இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்!
நக்கீரன்
அண்மையில் சென்னையில் நடந்த கம்பன் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கவிப்பேரரசு வைரமுத்து, “சீதையப் பிரிந்த இராமன், செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான்; புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம் குற்றமாகாது என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். இராமன் என்ற ஒரு குற்றவாளி, முற்றிலும் விடுவிக்கப்படுகிறான்” என பேசியிருந்த நிலையில், இது மிகப் பெரும் சர்ச்சையாக மாறிவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் கவிப்பேரரசு வைரமுத்து கம்பன் மீது இதே குற்றச்சாட்டை இன்னொரு கழகத்தின் பொன்விழா மேடையில் முன்வைத்திருந்தார். விழாவில் ஆழ்வார்கள் ஆய்வுமையம் நிறுவிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வழங்கியிருந்தார்.
விருதைப் பெற்றுக் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அங்கு பேசும் பொழுது –
“மறைந்து நின்று அம்பெய்து கொன்ற இராமனை வால்மீகி மன்னிக்கவில்லை; அம்பு வீசப்பட்ட வாலியும் மன்னிக்கவில்லை; அந்தப் பழியை உலகமும் மன்னிக்கத் தயாராக இல்லை. ஆனால் கம்பன் இராமனைப் பழியிலிருந்து காப்பாற்றுகிறான்-
“தேவியைப் பிரிந்த பின்னர்
திகைத்தனை போலும் செய்கை”
என்ற வரியில் மனைவியைப் பிரிந்த இராமன் மதிகெட்டுப் போனான் என்று கம்பன் இரக்கமுறுகிறான். மதிமயக்கத்தால், மனப்பிறழ்ச்சியால் ஒருவன் செய்யும் செயல் குற்றத்தில் சேராது என்பது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 84ஆம் பிரிவு சொல்கிறது. அந்த வகையில் மதி மாறுபாட்டால் இராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றது குற்றமன்று என்று கம்பன் இராமனை மீட்டெடுக்கிறான்.
கம்பனால் மன்னிக்கப்பட்ட இராமன் மனிதனாகிறான்; கம்பன் கடவுளாகிறான்” என்று குறிப்பிட்டார். சரியென்று தலையசைத்தார்கள் சான்றோர்கள் கம்பன் கழகத் தலைவர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் உடனிருக்கிறார்.
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து பேசியிருந்தது தெரிந்தும் சென்னையில் நடந்த கம்பன் விழாவுக்கு அவரை அழைத்து கம்பன் கழகத்தினர் விருது வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். விழாத் தலைவர் கம்பவாரிதி மட்டுமல்ல கம்பன் கழகத்துக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நிலைப்பாடு தெரிந்திருக்கவில்லையா? தெரிந்திருந்தால் பின் ஏன் அவரை விழாவுக்கு அழைத்து விருது வழங்கினார்கள்?
விவாதப் பொருளாக மாறிவிட்ட அந்தப் பாடல் இதுதான்.
கோ இயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய்; உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை. (கம்பராமாயணம் – வாலி வதைப் படலம்)
சித்திரத்தில் எழுத முடியாத வடிவழகுடையவனே! உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் அரசு நீதி வழுவாதிருத்தல் உடைமையன்றோ? அங்ஙனமிருக்க நீ அந்த நீதி வழுவியது எவ்வாறு? உனது உயிருக்கு உயிரான தேவியை, சனகன் பெற்ற அன்னத்தைப் பிரிந்ததால் செய்யும் செயல் இதுவென்று அறியாது தடுமாறினாய் போலும்.
ஓவியத்து – சித்திரத்தில்; எழுத – எழுதுவதற்கு; ஒண்ணா – இயலாத; உருவத்தாய் – வடிவழகு உடையவனே; கோ இயல் தருமம் – அரச நீதி; உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம்; உடைமை அன்றோ – உரிய ஒன்று அல்லவோ? (அங்ஙனம் இருக்க நீ அரசு நீதி தவறியது எதனால்?) ஆவியை – உனது உயிருக்கு உயிரான; சனகன் பெற்ற அன்னத்தை – சனக மகாராசன் பெற்ற அன்னம் போன்றவளும்; அமிழ்தின் வந்த – அமுதம்போல் அருமையாகக் கிடைத்தவளும் (ஆகிய); தேவியை உனது மனைவியை; பிரிந்த பின்னை – பிரிந்த பிறகு; செய்கை திகைத்தனை போலும் – செய்யும் செயல் ஈதென்று அறியாது தடுமாறினாய் போலும்.
திகத்தனை என்பதற்கு இராமன் மதிகெட்டுப் போனான் என்று பொருள் கொள்வது பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இராமன் மதிகெட்டுப் பயித்தியம் பிடித்து சரயு நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டான். இதனை பின்னர் பார்ப்போம்.
மரத்தின் பின்னால் மறைந்திருந்து முன்பின் அறிமுகம் இல்லாத வாலியை தனது அம்பினால் கொன்றதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அது கொலைதான். இராமன் இப்படிப் பல கொலைகளை காரண காரியமின்றிச் செய்திருக்கிறான். இதனால் அவனது தெய்வீகத்தன்மை பலத்த அடிவாங்கியிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தில் இராமன் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பி முடி சூட்டிக் கொண்டு நாட்டை ஆட்சி செய்து வரும்போது, அக்ரகாரத்தில் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் திடீரென்று இறந்துவிடுகிறான். உடனே பார்ப்பனர்கள் இராமனிடம் சென்று முறையிடுகிறார்கள். இராமன் காரணம் கேட்ட போது “உன் இராச்சியத்தில் எங்கோ தர்மம் மீறப்படுகிறது, எங்கோ அதர்மம் நடைபெறுகிறது. அதனால்தான் இந்தச் சிறுவன் இறந்துவிட்டான்” எனப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.
“தர்மம் மீறப்படுகிறதா? என் ஆட்சியிலா? எங்கே?” என்று இராமன் கேட்க, சூத்திரன் ஒருவன் தவம் செய்கிறான். சூத்திரனுக்குத் தவம் செய்யும் உரிமை இல்லை என்று பார்ப்பனர்கள் கூற, அப்படி யார் தர்மத்தை மீறி யாகம் செய்வது என்று இராமன் கேட்கிறான். உடனே பார்ப்பனர்கள் ” உன் இராச்சியத்தில் சம்பூகன் என்னும் அரக்கன் (திராவிடன்)ஒருவன் கடவுளை நோக்கி, தவம் செய்கிறான். அது மனு தர்மத்துக்கு மீறிய செயல். தவம் செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. சூத்திரர்களுக்கு இல்லை” என்கிறார்கள்.
அதனைக் கேட்ட இராமன் சம்பூகனைத் தேடிப் போகிறான். பல இடங்களில் தேடிய இராமன் முடிவில் சம்பூகனைக் கண்டு பிடிக்கிறான். அதன் பின்னர் இராமன் – சம்பூகன் இருவருக்கும் இடையில் பின்வரும் உரையாடல் இடம் பெறுகிறது.
இராமன் – நீ யார்? தவத்தில் முதிரந்தவனே, இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன? நான் தசரத குமாரன் இராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ? சுவர்க்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா? வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன? யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தவசியே, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த சத்திரியனா? மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல்.
தலை கீழாகத் தொங்கிய அந்த தவசி, இராமனின் வார்த்தைகளைக் கேட்டு, அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான். செயற்கரிய செய்த வீரனான இராமர், மிருதுவாகக் கேட்கவும், ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான்.
சம்பூகன் – என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்திரன். இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை. உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து இராமர் அவன் தலையைக் கொய்தார்.((வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம், பிரிவு-64, பக்கம்-208 -ஆ.க.கணேசன், இக்கிம்பாதம்ஸ் வெளியீடு)
சம்பூகன் இறந்து விழுந்ததும், வானத்தில் இருந்து தேவர்கள் மலர் சொரிந்தார்கள். (அத்தியாயம் 76 ( 613) சம்பூக வதம் (சம்பூகனை வதம் செய்தல்) தமிழாக்கம்.
அதாவது சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, இராமன் சம்பூகன் என்ற சூத்திரனது தலையை தனது உடைவாளால் துண்டித்துக் கொன்றான்.
செறிதவச் சம்பூகன் தன்னைச் சென்று கொன்று
செழுமறையோன் உயிர் மீட்டு.
காகுத்தனாக – கருணையின் வடிவமாகக் கம்பரால் படைக்கப்பட்ட இராமன், மூலப்படைப்பில் எவ்வளவு குறைபாடுடுடையவனாக, கொலைப் பழிக்கு அஞ்சாதவனாகப் படைக்கப்பட்டுள்ளான் என்பதைச் சம்புக வதையிலிருந்து எடுத்துக் காட்டுவார் அண்ணா. சம்புகன் ஒரு சூத்திரன். வைதிக நெறிப்படி சூத்திரன் தவம் செய்யலாகாது. இதனால் தவம் செய்யும் சம்புகனைத் தண்டிக்கும்படி பார்ப்பனர்கள் இராமனிடம் கோரிக்கை வைக்கின்றனர். இக் கோரிக்கையைத் தலைமேல் ஏற்றுச் செயல்படுத்துகிறான் இராமன். இராமனுக்கும் சம்புகனுக்கும் நடக்கும் உரையாடல்:
இராமன்: சம்புகா! இங்கு நான் தவம் கூடாது என்று கூறி, நடத்தப்படும் தவங்களையெல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறேன் என்றா எண்ணுகிறாய்? தவம் நடக்கிறது. நான் அதனை ஆதரிக்கின்றேன் – உதவியும் செய்கிறேன்.
சம்புகன்: இது தவமல்லவா!
இராமன்: தவந்தான்! ஆனால் நீ செய்வது தகாது. என் கோபம் தவத்தின் மீது அல்ல – அந்தக் குணம் அரக்கனுக்கு! அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும் என்ற தர்மத்தைக் காப்பாற்றவே, நான் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல நான்.
சம்புகன்: யோசியாமல் பொய் பேசுகிறாய் இராமா! கூசாது பேசுகிறாய். உன் ஆட்சியிலே சிலருக்குத் தவம் செய்தால் ஆதரவும், என் போலச் சிலருக்குத் தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி என்கிறாய்.
இராமன்: தர்மம்! நானும் மீறமுடியாத தர்மம்.
சம்புகன்: இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூறமுடியாதே! அவர்களில் பலர் தவம் செய்தனர். இராவணனே பெரிய தவசி! அரக்கர் தலைவர்களெல்லாம் தவம் பல செய்து வரம் பல பெற்றவர்கள். ஆகவே, அவர்களும் தவம் என்றாலே வெறுத்து அழித்தவர்களல்ல – தவம் நாங்கள் செய்யலாம் – ஆரியர் செய்யலாகாது என்றனர். அழித்தனர். நீயும் – இங்கு ஆரியர் தவம் புரியலாம் – அநாரியனான நான் புரிதல் தகாது; தலையையே வெட்டுவேன் என்கிறாய். இலங்கையான் செய்தால் பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச் செய்யும்போது… வெட்கமாக இருக்கிறது – இப்படிப்பட்ட அரசிலே வாழ்கிறோமே என்று – சீக்கிரம் என் தலையை வெட்டி விடும்.
(வாதம் முடிந்தது. இராமனின் தண்டனை கிடைத்தது வரம் வேண்டித் தவம் செய்த சம்புகனது தலையை தனது வாளால் வெட்டி வீழ்த்துகிறான். அவன் தலை தரையில் உருண்டது)
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து சட்டமும் இப்படித்தான் சொல்லுகிறது.
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு சாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான்.
வாலி மற்றும் சம்பூகனைக் கொன்ற பாணியில் இராமன் விசுவாமித்திரர் கேட்டதற்கு இணங்கத் தாடகையை அம்புவிட்டுக் கொல்கிறான். தாடகை செய்த குற்றம் என்ன?
தாடகையின் கொடுஞ் செயல்கள் பற்றி விசுவாமித்திரர் இராம இலக்குமணர்களுக்கு விளக்கும் நிகழ்வு கம்ப இராமா யணத்தில் வருகிறது. இதன்படி, தாடகை வளம் மிக்க மருத நிலத்தை அழித்துப் பாலை நிலம் ஆக்கினாள். அங்த நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள். உயிர்களையெல்லாம் தனது உணவுப் பொருட்களாகவே எண்ணும் தன்மை உடையவளாக இருந்தாள். மிருக பலம் கொண்டவளாக வேள்விகளுக்கு இடையூறு செய்து வந்தாள்.
இராமனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறான் தசரதன் (பாலகாண்டம் 18, 19 ஆவது சர்க்கங்கள்), அப்பொழுது அங்கு வரும் விசுவாமித்திரர் தான் செய்யும் வேள்விக்கு இடையூறு அளிக்கும் தாடகையைக் கொல்ல இராமனை அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறார். தசரதன் இராமனையும் இலக்குவனையும் முனிவரோடு அனுப்பி வைக்கிறார். எனினும், அவள் பெண்ணாகையால் அவளைக் கொல்வது அறம் அல்ல என்று எண்ணிய இராமன் சிறிது தயங்கினான். முனிவர் பல்வேறு எடுத்துக் காட்டுகளையும் காரணங்களையும் கூறி இராமனது தயக்கத்தைப் போக்க முயன்றார்.
“இவ்வாறான கொடுஞ் செயல்களைச் செய்பவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது. நாணம் முதலான பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாள்முதலான போர்க் கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின் தோளாற்றலும்; இத்தாடகையின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும்? பெண்ணாகிய இவளுக்கும் வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா? உயிர்களைக் கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்குரியதேயாகும். ………. அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; இந்த அரக்கியைக் கொல்வாயாக” என விசுமாவித்திரர் கட்டளை இடுகிறார்.
இதைக் கேட்ட இராமன், அறமில்லதாக இருந்தாலும், முனிவரின் கட்டளையை ஏற்றுச் செயல்படுவதே தனக்கு அறமாகும் எனக் கூறித் தாடகையை எதிர்ப்பதற்குத் தயாரானான். தாடகை தனது சூலத்தையும், பாறைகளையும் மூவர் மீதும் எறிந்து போராடினாள். இறுதியாக இராமனுடைய அம்புக்கு இரையாகி மாண்டாள். வால்மீகி இராமாயணத்தில் தாடகையை வதம் செய்ய வேண்டும் என அவளைச் சந்திக்கும் முன்னரே விசுவாமித்திரர் இராமனிடம் சொல்லி விடுகிறார். அது மட்டுமில்லாமல், இதுவரை பெண்களைக் கொன்ற மகாபுருசர்களின் உதாரணங்களையும் தருகிறார். இந்திரன் மந்தாரையைக் கொன்றது, விஷ்ணு பிருகு மற்றும் சுக்ராச்சாரியாரின் மனைவியைக் கொன்ற உதாரணங்கள் கொடுத்து, தீங்கு செய்யும் பெண்களைக் கொன்றிருக்கிறார்கள் என எடுத்துச் சொல்கிறார். இராமன் தாடகையை மட்டுமல்ல அவளது மகனான சுபாகு, என்பவனையும் கொன்றுவிடுகிறான்.
இராமாயணத்தில் கொல்லுகிறவன் இராமனாகவும் கொல்லப்படுபவர்கள் அரக்கர்களாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே இராமாயணம் ஆரியர்களுக்கும் – திராவிடர்களுக்கும் இடையிலான போர் என முன்னாள் பாரதப் பிரதமர் பண்டிதர் நேரு தான் எழுதிய ‘ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள்” (Letters from a Father to His Daughter) ) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
கம்ப இராமாயணத்தில் வரும் இராமன் –
(1) மனைவியைப் பற்றி சதா அய்யமுடைய வனாகவே இருக்கிறான். மனைவி நெருப்பில் இறங்கிக் குளித்துவிட்டு வந்த பிறகும், “இராமனைப் போல் அயலவன் வீட்டில் தங்கியிருந்த பெண்டாட்டியை மீண்டும் சேர்த்துக்கொண்டவன் போல் என்னை நினைத்தாயா? என்று வண்ணான் இழித்துச் சொன்னதைக் கேட்டு கர்ப்பிணியான சீதையைக் கண்ணைக் கட்டி காட்டுக்குக் கொண்டு சென்று விட்டு வருமாறு இராமன் இலக்குவனைப் பணிக்கிறான்.
(2) சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும், இராமன் நம்ப வில்லை. அதனாலேயே அவள் தற்கொலை செய்ய வேண்டி நேரிட்டது.
(3) தமயனைக் கொல்லச் செய்து, இராச்சியத்தைக் கைப்பற்ற வேண்டு மென்று கருதித் துரோக சிந்தனை யோடு வந்த சுக்கிரீவன், விபூடணன் ஆகிய துரோகிகளை அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.
(4) முன்பின் தெரியாத சம்பூகனை பிராமணர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாளால் வெட்டிக் கொலை செய்தவன்.
(5) இராமனுக்கு தன் தந்தை யார் என்று தெரிந்திருக்கவில்லை. மற்றவர் சொல்லித்தான் தன் தந்தை தசரதன் என்று அறிந்து கொண்டான்.
(6) இராமனும் சீதையும் பலவகை மான்கள். கரடிகள் போன்ற மிருகங்களை வேட்டையாடி சமைத்து உண்டனர். ”இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும். அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் போடும் கூத்தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான்.” (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சர்க்கம்- 43, சுலோகம்-1 )
(7) ‘இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.
(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)
(8) சீதையிருக்குமிடம் வேதம் பயின்ற. – கடவுள் அவதாரமான இராமனுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த இடத்தைக் குறித்து அவன் குரங்குகளிடமும் பட்சிகளிடம் விசாரித்து, சீதையை தேடினது தெய்வத்துக்கு ஏற்றவை அல்ல.
(9) இராமன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனைப் புனிதப்பட நினைப்பவர்கள் அயோக்கியர்களே.
(10) இராமனுக்கு தமிழ்நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி கோயில்கள் கிடையாது. இராமன் என்ற பெயரை தமிழர்கள் வைத்துக் கொள்வதில்லை. மறுபுறம் இராவணனுக்கு வட நாட்டில் கோயில்கள் உண்டு.
இராமன் சொற்படி இலக்குவன் சீதையின் கண்களைக் கட்டி காட்டில் விட்டு விட்டு அயோத்தி திரும்பினான் என்பதைப் பார்த்தோம். அதன் பின் சந்தேகப் பிராணியான இராமன் என்ன செய்தான்?சீதைக்கு என்ன நடந்தது?
இலக்குவனால் கண்கள் கட்டப்பட்டு நடுக்காட்டில் நான்குமாதக் கற்பமாக இருந்த சீதையை அனாதரவாக விட்டு விட்டு அயோத்தி திரும்புகிறான். கைவிடப்பட்ட சீதை அங்கிருந்த வால்மீகி முனிவரின் ஆச்சிரமத்தில் தஞ்சம் அடைகிறாள். வால்மீகி முனிவர் அவளைத் தனது மகள் போல அன்பாகவும் பாதுகாப்பாகவும் காப்பாற்றி வருகிறார். கொஞ்ச நாட்களில் சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களுக்கு இலவன் – குசன் என வால்மீகி முனிவரால் பெயர் சூட்டப்பட்டது. அவர்களுக்கு வான்மீகி முனிவர் போர்க்கலையைச் சொல்லிக் கொடுக்கிறார்.
இதே நேரத்தில் இராமர் அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அதற்காக அவரால் அவிழ்த்துவிட்ட குதிரைகள் வால்மீகி முனிவரது ஆச்சிரமப் பக்கம் வருகின்றன. அதனைக் கண்ட இலவன் – குசன் அந்தக் குதிரையைப் பிடித்து கட்டிப் போட்டு விடுகிறார்கள்.
இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்!(2)
நக்கீரன்
இலவன் – குசன் கட்டி வைத்த குதிரைகளை மீட்க சத்துருக்கனன், பரதன் மற்றும் இலக்குமணனாலும் முடியாது போகவே இராமரே, நேரில் வந்து அவர்களோடு போரிடுகிறார். .தனை தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார்.
தனது குதிரைகளை கட்டிப் போட்டவர்கள் தனது பிள்ளைகள்தான் என்ற உண்மை இராமனுக்குத் தெரிய வருகிறது. சீதையைப் பார்த்த இராமன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் வழக்கம் போல் சீதைமீது சந்தேகம் அடைகிறான். “நீ மீண்டும் அக்கினிப் பிரவேசம் செய்துவிட்டு வா, நாங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்” என இராமன் சீதையைப் பார்த்துச் சொல்கிறான். இதைக் கேட்ட சீதைக்கு பேரதிர்ச்சி. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதை அவள் உணர்ந்தாள். “நிறைவயிற்றோடு இருந்த என்னைக் காட்டிற்குத் துரத்திய அந்த நேரத்திலேயே நான் என் உயிரை மாய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் வயிற்றில் இருந்த பிள்ளைக்காக நான் அந்த முடிவைத் தேடவில்லை. இரு பிள்ளைகளின் மழலை மொழிகள் என் துன்பத்தை மாற்றின எனும் போது இராமனால் இழைக்கப்பட்ட கொடுமை அவள் நெஞ்சை எப்படி அறுத்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.
கணவன் *மனைவிக்கு இடையிலான உறவு நம்பிக்கை மட்டுமே” எனச் சொல்லி, அய்ம் பூதங்களைச் சாட்சியாகக் கொண்டு “நான் களங்கமற்றவள் என்பது உண்மையானால் என் பூமித் தாயே என்னை அரவணைத்துக்கொள்வாய்” என்று உரக்கச் சொல்கிறாள். சொல்லி முடித்ததுமே பூமி இரண்டாகப் பிளந்தது. பூமித் தாய் சீதையை அணைத்துக் கொண்டாள். சீதையும் தனது தாயிடம் சென்றாள்.
இப்படி மீண்டும் மீண்டும் கட்டிய மனைவியான சீதையின் கற்பைப் பற்றி சந்தேகம் கொள்ளும் இராமன் அவளை அக்கினிப் பிரவேசம் செய்து வா என மீண்டும் மீண்டும் கேட்கிறான். இப்படிப்பட்டவன் எப்படிக் கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? ஆனால் இராமன் கடவுள் அவதாரமே என இராம பக்தர்கள் சத்தியம் செய்கிறார்கள். அதில் கம்பவாரதியும் ஒருவர்.
இராமனோடு ஒப்பிடும்போது இராவணன் சிவபக்தன். இசைஞானி. வேத வித்தகன். சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்ற பண்டிதனாக இருந்தான். ஆய கலைகள் அணைத்து அறிந்த வீரன். இவற்றை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடிச் சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.. அவனது கொடி வீணைக்கொடி. அதனால், இராவணன் ‘வீணைக்கொடியோன்’ எனப் போற்றபட்டான். அது மட்டுமல்ல மன்னன் ஆக இருந்தும் ஈசன் எனப் போற்றப்பட்டவன்.
பிற்காலத்தில் இராமன் தெய்வமாக்கப்பட்டான்; இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்கனாக்கப்பட்டான்.நோக்கம், இராமனைத் தேவனாக்க வேண்டும் என்பது. அதற்கேற்றபடி கதை புனைந்தார்கள். அதில் கம்பரும் ஒருவர்.
இராமனும், இராவணனும் இராமாயணக் கட்டுக் கதையின் கதாபாத்திரங்களே என்றாலும், ஆரிய – திராவிடப் போரின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆரிய உயர்வுக்கு இராமனையும், தென்னிந்திய மக்களை குறிக்கும் திராவிட இனத்தை இழிவுபடுத்த இராவணனையும் பயன்படுத்திய பார்ப்பனியத்தினால் இந்த கட்டுக்கதை இன்று இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பற்றிப் படர்ந்துள்ளது. இராமனை கடவுளாக, புனிதனாக மாற்றியதோடு மட்டுமல்ல, வெறி பரப்பும் ஆயுதமாகவும் சனாதிகள், சங்பரிவார சக்திகள் சுமக்கிறார்கள்.
இராவணன் என்பது தமிழ் சமூகத்தின் வீரத்தின் குறியீடு, பண்பாட்டின் முகவரி. ஆநிரை கவர்தலும், பெண்களை சிறைப்படுத்தலும் அக்காலத்தின் போர் நெறியாகவே இருந்தது. அவர்களின் கதைப்படியே, தென்னாட்டு அரசனாக இருந்து சீதையை சிறையெடுத்து வந்திருந்தாலும், ஆரியத்தின் மாயாசாலக் கதைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தங்கையின் மூக’ழக அறுத்தவன் வந்து மன்னிப்புக் கேட்கும் வரை சீதைக்கு எந்தக் களங்கமும் நேராமல் பார்த்துக் கொண்ட தமிழ் மரபினன் இராவணன். தமிழ்மரபின் முன்னோடியான இராவணனிடம் இருந்து தமிழரின் அறத்தையே உணர முடியும்.
இராவணன் மிகவும் நல்லவன், சிவ பக்தன், ஏக பத்தினி விரதன், மது மாமிசம் அருந்தாதவன், தமிழன் அதனால் அவன் ஆரிய கதைப்படி இரக்கமில்லாத அரக்கன். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமான ஆட்சியை நடத்தியவன். மருத்துவம் , சோதிடம், வான சாத்திரம், இசை, ஓகம் என கலை பத்தில் தலைசிறந்தவன்.
இராமனுக்குப் பல தாரம் உண்டு என்கிறது மூல இராமாயணம், மது மாமிச பிரியன் இராமன் என்கிறது. வாலியைக் கோழைகள் போல மறைந்திருந்து கொன்றான், இராவணனுக்கு எதிராக வீடணனை காட்டிக் கொடுத்த துரோகியாக ஆக்கினார், சமத்துவமே இல்லாத வர்ணாசிரம ஆட்சியை நடத்தினார் இராமர். சம்புகன் சூத்திரன் என்பதற்காகவே பிராமணர்கள் பேச்சைக் கேட்டுக் கொன்றான்.
இராமன் மனைவி மீது அய்யப்படும் ஸ்திரபுத்தி இல்லாதவன், இவனை ஆண்களில் சிறந்தவன் என்பது நகைப்புக்குரியது, ஆளுமைத் திறனற்ற எடுப்பார் கைப்பிள்ளை மன்னனாக திகழ்ந்தான். இராவணனோ மிகுந்த ஆளுமைமிக்க மன்னனாகத் திகழ்ந்தான்.
இராமன், இராமாயணக் கதையின்படி ஒரு கோழை. இராமாயணம் முழுவதிலுமே அவன் ஒரு வீரனாக நடந்து கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக சீதையை இராவணனிடமிருந்து மீட்கச் சுக்ரீவனை நாடியபோது – வாலியிடமிருந்து நாட்டை மீட்டுத் தரவேண்டும் என்று சுக்ரீவன் கேட்டபோது – இராமன் என்ன சொல்லியிருக்க வேண்டும்?
“எனக்கு எந்தக் கெடுதியும் செய்யாத வாலியை நான் ஏன் கொல்லவேண்டும்” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? அது அறத்துக்குப் புறம்பாயிற்றே என்றல்லவா விடை இறுத்திருக்க வேண்டும்? சீதையை மீட்க உதவி செய்கிறேன் என்று சுக்கிரீவன் சொன்தும் அறமாவது? தர்மமாவது? என்றெண்ணி எந்த பாதகத்தையும் செய்யத் துணிகிறான் இராமன்.
அது மட்டுமல்ல. வாலி மகாவீரன். அவனை எதிர் நின்று யாரும் வெல்ல முடியாது. அவனை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடும். எனவே சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்று கருதிய இராமன் சுக்ரீவனிடம் வாலியை சண்டைக்கு இழுத்து – தான் மறைந் திருக்கும் மரத்துக்கு அருகில் வந்து சண்டையிடச் சொல்லி – மரத்தின் மறைவிலிருந்து அம்பெய்து வாலியைக் கொல்கிறான்.
இது கடவுள் அவதாரத்திற்கு அழகா? சக்ரவர்த்தித் திருமகன் எழுதிய இராஜாஜியே இது தவறான செயல்தான் என்று குறித்ததுடன் பெரியோர் என்னை மன்னிப்பார்களாக என்றும் குறிப்பிட்டுள்ளார். இராமன் ஒரு சுத்த வீரனாக இருந்திருப்பானேயாகில் நேருக்கு நேர் நின்றல்லவா வாலியுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றிருக்க வேண்டும். இது கோழையின் செயல்தானே? இராமன் ஒரு கோழைதானே?
இராமன் ஒரு அய்யப் பேர்வழி. சீதை இராவணன் பாதுகாப்பில் இருந்ததை இராமன் அய்யப்படுகிறான். இராவணனைக் கொன்று அயோத்திக்குத் திரும்பும் நிலையில் சீதையின் கற்பை அய்மித்து அவள் கற்பு நிலையை சோதிக்கத் தீக்குளிக்கச் சொல்கிறான். சீதையைப் பிரிந்திருந்த இராமன் தன்னுடைய ‘ஏக பத்னி விரதத் தன்மை’யை நிரூபிக்க ஏன் தீக்குளிக்கவில்லை? தனக்கும் இன்னொரு அக்கினிக் குண்டத்தை வெட்டச் சொல்லியிருக்கலாம் அல்லவா? இராவணன் கைது செய்து வைத்திருந்தவர்களில் ஒருவனான தீக்கடவுள் என்பவனை விட்டுக் கற்புத் தீ என்னைச் சுடுகிறது. தீ சுவாலையில் நான் தவிக்கிறேன். சீதை கற்பு கெடவில்லை என்று சொல்லி சீதையை ஏற்றுக் கொள்ளும்படி விபீடணனும், இலக்குவனனும், அனுமனும் இராமனிடம் கெஞ்சுகின்றனர். இராமன் அசையவில்லை.
ஊரார் சீதையின் கற்பின் மேல் சந்தேகப்படக்கூடாது என்பதற்காகவே அக்னித் தேர்வைச் செய்தேன் என்கிறான் இராமன். ஆனால் அயோத்தி திரும்பி அரசுக் கட்டில் ஏறியபின் “அயலவன் வீட்டில் தங்கியிருந்த பெண்டாட்டியை மீண்டும் சேர்த்துக்கொண்டவன் மாதிரி நான் என்ன மானங்கெட்ட பிறப்பா” என்று ஒரு சலவைதொழிலாளி பழித்துச் சொன்னதைக் கேட்டு, இராமன் இலக்குவனை அழைத்து நாலு மாதக் கர்ப்பிணியான சீதையின் கண்ணைக் கட்டி காட்டில் கொண்டு போய் விட்டு விடச் சொல்கிறான். இதிலிருந்து இராமன் ஒரு அய்யப் பேர்வழி, சொந்தப் புத்தியில்லாது ஊரார் பேச்சைக் கேட்கும் சந்தேகி என்பது தெரிகிறதல்லவா?
சீதையின் பரிதாப மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று இந்துமக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறார்கள். காட்டுக்குத் தனித்து துரத்தப்பட்ட கர்ப்பவதியான சீதை, இரட்டை ஆண் குழந்தைகளைப் (இலவ , குசா) பெற்று, வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பிய இராமனது செயலை சில ஆத்தீகர்களே ஒப்பவில்லை. அதில் ஒருவர் இராசகோபாலச்சாரியார். “உத்திர இராமசரிதம்” என்னும் தலைப்பில், சமஸ்கிருதத்தில் பவபூதி என்பவர் எழுதி, க.சந்தானம் அய்யங்கார் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய நூலை சென்னை அலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்நூலுக்கு இராசாசி முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். அந்த முன்னுரையைப் படிப்பவர்கள் இராசசியா இப்படி எழுதியுள்ளார்? இருக்காதே! நம்ப முடியாது! என்பார்கள். ஆனால் சாட்சாத் இராசாசிதான் எழுதியள்ளார். அது இதோ!
“நாரதர் சொல்லி வால்மீகி இயற்றினார்; இதில் ஒரு விதத் தவறும் இருக்கமுடியாது; ஓர் எழுத்து விடாமல் எல்லாம் ஒப்புக் கொண்டே தீர வேண்டும் என்பதாயிருந்தால் எனக்கு ஒன்றும் சொல்ல இட மில்லை. அப்படியில்லை; உனக்குத் தோன்றியதைத் தோன்றியவாறு சொல்லலாம்; குற்றமில்லை என்று பெரியோர் இடம் கொடுத்தால் இராமாயண உத்திர காண்டத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன் – சிறீராமன் உலகத்துக்கு வழிகாட்ட அவதரித்த கடவுள் – சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டபின் ஊராரின் வம்புப் பேச்சைக் கேட்டுக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்கிற கொடூரக்கதையை என் மனசுக்குச் சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அன்புடனும், பக்தியுடனும் முயற்சி செய்திருக்கிறேன். பெரியோர்கள் என்னை நாஸ்திகன் – சூனா மானாக் காரன் என்று சொல்லக் கூடாது. உண்மையில் இந்தக் கதையைச் சகிக்க என்னால் முடியவில்லை. நாஸ்தி கனாக இருந்தால் ஒரு வேளை சகித்தி ருப்பேன்.
ஊர் வம்புக்குப் பயந்து இராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது இராவணன் செய்த செயலை விடப் பெரும் பாவச்செயல். இராவணன் காமவெறி கொண்டவனானாலும் இலங்கையில் சீதையை பலாத்காரம் செய்ய எண்ணவில்லை. அசோக வனத்தில் தடுத்து வைத்து அவள் அன்பைப் பெற பல நாட்கள் முயற்சி செய்தான். அவ்வளவுதான்முயன்று, பலநாட்கள் தன் வெறியை அடக்கியே வந்தான்; அதற்காக உயிரையும் நீத்தான்.
மேலும் இராசாசி கூறும்போது, “இராமன் என்கிற வெள்ளைத் துணியிலே விழுந்த கரும் புள்ளி”, என்று வாலி வதத்தை விமர்சித்திருக்கிறார். இராமன் கடவுள் என்றால் அவனுக்கு ஒரு பெரிய சக்தி இருக்கும். ஆனால், தன் மனைவியே எங்கே இருக்கிறாள் என்று கூட தெரிந்துகொள்ள கூட சக்தி இல்லாமல் ஒரு கடவுள் இருக்க முடியும் என்று நம்பினால் இராமன் இருந்தான் என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும்!
ஆனால் இந்துக்கள் இராமனும் சீதையும் இல்லறம் என்ற நல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாகக் கருதித் தொழுது வருகிறார்கள். அதற்கு கம்பன் கழகத்து கம்பவாரிதிகள் உடந்தையாக இருந்து வருகின்றார்கள்! இந்த 21 ஆம் நூற்றாண்டில் மக்களுக்கும் சொல்கிறார்கள்.
கம்பர் வாழ்ந்த காலத்தில் அரசனாக ஆட்சிபுரிந்த சோழ மன்னன் கம்பரை ஆதரிக்கவில்லை. இராமசரிதம் சோழப் பேரரசரின் ஆதரவு இல்லாமல், சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அதன் அரங்கேற்றம் சோழனின் அரச அவையில் அல்லாமல் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருவரங்கம் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது.
சங்க இலக்கியம் பலவற்றில் இராமர், இராவணன் பற்றி நிறையக் குறிப்புகள் உண்டு. சோழர்களைப் பற்றி சங்க இலக்கியத்தில் எங்கு குறிப்புகள் வந்தாலும் அந்த குறிப்புகள் இராமரின் முன்னோர்களும் சோழர்களின் முன்னோரும் ஒரே வம்சம்தான் என விளக்குவார்கள்.
இராமாயணம் தீட்டப்பட்ட காலம், இந்தப் பரந்த பூபாகத்திலே இருவேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல், நாட்டுநிலை அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை. திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமிலை. நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோ மில்லை . ஏனெனில், இது மறைக்க முடியாத உண்மையாகிவிட்டது.
திராவிடம் – ஆரியம் எனும் இருவேறு பண்பாடுகள் இருந்தன, கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்துவிட்டது என்று புன்முறுவலுடன் கூறுவர். மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என எடுத்துரைக்காது. அவர்கள் மனங்களில் உண்மை என எடுத்துரைத்தார்கள். இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
பல வகையான இராமயணங்களில் பல வகையான இராவணன்களுண்டு. இருபத்துநான்கு விதமான இராமாயணங்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதாக சி.ஆர்.சீனி வாசய்யங்கார் `இதர இராமாயணங்கள்` என்ற நூலில் கூறியுள்ளார்.
இராமாயணத்தில் வரும் அரக்கர்கள் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையாது!
இராமாயணம் உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகள் வைப்பதும் தென்னாட்டு மாந்தரில் சிலரை குரங்குகளாக சித்தரிப்பதும் கற்பனைக் கதையாக இருப்பினும் அது திராவிடர்களை இழிவு படுத்துவதாகவே உள்ளது.
புராணங்களும் இதிகாசங்களும் மன்னர்கள் தம் மனைவியரை மூன்றாம் தரப் பிறவியாய் நடத்தியதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன.
1. இராமன் சீதையின் கற்பை சந்தேகித்து அக்கினி பரீட்சை நடத்தியது. மீண்டும் அயோத்திக்கு வந்த பின்னர் ஊரார் பேச்சைக் கேட்டு நிறை கர்ப்பிணியான சீதையை காட்டுக்குத் துரத்தியது.
2. அரிச்சந்திரன் மனைவியைத் தெருவினில் விற்றது.
3. நள்ளிரவில் நளன் மனைவியை விட்டுச் சென்றது.
4. பாண்டவர் தம்மைத் தோற்ற பின்னர் திரவுபதியை சூதாட்டத்தில் வைத்துத் தோற்றது.
5. துச்சாதனன் பெண் என்றும் பாராமல் சபையில் திரவுபதியின் துகிலை உருவியது.
6. இராமனின் தந்தை தசரதன் ஆயிரம் மனைவியரை மணம் செய்திருந்தான்.
இராமாயணம் ஒரு இதிகாசம். அதாவது கட்டுக்கதை. கதை மாந்தர்களில் சிலர்- இராமர், இராவணன் – வரலாற்று மாந்தர்களாக இருந்திருக்கக் கூடும்.
இராமனும், இராவணனும் இராமாயணக் கட்டுக் கதையின் கதாபாத்திரங்களே என்றாலும், ஆரிய – திராவிடப் போரின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆரிய உயர்வுக்கு இராமனையும், தென்னிந்திய மக்களை குறிக்கும் திராவிட இனத்தை கொச்சைப்படுத்த இராவணனையும் பயன்படுத்திய பார்ப்பனியத்தினால் இந்த கட்டுக்கதை இன்று இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பற்றிப் படர்ந்துள்ளது. இராமனை கடவுளாக, புனிதனாக மாற்றியதோடு மட்டுமல்ல, வெறி பரப்பும் ஆயுதமாகவும் சங்பரிவார சக்திகள் பயன் படுத்துகிறார்கள்.
இராமன் தெய்வமாக்கப்பட்டான்; இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்கனாக்கப்பட்டான். நோக்கம், இராமனைத் தேவனாக்க வேண்டும் என்பது. அதற்கேற்றபடி கதை புனைந்தார்.
தமிழகத்திலம் சரி தாயகத்திலும் சரி இராமனுக்குக் கோவில்கள் இல்லை.
இராமரை எங்குமே வால்மீகி விஷ்ணுவின் அவதாரம் எனக் குறிப்பிடவே இல்லை. மூதறிஞர் இராசாசி அவர்கள் ஆங்கிலத்தில், தமிழில் எழுதிய இராமாயணம் ‘சக்ரவர்த்தி திருமகன்’ நூலில், இதைத் தெளிவாகக் குறிப்பிடுள்ளார்.
வால்மீயீன் மூலநூல் இராமகாதை பின்னால், பலரால், பலமுறை ஒரு சிலரின் வசதிக்காக மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் ஆனது. பனை ஓலையில் வால்மீகி எழுதிய இராமாயணதில் பல இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மாமேதை இராசாசி கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை 9 ம் நூற்றாண்டில் முதன் முதலில் தமிழில் எழுதியவர் கம்பன். கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை மாற்றியுள்ளதாக இராசாசி கூறுகிறார்.
இராமரை வைத்துச் சாமானிய மக்களை ஏமாற்ற, அவரை விஷ்ணுவின் அவதாரம் என பிற்காலத்தில் ‘கதை’ விட்டு, இராமரை அவதார புருஷன்/ கடவுள் ஆக்கி, கல்லா கடிய கூட்டம், இன்னமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வால்மிகி எழுதிய இராமாயணத்திலிருந்து தற்போழுது உள்ள இராமாயணம் வரை பல இடைச்செருகல்கள் கொண்டது என பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இராமாயணத்தில் உள்ள முதல் காண்டமான பாலகாண்டமும் (அதாவது அவர் பிறந்தது அயோத்தியில்) இறுதிக் காண்டமான உத்திரகாண்டமும் இடையில் புகுத்தப்பட்டது எனச் சில இராமாயண வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதில் வால்மிகி முனிவர், இராமரை இளவரசர் என்றே கூறிப்பிடுகின்றார் எங்கும் கடவுள் அவதாரமாக குறிப்பிடவில்லை.
இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்!(3)
நக்கீரன்
இராவணன் என்பது தமிழ் சமூகத்தின் வீரத்தின் குறியீடு, பண்பாட்டின் முகவரி. ஆநிரை கவர்தலும், பெண்களைச் சிறைப்படுத்தலும் அக்காலத்தின் போர் நெறியாகவே இருந்தது. அவர்களின் கதைப்படியே, தென்னாட்டு அரசனாக இருந்து சீதையை சிறையெடுத்து வந்திருந்தாலும், ஆரியத்தின் மாயாசாலக் கதைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தங்கையின் மூக்கை அறுத்தவன் வந்து மன்னிப்பு கேட்கும் வரை சீதைக்கு எந்த களங்கமும் நேராமல் பார்த்துக் கொண்ட தமிழ் மரபினன் இராவணன். தமிழ்மரபின் முன்னோடியான இராவணனிடம் இருந்து தமிழரின் அறத்தையே உணர முடியும்.
இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இராமேசுவரம், தனுசுகோடி, இலங்கை வேந்தன் என்பனவெல்லாம் என்னவாயிற்று என சிலர் எதிர்க்கேள்வி கேட்கவும் கூடும். இந்தக் கேள்விக்கான பதில், அவையெல்லாம் கம்பரின் இடைச்செருகல்களே தவிர அவை எதுவுமே வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
இராமயணம் என்பது ஒரு வரலாறு அன்று. மாறாக, அது ஒரு புராணக் கதையே. எனவே அதில் இடம்பெறும் கதை மாந்தர்களையும் உண்மையில் வாழ்ந்த வரலாற்று மனிதர்களாகக் கொள்ள முடியாது. அதனால்தான்,
கடலினைத் தாண்டும் குரங்கும்–வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்ததனாலே–தெற்கில்
வந்து சமன்செய்யும் குட்டை முனியும்
நதியி னுள்ளேமுழு கிப்போய்–அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த–திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்–ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்–அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும்–அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி–நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
எனப் பாரதியார் பாடியிருக்கிறார். பாரதியார் கடவுள் மறுப்பாளர் அல்லர்.
கம்பவாரிதி ஜெயராச் ஒரு கிணற்றுத் தவளை. அவரது உலகம் குறுகியது. இராமன், கம்பன், அவன் எழுதிய இராமாயணம் இவைதான் அவரது உலகம். இதனால் திருவள்ளுவரையும், திருக்குறளையும் தாழ்த்திப் பேசவும் அவர் பின்நிற்பதில்லை. ஆனால் பேசும்போது மட்டும் ஒருவனை உயர்த்திப் பேசுவதற்காக இன்னொருவரை தாழ்த்திப் பேசக் கூடாது என ஊருக்கு உபதேசம் சொல்கிறார்.
மேலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல கம்பன் கழகங்கள் ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி எங்கும் பரந்து கிடக்கின்றவனாம். ஆனால் திருக்குறள் கழகங்கள் மிகக் குறைவாம். அவையும் சரியாக இயங்குவதில்லையாம். கம்பவாரிதியின் இராம பக்தி அவரது கண்களை மறைப்பதற்கு இவை நல்ல எடுத்துக்காட்டு.
திருவள்ளுவரும் திருக்குறளும் இன்று தமிழ்நாட்டில் ஏற்றிப் போற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய மட்டத்திலும் திருவள்ளுவரும் திருக்குறளும் புகழப்படுகிறது. முக்கடல் சங்கமிக்கும்
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 1330 அடிகள் உயரம் கொண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவள்ளுவருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருக்குறள், அரசு அலுவலகங்களில் திருக்குறள் என பல்வேறு வடிவங்களில் திருக்குறள் பரப்பப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிகளில் திருக்குறள் ஒரு கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் திருக்குறள்கள் விளக்கத்துடன் சேர்க்கப்பட்டு, தேர்வு வினாக்களாகவும் இடம்பெறுகின்றன. இந்த நடவடிக்கை நல்லொழுக்கத்தை வளர்க்கும் ஒரு முயற்சியாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளைபாராட்டியுள்ளது. தனியார் பள்ளிகளிலும் திருக்குறள் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின், தமிழ்நாட்டு மக்களின் அடையாளமாக திகழும் திருக்குறள், இன்று தேசம் முழுவதும் தேசத்தைக் கடந்தும் பயணிக்கிறது.
தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தி வருகிறது. திருவள்ளுவர் நினைவாக பரிசுகள் அளித்து வருகிறது. “தீராக்காதல் திருக்குறள்” திட்டத்திற்குத் தமிழக அரசு ஒருகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருக்குறளை பல்வேறு வகைகளில் இளம் சமூகத்திடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே 1330 திருக்குறளை மனப்பாடம் செய்தவர்களுக்கு பரிசுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் “குறளோவியம்” என்கிற தலைப்பில் திருக்குறளை மையமாக வைத்து ஓவியப்போட்டியை நடத்தினார்கள். தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த ஓவியப் போட்டியை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு நித்தியானந்தபாரதி திருக்குறளையும் திருவள்ளுவரையும் இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணியைக் கடந்த 17 ஆண்டுகளாக செய்து வருகிறார். 2002 முதல் தொடர்ந்து 700 வாரமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார். பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், பெரியவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் இந்த வகுப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்கின்றனர்.
திருக்குறள் உலகப் பொதுவான அறநூலாகும். இதில் உள்ள அறக்கருத்துக்கள் எந்த ஒரு மதத்திற்கும், இனத்திற்கும், மொழிக்கும் பொதுவானவை. இதனால் அது பொதுமறை எனப் போற்றப்படுகிறது. திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் தலையாய படைப்புகளில் ஒன்று என்றும், மனிதனின் நெறிமுறைகள், அரசியல், பொருளாதாரம், காதல் போன்ற அனைத்துத் தத்துவங்களையும் உள்ளடக்கிய ஒரு நூல் என்றும் கருதப்படுகிறது. திருக்குறள், உலக மக்களுக்கு வழிகாட்டும் நூலாகப் போற்றப்படுகிறது. உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
திருக்குறளுக்கு அளிக்கப்படும் இத்தனை சிறப்புகளில் ஒரு விழுக்காடு தன்னும் கம்பராமாயணத்துக்கு இல்லை. கம்பராமாயணம் உயர்குடிப் பிறந்த சிலரால் மட்டும் போற்றப்படுகிறது. குறிப்பாக கம்பனின் கவிதை நயம், தேர்ந்த சொல்லாட்சி, எதுகை, மோனை, இனிய ஓசை நயம், வளமான கற்பனைத் திறன், மற்றும் சூழலுக்கேற்ற கவிதை நடைகள் போற்றப்படுகிறது. அவ்வளவுதான். இராமன் கடவுள் அவதாரம் என வர்ணிக்கப்பட்டாலும் அவனது செய்கைகள் – நடத்தைககள் – சராசரி மனிதனைவிடக் கேவலமாகக் கருதப்படுகிறது. ஒருமுறையல்ல இருமுறை சீதை தனது கற்பை எண்பிக்க தீக்குளித்து வா எனக் கட்டளையிடுகிறான். சீதைக்கு அக்கினிக் குண்டம் வெட்டிய இராமன் தனது கற்பை எண்பிக்க இன்னொரு அக்கினிக் குண்டத்தை வெட்டி அதில் விழுந்து எழுந்து வந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம்.அதுதான் நீதி. ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.
கம்பவாரிதி இராமனைக் கொண்டாடுவதோடு நிற்கவில்லை. ஆரிய அடிமையான அவர் இராவணனை தமிழ்மக்கள் போற்றக் கூடாது என்கிறார். ஆனால் சைவ நாயன்மார்கள் அப்படி நினைக்கவில்லை. சம்பந்தர் திருநூற்றின் பெருமை பற்றிப் பாடும் போது “இராவணன் மேலது நீறு” என்கிறார். திருநூற்றுக்கு உள்ள பெருமையே அது இராவணன் மேனியில் இருப்பதுதான் என்கிறார்.
மாணிக்கவாசகர் மேலும் பல படி சென்று –
“ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்”
என்று தனது குயில் பத்தில் போற்றி பாடுகிறார். சீதையை விட வண்டோதரி பேரழகி. மயனின் மகள். இலங்கைக்குச் சென்ற அனுமன் இவளைப் பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறானாம்!
இவையெல்லாம் கம்பவாரிதி அறியாதது அல்ல. ஆனால் அவரது இராமபக்கி என்ற பித்தம் தலைக்கேறி அவரது அறிவுக் கண்ணை மறைக்கிறது. கம்பவாரிதி இராமாயணத்தையும், கம்பனையும், இராமனையும் உச்சிமீது வைத்து மெச்சட்டும். ஆனால் திருக்குறளைத் தாழ்த்திப் பேசக் கூடாது. இராமனைப் போற்றட்டும். ஆனால் சுத்த வீரனான இராவணனைத் தூற்றக் கூடாது. இராவணன் இலங்காபுரியை ஆண்ட தமிழ் வேந்தன் என்பதும் ஆரியர்களால் அவன் அரக்கன் என்றும், கொடியவன் என்றும் சித்தரிகப் பட்டவன்.
இராவணன், தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்களில் அழைக்கப்பெறுகிறான். கேட்பார் இல்லாததால் கொடுப்பாரும் இல்லாத நாட்டை ஆண்டவன். அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கை கல்விகேள்விகளாலும், கலைகளாலும் ஓங்கி இருந்தது. நாட்டில் சிறந்திருந்த வளங்களால் செல்வம் நிறைந்திருந்தது. அதே நேரம் இராமராச்சியம் என்பது செருப்பு ஆண்ட இராச்சியம்.
இராமாயணம் பற்றி மறைமலை அடிகள் பின்வருமாறு கூறுகிறார்.
ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்றென்றாலும் அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்ததென்றாலும், ஒருவன் பத்துத் தலைகளும், இருபது கைகளும் உடையவனாயிருந்தானென்றாலும், மற்றொருவன் இரண்டாயிரம் கைகள் உடையவனாயிருந்தா னென்றாலும், ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றதால் அவன் இருந்த நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றாலும், ஒருவன் தன் கையிலிருந்த வட்டத்தைச் சுற்றி எறிந்து பகலவனை மறைத்தான் என்றாலும் இன்னும் இவை போல்வன… பிறவும் எல்லாம் உலக இயற்கையில் எவரும் எங்கும் காணாதவையாகும். ஆகையால் இன்னோரன்ன பொருந்தாப் புனைவுரைகளை ஒரு கதையிலாதல் ஒரு நாடகத்திலாதல் இயைந்துரைத்தல் நல்லிசைப் புலமைக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது. ஏனென்றால் இயற்கைக்கு மாறுபட்ட கட்டுக் கதைகளைக் கூறும் நூல்களைப் பகுத்தறிவுடையவர் கற்பாராயின் அவர்க்கு அவை இன்பம் பயவாவாய் வெறுப்பினையே விளைவிக்கும். (இராமாயண உண்மை: இராமாயணம் பற்றி மறைமலை அடிகள்)
தேவியைப் பிரிந்த பின்னர்
திகைத்தனை போலும் செய்கை”
என்ற வரியில் மனைவியைப் பிரிந்த இராமன் மதிகெட்டுப் போனான் என்று கம்பன் இரக்கமுறுகிறான். மதிமயக்கத்தால், மனப்பிறழ்ச்சியால் ஒருவன் செய்யும் செயல் குற்றத்தில் சேராது என கவியரசு வைரமுத்து பேசினார் என்பதற்காக அவர் மீது பாய்ந்து பிராண்டும் கம்பவாரிதி இராமன் கடைசிக் காலத்தில் மதிகெட்டு, பயித்தியம் பிடித்து அயோத்தியில் உள்ள சராயு நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டான் என்பதையிட்டு என்ன சொல்கிறார்கள்? என்ன நினைக்கிறார்? நீரில் விழுந்து இறப்பதற்கு முன்பு கடவுளை நோக்கி தியானம் செய்தான் என்று சொல்கிறது வால்மீகி இராமாயணம்.
இராமனின் முடிவு அவன் பரந்தாமனின் ஏழாவது அவதாரம் என்பதைக் காட்டுகிறதா? இந்தக் கேள்விக்கு கம்பவாரிதியின் பதில் என்ன?
டாக்டர் அம்பேத்கார் இராமாயணக் கதை பற்றி நீண்ட ஆராய்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றைப் படிக்கவும். (இராமாயண உண்மை: இராமன் ‘கடவுள்’ அவதாரமா? பேரறிஞர் அம்பேத்கரின் கருத்து)
Leave a Reply
You must be logged in to post a comment.