ஏற்காடு அருகே 6,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்காலக் கருவிகள் மற்றும் கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்திப்பட்டான் நடுகல்
சேலம் மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் வகையில், சேர்வராயன் மலைத்தொடரில் மீண்டும் ஒரு அரிய தொல்லியல் சான்றுகள்
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில், ஏற்காடு வட்டம், மாரமங்கலம், வடக்கு மலையான் மற்றும் கேளையூர் ஆகிய மலைக்கிராமங்களில் நாங்கள் மேற்கொண்ட தொல்லியல் கள ஆய்வில், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கருவிகளும், 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய அரிய நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலக் கருவிகள்
வடக்குமலையான் கோயிலில் 50-க்கும் மேற்பட்ட கருவிகளும், கேளையூர் கிராமம் பிள்ளையார் கோயிலில் 50-க்கும் மேற்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவை 6,000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தவை. பழைய கற்கால மனிதனைப் போல் கரடுமுரடாக அல்லாமல், புதிய கற்கால மனிதன் கற்களை தேய்த்து, வழவழப்பாக்கி, கூர்மையான வெட்டு முனையுடன் செய்யக் கற்றுக் கொண்டான்.
சிறிய உருண்டை வடிவக் கற்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொட்டைகளை உடைக்கவும், பெரிய உருண்டைக் கற்கள் ஆயுதங்களை கூர் தீட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு எண்ணிக்கையில் கருவிகள் கிடைப்பது, அக்காலத்தில் இங்கு மனிதர்கள் அதிக அளவில் வாழ்ந்ததையும், வேளாண்மை செய்து, ஆடு மாடுகளை பழக்கி, நிரந்தர கிராம வாழ்க்கையை தொடங்கியதையும் உறுதி செய்கிறது.



நெகிழ வைக்கும் செய்தி என்னவென்றால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வரலாற்றுப் பொக்கிஷங்களை, இந்த மலைக்கிராம மக்கள் தங்கள் வயல்களிலும், ஓடைகளிலும் கண்டெடுத்து, இன்று வரை தெய்வமாக எண்ணி, குங்குமம் இட்டு வழிபட்டு வருகின்றனர்.
வீரத்தின் அடையாளம் – காட்டுப்பன்றி குத்திப்பட்டான் நடுகல்
மாரமங்கலம் கிராமத்தில் வாணிக்கொம்பை என்ற இடத்தில், திரு. கந்தன் அவர்களின் தோட்டத்தில் 19 வரிகள் கொண்ட கல்வெட்டுடன் கூடிய அரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நடுகல்லில் ஒரு வீரன் நீண்ட ஈட்டியால் ஒரு காட்டுப்பன்றியை குத்திக் கொல்லும் காட்சி தத்ரூபமாக உள்ளது. வீரனின் கொண்டை வலப்புறம் சாய்ந்துள்ளது, காதில் பாடகம் எனும் காதணி, முறுக்கிய மீசை, இடையில் அழகிய முடிச்சுடன் கூடிய ஆடை, குறுவாள், காலில் வீரக்கழல் என கம்பீரமாக உள்ளான். அவன் கையில் உள்ள பெரிய ஈட்டி பன்றியின் உச்சந்தலையில் இறங்கி கழுத்து வரை சென்றுள்ளது. அருகில் ஒரு துப்பாக்கியும் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த வீரனுக்கு உறுதுணையாக இரண்டு வேட்டை நாய்கள்! ஒரு நாய் பன்றியின் மீது ஏறி நின்று காதைக் கடித்துக் குதறுகிறது, மற்றொரு நாய் பின்னங்காலை கடித்து தாக்குகிறது. இது தமிழர்களின் நாய் மீது கொண்ட அன்பையும் வீரத்தையும் காட்டுகிறது.
கல்வெட்டு சொல்லும் கதை
இந்த 19 வரி கல்வெட்டின் மூலம், மாரமங்கலம் அண்ணாமலைக் கவுண்டர் என்பவர் இந்த நடுகல்லை நிறுவியுள்ளார் எனத் தெரிகிறது. வாணிக்கொம்பை பகுதியில் விளைபயிர்களை அழித்து வந்த காட்டுப்பன்றியை, காத்தா கவுண்டனின் மகன் நக்க கவுண்டன் என்ற வீரன் தன் இரு வேட்டை நாய்களுடன் சென்று போராடி கொன்றுள்ளான். அந்த கடுமையான சண்டையில் பன்றியும் இறந்தது, பயிரைக் காத்த அந்த வீரனும் அவனது இரு நாய்களும் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாகவே இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
இது வெறும் கல் அல்ல, நம் மண்ணின் வீரத்தையும், வேளாண்மையை காக்க உயிர் கொடுத்த தியாகத்தையும், வாயில்லா ஜீவன்களுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையையும் பேசும் ஒரு வரலாற்று ஆவணம்.
ஏற்காடு மலைப்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மனித நாகரிகம் தழைத்தோங்கிய பகுதி என்பதற்கு இந்த கண்டுபிடிப்புகள் மீண்டும் ஒரு சான்று.
கள ஆய்வில்: விழுப்புரம் வீரராகவன், பெருமாள் ஆசிரியர் மற்றும் சேலம் வரலாற்று ஆய்வு மையக் குழுவினர்.
ஆறகளூர் பொன். வெங்கடேசன்,
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்.
#SalemHistory #YercaudHistory #Archaeology #TamilNaduHistory #HeroStone #NeolithicTools #SalemHistoricalResearchCentre #ஏற்காடு_வரலாறு #தொல்லியல்_ஆய்வு #நடுகல் #சேலம்_வரலாற்று_ஆய்வு_மையம்

Leave a Reply
You must be logged in to post a comment.