அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்…
மைலந்தனை
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராம மக்களின் காலடிகூடப்படாத மைலந்தனைக் கிராமம். மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த எல்லைக்கிராமத்தில் இராணுவத்தினர் பொதுமக்களைப் படுகொலை செய்ததன் மூலம் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த அனர்த்தத்தின் பின் இக்கிராமத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள் எழுந்திருந்தது. ஆனால் கிராம மக்களோ பத்திரிகையாளர்களோ அங்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. தற்போதும் அதே நடைமுறையே உள்ளது.

எனினும் தற்போதைய அமைதிச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அங்கு சென்றுவரத் திட்டமிட்டு அகதிமுகாமில் வசிக்கும் இக்கிராம மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு சென்றேன். கொழும்பு வீதியில் இருந்து கிராமத்திற்கு உள்ளே செல்லும் ஒற்றையடிப்பாதையில் இறங்கியதும் அங்கு நின்ற இராணுவத்தினர் வழிமறித்தனர். அங்கு செல்ல முடியாது எனக்கூறினர். நாம் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எமது இடங்களைப் பார்க்கப்போகின்றோம் எனக்கூறினோம். இங்கு வருவதானால் அருகிலுள்ள இராணுவ முகாமில் அறிவித்து உயரதிகாரியின் அனுமதியைப் பெற்றே செல்ல வேண்டுமென அவர்கள் கூறியதுடன், உள்ளே அதிக தூரம் செல்லக் கூடாதெனவும் அறிவுறுத்தி அரைகுறை மனதுடன் அனுமதி தந்தனர்.
அங்கு சென்றபோது நாம் அக்கிராமத்தின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்தோம். கிராமமொன்று இருந்ததற்கான அடையாளங்களே தெரியவில்லை. எங்களுடன் வந்த கிராமவாசிகள் வாய்விட்டு அழுதனர்.
மைலந்தனை கடந்த 1952 ஆம் ஆண்டில் குடியேற்றம் செய்யப்பட்ட மிகப்பழமைவாய்ந்த கிராமம். வாழைச்சேனையில் இருந்து கொழும்பு வீதியில் சுமார் 18 கிலோ மீற்றரில் புணாணைக்கு அருகில் அமைந்துள்ளது.
‘புணாணை “கிராமசேவையாளர் பிரிவின் கீழ் இக்கிராமத்தின் நிருவாக வேலைகள் இடம்பெற்று வந்தன. புணாணையில் புகையிரத நிலையம், பாடசாலை, வர்த்தக நிலையங்கள் என்பன அமைந்திருந்ததுடன் அங்கு குறிப்பிட்டளவு குடும்பங்களே வாழ்ந்தும் வந்தன. ஆனால் மைலந்தனையில் இருநூறு குடும்பங்கள் வரையில் வாழ்ந்து வந்தன.
முதன்முதலாக மைலந்தனைக் கிராமத்தில் வந்தாறுமூலையைச் சேர்ந்தவர்களே குடியேற்றம் செய்யப்பட்டனர். அப்போது கல்குடாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நல்லையா மாஸ்டர் இவர்களை அங்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினார். முதற்கட்டமாக 99 குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்டன.
அன்றைய காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எல்லைப்புறங்களில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டு மேற்கொண்டு வந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான புணாணை, மைலந்தனைப் பகுதியிலும் சிங்களக்குடியேற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வேளையிலேயே அதைத் தடுக்கும் வகையில் மைலந்தனையில் தமிழர்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மேட்டுநிலக்காணியும் வயற்காணியும் வழங்கப்பட்டன. இதன் மூலம் இவர்கள் அங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதுடன் கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வேட்டையாடுதல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டுச் செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தனர்.
இந்தவேளையில் மைலந்தனைக் கிராமத்தில் விரும்பிய தமிழர்கள் எவரும் குடியேற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நல்லையா மாஸ்டர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து 1972 மற்றும் 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையகப் பகுதியில் பெரும்பான்மை இனத்தவரால் மலையகத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளால் அங்கிருந்து இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் மைலந்தனையில் தஞ்சமடைந்ததை அடுத்து அங்கு அவர்களுக்குக் காணிகள் வழங்கப்பட்டு அவர்களும் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
மைலந்தனை கிராமத்திற்கு அருகிலேயே புணாணை அரசாங்கப் பண்ணை அமைந்திருந்தது. இதனால் இக்கிராமம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. இங்குள்ள பலருக்கு இப்பண்ணையில் வேலை வாய்ப்பும் கிடைத்தது.
அக்கிராம மக்கள் தமது முயற்சியினால் கல்வீடுகளும் கட்டினார்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் புணாணை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வந்தனர். எண்பதுகளுக்குப் பிற்பட்ட காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் கவனம் இக்கிராமத்தை நோக்கியும் திரும்பியது. இதனால் சர்வதேச தொண்டர் தாபனம் (ஐ.வி.எஸ்), சி.எஸ்.ஐ. சர்வோதயம் போன்றன அங்கு பாலர் பாடசாலை, கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடம், விளையாட்டு மைதானம் என்பனவற்றை அமைத்துக் கொடுப்பதுடன் பல குடிநீர்க் கிணறுகளையும் அமைத்துக் கொடுத்தன.
புணாணையில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததனால் மைலந்தனையில் அம்மன் ஆலயத்தை அமைத்து பூசை வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டில் இனப்பிரச்சினை தீவிரமடைந்த வேளையிலும் இக்கிராம மக்களுக்கு பாரியளவில் நெருக்கடிகள் ஏற்பட்டதில்லை. ஆனால் இக்கிராமத்திற்கு வடக்காக சுமார் பத்து மைல்களுக்கு அப்பால் கரடிக்குளம் என்னுமிடத்தில் இராணுவ பயிற்சி முகாம் அமைந்திருந்ததுடன் அதை அண்டி பல முகாம்களும் இயங்கி வந்தன. இந்தியப் படைகள் இங்கு நிலைகொண்டிருந்த காலத்தில்கூட அடிக்கடி தேடுதல் நடந்தபோதிலும் பெருமளவில் அச்சுறுத்தல்கள் இருந்ததில்லை.
ஆனால் 11.06.1990 திகதி புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவேளையில் இக்கிராம மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்திக்கவேண்டியிருந்தது.
அந்த வேளையில் வாழைச்சேனை கொழும்பு வீதியில் பல இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. புணாணை புகையிர நிலையத்திலும் படை முகாமொன்று அமைக்கப்பட்டது. இதனால் மைலந்தனைக் கிராம மக்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அங்கு செல்லும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் இளைஞர்களையும் குடும்பஸ்தர்களையும் கைது செய்து விசாரணைக்கென அழைத்துச் சென்றனர். இவ்வாறு அழைத்துச் சென்றவர்களில் ஒரு சிலர் பூசா, களுத்துறை, வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதுடன் பலர் காணாமல்போயும் உள்ளனர்.
இக்காலகட்டத்தில் அடிக்கடி வன்செயல்களும் தமிழ் – முஸ்லிம் கலவரங்களும் ஏற்பட்டதனால் எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த இக்கிராம மக்கள் இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை என்பவற்றால் தாக்குதல்களுக்கு உள்ளானதால் அச்சத்தினால் கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு 1990 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கிராமத்தை விட்டு வெளியேறிய நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழைச்சேனையில் தஞ்சமடைந்ததனால் அகதிமுகாமில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் வந்தாறுமூலையில் உள்ள தமது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தனர்.
இங்கு தமது தொழில்களை விட்டுச் செல்ல விரும்பாத சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் அங்கு பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தன. புணாணை முகாமில் இருந்த படையினர் அடிக்கடி இக்கிராமத்திற்குச் சென்று வருவதுடன் நெருக்குதல்களையும் கொடுத்தனர்.
இந்தவேளையில்தான் 1992.08.08 ஆம் திகதி யாழ்ப்பாணம் அராலித்துறையில் வைத்து அமுக்கவெடியில் யாழ் கட்டளை அதிகாரி டென்சில் கொப்பேகடுவ பலியானார். இச்சம்பவத்திற்கு மறுதினமான 9 ஆம் திகதி நண்பகல் மைலந்தனைக் கிராமம் இரத்தக் காடாக மாறியது.
நண்பகல் வேளையில் இக்கிராமத்திற்குச் சென்ற இராணுவத்தினர் வீடுகளில் இருந்தவர்களை மாதவி என்பவரின் வீட்டு முற்றத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இந்த வேளையில் பலர் அருகிலுள்ள வயல் நிலங்களுக்கும் ஏனைய வேலைகளுக்கும் சென்றிருந்ததால் வீடுகளில் குறைவானவர்களே இருந்தனர். வீடுகளில் இருந்தவர்களில் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் குறுந்தூக்கத்தில் இருந்தனர். மாணவர்கள் பாடசாலையில் இருந்து பசியோடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாதவியின் வீட்டுக்கு முன்பாக இவர்களை ஒன்று திரட்டியபோது இராணுவத்தினர் ஏதோ கூட்டம் வைக்கப்போகின்றனர் என கிராம மக்கள் நினைத்திருந்தபோது இராணுவத்தினர் திடீரென செயலில் இறங்கினர்.
ஏற்கனவே தம்மோடு மறைத்துக்கொண்டு வந்திருந்த இரும்புப் பொல், கத்தி என்பவற்றால் பொதுமக்கள் மீது தாக்கத் தொடங்கினர். எதிர்பாராத தாக்குதலினால் பலர் அவ்விடத்திலேயே துடிதுடிக்கப் பலியாகினர். சிலர் தாக்குதலில் இருந்து தப்பியோடியபோது துப்பாக்கி வேட்டுகள் அவர்களைப் பதம் பார்த்தன.
வயல்களிலும் தோட்டங்களிலும் நின்றவர்கள் சத்தம் கேட்டு காடுகளில் மறைந்து கொண்டனர். இத்தாக்குதலினால் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என 35 பேர் பலியானார்கள். சுமார் பத்துப்பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய மக்கள் இதுவரை தமது கிராமத்தை எட்டியும் பார்க்கவில்லை.
நாங்கள் கடந்த வாரம் அங்கு சென்றபோது எங்களுடன் வந்த கிராம மக்கள் சிலர் தமது இடங்களை இனங்காண முடியாது திண்டாடினர். அவர்களின் வனப்புமிக்க கிராமம் சோபையிழந்து காடுமண்டிக் கிடக்கும் காட்சியைக் கண்டு வந்தவர்களின் கண்கள் பனித்தன. தமது கிராமத்தின் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் அவர்கள் கற்பனை செய்திருக்க வேண்டும்.
வீடுகள் இருந்த இடமே தெரியவில்லை. வீடுகள் இருந்த இடத்தில் மணல் திட்டிகளே காணப்படுகின்றன. அவர்கள் நட்டு வளர்த்த தென்னை, மா, பலா போன்ற பயனுள்ள மரங்களைக் காணவில்லை. இந்த மரங்கள் உட்பட காட்டு மரங்களும் வெட்டப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அம்மன் கோயில் இடிந்துபோய் காணப்படுகின்றது. சனசமூக நிலைக் கட்டிடத்திற்கும் அதேகதிதான் நடந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் அமைந்துள்ள தமிழ் கிராமங்களில் ஒன்று மைலந்தனை. நில வளமும் நீர் வளமும் சூழப்பெற்ற இக்கிராமத்தில் விவசாயம் செய்து வந்த மக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வாழைச்சேனையில் உள்ள அகதிமுகாமொன்றில் வசித்து வருகின்றனர்.
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளின் பின்னர் தற்போதைய அமைதிச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அண்மையில் இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு சென்று தமது கிராமத்தைப் பார்வையிட்டனர். அங்கு சென்ற மக்கள் தமது கிராமத்தின் தற்போதைய நிலை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் கண்களில் நீர் கனத்ததையும் காணமுடிந்தது.
இக்காலகட்டத்தில் அடிக்கடி வன்செயல்களும் தமிழ் – முஸ்லிம் உலவரங்களும் ஏற்பட்டதனால் எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த இக்கிராம மக்கள் இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை என்பவற்றால் தாக்குதல்களுக்கு உள்ளானதால் அச்சத்தினால் கிராமத்தைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் அங்கு சென்றவர்கள் படுகொலை நடந்த மாதவியின் வீட்டு முற்றத்தைத் தேடினர். கொலை நடந்த இடத்தில் இன்னும் கிழிந்த ஆடைகள் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்தன. மாதவி வீட்டு முற்றத்தில் நட்டு வளர்த்த செம்பருத்தி பூமரத்தைக் காட்டுப் பற்றைகள் மூடி மறைத்திருந்தபோதிலும் அதற்கிடையே சில பூக்கள் மலர்ந்திருந்தன. கிணறு இன்னும் அப்படியே இருந்தது.
கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்ட கிராம வாசிகள் வாய்விட்டு அழுதனர். அன்றைய சம்பவம் இன்னும் அவர்களின் மனதைவிட்டு அகலாது ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த இடத்தைப் பார்த்தபோது அவர்களின் உறவுகளின் நினைவு அவர்களை ஆழமாகத் தாக்கியுள்ளதுபோலும்.
அவ்விடத்தில் சில நிமிடங்கள் மௌனமாகக் கலைந்தன. அவர்கள் கிராமத்தின் ஏனைய இடங்களையும் சுற்றிப் பார்வையிட்டனர். எங்கும் காடு மண்டிக் கிடப்பதால் தமது இடங்களை அவர்களால் இலகுவில் அடையாளம் காணமுடியவில்லை. கிராமத்தின் மத்தியில் ஊடறுத்துச் சென்ற, அவர்கள் போக்குவரத்துச் செய்த அந்த வீதியைக் காணவில்லை. வீதியை மூடி காடு வளர்ந்துள்ளது.
பழமை வாய்ந்த தமிழ் கிராமம் இன்று காடு மண்டி அழிந்துபோயுள்ளது. இது மாத்திரமின்றி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்களின் சரித்திரம் இவ்வாறே மாறிப்போயுள்ளது.
“அன்று இவ்வாறானதொரு சம்பவம் நடக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. இதுதான் மாதவியின் வீடு இருந்த இடம். இந்த இடத்தில்தான் அக்கோரச் சம்பவம் நடந்தது. நான் நண்பகல் எனது வீட்டில் இருந்தேன். அப்போது அங்கு வந்த இராணுவத்தினர் என்னையும் மனைவியையும் பிள்ளையையும் இவ்விடத்திற்கு அழைத்து வந்தனர்.
என்னைப்போல் பலரையும் அழைத்து வந்த அவர்கள் இவ்விடத்தில் நிலத்தில் அமரவைத்தனர். அந்த இடத்தில் கர்ப்பிணிகள்,
வயோதிபர்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்தனர். எங்களைச் சுற்றி இராணுவத்தினர் நின்றனர். அந்தவேளை அங்கு வந்த அதிகாரி ஒருவர் சிங்களத்தில் ஆத்திரத்துடன் கத்தினார். அதையடுத்து எங்கள் மீது இராணுவத்தினர் தாக்கத் தொடங்கினர்.
இந்த இடம் இரத்தக் காடாக மாறியது. பலர் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். சிலர் நாலாதிசையும் சிதறி ஓடினர். நான் வெட்டுண்டவன் மாதிரி நிலத்தில் கிடந்தேன். பின் எழுந்து ஓடினேன். தெய்வாதீனமாக எனது மனைவிக்கும் பிள்ளைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. ஆனால் எனது சகோதரர் அவர்களின் குடும்பங்கள் அனைத்துமே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டு விட்டனர். “இந்த இடத்தை எனக்குப் பார்க்கும்போது அவர்களின் ஞாபகமே வருகின்றது” என்று கூறிவிட்டு வாய்விட்டு அழுதார் மைலந்தனை வாசி வைரமுத்து மாணிக்கராஜா என்ற 34 வயது குடும்பஸ்தர்.
இவரும் மைலந்தனை கொலை வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவர். மைலந்தனை கிராமத்தை நேரில் சென்று பார்க்கும்போது, அங்கு நடந்த கொலைச் சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுடன் அவ்விடத்தில் நின்று உரையாடும்போது தான் அன்றைய சம்பவத்தின் கோரம் புரியும்.
கொலை நடந்த மாதவியின் வீட்டு முற்றம் காடு மண்டிக் கிடந்தாலும் இன்னும் இரத்தக் கறையுடன் கூடிய ஆடைகள் நிலத்தில் புதைந்து கிடந்தன. அது மாத்திரமின்றி மீன்பிடிக்கும் வலையின் பாகங்கள், குசினியில் பாவித்த பொருட்கள் என்பனவும் இன்னும் அழியாமல் கிடந்தன. மாதவி பாவித்த உரல் அப்படியே கிடந்தது. இன்னுமொரு இடத்தில் குப்பி விளக்கொன்றும் ‘சூட்கேஸ்’ ஒன்றும் கிடந்தது. சில தகரத் துண்டுகளும் கிடந்தன. இது கந்தையாவின் வீடு என்று அங்கு வந்தவர்கள் கூறினார்கள். அந்த இடத்தில் பெண்கள் பாவிக்கும் ‘பேர்ஸ்’ ஒன்றும் கிடந்தது.
நான் கடந்த வாரம் கூறியதுபோன்று அங்கு கிராமம் ஒன்று இருந்ததற்குரிய ஆதாரங்கள் அங்கு இடிந்துபோயுள்ள அம்மன் ஆலயம், சனசமுகக் கட்டிடம் மற்றும் ஓரிரு கிணறுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. வீடுகள் இருந்ததற்கான அடையாளங்கள் வெளிப்படையாக இல்லை. ஆனால் அவதானமாகப் பார்த்தால்தான் வீடுகள் இருந்த இடங்களில் மணல் திட்டியாக உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அதுவும் மரங்கள், பற்றைகள் படர்ந்து மண்டிப்போய் உள்ளது.
இந்த இடத்திற்கு தற்போது முதற் தடவையாக யாரையும் அழைத்துச் சென்று இங்கு கிராமமொன்று இருந்தது என்று கூறினால் கடைசி வரையும் நம்பமாட்டார்கள். அந்தளவிற்கு இக்கிராமம் மாறிப்போயுள்ளது.
அங்கு வந்தவர்கள் இடிந்துபோய் கிடந்த அம்மன் ஆலயத்திற்கு
முன்னால் கிடந்த கல்லில் கற்பூரம் கொழுத்தி வணங்கினார்கள்.
தங்களைக் காத்து வந்த தெய்வம் என்று கூறினார்கள். ஆனால் அன்று நடந்த படுகொலையை மாத்திரம் இத்தெய்வத்தால் நிறுத்த
முடியாமல் போய்விட்டது என்று வாய்க்குள் முணுமுணுத்தனர்.
இங்கு சென்ற எமக்கு மைலந்தனைக் கிராமத்திற்குள் இருந்த பல மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் பல பெறுமதி மிக்க காட்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. காட்டின் மத்தியில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றைக் கண்டபோது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.
மைலந்தனை கிராமத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்பதில் புணாணை புகையிரத நிலையத்தில் இயங்கி வரும் இராணுவ முகாம் அதிகாரிகள் தற்போதும் மிகவும் கண்டிப்பாக உள்ளனர். இப்படு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட முகாமும் இதுதான்.
கடந்த வருடம் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின் சுமுக நிலை ஏற்பட்டதால் பலர் இக்கிராமத்திற்குச் சென்று தமது இடங்களைப் பார்வையிடப்போனபோது புனாணை இராணுவ முகாம்
இராணுவத்தினர் அவர்களை கிராமத்திற்குள்ளே செல்லவிடாது தடுத்தனர். கிராம வாசிகள் எவ்வளவு சொல்லிப் பார்த்தும் இது முகாம் அதிகாரியின் கடுமையான உத்தரவு எனக்கூறி இராணுவத்தினர் திருப்பி அனுப்பிவிட்டனர்.
படுகொலை நடந்த கிராமம் என்பதால்தான் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோ என கிராம வாசிகள் நினைத்துள்ளனர். இது போன்றே மைலந்தனை கிராமத்திற்கு அருகாக புணாணை இராணுவ முகாமுக்கு எதிராக உள்ள குளத்தில் மீன்பிடிக்க இக்கிராம வாசிகள் சென்றபோதும் படையினர் அனுமதி வழங்கவில்லை.
கிராம மீனவர்கள் படை அதிகாரியிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டபின் குளத்தில் மாத்திரமே மீன்பிடிக்க வேண்டும் மைலந்தனைக் கிராமத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்ற உத்தரவுடன் தினமும் முகாமில் வந்து கையெழுத்திட்ட பின்பே மீன்பிடிக்கச் செல்ல வேண்டுமெனவும் திரும்பிச் செல்லும்போதும் கையெழுத்திட வேண்டுமெனவும் கூறியுள்ளார். இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளாத மீனவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். சிலர் தமது குடும்ப வறுமையின் காரணமாக தற்போதும் கையொப்பம் போட்டுவிட்டு மீன்பிடித்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்குச் சென்றபின்தான் படை அதிகாரியும் படையினரும் ஏன் இக்கிராமத்தின் மீது மிகவும் கரிசனையாக உள்ளனர் என்பதை ஊகிக்க முடிந்தது. அந்த ஊகத்தைப் பின்னர் உறுதிப் படுத்தவும் முடிந்தது.
இக்கிராமத்தில் உள்ள பெறுமதி மிக்க காட்டு மரங்கள் மற்றும் விறகு என்பன வெட்டப்பட்டு ஒரு சில முஸ்லிம் வியாபாரிகளினால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை வெட்டிக் கொடுப்பதற்கு இந்த வியாபாரிகளால் ஒரு சிலர் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு மரங்களை வெட்டுவதற்கும் அவற்றை ஏற்றிச் செல்வதற்கும் இராணுவ அதிகாரிக்கு ஒரு தொகைப் பணம் கொடுக்கப்படுகின்றது.
இந்த ‘கரிசனையால்’ தான் இராணுவ அதிகாரி இக்கிராமத்தின் மீது மிகவும் அக்கறையாக இருந்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன் கிராம வாசிகள் அழிக்கப்பட்ட அதே இராணுவ முகாமினால்தான் இன்று கிராமத்தின் வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இக்கிராமத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்று கூறிய போதிலும் அங்கு லொறிகளில் சென்று மரங்கள் ஏற்றப்பட்டு வருகின்றன.
தமிழ் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதொன்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அழிக்கப்படுவது மற்றொன்று. இந்த இரு விடயங்களும் மைலந்தனைக் கிராமத்தில் நடந்துவருகின்றன.
செழிப்பு மிக்க, வளங்கள் நிறைந்த இக்கிராமத்தில் மக்கள் பயிர் செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தனர். படுகொலையின் பின் இவர்கள் அகதிகளாயினர். இந்த அகதி வாழ்க்கை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இக்கிராமத்தைப் பயன்படுத்தி சில புல்லுருவிகள் பயன்பெற்று வருவதுடன் இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.
மக்களைப் பாதுகாப்பதாகவும் நாட்டைப் பாதுகாப்பதாகவும் கூறிக்கொள்ளும் இராணுவத்தினரில் சிலர் சண்டை நடந்த காலத்தில் மாத்திரமின்றி தற்போது அமைதி நிலவும் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் சொத்துக்களை அழிக்கும் கைங்கரியங்களிலுமே ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாறாது போனால் நாட்டில் அமைதி ஏற்பட்டாலும் சில பகுதிகளில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையே ஏற்படும். இதற்கு மைலந்தனை நல்லதொரு உதாரணமாகும்.
மைலந்தனைக் கிராமத்தில் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்குச் சகல வசதிகளும் செய்துகொடுக்க வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தினது மட்டுமின்றி சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள, வடக்குக் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ள புலிகளினதும் கடமையாகும்.
இக்கிராமத்தைச் சுற்றி பார்வையிட்டபின் திரும்பி வரும் வழியில் அவர்களிடம் இங்கு மீளக்குடியமர்ந்து நீங்கள் முன்புபோல் தொழில் செய்து நிம்மதியாக வாழலாமே. இன்னுமேன் மற்றவரிடம் கையேந்தி வாழ வேண்டும். எமது நிலங்களை நாமே காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன்.
மீளக்குடியமர்வதற்கு அவர்கள் தயாராகவே உள்ளனர். எனினும் அதற்கு அவர்கள் கூறிய சில விடயங்கள் உண்மையில் கவனத்தில் எடுக்க வேண்டியதாகும்.
“எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதியின் முன் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த எமக்கு ஏமாற்றமே கிடைத்தது. பத்து வருடங்களுக்கு மேலாக நாம் இந்த வழக்குக்காக கொழும்புவரை அலைந்துள்ளோம். இராணுவத்தினருக்கு எதிராக சாட்சி கூறினோம். கண்கண்ட சாட்சிகளாக அது இருந்தபோதிலும் ஜுரிமார் கொலை குற்றவாளிகளான இராணுவத்தினரை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துவிட்டனர். ஜூரிமார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீதிக்கு அப்பால் நின்று தாம் சார்ந்த இனத்தவர்கள் குற்றவாளிகளாக இருந்தபோதிலும் அவர்களை நிரபராதிகளாக்கியுள்ளனர். இது எமக்கு பெரும் வேதனையையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. கொலையுண்டு போனவர்களின் ஆத்மாக்கள் கூட இத்தீர்ப்பால் சாந்தியடையப்போவதில்லை” என்று கூறினார் மைலந்தனை வாசி கே.கிருஸ்ணன்.
மைலந்தனைக் கிராமத்தில் மீளக்குடியமர்ந்து வாழ்வதற்கு இவர்களுக்கு விருப்பமுள்ள போதிலும் பாதுகாப்பு விடயத்தில் அவர்கள் அச்சமடைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். நாம் இக்கிராம வாசிகளிடம் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்வது தொடர்பாகக் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் “நாம் எமது கிராமத்தை மிகவும் நேசிக்கிறோம். கடந்த பத்து வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்து
விட்டோம். தற்போது அமைதிச் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு திரும்பிச் செல்வதனால் அதற்கான சகல நடவடிக்கைகளும் செய்து தரப்பட வேண்டும். எனினும் மீண்டும் ஒரு போர் ஆரம்பமாகுமானால் எமது நிலை கேள்விக்குறியாகவே மாறும்” என்றும் அவர் கூறினார்.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையமே இந்த வழக்கின் சாட்சிகளான பொதுமக்களின் நலன்களைக் கவனித்து வந்தது. இந்நிலையத்தின் செயலாளர் என்.கந்தசாமி கூறுகையில் “கடந்த 92 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வழக்கு நடைபெற்று வந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைவிட சந்தேக நபர்களின் நலனிலே அரசும் நீதித்துறையும் அக்கறையுடன் செயற்பட்டு வந்தது. இறுதியில் தீர்ப்பும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டு விட்டது.
1992 ஆம் ஆண்டு இந்த வழக்கு மட்டக்களப்பு ‘மஜிஸ்ரேட்’ நீதிமன்றில் நடைபெற்றது. பின்னர் சந்தேக நபர்களான இராணுவத்தினரின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு பொலநறுவைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு பொலநறுவைக்கு மாற்றப்பட்டதை ஆட்சேபித்து நாம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தபோது அதைக் கவனத்தில் கொள்ளாது வழக்கை கொழும்பு நீதிமன்றுக்கே மாற்றிவிட்டனர்.
மட்டக்களப்பில் அகதிமுகாமில் வசித்து வரும் சாட்சிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு என்பன இந்த விடயத்தில் உதாசீனம் செய்யப்பட்டது. இறுதியில் ஜூரிமார் சந்தேக நபர்களை நிரபராதிகளாக விடுதலை செய்துள்ளனர். இந்த வழக்கை நடத்திய மேல் நீதிமன்ற நீதிபதி கூட இரு தடவைகள் இந்தத் தீர்ப்பை பரிசீலனை செய்யுமாறு ஜுரர்களிடம் கேட்டுக்கொண்ட போதிலும் தீர்ப்பு சந்தேக நபர்களுக்குச் சாதகமாகவே வழங்கப்பட்டு விட்டது.
“இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களை மாத்திரமின்றி நீதித்துறையில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் அனைவரையும்
ஏமாற்றமடைய வைத்துள்ளதுடன் நீதித்துறையில் வைத்திருந்த நம்பிக்கையையும் இழக்க வைத்துள்ளது” என்றார்.
இப்படுகொலை தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சி கூறியுள்ளனர். இவர்கள் தம்மை நன்கு அடையாளப்படுத்தியுள்ளனர். ஆனால் வழக்கு விசாரணையில் அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்புக் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் மீண்டும் தம்மீது இராணுவத்தினர் தமது கோரக் கரங்களை நீட்டலாம் என்று அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இராணுவத்தினர் மீண்டும் புணாணை இராணுவ முகாமுக்கோ அல்லது இப்பகுதியில் உள்ள எந்தவொரு முகாமிற்கோ கடமைக்கு வந்தால் தம்மை பழிவாங்குவார்கள் என்று கிராம வாசிகள் கூறுகின்றனர்.
இதனால் தாம் மைலந்தனையில் மீளக்குடியமர்வதென்றால் முக்கியமாகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வீடு, பாடசாலை, ஆலயம், வீதிகள் என்பன அமைத்துத் தரப்படுவதுடன் தமக்கு ஏற்கனவே மகாவலி ‘பி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நெற்செய்கைக் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
மைலந்தனையில் இவர்களுக்கு மேட்டு நிலமே முன்பு வழங்கப்பட்டது. இதனால் நெற்செய்கைக்கான காணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து வயற்காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி மகாவலி ‘பி’ திட்டத்தின் கீழ் இவர்களுக்கு 1990 ஆம் ஆண்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி நடத்தப்பட்டு காணி ஒதுக்கப்பட்டது.
இதன்பின் 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதை அடுத்தும் மக்கள் இடம் பெயர்ந்ததை அடுத்தும் இக்காணி வழங்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது. ஆனால்
இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இக்காணி பின்னர் திட்டமிட்ட முறையில் பறிபோயுள்ளது.
இக்காணிகளில் கள்ளிச்சை கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் குடியேற்றத்துடன் ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டது. இக்குடியேற்றமே தற்போது ‘ரிதிதென்ன’ என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
இதனால் தமக்கென ஒதுக்கப்பட்ட இக்காணிகள் மீண்டும் தமக்கு வழங்கப்பட வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இக்காரணங்களினாலேயே இவர்கள் இன்னும் அகதி முகாம்களிலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த 233 குடும்பங்களில் தற்போது 57 குடும்பங்கள் தொடர்ந்து கல்மடு அகதி முகாமில் வசித்து வருகின்றன. ஏனையோர் பேத்தாழை, கண்ணன்கிராமம், வந்தாறுமூலை, மாவடிவேம்பு போன்ற இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் உள்ளனர்.
புணாணையில் இயங்கி வந்த பாடசாலையும் தற்போது கண்ணன் கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயக் கட்டிடத்தில் வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகின்றது. பல மாணவர்கள் புனாணை பாடசாலையில் இருந்து விலகி பேத்தாழை, வாழைச்சேனை மற்றும் வந்தாறுமூலை ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளிலும் கல்வி கற்று வருகின்றனர்.
எனினும் படுகொலை மற்றும் இடம்பெயர்வை அடுத்து பல மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். இவர்கள் வறுமை காரணமாக சிறுவயதிலேயே தொழிலுக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். மீன்பிடி, அரிவி வெட்டுதல் போன்ற தொழில்களிலும் பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள அரிசி ஆலைகளில் கூலி வேலை செய்வதிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இக்கிராமவாசிகள் இடம்பெயர்ந்து வந்த 90 ஆம் 92 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்த குழந்தைகளே தற்போது பாடசாலைக்குச் சென்று வருகின்றனர். இவர்களிலும் பல குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லாமல் முகாம்களில் முடங்கிக் கிடப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
வறுமை மற்றும் பெற்றோரின் அக்கறை இன்மையே இச்சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாததற்கு காரணமாகும்.
எனவே இவ்வாறான சமூக கட்டமைப்புகள் சிதைவடைந்து போயுள்ள மைலந்தனை மக்களை மீளக்குடியேற்றுவதன் மூலம் மீண்டும் நல்ல ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்குவதுடன் சிதைவடைந்து கிடக்கும் பழம்பெரும் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் மைலந்தனை ஒரு எடுத்துக்காட்டு. இதுபோல் பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
See less

Leave a Reply
You must be logged in to post a comment.