இலங்கநாதன் குகநாதன்
toseSonrdp12ug21106a1h69g76h8faht32mt02i6m9t7876973hm705h594 ·
தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா?
இந்தியாருடே ஏற்பாடு செய்து, கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, `தமிழ் இலக்கியங்கள் சனாதன தர்மத்தினைப் (வர்ண தர்மா) போற்றுகின்றன`, `தமிழைத் தொட்டாலே சனாதன தர்மாதான் வெளிவரும், இது இன்றைய இளைய தலைமுறை அறியாத செய்தி` என்பன போன்ற பல பொய்யான செய்திகளை அடித்து விட்டிருந்தார். அவற்றின் உண்மைத் தன்மையினைப் பார்ப்போம். இதனைப் பார்ப்பதற்கு முன் நாம் ஒரு வகையில் குருமூர்த்திக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் சனாதன தர்மம் என்பது வர்ண தர்மம்தான் என ஒப்புக்கொண்டுள்ளார் அவர். அந்த நேர்மையினைப் பாராட்ட வேண்டும் (இந்துக்களின் `ஜகத்குரு`வான சங்கராச்சாரியார் ஏற்கனவே தெய்வத்தின் குரலில் சொல்லிய உண்மைதான், எனினும் இன்று சிலர் மழுப்புகின்றனர்}.
பழந் தமிழ் இலக்கியங்கள் எனும் போது சங்க இலக்கியங்களும், திருக்குறளுமே எமக்கு முதலில் நினைவுக்கு வரும். இவை எதுவுமே சனாதனதர்மத்தினைப் போற்றவில்லை.
சங்க இலக்கியங்களை முதலில் அணுகுவோம்.
• ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்றொரு மன்னன் இருந்துள்ளான். அவன் புலவனாக இருந்து ஒரு பாடலையும் பாடியுள்ளான். அவன் ஆரியப்படையினை மட்டுமல்ல, ஆரியக் கருத்தினையும் கடந்தவன். சூத்திரர் கல்வி கற்கக்கூடாது என்பது வர்ண தர்மமான சனாதனக் கொள்கை. நெடுஞ்செழியனோ “`கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே` எனப் பாடி (புறநானூறு 183) எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்கின்றான். சனாதன தர்மத்துக்கான சம்மட்டி அடி இது.
• பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பது சனாதன தர்மம். சங்க இலக்கியப் புலவர்களிலோ முப்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள். இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கதத்தில் (சமற்கிரதத்தில்) பாடிய ஒரு பெண் புலவரையாவது காட்ட முடியுமா? பெண் புலவர்கள் மட்டுமல்ல, பெண் தொழில் முனைவோர், பெண் தொழிலாளர், பெண் வணிகர்கள் எனச் சங்க இலக்கியங்கள் பெண்களின் சமத்தன்மையினை வெளிக்காட்டும். இதுவும் சனாதன தர்மத்துக்கான அடுத்த அடி.
• களவு மணம்தான் சங்க இலக்கியங்கள் போற்றும் உறவு முறை.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”
: குறுந்தொகை 40
இது தனித்த ஒரு பாடல் அல்ல, சங்க இலக்கியங்கள் முழுவதுமே காதல்தான். சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் கம்பன் தமிழில் இராமயணம் படைக்கும் போது கூடக் காதல் காட்சி ஒன்றினைச் சேர்த்தே படைக்க வேண்டியிருந்தது.
“கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்”.
மேலுள்ள கம்ப இராமயணக்காட்சி, வால்மீகி காட்டாத காட்சி. தமிழில் காதலைப் போற்றினால்தான் எடுபடும் என்பதற்காக மணத்துக்கு முன்னரே ஒரு காதல் காட்சி.
• ஓரளவுக்குத் தெய்வங்களைப் போற்றிப்பாடும் பரிபாடலில் கூட ஒரு வரி வருகின்றது, பாருங்கள்
“நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை.”
: பரிபாடல் 3 : 33-34.
தேவரும் அசுரரும் சேர்ந்து கடைந்து எடுத்த அமிர்தத்தினை நடுநிலைமை தவறி, தேவர்களுக்கே கொடுத்தது உனது ஒரு கை ‘ எனப் புராணக் கதையினைக் கூறி, அதற்குள் ஒரு உள்குத்து ஒன்றும் கொடுக்கின்றது பரிபாடல். சனாதன தர்மத்துக்கான உள்குத்து அது.

• மாவளத்தான் எனும் சோழ அரசனை பார்ப்பனப் புலவன் ஒருவன் வட்டு விளையாட்டில் ஏமாற்ற முனைந்த போது, பார்ப்பானுக்கு அடி கூட விழுகின்றது (புறநானூறு 43). சாதிக்கொரு நீதி எல்லாம் இங்கில்லை. யார் பிழை செய்தாலும் அடிதான்.
• சங்க இலக்கியம் கைத்தொழில்களைப் போற்றுகின்றது, உழவினைப் போற்றுகின்றது, கடல் வணிகத்தினைப் போற்றுகின்றது. சனாதனமோ கடல் கடப்பதே பாவம், கைத்தொழில்கள் கீழானவை. உழவு கீழான தொழில் என்கின்றது.
• நடுகல் வழிபாடு தவிர நெல் படைத்து வழிபடும் கடவுள் எதுவுமில்லை என்கின்றது புறநானூறு 335.
“கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”.
திருக்குறளும் அவ்வாறுதான் , `பிறப்பொக்கும்` என்பதே சனாதனத்துக்கான சம்மட்டி அடிதானே! காலில் இருந்து பிறந்த சூத்திரர்களைத் தாழ்வாகவும், தலையில் இருந்து பிறந்த பார்ப்பனர்களை உயர்வாகவும் சொல்லும் வேதக் கருத்துக்கு, `காலை வணங்காத் தலை` என்பதன் மூலம் குறள் செருப்படி கொடுக்கின்றது. `உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்`என்பது பூசாரிகளை மட்டுமே உயர்வாகவும், உழவுத் தொழிலினைத் தாழ்வாகவும் நினைக்கும் சனாதனத்துக்கான பதிலடியே. இவ்வாறு நீட்டிக் கொண்டே போகலாம் விரிவஞ்சி நிறுத்துகின்றேன்.
பழந் தமிழ் இலக்கியங்கள் சில சனாதனத்தினைத் தாங்கிப் பிடிப்பது போன்ற தோற்றத்தினை இரு வகைகளில் ஏற்படுத்த பிற்காலத்தில் பார்ப்பனர் முயன்றனர். முதலாவது வகையில் சில இடைச்செருகல்களைச் செய்வது.
தொல்காப்பியத்தில் வர்ணங்களை இடைச் செருகுவது, அதுவும் பொருந்தாத இடத்தில் , பொருந்தாத சொற்களை இடைச் செருகுவது. விலங்குகளின் குட்டிகளின் பெயர்கள் சொல்லிவரப்படும் பகுதியில் இடையில் வர்ணங்களை உள்நுழைப்பது, அதுவும் அக் கால வழக்கில் இல்லாத வைசியர் என்ற சொல்லை உள் நுழைப்பது.
சுவடிகளைப் படி எடுக்கும் போதோ அல்லது அச்சில் ஏற்றும் போதோ, குரவர் (வழிகாட்டி ) என்ற சொல் இருந்தால் , அதனைப் பார்ப்பனர் என மாற்றி விடுதல்.
இரண்டாவது வகைத் திரிபு உரை மூலம் நடந்தது. பரிமேலழகரின் உரைகள் பலவும் உ.வே.சா வின் உரைகள் சிலவும் இதற்கான காட்டுகள்.
சனாதன தர்மத்துக்கு எதிராகவே புத்த – சமண (ஆசீவக- சைன) நெறிகள் தோன்றின. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களும் சரி, ஐஞ்சிறுகாப்பியங்களும் சரி, அவை ஒன்றில் சமணம் சார்ந்தவை அல்லது புத்தம் சார்ந்தவை. இதை விடத் தமிழுக்கு என்ன சனாதன எதிர்ப்பு வேண்டும்.
இவை எல்லாவற்றினதும் உச்சம்- சமயச் சாயல் எதுவுமில்லாத கீழடி.
குறிப்பு – இன்னமும் கூடுதலாக விளக்கங்கள் தேவையெனில் பின்னூட்ட இணைப்புகள் காண்க.
சங்க காலத் திருமணங்களில் அய்யர் இல்லை, சமற்கிருதம் இல்லை, அம்மி இல்லை, அருந்ததி இல்லை. ஓம குண்டம் இல்லை. பிள்ளைகளைப் பெற்ற முதிய மங்கல வாழ்வரசியர் மணப்பெண்ணை நீராட்டி, புத்தாடை அணிவித்து, மலர்கள் சூடி முதல் இரவு இடம் பெறும் அறைக்கு அனுப்பி வைத்தார்கள். வந்த விருந்தினர்களுக்கு அரிசியோடு ஆட்டிறைச்சி, வெண்ணை கலந்த சோறு ( இன்றைய பிரியாணி) பரிமாறப்பட்டது. வைதீக திருமணம் பிற்காலத்தில் கொண்டு வரப்பட்டது. புறநானூறு (பாடல் 86) அன்றைய திருமணம் எவ்வாறு நடந்தது என்பதை நாடகமாக தீட்டியுள்ளது. “எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.
மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.
புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.
தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.
நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!”
என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.
அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.
Leave a Reply
You must be logged in to post a comment.