிந்த, மைத்திரி உள்ளிட்டவர்கள் வசித்து வந்த அரச பங்களாக்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். (சந்திரிக்கா  வெளியேறுவதற்கு இன்னும் கால அவகாசம் கோரியிருக்கின்றார்.) முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின்  இணையர் (கணவரோ, மனைவியோ) பெறும் சலுகைகளை நீக்குவோம் என்பது தேசிய மக்கள் சக்தியின்  தேர்தல்  வாக்குறுதிகளில் ஒன்றுதான். அதனை நிறைவேற்றினால், ஏன் விமர்சனம் எழுகின்றது என்ற கேள்வி எழலாம். பிரதான பணியை மறந்து, சிறிய விடயங்களை முதன்மைப்படுத்தி களத்தினை கலக்கி விடும் வேலையாகத்தான் இதைப் பார்க்க  வேண்டியிருக்கின்றது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி என்பது போர் வெற்றி முழக்கம் மற்றும் இனவாத  சிந்தனைகளினால் நிகழ்ந்தது.

கொழும்பு ஏழு, விஜயராம வீதியிலுள்ள அரச வளவில் இதுவரை காலமும் வசித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை அங்கிருந்து வெளியேறினார். அவர், தங்காலையிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றார். 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதும், அலரி மாளிகையிலிருந்து வெளியேறி நேராக தங்காலையிலுள்ள  வீட்டிற்கே சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில், தன்னை வடக்கு – கிழக்கு மக்கள் தோற்கடித்துவிட்டதாக இனவாதம் பேசினார்.

இப்போதும் அப்படியான செய்தியையே ராஜக்ஷக்கள் தென் இலங்கையை நோக்கி முன்வைக்கிறார்கள். “..புலம்பெயர் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று அநுர, ராஜபக்ஷக்களை அலைக்கழிக்கிறார். புலிகளின் தலைவர் இப்போது இருந்திருந்தால், அநுரவின் செயலுக்காக மகிழ்ந்திருப்பார்…” என்று மஹிந்தவின் ஊடக இணைப்பாளர்  தெரிவித்திருக்கின்றார். ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, இந்த சிந்தனை விதைப்பில் இருந்தே மீண்டும் கட்டியெழுப்படும். அது, அநுர அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களின் அடிமை என்று சித்தரிப்பதில் தொடங்கி, தமிழர்களுக்கு எதிரான இனவாதம் பிரச்சாரம் மீண்டும் பெருமளவில் முன்னெடுக்கப்படும். அதனை கொழுந்து விட்டெரிய வைப்பது  ஒன்றும்  பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு பெரிய வேலையில்லை. இப்போதே அவ்வாறான நிலையொன்றை  உருவாக்கிவிட்டால்,  அதனைக் காட்டி புதிய அரசியலைப்பு என்கிற விடயத்தை தட்டிக்கழிக்கலாம் என்று அநுரவும், தேசிய மக்கள் சக்தியும்  நினைத்தால், அது அவர்களை கடந்த காலங்களைப் போன்று மீண்டும் ஐந்து வீத வாக்குகளுக்குள் சிக்க வைத்துவிடும்.

புதிய அரசியலைப்பு உருவாக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்தல் என்கிற  விடயங்களில்  தேசிய மக்கள் சக்தி முதன்மைக் கவனங்களைச் செலுத்த வேண்டும். வராது வந்த மா மணியாக,  கிடைத்திருக்கின்ற  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், இந்த நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று நிறைவேற்றப்படுவதற்கான  களத்தினை காலம் வழங்குவதற்கான  வாய்ப்புக்கள் மிகக் குறைவு. சட்டமூலங்களின் வழியாக  விடயங்களைக்  கையாளுவதைக் காட்டிலும், புதிய அரசியலைப்பின்  ஊடாக  விடயங்களைக் கையாள வேண்டும். அதாவது, முன்னாள் ஜனாதிபதிகளின்  சலுகைகளை இரத்து செய்தல் என்பது நல்ல விடயம். ஆனால், அதனைவிட புதிய அரசியலமைப்பு நிறைவேற்றம் முதன்மையானது. ஏனெனில், அதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளின்  சலுகைகள் இரத்துச் செய்தல்  தொடர்பிலான சரத்தினை உள்ளடக்கிக் கடந்துவிடலாம். அதனால், தேவையற்ற  சலசலப்புக்கள் எழாமல் செய்திருக்கலாம். இன்றைக்கு தென் இலங்கை ஊடகங்கள் பூராவும்  ராஜபக்ஷக்களையும்  ரணிலையும் சுற்றித்தான் சுழல்கின்றன.  சீனத்து தூதுவர் ரணிலையும் மஹிந்தவையும்  ஓடியோடி சென்று சந்திக்கிறார். இதனை அரசியல் – இராஜதந்திர ரீதியில் முக்கிய விடயமாக கட்டமைக்கிறார்கள். இவை பாரம்பரிய கட்சிகளை நோக்கிய மக்களை மீண்டும் கொண்டு சேர்ப்பதற்கான காட்சிகளாகும்.

புதிய அரசியலைப்புத் தொடர்பில் அநுரவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்தவித அக்கறையும் இல்லை என்றால், இன்று அவர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் திசை அவர்களையும் நாட்டையும் மீண்டும் முட்டுச் சந்தில் நிறுத்தும். அவர்கள் கவனக் கலைப்பான்களின் வழியாக அரசியலைக் கையாளலாம் என்று நினைத்தால் அவர்களின் தோல்வி தூரத்தில் இல்லை. ஆட்சி பீடமேறிய ஒரு வருடத்துக்குள்ளேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமுள்ள அரசாங்கத்தினை ஆட்டங்காண வைக்கும் அளவுக்கான அதிர்வுகளை தென் இலங்கையின் ஆதிக்க சக்திகள் காட்டத் தொடங்கிவிட்டன. அப்படியான சூழலில், மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக முதன்மைப் பிரச்சினைகளைக் கையாள்வதுதான் தேசிய மக்கள் சக்தியையும் நாட்டையும் காப்பாற்ற உதவும்.

-காலைமுரசு பத்திரிகையில் செப்டெம்பர் 14, 2025 வெளியான பத்தி.

Be the first to comment

Leave a Reply