இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?
திரு.கி.வீரமணி
ஆசிரியர்
விடுதலை.
“இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? என்று கேள்விக் குறி போட்டு செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள் அதன் பொருள் என்ன?
இலங்கையில் நடப்பது காட்டாட்சியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்பதுதானே பொருள்!
உங்களுக்கு இதில் அய்யம் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. நீங்கள் விழுந்து விழுந்து ஆதரிக்கும் திமுக – காங்கிரஸ் அரசுதானே
மகிந்த இராசபக்சேயை பொதுநல நாடுகளது விளையாட்டுப் போட்டிக்கு செங்கம்பளம் விரித்து சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது?
இப்போது அதே மத்திய அரசிடம் “மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்” என்று நீங்கள் அறிக்கை விடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?
தமிழீழத்தின் தாய் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டுக்கு மருத்துவம் பார்க்க வந்த போது இதே மத்திய அரசுதானே வானூர்த்தியில் இருந்து இறங்கவிடாமல் 80 அகவை மூதாட்டியை திருப்பி அனுப்பியது நீங்கள் சொல்லும் பாசீசம் இல்லையா? பின்னர் தமிழினத் தலைவர் என்று நீங்கள் உச்சி மேல் வைத்துக் கொண்டாடும் தமிழினத் தலைவர் கருணாநிதி அவர் இந்தியாவுக்குள் நுழைய ஏகப்பட்ட நிபந்தனை விதித்தாரே? அது உங்களுக்கு பாசீசமாகப் படவில்லையா? பார்வதி அம்மாளை வைத்து வைகோவும் நெடுமாறனும் அரசியல் செய்து விடுவார்கள் என்றுதானே
உங்களிடம் முதல்வர் கருணாநிதி சொன்னார்? அதனைக் கேட்டு நீங்கள் வாய் மூடி மவுனமாகத்தானே இருந்தீர்கள்? பின் ஏன் இப்போது திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டதும்
வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள்? அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்திரண்டு கருக்கரிவாள் எதற்கு?
உண்மை என்னவென்றால் உங்களை மத்திய அரசு ஒரு செல்லாக் காசுக்கும் மதிப்பதில்லை. குறிப்பாக அன்னை சோனியா ( அந்தோனியோ மொய்னோ) தியாகத் திருவிளக்கு (விளக்கு மாற்றுக்கு பட்டுக் குஞ்சம்) சொக்கத் தங்கம் (பித்தளை) மதிப்பதில்லை. உங்களை எல்லாம் கக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சோனியா தமிழின அழிப்பில் ஈடுபட்ட மகிந்த இராசபக்சேக்கு ஆயுதங்களும், போர்க்கப்பல்களும், பயிற்சியும் புலனாய்வும் நிதியும் கொடுத்து உதவினார்! முதல்வர் கருணாநிதியிடம் ஒரு துளி மானம் இருந்தால் இப்படி நடந்திருக்குமா?
ஈழத்தமிழர்களுக்கு இரண்டுமுறை ஆட்சியை இழந்திருக்கிறேன் மூன்றாவது முறையும் இழக்க நான் தயாரில்லை என முதல்வர் கருணாநிதி கூறினார். அதுவென்ன ஒருமுறை, இருமுறை என்ற கணக்கு?
உயிரினும் மானம் சிறந்தது. மானம் இழந்தால் உயிர் வாழலாம் உயிர் இழந்தால் மானத்தைக் காக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டபோது உயிரைக் கொடுத்தேனும் மானத்தைக் காக்க வேண்டும். ‘மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே’ என்பது தமிழ்நெறி.
மானத்தின் பெருமையை வள்ளுவர் சிறந்த முறையில் எடுத்து விளக்கியுள்ளார். பெற்ற தாயும் உற்ற மனைவியும் அன்புக் குழந்தைகளும் பசியால் துடிக்கும்போது எத்தகைய இழி செயல் புரிந்தேனும் அவர்களைக் காக்கலாம் என்று அறநூல்கள் கூறும். ஆனால் தமிழ்ப் பண்பாட்டு முறையில் அறத்தை வலியுறுத்திய வள்ளுவப் பெருந்தகையாரோ,
“ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”
கணைக்கால் இரும்பொறைக்கும் பெருவேந்தன் கோச்செங்கணானுக்கும் இடையில் போர் மூண்டது. இரும்பொறை சிறை பிடிக்கப்பட்டான். சிறையில் காவலனை நோக்கிச் சிறிது நீர் கொணருமாறு பணித்தான். நெடுநேரமாகியும் அவன் நீர் கொண்டு வந்து தரவில்லை. கணைக்கால் இரும்பொறை மன்னன் என்ற நிலையில் இருந்த வரை அவன் ஏவிய பணிகளைச் செய்ய எண்ணற்றவர் காத்திருந்தனர். அவன் நா அசைந்தால் நாடே அசையும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது கேவலம் ஒரு சிறைக் காவலன் கூட அவனை அலட்சியமாகக் கருதினான். இதனை நினைத்து நெஞ்சு புழுங்கினான் இரும்பொறை.
சேர வேந்தன் இவ்வாறு சிந்தை நொந்து துடிக்கும் போது, வெந்த புண்ணில் வேல் நுழைத்தலைப் போல அச்சிறைக் காவலன் நீண்டநேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான்.
தனக்கு ஏற்பட்ட பேரவமானத்தை அவனால் தாங்கமுடியவில்லை. “ஆ! என்னே என் இழிநிலை! போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறத்தலே எம் போன்ற வேந்தர்க்கு அழகு! அங்ஙனம் இன்றி நோய் முதலியவற்றால் இறந்தாலும் அவர்களும் போர்க்களத்தில் இறந்ததற்கு அறிகுறியாக அவர்கள் உடலை வாளால் வெட்டி அடக்க ம் செய்வது மன்னர் குல மரபன்றோ? குழந்தை பிறந்து இறந்தாலும் உருவமற்ற மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றையும் வாளால் வெட்டி அடக்கம் செய்வதில் தவற மாட்டார்களே! அத்தகைய மன்னர் பரம்பரையில் என்னைப் போல இழிந்தவன் ஒருவன் பிறக்கலாமோ? போர்க்களத்தில் பகைவன் வாளால் பிளக்கப் படாமல் சிறைப்பட்டேனே! நாயைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவது போல இழுத்து வந்து இச்சிறையில் தள்ளித் துன்புறுத்தியும் நான் சாகாமல் வாழ்கிறேனே! உண்ணாமல் உயிர் விடத் துணிந்த நான் இந்த காவலனிடம் நீரை கேட்டிருகக் கூடாது என்ற மனவுறுதியில்லாமல் நீரைக் கேட்டு மானம் இழந்தேனே! இங்ஙனம் மானம் இழந்தும் நான் உயிர் வாழலாமோ?”
சேர மன்னன் சிறைக் காவலன் கொண்டு வந்து வைத்த நீரைப் பருகாமல் உயிர்விடத் துணிந்தான். தன் உள்ளக் குமுறலை அழகிய செந்தமிழ்ப் பாடலாக ஓர் ஓலையில் வடித்து வைத்தான்
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வலகத் தானே”
என்பதாகும். நெஞ்சம் உருக்கும் இப்பைந்தமிழ்ப் பாடலைப் பாடிய இரும்பொறை, மானம் இழந்து வாழ்ந்தான் என்பதை விடத் தன் மானத்தைக் காக்க உயிரையே துறந்தான் சேரன் என்று மாப்புகழ் பெறுவேன் சேரர் கு டியின் பெருமையை உயர்த்துவேன்’ என்று மகிழ்ச்சியோடு உயிர் துறந்தான்.
மாமன்னன் இரும்பொறை எங்கே மானமா ஆட்சியா என்று வந்த போது ஆட்சி என்று முடிவு செய்த கருணாநிதி எங்கே?
திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக தமிழ் உணர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?
” பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, அங்கே புகைப்படம் எடுத்து, அதை சுவரொட்டிகளாக தமிழகமெங்கும் ஒட்டி, அதை வைத்து சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்று திட்டமிட்டிருந்த தொல்.திருமாவளவனுக்கு, இது பெரும் பின்னடைவு என்று கருதப் படுகிறது. ஈழ ஆதரவாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழனின் மானத்தையும், தலித்துகளின் மானத்தையும், அந்தோனியோ மொய்னோவின் காலடியில் அடகு வைத்த திருமாவளவனுக்கு, தேசியத் தலைவரின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை, அவரை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பியது சரியே என்று தெரிவித்தனர்.” (தட்ஸ்தமிழ்)
தேர்தல் வருகிறது. கணக்குத் தீர்க்கும் காலமும் வருகிறது. பார்க்கலாம்!
நக்கீரன்
இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?
பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைத் தடுப்பதா?
துக்கம் விசாரிக்க அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தரவேண்டும்!
மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து, அனுமதி மறுத்து, வந்த விமானத்திலேயே அவரைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசைக் கண்டித்தும், துக்கம் விசாரிக்கச் செல்லுவதற்கு அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் இரண்டு நாள்களுக்குமுன் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் நேற்றிரவு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்று, அவர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவருக்கு இலங்கைச் சிங்கள இராஜபக்சே அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லுமாறு பிடிவாதம் காட்டி, சிங்கள அரசின்அதிகாரிகள் அவரை சென்னை திரும்பும்படிச் செய்துவிட்ட கொடுமையைக் கேட்டு உணர்ச்சியும், மனிதநேயமும் உள்ள நமது நெஞ்சங்கள் குமுறுகின்றன.
தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும்கூட (எம்.பி.).
இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?
ஏற்கெனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, இராசபக்சேவிடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் – அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்று திருப்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா? காரணத்தைக் கூறுங்கள் என்று பல முறை அவர் வற்புறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை.
அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை; துக்க நிகழ்ச்சி – மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது?
மத்திய அரசு பரிகாரம் தேட வேண்டும்
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.
தனிப்பட்ட தொல். திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானமோ, பின்னடைவோ அல்ல இது. இந்தியப் பேரரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்ற நிலைப்பாட்டுடன், கொதிப்புடன் மத்திய அரசின் வெளியுறவுத் துறை இதனை எண்ணிப் பரிகாரம் தேட வேண்டும்.
மீண்டும் அனுமதி தேவை!
ஏற்கெனவே பிரபாகரனின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்தபோது செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் மறுப்பதேன்? தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது – ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகி விட்டது!
மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Leave a Reply
You must be logged in to post a comment.