Megala Ramamurthi
இல்வாழ்வுக்கு நல்வழிகாட்டும் தொல்காப்பியம்
***********************************************************
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” (குறள். 49) என்றார் நல்லறிஞரான வள்ளுவர். அதாவது, அறம் என்று போற்றப்படுவது இல்வாழ்க்கையே என்பது இதன் பொருள். ஆனால் கணவன்மீது மனைவியும், மனைவிமீது கணவனும் வைத்திருக்கும் நம்பிக்கைகளும் நல்லெண்ணங்களும் தகர்ந்து நொறுங்கும்போது, அது மணமுறிவுக்கு வழிவகுத்து இல்லறத்துக்கு ‘எண்டு கார்டு’ போட்டுவிடுகிறது. ![]()

கணவனும் மனைவியும் சொந்தக் காரணங்களுக்காக மணமுறிவு செய்துகொண்டு பிரியும்போது அவர்களுடைய குழந்தைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்; பாதுகாப்பின்மை குறித்த அச்சம் (fear of insecurity) அவர்களைச் சூழ்கின்றது என்கிறார்கள் உளவியலாளர்கள். அதனால்தான் மணமுறிவு எனும் முடிவு, இனி ஒருவர் மற்றவரோடு சேர்ந்து வாழவே முடியாது எனும் நிலையில் கணவனோ மனைவியோ எடுக்கும் இறுதி முடிவாக (a last resort) இருக்கவேண்டும்; குடும்பம், குழந்தைகள் என்றானபின்பு தன்னலத்தோடு சிந்திப்பது நன்மை பயக்காது.
கணவனும் மனைவியும் இணைந்து நடத்தும் இல்லறம் என்றும் இனித்திடும் நல்லறமாகத் திகழ்வதற்கு அவர்கள் தவிர்க்கவேண்டிய குணங்கள் (undesirable qualities) எவை என்பது பற்றி வாழ்வியல் அறிஞரான தொல்காப்பியர் தம் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார்; அவற்றை அறிந்துகொள்வது இல்லறத்தில் இருக்கும் அனைவருக்குமே நலம் பயக்கும்; அறிந்துகொள்வோமா?
“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை
என்றிவை யின்மை என்மனார் புலவர்.” (தொல். பொருள், மெய்ப்பாட்டியல் – 272)
1. நிம்பிரி: நிம்பிரி என்பது பொறாமை / அழுக்காறு (Jealousy or Envy). நமக்குத் தொடர்பில்லாத பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவதே தவறு. அப்படியிருக்க, கணவன் மனைவியருக்குள் இது ஏற்பட்டால் — ஒருவரின் வளர்ச்சியையும் புகழையும் கண்டு மற்றவர் புழுங்கினால் — அந்த இல்லறம் சிறக்குமா? நிச்சயம் சிறக்காது. எனவே, அழுக்காறு வீட்டினுள் ஓடவேண்டாமே!
2. கொடுமை: கொடுமை என்பதற்குக் “கேடு சூழ நினையும் தீவினை உள்ளம்” என்று உரைவகுத்தார் பேராசிரியர். அதாவது, பிறருக்குத் தீங்கு செய்யத் தயங்காத கொடிய உள்ளம் (cruel disposition). இத்தகைய உள்ளம் கணவன் மனைவியருக்குள் ஏற்பட்டால் என்னாவது? கணவனிடம் தவறு கண்டபோது மனைவி சோற்றில் விஷம் வைத்து கணவனைப் போட்டுத் தள்ளுவாள்; மனைவியிடம் தவறு கண்டபோது கணவன் அவள் கழுத்தைத் திருகுவான். ஐயோ… நினைத்தாலே குலை நடுங்குகிறதே! ![]()
3. வியப்பு: “வியப்பு ஒரு குத்தமாய்யா?” என்று கேட்டால், “அட… ஆமாய்யா!” என்கிறார் தொல்காப்பியர்.
இங்கே குறிப்பிடப்படும் வியப்பு, பிறரின் திறன்கண்டு நாம் கொள்ளும் வியப்பில்லை. நம்மை நாமே வியந்து பேசிக்கொள்வது (self-admiration). கணவனோ மனைவியோ அளவுக்கு அதிகமாகத் தம்மை வியந்து கர்வம் கொள்வது குடும்ப வாழ்வுக்குக் கேடு பயக்கும் என்கிறார் தொல்காப்பியர். “தன்னை வியந்தான் விரைந்து கெடும்” என்று வள்ளுவரும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறாரே! ![]()
4. புறமொழி: புறமொழி என்றால் கணவனைப் பற்றி மனைவியோ, மனைவியைப் பற்றிக் கணவனோ அடுத்தவரிடம் புறங்கூறுதல் / பழித்துப்பேசுதல் (Backbiting). கணவன் அல்லது மனைவியின் பண்புகள் சரியில்லை என்றால், அவை குறித்துத் தம்முடைய நலனில் உண்மையான (note this point) அக்கறை கொண்ட பெரியவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ அவர்கள் ஆலோசனை பெறலாமே தவிர, கண்டவர்களிடமும் ஒருவர் மற்றவரைத் தூற்றிக்கொண்டிருப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும். சம்பந்தமில்லாதவரிடம் வீட்டுக்காரர் / வீட்டம்மணி பற்றிக் குறைசொல்லி வேண்டாத புது வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டவர்கள் பலர் உண்டு. “இது தேவையா?” என்று உங்கள் ஆட்காட்டி விரலைக் கண்ணெதிரே வைத்து,
வடிவேலு ஸ்டைலில், நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்!
5. வன்சொல்: கடுஞ்சொல் (Harsh Word) பேசுவது என்பது கணவன் மனைவி உறவை மட்டுமன்று, எத்தகைய உறவையும் நட்பையும் முறிக்கக்கூடியது. வன்னெஞ்சம் உள்ளிருப்பதன் அடையாளம் வாயிலிருந்து வெளிப்படும் வன்சொல். தீயினால் சுட்ட புண்கூட ஆறிவிடும்; ஆனால் நாவினால் சுட்ட வடை… ஸாரி… வடு ஆறாது; அதன் வலி என்றும் மாறாது. கனி இருக்கக் காயைத் தேடியெடுப்பதுபோல், இனிய சொற்கள் இருக்க இன்னாத வன்சொற்களை ஏன் பேசவேண்டும்?
6. பொச்சாப்பு: பொச்சாப்பு என்பது கடமைகளைச் செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் இல்லாமல் சோர்ந்திருப்பது (Heedlessness and Lack of Commitment). தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர், பொச்சாப்பு என்பதற்குக் “கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல்” என்று விளக்கமளிக்கிறார். குடும்பப் பொறுப்போடு கடமையாற்ற வேண்டிய கணவனும் மனைவியும் கடமையில் அக்கறை கொள்ளாது சோர்ந்திருந்தால், குடும்ப வாழ்வு உருக்குலைந்து போய்விடாதா? எனவே, குடும்ப வாழ்வில் விருப்பமில்லாதவர்கள் — குடும்பக் கடமைகளை நினைத்துச் சோர்வு கொள்பவர்கள், திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது.
7. மடிமை: மடிமை என்பதற்கு “முயற்சியின்மை” என்று பொருள் தருகின்றார் இளம்பூரணர். அதற்கான எளிய பொருள் “சோம்பேறித்தனம்” (Laziness). “சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்” என்பது நாமறிந்த பழமொழிதானே? கணவனும் மனைவியும் இல்லறக் கடமைகள் செய்வதில் ஊக்கம் காட்டாது குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் அந்த வீடு எப்படி இருக்கும்? “இருண்ட வீடாகத்தான்” இருக்கும். ஊக்கமும் சுறுசுறுப்புமே வாழ்வின் வெற்றிக்கான படிக்கட்டுகள். ![]()
8. குடிமை இன்புறல்: தன் குடிப்பெருமையை நினைத்தும் பேசியும் இன்புறும் குணமிது (Taking Pride in One’s Family Lineage). மனைவி தன் பிறந்தவீட்டுப் பெருமையைக் கணவனிடமும் அவன் வீட்டாரிடமும் பேசி அவன் குடும்பத்தை மட்டம் தட்டுவதோ, கணவன் தன்வீட்டுப் பெருமையைச் சொல்லி மனைவியின் வீட்டாரை இழிவாகப் பேசுவதோ இரண்டுமே தவறு.
ஆணும் பெண்ணும் மண உறவில் இணைந்தபின்பு இரு குடும்பங்களையும் ஒன்றுபோலக் கருதி உயர்வாக மதித்தால்தான் அந்த இல்லறம் நல்லறமாகும். இந்த மனநிலை இன்மையால்தான் பல குடும்பங்களில் சச்சரவு எனும் நச்சரவு
தலையெடுக்கின்றது.
9. ஏழைமை: ஏழைமை என்பது பணத்தில் ஏற்படும் வறுமையை இங்கே குறிக்கவில்லை; அறிவில் ஏற்படும் வறுமையைக் குறிக்கின்றது; அதாவது…அறிவற்ற பேதையராக இருப்பது (Lack of Wisdom). கணவனோ மனைவியோ இருவரில் யாருக்குப் புத்திசாலித்தனம் குறைவாக இருந்தாலும் அது குடும்பத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும். பொருளைப் பாதுகாக்கும் அறிவின்மையால் தம் முன்னோர் தேடிவைத்த செல்வம் அனைத்தையும் தோற்றுவிட்டுத் துன்புறும் இணையர் உண்டு. அதேசமயம், தம் சாமர்த்தியத்தால் ஆறை நூறாக்கும் இணையரும் இருக்கின்றார்கள். இதில் நாம் எந்த வகை என்பதைத் தீர்மானிப்பது நம் அறிவே.
10. மறப்பு: மறப்பு என்பது கற்றது, கேட்டது, பயின்றது என அனைத்தையும் மறந்துவிடுதல் (Forgetfulness). சிலருக்கு எதுவும் நினைவில் தங்காது; “தர்மத்தின் தலைவன்” இரஜினி மாதிரி உடனே மறந்துவிடுவார்கள். குடும்ப வாழ்வில் இருக்கும் கணவனும் மனைவியும் மறதியில் மன்னனும் மன்னியுமாக இருந்தால் குடும்ப ஆட்சியை மாட்சியோடு நடத்துவது கடினம். கெட்டவற்றை மறந்துவிடுதல் நன்று. ஆனால் நல்லனவற்றையும் ஆற்றவேண்டிய கடமைகளையும் சேர்த்தே மறத்தல் நன்றன்று!
11. ஒப்புமை: மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய பண்பு இது (Comparison). கணவன் தன் மனைவியை, த்ரிஷாவோடு ஒப்பிட்டு, “இவளும் இருக்கிறாளே, பூசணிக்காய் மாதிரி!” என்று வருத்தப்படுவது;
மனைவி, “அரவிந்த்சாமி மாதிரி ஆணழகனாக இல்லாமல் கரிக்கட்டைபோல் இருக்கிறானே எனக்கு வாய்த்தவன்!” என்று மூக்கைச் சிந்திப்போடுவது
இப்படி ஒருவரையொருவர் மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மணவாழ்வில் நிம்மதி தொலைந்துவிடும்.
படிப்பு, அந்தஸ்து, அழகு, நிறம், உயரம், உருவப் பொருத்தம் போன்றவையெல்லாம் திருமணத்திற்கு முன்பு பார்க்கவேண்டியவை. அப்போது “சரி”யென்று சொல்லித் திருமணம் செய்துகொண்டு, பிறகு குறைகாண்பது பெருந்தவறு, ப்ரோ!
மக்களே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் குறிப்பிட்ட இந்தத் தீயகுணங்களே இன்றும் இணையர் பலரின் இனிய மணவாழ்வு முறிந்துபோவதற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன என்பதை எண்ணும்போது, அப்பேரறிஞரின் காலத்தை வென்றுநிற்கும் நுண்மாண் நுழைபுலத்தை (timeless insight) வியக்காமல் இருக்கமுடியவில்லை. ![]()
கணவனும் மனைவியும் இயன்றவரை இத்தீயகுணங்களை விலக்கித் தூய உள்ளத்தினராய் வாழ்ந்தால் அவர்களின் இல்லறம் சிறக்கும். “நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்” என்பதற்குச் சான்றாய் அக்குடும்பம் விளங்கும். ![]()
~மேகலா இராமமூர்த்தி

Leave a Reply
You must be logged in to post a comment.