Pathmanathan Sathiyalingam is with பாலச்சந்திரன் சிந்துஜன்.

AI content

 · ·

2027 வரவு–செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள், காணி விடுவிப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு உரிய முன்னுரிமை இல்லை – சத்தியலிங்கம் எம்.பி. சுட்டிக்காட்டு…!

ஒரு நாட்டின் வரவு–செலவுத் திட்டம் என்பது வெறுமனே வருமானத்தையும் செலவினத்தையும் பட்டியலிடுகின்ற ஆவணம் அல்ல.

அது அந்த நாட்டின் அரசியல் முன்னுரிமைகளையும், பொருளாதாரக் கொள்கைகளையும், மக்களின் எதிர்காலம் குறித்த அரசாங்கத்தின் பார்வையையும் வெளிப்படுத்துகின்ற முக்கியமான அரச கொள்கை ஆவணமாகும்.

அந்த வகையில் அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள், குறிப்பாக, இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் முன்னுரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் ஜனாதிபதி அவர்களது உரையில், வரவு–செலவுத் திட்டத்தில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவோ, காணி பிணக்குகள் தொடர்பாகவோ, பொருளாதார மீட்சிக்கு உரிய முன்னுரிமை தொடர்பாகவோ எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கடந்த 17.11.2026 அன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார கொள்கைகளை பொறுத்தவரையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், உற்பத்தியை அதிகரித்தல், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்த்தல் உள்ளிட்ட முக்கிய பொருளாதாரக் கொள்கை இலக்குகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினூடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் மொத்த வருமானம் 6,180 பில்லியன் ரூபாவாகும். இதில் வரியல்லாத வருமானம் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட வருமானம் 493 பில்லியன் ரூபா மட்டுமே. இது மொத்த ஒதுக்கீட்டில் 7.9 வீதமாகும். எஞ்சிய 5,687 பில்லியன் ரூபா வரி வருமானமாகும். இது மொத்த ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 92 வீதமாகும்.

இதில் பெரும்பகுதி மறைமுக வரிகள் (Indirect Taxes) மூலமாகப் பெறப்படுகின்றன. அதாவது, மக்கள் தமது அன்றாட வழ்க்கைக்காக வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஊடாக இந்த வரிகள் அறவிடப்படுகின்றன.

மறைமுக வரிகளிலேயே அதிகம் தங்கியிருப்பதற்குப் பதிலாக, நேரடி வரிகளை (Direct Taxes) அதிகரிப்பதன் மூலம், குறிப்பாக அதிக வருமானம் ஈட்டும் வணிக மற்றும் பொருளாதாரத் தரப்பினரிடமிருந்து உரிய வரிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க முடியும்.

அந்த அடிப்படையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த நாட்டின் அரசியல் முன்னுரிமைகளை புறந்தள்ளிப் பயணிக்க முற்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

அவரது உரையிலே “வளமான நாடு, அழகான தேசம்” என்ற தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு வழங்கிய அரசியல் முன்னுரிமையுள்ள வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.

அந்த தேர்தல் அறிக்கையின் 194ம் மற்றும் 230ம் பக்கங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களை, மக்களுக்கு வழங்கிய தேர்தல் உறுதிமொழிகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2015-2019 காலப்பகுதியில் புதிய அரசியல் அமைப்பொன்றுக்கான வரைபை தயாரிப்பதற்காக கடைப்பிடித்த செயற்பாட்டினை துரிதமாக நிறைவு செய்து அரசியல் ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற, ஒவ்வோர் உள்ளூராட்சி நிறுவனத்திற்கும், மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை உறுதிசெய்கின்ற புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைகள் தேர்தலை ஒரு வருடத்திற்குள் நடத்தல், வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் படுகொலைகள், காணாமல் போகச்செய்வித்தல் மற்றும் ஆட்கடத்தல் பற்றி புலன்விசாரனை மேற்கொண்டு நீதியை நிலை

நாட்டல், அரசியல் கைதிகளை விடுதலை செய்து அவர்களை சமூகமயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தையும் அடக்குமுறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் இல்லாதொழித்து சுதந்திரத்தை உறுதிசெய்தல், காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவொன்றினூடாக பிரச்சினைக்கு தீர்வுகாணல், இனக்கட்டமைப்பை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை நிறுத்துதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2 வருட ஆட்சியில் உறுதிமொழிகளை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மேற்படி உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த எடுக்கவுள்ள நடவடிக்கைகள், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக எதுவுமே அவரது உரையில் குறிப்பிடப்படவில்லை.

காணாமல் போகச்செய்வித்தல் தொடர்பாகவும் மற்றும் ஆட்கடத்தல் பற்றியும் புலன்விசாரனை மேற்கொண்டு நீதியை நிலை நாட்டுவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்தீர்கள்.

ஆனால் இன்று “செம்மணி மனிதப்புதைகுழி” தொடர்பாக வரும் செய்திகளை பார்க்கும்போது ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவாறு நீதியை நிலைநாட்டி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதோடு மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் செயற்பாடு நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

எனவேதான் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்விடயத்திலே சர்வதேச விசாரனையை கோருகின்றனர், அவர்கள் உள்ளூர் விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

2027ம் ஆண்டுக்குரிய பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திற்கான ஒதுக்கீட்டை இரட்டித்திருக்கிறீர்கள். அந்த நிதியை பயன்படுத்தி சர்வதேச நியமங்களின் அடிப்படையில் வெளிப்படையான விசாரணையை நடத்தி நீதியை நிலைநாட்டப்பட வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவை வெளியிட்டார். இது அரசியல் யாப்பிற்கு முரணானது.

வைத்தியசாலைகளை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருமாறு மக்கள் கேட்பதாக தெரிவித்தார்.

ஒருசில அரசியல்வாதிகள் மன்னாரிலே தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தார்கள், அது எப்படி மக்கள் கோரிக்கையாக மாறியது?

ஜனாதிபதி அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளதென்றால், ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த வருமானம் போதாதென்ற காரணத்தை சொல்லி அக்குடும்பத்தை நான் நடத்துகிறேன் என்று கேட்பதை போலுள்ளதல்லவா?

அக்குடும்பத்திற்கு சொந்தக்காலில் நிற்க உதவி செய்வதுதானே நீதி!

மாகாணசபையிடம் நிதியில்லை என்ற காரணத்தை சொல்லி 13ம் திருத்தத்தில் வழங்கப்பட்ட சொற்ப அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை, அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கிலான செயற்பாடாகவே இதை பார்க்கிறேன்.

யுத்தம் முடிவடைது 17 ஆண்டுகளாகிவிட்டது.

யுத்தத்தினால் அழிந்த மாகாணத்தின் பொருளாதார மீட்சிக்காக என்ன நடவடிக்கை அரசாங்கங்களால் இதுவரை எடுக்கப்பட்டது?

மாகாணத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் சூழல் உருவாக்கப்பட்டதா?

முதலீட்டிற்கான காணியை பெறுவதிலிருந்து ஏனைய அனுமதிகளை உரிய காலத்தில் பெறக்கூடிய ஒழுங்குகள் உள்ளதா?

முதலிடவந்த ஒருசில முதலீட்டாளர்களும் அங்குமிங்கும் அலைந்து களைத்து இங்கிருந்து ஓடிவிட்டார்கள். இவ்வாறான அனுமதியை வழங்குபவர்களாக மத்திய அரச திணைக்களங்களே உள்ளன.

உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொண்டுவருவதற்கும் உற்பத்திப்பொருட்டகளை கொண்டுசெல்வதற்குமான துறைமுக மற்றும் விமான வழிப்பாதை மேம்படுத்தப்பட்டதா?

காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளை ஆரம்பிக்க இந்திய அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட 62.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பயன்படுத்துவதில் இழுத்தடிப்புச்செய்வது ஏன்?

வடக்கு மாகாணத்தில் இதுவரை தொழில் முயற்சியாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன?

இவ்வாறான நிலையில் மாகாணசபையில் நிதி இல்லை உங்கள் வைத்தியசாலைகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பதில் உள்நோக்கம் உள்ளது.

மக்களை பொறுத்தவரையில் தரமான சுகாதார சேவையை எதிபார்க்கிறார்கள், அதை நாம் மறுக்க முடியாது.

தரமான சேவையை பெற்றுக்கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை.

மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் இப்போதும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்பதை மறுக்க முடியுமா? அவ்வாறாயின் ஏன் உங்களால் இப்போதே வைத்தியசாலைகளில் சேவையை மேம்படுத்த முடியாது?

உங்கள் உள்நோக்கம் என்னவெனில் மாகாணங்களை பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வைத்திருந்தால், குறிப்பாக தன்னாட்சியை கோரும் மாகாணங்களை நலிவடைந்த பொருளாதாரத்துடன் வைத்திருந்தால், மக்களே அவ்வாறான தன்னாட்சித் தத்துவத்தை தூக்கியெறியும் நிலைக்கு வருவார்கள் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இந்நடவடிக்கையை பார்க்கிறேன்.

புதிய அரசியலமைப்பொன்று வரும்வரை தற்போதுள்ள மாகாணசபை முறைமை பாதுகாக்கப்படும் என்று 2024ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை சந்தித்தபின் கூறியதை ஜனாதிபதி அவர்கள் மறைத்துவிட்டதாகவே காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி உண்மையில் அனைத்து மக்களையும் சென்றடைகின்றதா?

குறிப்பாக, இந்தநாட்டிலே வாழும் குறைந்தவருமானம் பெறும் மக்களுக்கு அதிலும் குறிப்பாக பல தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு இந்த வரவு–செலவுத் திட்டம் எந்த அளவிற்கு நன்மைகளை வழங்குகின்றது?

அவர்கள் மற்றவர்களில் தங்கி வாழாமல் தமது சொந்தக்காலில் நின்று அன்றாட வாழ்க்கைச்செலவை எதிர்கொள்ளக்கூடிய நிலை உருவாகவேண்டும்.

அரச ஊழியர்களின் ஒருபகுதியினருக்கு சம்பள ஏற்றம் தொடர்பில் முன்மொழிவுகள் இருந்தாலும் அரச ஊழியர்கள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை.

2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், உற்பத்தியை அதிகரித்தல், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் -டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே,

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்தும், வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 13,000 குடும்பங்கள் இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை என்று வரவு–செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் குடும்பங்களை இரண்டு வருடங்களுக்குள் மீள்குடியேற்றுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால், இங்கு ஒரு முக்கியமான விடயத்தை அரசாங்கத்திடம் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மீள்குடியேற்றம் என்பது வெறுமனே ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பதோ அல்லது ஒரு குடும்பத்தை ஒரு இடத்தில் குடியமர்த்துவதோ அல்ல.

மக்களின் பூர்வீகக் காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தல்; குடிநீர், மின்சாரம், வீதிகள், பாடசாலைகள், மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்; வாழ்வாதார வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்றும் மக்கள் தமது பூர்வீக காணிகளை மீட்கமுடியாமல் திண்டாடுகிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது? மேலும் மேலும் அரச திணைக்களங்கள் மக்களின் காணிகளை அடாத்தாக பறிப்பதிலேயே குறியாகவுள்ளன. ஆகவே நீங்கள் குறிப்பிடும் மீள்குடியேற்றம் எவ்வாறு சாத்தியப்படும்?

கெளரவ அமைச்சர் லால்காந்த அவர்களின் உரையொன்றை அண்மையில் செவிமடுத்தேன். அவர் என்ன சொல்லுகிறார்?

“தங் தியன ஆண்டுவ அபே உனாட்ட தாம றஜே அபே வெலா நெவே”

இதன் அர்த்தம் என்ன? அரசாங்கத்தை நாங்கள் நடாத்தினாலும் அரச இயந்திரம் முழுமையாக எம்மிடம் இல்லை!

இக்கூற்று உண்மையாக இருக்கலாம், அப்படியானால் எப்போது அரச இயந்திரம் உங்கள் கட்டுப்பாட்டில் வரும்? இரண்டுவருட ஆட்சி முடிந்த பின்னரும் இப்படி சாட்டுப்போக்கு சொல்ல முடியுமா?

அரச நிர்வாகம் மக்களின் பூர்வீக நிலத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்க தயார்நிலையில் இல்லை என்ற கசப்பான உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரச மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் தொடர்பிலும் தெளிவான நடவடிக்கைகள் அவசியமாகும்.

நாம் விவாதிக்கும் வரவு செலவு திட்டத்திலே “கிவுல் ஓயா “திட்டத்தை நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எமது மக்களின் பூர்வீக வயல் நிலம், குடியிருப்பு பகுதிகள் நீரேந்து பிரதேசத்திற்குள் அமிழ்ந்துபோகும். அதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பல ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காடு அழிக்கப்படும், அதனால் மனித – யானை மோதல் தீவிரம் அடையும்.

இவ்வாறான காரணங்களை முன்வைத்து மக்கள் வீதியில் இறங்கி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து திட்டத்தை இடைநிறுத்தி மாற்று ஒழுங்குகள் தொடர்பாக ஆராயுமாறு வேண்டுகோள் விடுத்தோம், துறைசார் வல்லுனர்களால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை அமைச்சரிடம் முன்வைத்தோம். ஆனால் இன்று என்ன நடக்கிறது?

எமது முயற்சி எல்லாம் “செவிடன் காதில் ஊதிய சங்காகப்போய்” நிதி ஒதுக்கியிருக்கிறீர்கள். திட்டப்பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள்.

மக்கள் தங்களை பாதிக்கும் திட்டம் வேண்டாம் என வீதியில் இறங்கி கூக்குரல் இட்டது உங்கள் காதிற்கு கேட்கவில்லை. ஆனால் ஒருசில அரசியல்வாதிகளின் ஆசையை மக்கள் கேட்பதாக சொல்லுகிறீர்கள்.

வடக்கு மாகாண மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று காணி உரிமையாகும். குறிப்பாக விவசாயம், குடியிருப்பு மற்றும் பாரம்பரிய வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய காணிப் பிரச்சினைகள் இன்னமும் தொடர்கின்றன. இந்த வரவு–செலவுத் திட்டத்தில் காணி உரிமைப் பதிவுகளை வலுப்படுத்துவதற்கும், காணிப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை முக்கியமான முயற்சிகளாகும்.

ஆனால், வடக்கு மக்களின் காணிப் பிரச்சினை என்பது வெறுமனே காணிப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதுடனோ காணி உறுதிகளை வழங்குவதுடனோ முடிந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் காணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அடையாளப்படுத்தல்கள், எல்லை நிர்ணயங்கள் மற்றும் கையகப்படுத்தல்கள் குறித்து வெளிப்படையான மீளாய்வு அவசியமாகும்.

மக்களின் பாரம்பரிய விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் மாவட்ட மட்டத்திலான விசேட காணி மீளாய்வுத் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விவசாயத்தையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்குப் பல்வேறு ஒதுக்கீடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

நெல் விவசாயத்திற்கான உர மானியம் வழங்கவிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இத்திட்டம் உதவக்கூடும். அதேவேளை, நீர்ப்பாசனத் துறைக்காக மொத்தமாக 77,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் கீழ் மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்காக 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது காணிகளை இழக்கும் எமது மாவட்ட விவசாயிகளுக்கு மாற்றுக்காணி முழுமையாக வழங்கவேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் 1 பிரதான (Major)நீர்ப்பாசனக்குளம், 4 நடுத்தர நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் 828 சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளன. இவற்றுள் 222 சிறிய குளங்கள் கைவிடப்பட்ட குளங்களாக காணப்படுகிறது. வன்னி மாவட்டங்கள் மூன்றையும் எடுத்துக்கொண்டால் 459 கைவிடப்பட்ட சிறு நீர்ப்பாசன குளங்கள் உள்ளது. இக்கைவிடப்பட்ட குளங்களிற்கு கீழ் பல ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் உள்ளது.

கிராமிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் சிறிய குளங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்குளங்களை புனரமைப்பதனூடாக பல ஆயிரம் ஏக்கர் வயற்காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்கி இந்த நாட்டின் நெல் உற்பத்தியை மேலும் கூட்டலாம்.

எனவே மேற்படி ஒதுக்கீட்டை பயன்படுத்தி கைவிடப்பட்ட குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வாய்க்கால்களைப் புனரமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என கோருகிறேன்.

அதேபோல பயன்பாட்டில் உள்ள பல குளங்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் உள்ளன.

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் மீன்பிடித்துறை மிக முக்கியமானதாகும். பல குடும்பங்கள் மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களை நம்பி வாழ்கின்றன. 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் மீன்பிடித்துறையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தின் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள், மீன்பிடி இறங்குதுறைகள் மற்றும் பேசாலை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால், மீன்பிடித் துறைமுகங்கள் இல்லாமை மட்டுமே மீனவர்களின் பிரச்சினையல்ல. தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாடு, கடல் வளங்களின் அழிவு, மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரிப்பு, குளிரூட்டல் வசதிகளின் பற்றாக்குறை, ஆழ்கடல் மீன்பிடி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் சேமித்தல் பதனிடுதல் வசதிகள் இன்மை போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படல் வேண்டும்.

மேலும், நன்னீர் மீன்பிடித்துறை மிகவும் குறைந்த வளங்களை கொண்ட நவீன மயமாக்கலுக்கு உட்படுத்தப்படாத ஒரு துறையாகவே இன்றும் காணப்படுகிறது. எனவே அத்துறையை நவீனமயப்படுத்தி கிராமிய மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படல் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அதன் கல்வித் தரத்திலேயே தங்கியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பாடசாலைக் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல், ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பாடசாலை ஆய்வுகூடங்களின் நவீனமயமாக்கல் மற்றும் உயர்கல்வி வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஆனால், வடக்கு மாகாணத்தின் கிராமப்புறப் பாடசாலைகளின் நிலைமையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை, விஞ்ஞான ஆய்வுகூடங்களின் பற்றாக்குறை, கணினி வசதிகள் இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் பாடசாலைக் கட்டடங்களின் குறைபாடுகள் இன்னமும் காணப்படுகின்றன.

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 2,050 மில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. வரவேற்கிறோம்.

மேலும், 2027 முதல் 2029 வரையான காலப்பகுதியில் 1,000 ஆரோக்கிய நிலையங்களை உருவாக்குவதற்கு 17,440 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதற்காக 2027ஆம் ஆண்டில் 3,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய நிலையங்களை உருவாக்கி அவற்றில் ஆரம்பமட்ட மருத்துவ சேவையை வழங்குவதோடு தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் மேலதிக சிகிச்சைக்காக அடுத்தமட்ட நிலையிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்புவது நடைமுறைக்கு கொண்டுவரவேண்டிய திட்டமென்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

இதனால் வைத்தியசாலைகளில் தற்போதுள்ள நெருக்கடி குறைக்கப்படுவதோடு சிறந்த மருத்துவ சேவையை வழங்கமுடியும்.

ஆனால் தற்போது இயங்குநிலையில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் பணியாளர் வெற்றிடங்களை நிரப்பமுடியாத நிலை காணப்படும் நிலையில் புதிய நிலையங்களை ஆரம்பிப்பது எவ்வளவிற்கு சாத்தியமாகும்? எனவே தற்போது காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இயங்குநிலையில் உள்ள மருத்துவமனைகளை வினைத்திறன் மிக்க சேவை நிலையங்களாக மாற்ற வேண்டும். மருத்துவப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணவேண்டும்.

வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினை பல பிரதேசங்களில் தொடர்கின்றது. குறிப்பாக வறட்சியினால் பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இன்னமும் ஒரு சவாலாகவே உள்ளது. குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு–செலவுத் திட்டம் குறிப்பிடுகின்றது. இந்தத் திட்டங்கள் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த வரவு–செலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்புக்காக 230 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் தொடரப்படவுள்ளன. சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உண்மையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார வலுவூட்டலுக்காக விசேட கடன் மற்றும் தொழில் முயற்சி உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று இளைஞர்களுக்கான நிலையான வேலைவாய்ப்புகளின் பற்றாக்குறையாகும். கல்வியை நிறைவு செய்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை வளர்ப்பதற்கான விசேட திட்டங்களை எவையும் முன்மொழிவில் முன்வைக்கப்படவில்லை. ஆகவே சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படல் வேண்டும். இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

மன்னார்-ராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை தொடங்குவதனூடாக பெருமளவான இந்திய யாத்திரிகர்கள் இங்கு வருவதுடன் சுற்றுலாப்பயணிகளின் வருகையையும் அதிகரிக்கும். இதனால் அந்நியச்செலாவணி கிடைப்பதுடன் உள்ளூர் மக்களின் வருமானம் பெருகும் வாய்ப்புள்ளது.

எமது மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவுப் பதப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறு கைத்தொழில்களை வளர்ப்பதற்கான விசேட திட்டங்கள் அவசியமாகும். இத்தொழில்துறையை மேம்படுத்த தொழிற்பயிற்சி வழங்குவதுடன் அந்தப் பயிற்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்புகளும் தொழில் தொடங்குவதற்கான நிதி வசதிகளும் சந்தை வாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

About nakkeran 338 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply