த வெ கவும் இடதுசாரிகளின் குழப்பங்களும்
தமிழக வெற்றிக் கழகம் குறித்து திமுக முதலில் அதிகம் கவலை கொள்ளவில்லை. அதனுடைய கூட்டணி மிகவும் உறுதியாகவிருந்தது. இந்துத்துவ எதிர்ப்பு அறிவுஜீவிகள் தங்கள் ஊசலாட்டமற்ற ஆதரவை அதற்கு வழங்கி வந்தனர். பிஜேபி, அதிமுக வினர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும் பொதுவாக சமூகத்தில் அரசுக்கு எதிரான மனநிலை இருப்பதாகத் தோன்றவில்லை. கருத்துக் கணிப்புகளும் த வெ கவுக்கு மூன்றாவது இடமே கொடுத்தன. த வெக, பலவீனமான தலைமை கொண்ட அதிமுகவையே அதிகம் பாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும் புரிதலும் திமுகவு கூட்டணி கட்சிகளுக்கு இருந்ததால் தலைமை நம்பிக்கையுடனேயே இருந்தது.
ஆனால் விஜய்க்கு கூடிய மிகப் பெரிய கூட்டங்கள் அதற்கு ஒரு எச்சரிக்கை உணர்வைத் தந்திருக்கக் கூடும். எம் ஜி ஆர் நினைவு வந்திருக்கலாம்., விஜய் ரசிகர்களான இளைஞர்கள்”தளபதி இந்தியாவின் சீஃப் மினிஸ்டர், தமிழ் நாட்டில் பிரைம் மினிஸ்டர் “ என்றெல்லாம் பேசியதையும், ரீல்ஸ் வெளியிட்டதையும் திமுக இணைய அணி பிடித்துக் கொண்டது. அவர்களுக்கு தற்குறி என்ற பட்டத்தை லேபிள் போட்டு ஒட்டியது. தற்குறிகள், அணில்கள் என்று அந்த இளைஞர்கள் குறித்து கேலியாகவும் கிண்டலாகவும் எழுதினார்கள். நாற்காலியில் அமர்திருப்பவர்களுக்கு அதை நோக்கி முன்னேறுபவர்கள் மீது ஏற்படும் இயல்பான வெறுப்புணர்வு இது.
மற்றபடி திமுக தலைமைக்கு த வெ க வின் பின்னால் இருப்பவர்கள் யார்? தமிழக ஆளும் வர்க்கங்களில் யாரின் நலன்களுக்கான இந்தக் கட்சி தோன்றுகிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் பேசுவது தமிழ் நாட்டில் வழக்கம் இல்லை.
அதிமுகவின் சின்னம் விவசாயிகளுக்கு உகந்த முளைவிடும் பயிரான இரட்டை இலை. அறிவு கூர்மை மிகுந்த தேர்வு. ஆனால் அது ஏன் தேர்வு செய்யப்பட்டது? எம் ஜி ஆர் என்ற உச்ச நட்சத்திரத்தின் பின்னால் திரண்ட மக்களுக்கு எந்த விதத்தில் இரட்டை இலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்? எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் எம் ஜி ஆர் ரசிகர்களாக இருந்தவர்கள் கிராமப்புற விவசாயக் கூலிகளாகவும், வறுமையில் வாடும் குத்தகைதாரர்களாகவும், பண்ணையத்துக்கு இருப்பவர்களாகவும், சாதி மாற்றும் ஆணாதிக்கம் என்ற இரட்டை அடக்குமுறையில் வதைபடும் பெண்களாகவும் இருந்தனர். இவர்கள் தங்களை விவசாயிகள் என்று அடையாளப் படுத்திக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.
எனவே இரட்டை இலை யாரைக் குறிக்கிறது? அதிமுக ஏன் கிராமப்புறங்களில் வலிமையாக இருந்தது? ஏன் புதிதாக வளர்ச்சி பெற்ற சமூகங்கள் அதிமுகவை ஆதரித்தன? திமுக நகர்ப்புற பார்ப்பனர் அல்லாத வர்க்கங்களின், சாதிகளின் பிரதிநிதியாக இருக்க அதில் இடம் பெற முடியாத கிராமப்புற ஆதிக்க சாதிகள் தங்களுக்கு என்று ஒரு கட்சியை எம் ஜி ஆரை முன்வைத்து உருவாக்கிக் கொண்டவா? திமுகவுக்கு இதற்கெல்லாம் விடை கட்டாயம் தெரிந்திருக்கும். கலைஞர் கருணாநிதிக்கும், முரசொலி மாறனுக்கும் தெரியாத அரசியல் பொருளாதாரமா என்ன? ஆனால் இவற்றைப் பேச வேண்டிய அவசியமில்லை. எனவே நடிகனின் பின்னால் செல்லும் அறிவற்ற கூட்டம், விசிலடிச்சான் குஞ்சுகள் என்றே அதிமுகவை அடையாளப் படுத்தியது திமுக. தங்கள் கட்சியினர் கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள் என்று நிறுவ இது உதவியாகவிருந்தது.
அதே நேரம் தமிழக கட்சிகளுக்கும், முதலாளித்துவ, பெருவணிக, நிலப்பிரபுத்துவ குடும்பங்களுக்கும் இடையிலான உறவு குறித்து இடதுசாரிகள் ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை. த வெ கவுக்குப் போகும் முன் தமிழ் நாட்டில் தோன்றிய மிகப் பெரிய கட்சியான அதிமுக பற்றி என்ன ஆய்வு இருக்கிறது என்று பார்ப்போம்.
எம் ஜி ஆருக்கு இரட்டை இலை சின்னத்தைப் பரிந்துரைத்தவர் தா. பாண்டியன் என்று தோழர்கள் பேசிக் கொள்வார்கள். அதற்கான மிக உயர்ந்த மட்ட அரசியல் புரிந்தலும், படைப்பூக்கமும் கொண்டவர்தான் தோழர் தா. பாண்டியன். அவர் அண்மையில் காலமாகி இருந்தாலும் எந்த சூழலில் எந்த அடிப்படையில் இரட்டையிலை சின்னம் உருவாக்கப்பட்டது என்று ஒரு பேட்டி கூட எடுக்கப்படவில்லை. அந்தக் காலகட்டத்தை நன்கறிந்தவரான அவரும் அப்போது நிகழ்ந்த ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றி ஒருபோதும் எழுதவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய பதிப்பகம் சி பி ஐ கட்சியால் நடத்தப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான்.
தோழர் அருணன் எழுதிய எம்ஜிஆர்- நடிகர் முதல்வரான வரலாறு நூல் அதிமுகவின் தோற்றம் வளர்ச்சி பற்றிப் பேசும் நூல்களில் மிகச் சிறந்தது. ஆனால் அதிலும் கூட அதிமுகவின் பின்னால் திரண்ட வர்க்கங்கள், சாதிகள் பற்றிய பார்வை இல்லை. ஆனால் தோழரின் அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி நூலில் திகவுக்கும், திமுகவுக்குமான பிளவின் அரசியல் காரணங்கள், தேவர் சமூக ஆதரவு ஆகியவை விளக்கப்பட்டிருக்கும். எனவே அதிமுக பற்றிய நூலில் வர்க்க அணிசேர்க்க பற்றிய விவரங்கள் இல்லாமலிருப்பது அக்கால சூழல் பற்றிய தரவுகள் இல்லாமல் இருப்பதன் விளையே என்று கொள்ளலாம்.
1980-81 ஆண்டு வாக்கில் தர்மபுரி, வட ஆற்காடு, சேலம் மாவட்டங்களில் ஆப்பரேஷன் அஜந்தா என்ற பெயரில் எம் ஜி ஆர் அரசு டி ஜிபி மோகன் தாஸ், தேவாரம் தலைமையில் மிகப் பெரிய நக்சல் தேடுதல் வேட்டையை நடத்தியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அப்பாவிகள். எண்ணற்ற கிராமங்கள் தாக்கப்பட்டன. மிகக் கடுமையான அடக்குமுறை நக்சல்பாரி அமைப்பின் ஆதரவாளர்கள் மேல் ஏவப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சி காலம் முழுமையும் தமிழ் தேசிய வாதிகள் மீதும், ஈழ ஆதரவாளர்கள் மீதும் மிகக் கடுமையான அடக்குமுறை இருந்தது. இவ்வளவு நடத்தும் ஒரு அரசு சுரண்டும் வர்க்கங்களும் இணைந்து நிற்பது வழக்கம் தானே என்ற நோக்கிலேயே அதிமுக கட்சியானது மார்க்சிய லெனினிய அறிவுஜீவிகளால் அணுகப்பட்டது. ஆளும் வர்க்கம் என்பது ஒன்று அல்ல அதில் பல பிரிவுகள் உள்ளன, அதிமுக காட்டிய அதீத மூர்க்கம் அதன் வர்க்க குணாம்சமாக, கிராமப்புற ஆதிக்க சாதி பின்புலத்தால் இருக்கக் கூடும் என்ற கோணம் முன்வைக்கப்படவில்லை.
இருக்கின்ற ஆய்வுகள் எல்லாம் பிம்பச் சிறை போல எம் ஜி ஆரை தனிமனிதராக அணுகுபவை.
இதையெல்லாம் ஏன் இவ்வளவு விரிவாக எழுத வேண்டியிருக்கிறது என்றால் இப்போதும் தமிழ் நாட்டில் அரசியல் பொருளாதார ஆய்வின் நிலை மாறவில்லை. கூடுதலாக இன்னும் மோசமடைந்திருக்கிறது என்பதால்தான். எனவேதான் பழையவற்றை நினைவு கூற வேண்டியிருக்கிறது.
திரும்பவும் தற்குறிக்கு வருவோம்.
திமுக தற்குறி என்றதில் பிரச்சினையில்லை. ஆனால் திமுக வை ஆதரிக்கும் கட்சி சார்ந்த, சாராத இடதுசாரிகளும் அந்த இளைஞர்களைத் தற்குறி என்றதும், இழிவாகப் பேசியதும் வியப்பளித்தது.
இடதுசாரிகளின் தரப்பிலிருந்து ஏன் இந்தக் கட்சி தோன்றுகிறது, யார் இந்தக் கட்சி நடத்தும் பெரும் பெரும் மாநாடுகளுக்கு நிதியளிக்கிறார்கள், தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கார்ப்பரேட் குழுக்களில் ஏதாவது இவர்களை ஆதரிக்கிறதா, விஜய் பின்னால் போகும் இளைஞர்கள் அனைவரும் சினிமா கவர்ச்சியால் மண்டை கிறுகிறுத்தவர்கள் தானா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப் படவே இல்லை.
செப்டம்பர் 12, 2025 தமிழ் இந்துவில் சிபிஐ எம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி விஜய் வியூகம் வெற்றி பெறுமா என்ற கட்டுரை எழுதினார். அதில் விஜய் பிஜேபியின் பி டீம், பிஜேபியின் தேச விரோத செயல்களைக் கண்டு கொள்வதில்லை, அவர் களப் போராளி அல்ல, தளபதியும் அல்ல, எம் ஜி ஆர் அல்ல என்று கூறியிருந்தார்.
அதில் திமுக வைக்கும் சினிமா கவர்ச்சி, கொள்கையற்ற கூட்டம் என்பது போன்ற விமர்சனங்களே இடம்பெற்றிருந்தன. எஸ் ஏ பி போன்ற மிகவும் மூத்த தோழர்களும் முகநூலில் த வெகவினரை தற்குறிகள் என்றே குறிப்பிட்டனர்.
விஜய், கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே இந்தக் கட்சி விஜய்காந்த் கட்சி போலவோ, கமல் போலவோ இருக்கப் போவதில்லை, இந்தக் கட்சியின் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. (ஆனால் யாரும் விஜய் 35 சதவீத வாக்கு வாங்கி ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. 18-20 சதவீத வாக்கு வாங்கலாம். 10 லிருந்து 15 இடங்களை வெல்லலாம் என்ற கருத்தே அரசியல் பார்வையாளர்களிடம் இருந்தது).
ஆனால் திமுகவினரும், அவர்களை ஆதரித்த இடதுசாரிகளும் இந்த இடத்தைக் கூட த வெகவுக்கு கொடுக்க மறுத்தனர். அது பத்து சதவீதம் வாங்கினால் அதிகம் என்றனர். த வெ கவை கொஞ்சம் கவனமாகப் பார்க்க வேண்டும் என்றவர்களை திட்டித் தீர்த்தனர். த வெ க ஒரு லும்பன் கும்பல், தற்குறிக் கூட்டம், பிஜேபியின் பினாமிகள், மார்ட்டின் பணம் என்பதற்கு மேல் யாராவது எதையாவது எழுதினால் வந்து இவர்கள் கையைப் பிடித்துக் கொள்வார்கள் போலிருந்தது. இடதுசாரிகள் இப்போது த வெ கவை ஆதரிக்கத் தொடங்கி விட்டாலும் இந்தப் பார்வை என்னமோ தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இந்த மொட்டையான புரிதலில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் அடியோடு புறக்கணிக்கப்பட்டது. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிக் கொண்டிருந்தது என்பதுதான் அது.
முதலாவது அதிமுகவின் பலவீனம். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுக வலிமையான தலைமை இன்றி, பிஜேபியின் கைப்பாவையாக மாறிவிட்ட எடப்பாடியை வைத்துக் கொண்டு தடுமாறிக் கொண்டிருந்தது. எடப்பாடி தனது பலவீனங்களை நன்கறிந்திருந்தார். எனவே மாவட்ட செயலாளர்கள் தீவீரமாக இயங்கி தங்கள் மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார். திமுகவின் தவறுகள் தங்களை ஆட்சியை நோக்கித் தள்ளும் என்று எதிர்பார்த்தார்.
2019 -20 அதிமுகவுக்கு டாடா நிறுவனம் நடத்தும் புரோகரசிவ் எலெக்டோரல் டிரஸ்ட் 46 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது. ஐ டி சி நிறுவனம் 5.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது. மற்ற தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து மேலும் ஐந்து கோடி மட்டுமே நன்கொடை கொடுத்திருந்தனர். எனவே அதிமுக அந்த ஆண்டில் பெற்ற நன்கொடை 56 கோடி ரூபாய் மட்டுமே. (மைநேதா.காம் விவரம்). இது மிகக் குறைவான தொகை. அதன் பிறகு அதிமுக நன்கொடை விவரங்கள் தெளிவாக இல்லை. 2022- 23 இல் 1,05,000, 20-21 இல் 2 கோடி என்று மட்டுமே உள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக 6.05 கோடி வசூலித்தது. அதன் பிறகு அது தேர்தல் பத்திரங்கள் எதுவும் வசூலிக்கவில்லை. இந்தியா சிமெண்ட்ஸ் 5 கோடி கொடுத்தது. (இதே இந்தியா சிமென்ட்ஸ் திமுகவுக்கு 4 கோடி கொடுத்துள்ளது). 20-21 இல் அதிமுக 34.07 கோடி ரூபாய் வசூலித்துள்ளது
2019-20, 23-24 ஆண்டுகளில் திமுக 656 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் வசூலித்தது. அதில் மார்ட்டின் குழுமம் மட்டுமே 509 கோடி ரூபாய் வழங்க்கியது.
இந்தக் கணக்கு முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒருதுளியாவது உண்மை கட்டாயம் இருக்கும். இந்த கணக்கு வழக்குகளைப் பார்த்தாலேயே அதிமுக பொருளாதார அடிப்படையில் பின் தங்கி வருவதை உணர முடியும்.
இன்றைய தேர்தல் இணைய பிரச்சாரம், ஐ டி விங், இன்ஃபுயென்சர்கள், வியூக வகுப்பாளர்கள் என்று பெரிய செலவு வைக்கக் கூடியது. தவிர நேரடியாக பணம் கொடுப்பது வேறு. எனவே அதிமுக வேட்பாளர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து பணம் செலவழிக்க வேண்டி வந்தது என்கிறார்கள். மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ் அதிமுகவில் சேர்ந்து தேர்தலில் நின்றார். வேட்பாளரும் ஆனார். ஒரு ஓட்டுக்கு 25 ஆயிரம் கொடுத்ததாகவும் அதிமுகவுக்கு ஒரு பெரிய தொகை நன்கொடையக் கொடுத்ததாகவும் செய்திகள் வந்தன. லீமா ரோசுக்கு போட்டியிட இடம் அளிப்பது என்பது அபாயகரமானது என்பதை எடப்பாடி கட்டாயம் உணர்ந்திருப்பார். ஆனால் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு வந்தது.
அதிமுக தமிழக கார்ப்பரேட் அமைப்புகளின் நம்பிக்கையை இழந்து வருவதை இந்தப் புள்ளி விவரங்கள் சில ஆண்டுகளாகவே காட்டி வந்தன. அதனால் வலிமையான தலைமையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. பணபலத்திலும் வெல்ல முடியவில்லை.
தமிழகம் போன்ற பொருளாதார வளம் மிக்க மாநிலத்தில் பல்வேறு நலன்கள் நோக்கங்கள் கொண்ட முதலாளித்துவ குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்த மீதியிருக்கும் திமுக என்ற ஒரு மாநிலக் கட்சி போதாது. எனவே இன்னொரு மாநிலக் கட்சியாக த வெக தோன்றுகிறது என்ற எண்ணம் கட்டுரையாளரைப் போன்ற சிலருக்கு முன்பே இருந்தது.
ஆனால் த வெ க திமுகவுக்கும் மாற்றாக உருவாகியது என்பது பின்னால்தான் தெரிந்தது.
த வெ க எந்த விதத்தில் தேமுதிகவில் இருந்தும், மக்கள் நீதி மையத்திலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது?
த வெ கவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் கூடியது. 85 ஏக்கர் நிலப்பரப்பு, 170 அடி நீள பிரம்மாண்ட மேடை, 1 கிலோமீட்டர் நீள தார்சாலை, 800 மீட்டர் ரேம்ப், 800 சிசிடிவி கேமராக்கள், 15 ஆயிரம் தன்னார்வலர்கள், மாநாட்டு வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ஏற்பாடு, 937 மின்கம்பங்கள், 15 ஆயிரம் மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. த வெகவின் மதுரை மாநாடு இன்னும் பெரிய அளவில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடலில் நடந்தது. எடிட்டிங் போன்றவற்றை சிறந்த நிபுணர்கள் நடத்தினர். தவிர விளம்பர செலவுகள் வேறு.
விஜய்காந்த 2005 இல் நடத்திய முதல் மாநாடு மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் விஜய் நடத்திய மாநாடுகள் இன்னும் பிரம்மாண்டமானவை. விஜய்காந்த்தின் வாக்கு 10 சதவீதம் மட்டுமே. அப்போது அதிமுக, திமுக இரண்டும் மிகவும் பலத்துடன் இருந்தன. அந்த 10 சதவீததை கடந்து விஜய்காந்தால் நகர முடியவில்லை. இரண்டு திராவிட கட்சிகளின் தொண்டர் பலத்திலும் சரிவை ஏற்படுத்த முடியவில்லை. விஜய்காந்த் மூன்றாவது இடத்திலிருந்த நடிகர். ரஜினியும் கமலும் அவரை விட செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். எனவே விஜய் காந்த் இடையில் புகுந்து இந்தக் கட்சிகளின் செல்வாக்கு மண்டலங்களைத் தகர்க்க முடியவில்லை. அவர் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியும் மூன்றாவது இடத்தில்தான் இருந்தது. விஜய்காந்துக்கு விஜய் அளவுக்கு மீடியா, இணைய ஆதரவும் பணமும் இருந்து இருந்தால் அவரால் இன்னும் முக்கியமான இடத்துக்கு வந்திருக்க முடியும். ஆனால் அப்போதும் தமிழ்நாட்டு மக்களும், ஆளும் வர்க்கங்களும் அதிமுக, திமுகவில் மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுக்கு இன்னொரு கட்சி தேவைப்படவில்லை.
ஜெயலலிதா, கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்த கமல் பலவீனமாகத்தான் இருந்தார். கோகோ விவசாயிகள், சூப்பர் மார்க்கெட் அதிபர்கள் என இரண்டாவது கட்ட பணக்காரர்கள் தான் அவரை ஆதரித்தனர். அந்தக் கட்சி முன்னணிக்கு வரவே முடியவில்லை. வருவதற்கான செல்வாக்கு, பணபலம் அதற்கு இல்லை.
ஆனால் விஜய் கட்சி தொடங்கும் போது அதிமுக பலவீனமடைந்திருந்தது. திமுகவும் கூட இளைஞர்கள், பெண்கள், தலித்துகளின் தொடர்பை இழந்திருந்தது. அதன் தொண்டர்கள் பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். அதன் இளைஞரணி, மாணவரணி ஆகியவை பலவீனமாகவே இயங்கின. இந்த இரண்டு கட்சிகளும் வலிமை வாய்ந்த உள்ளூர் தலைவர்கள், அவர்களின் பணபலம், ஆள்பலம், சாதி செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இயங்கின.
எனவே மக்களை மிகப் பெரிய அளவில் திரட்டவும், விருப்பம் போல ஆட்டி வைக்கவும் தேவையான கவர்ச்சிகரமான தலைமை கொண்ட ஒரு கட்சிக்கான தேவை தமிழ் நாட்டில் இருந்தது. விஜய் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தார். அவருக்கு தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் ரசிகர்கள் இருந்தனர். அவரது மாநாடுகள் அவரது பணபலம் எல்லையற்றது என்பதைக் காட்டின. எனவே விஜய், விஜய்காந்த் அல்ல.
இதையெல்லாம் கம்யூனிஸ்டுகள் எப்படி தவற விட்டனர்? தவெகாவின் செலவுகள் எல்லாமே லாட்டரி மார்ட்டின் பணம் அல்லது பிஜேபி பணம் என்று எப்படி சொல்லிக் கொண்டிருந்தனர்? அது இவ்வளவு பெரிய கட்சி நடத்த போதவே போதாது.
இடதுசாரிகள் மார்க்சிய பெரியாரிய அம்பேத்காரிய தத்துவங்களை இணைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். பிஜேபியின் வளர்ச்சி பெரிய அளவுக்கு இருக்கவும், திமுகவுடன் இணைந்தே அதை முறியடிக்க முடியும் என்று நம்பினர். பிஜேபி பிரச்சாரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக பல வெற்றிகளையும் பெற்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிப் போக்கில் திராவிட மாடல் அரசு, பெரியாரிய பார்வை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டனர். பிஜேபி என்பது ஒரு பார்ப்பனிய கட்சி என்பது போன்ற பார்வைகள் இடதுசாரிகளிடம் முன்னுக்கு வந்தன. திமுகவுடனான உறவு என்பது கொள்கை ரீதியிலானது, அசைக்க முடியாதது, வெற்றியைத் தரக்கூடியது என்று இவர்கள் உறுதியாக நம்பினர்.
மிகவும் வேடிக்கையாக இந்துத்துவ இதிகாசங்கள் உதாரணமாக ராமாயணம், மகாபாரதம் பற்றிய கோசாம்பி, ரொமீலா தாப்பரின் பார்வையை விட இடதுசாரிகள் திராவிட இயக்க பார்வையே ஏற்றுக் கொண்டனர். எனவே அரசியல் பொருளாதாரம் என்பது அலட்சியப்படுத்தப்பட்டது.
தவெக தமிழகம் முழுவதும் ஏராளமான நல்ல வசதியாக அலுவலகங்கள் திறந்தது. பின்னும் கூட இடதுசாரிகள் தங்கள் சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. எண்ணற்ற இளைஞர்கள் மேலும் மேலும் விஜய் பால் ஈர்க்கப்படுவது தெளிவாகத் தெரிந்தது. திமுக, அதிமுகவைவிட சிறப்பான, செயல்படக் கூடிய, உற்சாகம் மிகுந்த கட்டமைப்பு தவெகவுக்கு மிகக் குறுகிய காலத்தில் உருவாகியிருந்தது. இப்படி இளைஞர்கள் ஏன் திமுக அதிமுகவில் இல்லை என்ற கேள்வி எழுப்பப்படவே இல்லை.
இடதுசாரி அறிவுஜீவிகள் பிஜேபி எதிர்ப்பு, இணையத்தில் அதன் பிரச்சாரங்களை முறியடிப்பது என்றிருந்த நேரத்தில், கீழ் நடுத்தர வர்க்கமும், இளைஞர்களும் இந்த அரசியலில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதை உணரவில்லை. மக்கள் வாழ்க்கையில் மாற்றமே இல்லை. ஒரு எலெக்டீரிசியன், வீட்டு வேலை செய்யும் அம்மா, ஆட்டோ டிரைவர் போன்றோரின் வாழ்நாள் அப்படியே கழிந்து கொண்டிருந்தது. அதே நேரம் நகரமயத்தின் காரணமாக செலவுகளும் கடன்களும் அதிகரித்து வந்தன. அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து வந்தனர். இதெல்லாம் நமது தோழர்களின் கண்ணில் படவே இல்லை.
ஜெயலலிதா கிங்பின் அரசியலைத் தொடங்கி வைத்தார். வெங்கடேச பண்ணையாரின் உதவி கொண்டு சாத்தான் குளத்தில் வெற்றி பெற்றார். பின்பு பண்ணையார் கொல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சிப் போக்கில் உள்ளூர் சாதி ஆதிக்க வாதிகள் கட்சியில் அதிகாரம் பெற்றனர். அல்லது பணம் கொடுத்து வெற்றி பெறுவது நடைமுறைக்கு வந்தது. அழகிரி திருமங்கலம் பார்முலாவை உருவாக்கினார். திமுக, அதிமுகவில் உள்ளூர் அமைப்புகள் இயங்குவது போலத் தோன்றினாலும் பணமே அடிப்படையாக இருந்ததால் இணைந்து செயல்படுவது, தோழமை உணர்வு ஆகியவை குறைந்து போயின.
இவையெல்லாம் மக்களிடையே நேரடித் தொடர்பை இந்த இரு கட்சிகளும் இழந்து வருகின்றன என்பதை காட்டுகின்றன.
திமுகவிலும் இதே நிலைதான். 60 தொகுதிகள் கொண்ட கொங்கில் அதற்கு பெரிய செல்வாக்கே இல்லை. அருந்ததியரை இணைத்துக் கொள்ள முயன்ற போதிலும் உள்ளூர்த் தலைமையை ஆதிக்க சாதிகளிடம் விட்டு வைத்தது. அந்த ஆதிக்க சாதிகள் திமுகவை விட, அதிமுகவையும் அண்ணமலையையும் நம்பினர்.
உள்ளூர் சுலதான்களின் ஆட்சி முதலாளிகளுக்கும் சிக்கல்களை உருவாக்கியது. முதலாளிகள் இந்த உள்ளுர் தலைவர்களையும் அனுசரித்து போக வேண்டி வந்தது .சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பன்னாட்டு நிறுவங்களுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் துணை ஒப்பந்தங்கள், பஸ் காண்ட்ராக்ட்கள், கேண்டீன், ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்திகள் ஆகியவற்றில் முரண்கள் வந்ததாக செய்திகள் வந்தன. இவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் தலைவர்களால் வற்புறுத்தபப்டுவதாக கூறப்பட்டது. எனவே முதலாளிகள் பல பவர் செண்டர்கள் இருப்பதாக நம்பத் தொடங்கினர். திமுக, அதிமுக உள்ளூர் தலைவர்களுக்கு அதிகம் முக்கியம் கொடுத்ததால் இவர்கள் தங்கள் பலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தேர்தல்களில் வெல்லவும் கார்ப்பரேட்டுகள் மீது அழுத்தம் செலுத்த முயன்றனர். எனவே முதலாளித்துவ சக்திகள் திமுக, அதிமுகவுக்கு மக்கள் தொடர்பு போதுமான அளவு இல்லை, இவர்களால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பு உள்ளது. அனில் அகர்வால் விஜயை ஆதரிக்கிறார் என்றால் விஜய் சொன்னால் மக்கள் கேட்பார்கள். அது ஒருநாள் பயன்படும் என்ற எண்ணத்தில் தான்.
ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் போன்ற பன்னட்டு நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளிலும், சென்னையிலும் திமுக தோல்வியடைந்ததை இன்னும் ஆழமான தரவுகளோடு ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.
தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்ற பிறகு ஆட்சியமைக்க சிபிஐ எம், சிபிஐ தோழர்களின் ஆதரவைக் கோரிய போது சி பி ஐ எம் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி, திமுகவானது அதிமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயல்கிறது, இதை ஏற்றுக் கொள்ள முடியாது, எனவே த வெ கவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம் என்றார். இதில் புரியாத விஷயம் என்னவெனில் அதிமுக தாங்கள் என் டி ஏவில் தொடர்வோம், பிஜேபியின் ஒரு எம் எல் ஏவையும் திமுக கூட்டணிக்கு அழைத்து வருவோமென்று சொன்னதாக யாரும் கூறவில்லை.
அப்படியானால் கே.பாலபாரதி எழுதிய கட்டுரை?விஜய் பிஜேபியின் பி டீம் என்ற குற்றச் சாட்டு? சரி விஜய்க்கு ஊரறிந்த பிஜேபி ஆதரவாளர் ஸ்ரீதர் வேம்புவும், வேதாந்தாவின் அனில் அகர்வாலும் ஆதரவு தெரிவித்து இருப்பதை மார்க்ஸிஸ்ட் கட்சி எப்படிப் பார்க்கிறது? ஒருவேளை த வெ க பிஜேபியின் பி டீம் என்ற பாலபாரதியின் பார்வை சரியாக இருந்தால் கவர்னர் ஆட்சி வருவதைப் பற்றி சி பி ஐ எம் ஏன் கவலைப் பட வேண்டும்? இந்த ஆமைப்பு முறை சிக்கலுக்கு ஆளாகக் கூடாது என்று கம்யுனிஸ்ட் கட்சி ஏன் பதற வேண்டும்?
திமுகவுடனான உறவு என்பது தேர்தல் உறவு, பிஜேபி எதிர்ப்பு கூட்டணி என்பதைத் தாண்டி மார்க்சிய பெரியாரிய கூட்டு என்ற இடத்துக்கு நகர்த்தப்பட்டு விட்டது. அதற்கு முன்பே தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்ட மார்க்சியத்தை பெரியாரியம், அம்பேத்காரியம் கொண்டு செழுமைப் படுத்துவது என்ற கருத்தை பல தோழர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்து இந்துத்துவ எதிர்ப்பு திராவிட அரசியல் பேசியதை இந்தத் தோழர்கள் தங்களுக்கு உவப்பானதாகக் கருதினர். மெல்ல மெல்ல கட்சியின் பெரும்பகுதி அறிவாளி வர்க்கம் பெரியாரிய பார்வையில் சிந்திக்கத் தொடங்கியது. மதம், சாதி ஆகியவற்றுக்கும் உற்பத்தி முறைக்கும், இந்தியாவின் பழங்குடி சமூக அமைப்பில் ஏற்பட மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பெரும் பொக்கிஷங்களாக மார்க்சிய வரலாற்று ஆய்வுகள் இருந்த போதிலும் தோழர்கள் இந்துத்துவ வாதிகள் மேல் கடும் தாக்குதல் நடத்த பெரியாரிய பார்வையையே ஏற்றதாகக் கருதினர்.
ஆனால் புதிதாக ஒரு கட்சி அரசியல் களத்தில் தோன்றும் போது அதைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட படுதோல்விக்கு மார்க்சியத்தை புறக்கணித்ததே காரணமாக அமைந்தது. மார்க்சிய வாதிகள் மட்டுமல்ல முதலாளித்துவ அறிஞர்களும் கூட ஒரு அரசியல் கட்சி அல்லது வரலாற்று நிகழ்வை ஆய்வு செய்யும் போதும் அதன் அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் கணக்கில் கொள்கின்றனர். ஏன் இந்துத்துவ அறிஞர்கள் கூட வரலாற்று ஆய்வில் அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொள்கின்றனர்.
ஜுகல் பந்தி என்ற நூலில் ஜன சங்கத்தின் தலைவர் பால்ராஜ் மதூக் என்பவர் முதலாளித்துவத்துக்கு முழு சுதந்திரம், சந்தையை அடிப்படையாகக் கொண்ட சீர் திருத்தங்கள் ஆகியவற்றை முன் மொழிந்தார் என்பது தெளிவாக இருக்கும். பிஜெபியின் பொருளாதாரக் கொள்கையில் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் விவரிக்கப்பட்டிருக்கும். ஜன சங்க், பிஜேபியின் வரலாற்றை எழுதுபவர்கள் யாரும் அதற்கு ஆரம்ப கால கட்டத்தில் ஜின்னாவின் பேரனும், பாம்பே டையிங் நிறுவனத்தின் அதிபருமான நுஸ்லி வாடியா கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்ததை மறைப்பதில்லை. இன்றுவரை பிஜேபி தனது கார்ப்பரேட் ஆதரவுத் தளத்தை மறைப்பதில்லை.
எனவே மேலிருந்து கட்டப்படும் த வெ கவின் அரசியல் பொருளாதார பின்புலத்தை மார்க்சியவாதிகள் ஆராய்ந்து இருக்க வேண்டும். உதாரணமாக இந்தக் கட்சிக்கு ஸ்டெர்லைட் வேதாந்தா ஆதரவு அளிக்கிறது என்றால் அது குறித்து கவனமாக இருக்க வேண்டிய பொறுப்பு அறிவு ஜீவி வர்க்கத்துக்கு உள்ளது அல்லவா?
திமுகவுக்கு த வெ க என்பது பிஜேபி யின் கள்ளக் குழந்தை என்பது போதும். அது செலவழிப்பது பிஜேபி பணம் அல்லது மார்ட்டின் பணம் என்பதும் போதும். மற்றவை அவசியமில்லை. மார்ட்டின் பணம் என்றால் திமுக ஏன் 500 கோடி மார்ட்டினிடம் நன்கொடை வாங்கியது என்ற கேள்வியை இடதுசாரிகள் எழுப்பி இருக்க வேண்டும் அல்லவா?
பிஜேபிக்கு 1300 கோடியும் திமுகவுக்கு 500 கோடியும் நன்கொடை அளித்த மார்ட்டின் குழுமம் ஏன் அதிமுகவில் ஐய்கியமாகியது?
கடந்த இருபது ஆண்டுகளில் மார்க்சிய பார்வையை முற்றிலும் இழந்த நிலையில் கார்ப்பரேட் அமைப்புகளின் செயல்பாடுகள், அரசியல் சார்புகள் பற்றி குறிப்பிடத் தக்க நூல்கள் எதுவும் சி பி ஐ, சி பி ஐ எம், எல் எல் எதிலிருந்தும் வரவில்லை. முதலாளித்து பொருளாதார அறிஞரான அங்கலீசரிய அய்யர் போன்ற ஒருவரைக் கூட இடதுசாரித் தளத்தில் உருவாக்கவும் இல்லை. அதிலும் மருதைய்யன் போன்ற முன்னால் எம் எல் காரர்கள் முழுக்க முழுக்க திமுக காரர்களாகவே மாறிவிட்டனர்.
எனவே தமிழ் நாட்டின் முதலாளித்துவ குழுமங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது இடதுசாரி கட்சிகளின் சாதாரண தோழர்களுக்குத் தெரிவதே இல்லை. தலைமைகளும் அது குறித்து எழுதுவதும் பேசுவதும் இல்லை. முதலாளித்துவத்தின் நகர்வுகளை ஒரு வேட்டை நாய் போல விரட்டிச் செல்லாவிட்டால் நடப்பது எதையும் புரிந்து கொள்ள இயலாது. இப்போது இதுதான் நடந்தது.
அதே போல குறைந்த வருமானம் கொண்ட கீழ் நடுத்தர வர்க்கங்கள், உதிரிப் பாட்டாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கத்தின் பல பிரிவுகள், பெண்கள், ஆதிக்க சாதி ஆதிக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தலித்துகள், மற்ற பிற்பட்ட சாதிகள் திமுக, அதிமுக மீது அதிருப்தி கொண்டிருந்தன. ஒரு வாய்ப்பு கிடைத்ததும் இந்தக் கட்சிகளை இந்த மக்கள் புறக்கணித்து விட்டனர். உதாரணமாக ஒரு பொதுத் தொகுதியில் தலித் ஒருவர் கவுன்சிலர் ஆக முடியாது. மாவட்ட அரசு வழக்குரைஞர் ஆக முடியாது. கட்சித் தலைவர்களின் மனைவியாகவோ மகளாகவோ இல்லாவிட்டால் பெண்களும் ஆக முடியாது. எனவே மேல் மட்டத்தில் நடந்த பார்ப்பனிய நீக்கம் கீழ்மட்டத்துக்கு வர வில்லை.
மிகவும் படித்த இளைஞர்கள் எப்போதும் மனநெருக்கடியிலேயே இருக்கின்றனர். ஏரளமாக செலவழிக்கும் ஒரு மாணவர் கல்லூரி முடிக்கும் போதே வேலை பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் பல்லாயிரம் பேருடன் பொதுத் தளத்தில் போட்டியிட வேண்டும். அப்படியே வேலை பெற்றுவிட்டாலும் நீடிக்க வேண்டும், புராஜெக்ட் கிடைக்க வேண்டும். மோசமான கல்லூரிகளில் விளம்பரத்தை நம்பி படிக்கும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டப்படிப்பு படிக்க வெளிநாடு செல்கின்றனர். அமெரிக்கா என்றால் குறைந்தது 70 லட்ச ரூபாய் செலவாகும். இந்தப் பிரிவு இளைஞர்கள் முதலில் அண்ணாமலையை நம்பினார்கள். ஆனால் சாட்டையால் அடித்துக் கொண்டது, குழப்பமான பேச்சுக்கள் உட்கட்சி சண்டையில் சிக்கிக் கொண்டது ஆகியவற்றால் ஏற்பட்ட வெறுப்பால் நல்வாய்ப்பாக அண்ணாமலையால் அந்த செல்வாக்கை, ஆல்பா மேல் இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது விஜய்ண்ணா இந்தக் குழுக்கள் முழுவதையும் அள்ளி விட்டார். இது நடந்திரா விட்டால் நிலைமை மிக மோசமாகியிருக்கும்.
நடுத்தர வர்க்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது இரண்டு கடன்களுக்கு மாதத் தவணைகள் கட்டுகிறது. பெண் உழைப்பைக் கொண்டே இந்த கார் கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றை நடுத்தர வர்க்க குடும்பங்கள் சமாளிக்கின்றன. இவற்றில் இருந்தெல்லாம் உடனடி விடிவு கிடைக்க எந்த வெளிச்சமும் தெரியவில்லை. போதாக்குறைக்கு திமுக அரசு மின் கட்டணத்தையும், வீட்டு வரியையும் வேறு ஏற்றி விட்டது.
இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் அறிவாளி வர்க்கம் தெற்கு வாழ்கிறது, வடக்கு பட்டினி கிடக்கிறது என்று வரும் வீடியோக்களைப் பார்த்து இங்கே பூலோக சொர்க்கம் பிறந்து விட்டதாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருந்தனர்.
தமிழ் நாட்டில் முதலாளித்துவம் அதீத வளர்ச்சி அடைந்தது உண்மை. ஆனால் அது மக்கள் வரை வரவில்லை.
மேலே கூறப்பட்ட பிரிவு மக்களை அணுக திமுக, அதிமுகவால் முடியவில்லை. நீண்ட நாட்களாகவே இந்த நிலைதான். எனவே தான் வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது வந்தது. கொங்குப் பகுதியில் திமுக பலவீனமாக இருக்கிறது என்றால் திமுகவால் காணமுடிந்த ஒரே தீர்வு செந்தில் பாலாஜியைக் கொண்டு வாக்காளர்களைக் கவர்வது. செந்தில் பாலாஜி முந்தைய தேர்தல்களில் பயன்படுத்திய அதே தந்திரங்களைத்தான் பயன்படுத்தினார். அவை அதிமுகவுக்கு எதிராக பலனளித்தன. ஆனால் புதிய நம்பிக்கைகள் உடன் உருவான த வெ கவுக்கு எதிராக அவரது தந்திரங்கள் தோல்விகண்டன.
இறுதியாக தமிழ் நாட்டு இடதுசாரி அறிவாளி வர்க்கமும், கற்றறிந்த பொருளாதார அறிஞர்களும் முதலாளித்துவத்தின் நகர்வுகளையும், அவர்களுக்கு ஒரு புதிய கட்சி தேவைப்படுவதையும், அவர்கள் விஜயை பின்னிருந்து இயக்குவதையும் காணத் தவறினர்.
பல்வேறு மக்கள் பிரிவினர் இடையே உருவகியிருந்த அதிருப்தியை உணரத் தவறினர்.
தேர்தல் கூட்டு என்பதோடு நில்லாமல், கொள்கை அடிப்படையில் நட்பு சக்திகள் என்பதோடு நிறுத்தாமல் இருவரும் ஒன்றே என்ற நிலை எடுத்தது இந்த வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. த வெ கவுடன் உறவு கொண்டால் இந்த வீழ்ச்சி சரி செய்யப்பட்டு விடும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
நாம் வாழும் சமூகத்தின் அரசியலையும், பொருளாதாரத்தையும் புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே முன்னேற முடியும். இல்லாவிட்டால் விஜய் போன்ற பெரும் செல்வாக்கு மிக்க ஒற்றை தலைமையால் முழுமையாக ஓரங்கட்டப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
See less

Leave a Reply
You must be logged in to post a comment.