செல்வநாயகத்தின் அரசியல்பாரம்பரியம் முக்கியமாக இரண்டு அம்சங்களால் நினைவு கூரப்படுகிறது!

“செல்வநாயகத்தின் அரசியல் பாரம்பரியம் முக்கியமாக இரண்டு அம்சங்களால் நினைவு கூரப்படுகிறது. கூட்டாட்சிக்கான அவரது உறுதியான ஆதரவும், அதை முற்றிலும் அகிம்சை அரசியல் வழிமுறைகளின் மூலம் அடைவதற்கான அவரது விடாமுயற்சியும் ஆகும்” இவ்வாறு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் நடைபெற்ற தமிழ்த் தேசியத்தின் தந்தை என போற்றப்படும் செல்வநாயகம் அவர்களின் 49ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் நினைவுப் பேருரையாற்றிய திரு. இராஜன் பிலிப்ஸ், எழுத்தாளர், பொறியாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி ஸ்காபரோ மோர்னிங் சயிட் இலக்கம் 2450 யூனிட் 11 இல் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசியத்தை நேசிக்கும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்கள்..
நினைவேந்தல் அகவணக்கத்தோடு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்தும் கனடா தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. சபையோர் வரிசையாக வந்து தந்தை செல்வநாயகத்தின் திருவுருவப் படத்துக்க மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அறிமுக உரையை கததேகூ இன் காப்பாளர் திரு வின் மகாலிங்கம் நிகழ்த்தினார்.

தொடர்ந்து பேசிய திரு இராஜன் பிலிப்ஸ் “ டொராண்டோவில் தந்தை செல்வநாயகத்தை நினைவு கூருவது, கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சிறப்பு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இலங்கைக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களில் மிக அதிகமானோர் வாழும் நாடு கனடா ஆகும். தமிழர்கள் தங்களது அரசியல் விருப்பங்களையும் தேசிய அபிலாஷைகளையும் வெளிப்படுத்தவும் முன்னிறுத்தவும் — குறிப்பிட்ட காலங்களில் தங்கள் தாய்நாட்டில் கூட இயலாமல் இருந்த அளவுக்கு — சுதந்திரமான சூழலை இந்த நாடு வழங்கியுள்ளது. கைது செய்யப்படுவோம், சிறையில் அடைக்கப்படுவோம் அல்லது கொல்லப்படுவோம் என்ற அச்சமின்றித் தமிழர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பை கனடா அளித்துள்ளது. பல்லின மக்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டின் பிரச்சினைக்கு கூட்டாட்சியே தீர்வு என்று 30 ஆண்டுகளாக வலியுறுத்திய செல்வநாயகம் அவர்களது அரசியல் கோட்பாட்டுக்கு கனடா எடுத்துக்காட்டாக கனடா திகழ்கிறது.
இன்று செல்வநாயகத்தின் அரசியல் பாரம்பரியம் முக்கியமாக இரண்டு அம்சங்களால் நினைவு கூரப்படுகிறது. கூட்டாட்சிக்கான அவரது உறுதியான ஆதரவும், அதை முற்றிலும் அகிம்சை அரசியல் வழிமுறைகளின் மூலம் அடைவதற்கான அவரது விடாமுயற்சியும் ஆகும். செல்வநாயகத்தின் அரசியல் வாழ்க்கை 1947ஆம் ஆண்டு காங்கேசன்துறைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 1977ஆம் ஆண்டு அவர் மரணமடையும் வரை முப்பது ஆண்டுகள் நீடித்தது.
கூட்டாட்சிக்கான தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ் பேசும் மக்களின் “நான்கு அடிப்படை கோரிக்கைகள்” என அவர் வகுத்துக் கூறினார். அந்த அரசியல் குடையின் கீழ் இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் அனைவரும் அடங்கினர். அந்த நான்கு கோரிக்கைகள்:
- மலையகத் தமிழர்களின் குடியுரிமைகளை மீட்டெடுத்தல்,
- வடக்கும் கிழக்கிலும் அரசால் ஆதரிக்கப்படும் குடியேற்றத் திட்டங்களை நிறுத்தல்,
- சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துடைய மொழிகளாக அங்கீகரித்தல்,
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் பிராந்திய தன்னாட்சிமுறை அமைத்தல்.
செல்வநாயகம் வாழ்ந்த காலத்திலேயே இந்த நான்கு கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அவை நாட்டின் அரசியல் விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் தவிர்க்க முடியாத அளவிற்கு ஆழமாகப் பதிந்துவிட்டன. அவரது மறைவிற்குப் பின்னரும் அவை ஏதோ ஒரு வடிவில் கையாளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் நிகழ்ந்த அரசியல் முன்னேற்றங்களே இன்று “செல்வநாயகத்தின் பாரம்பரியம்” எனக் கருதப்படுகின்றன.
ஆனால் அவரது பாரம்பரியம் இதைவிட விரிவானது. அரசியல், பொது வாழ்க்கை, பொது சேவை மற்றும் தனியார் தொழில் துறைகளில் உயர்ந்த மனப்பான்மையுடனும் நேர்மையுடனும் செயல்பட்ட இலங்கையர்களின் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவராக அவர் இருந்தார். அந்த தலைமுறையில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இருந்தனர். அரசியலில் உயர்ந்த ஒழுக்க நெறியின் உருவகமாக செல்வநாயகம் விளங்கினார். ஆனால் அவர் மட்டுமல்ல; 20ஆம் நூற்றாண்டில் அத்தகைய பலர் இருந்தனர். அதன் பின் அப்படிப்பட்டோரின் தொகை மிகக் குறைவு.
திரு நக்கீரன் தங்கவேலு தனது தலைமை உரையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்னால் இருந்த காரண, காரியங்களை எடுத்துரைத்தார். “இன்று தமிழ்த் தேசியத்தின் தந்தை செல்வநாயகம் அவர்களின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தலை அனுட்டித்துக் கொண்டிருக்கிறோம். தந்தை செல்வநாயகம் தனி மனிதர் அல்ல. அவர் ஒரு வரலாறு. அவர் தமி்ழினத்துக்கு வாராது வந்த மாமணி. அவர் பிறந்திரரேல் ஈழத் தமிழர்களது வரலாறு திசை மாறிப் போயிருக்கும்.”
ஒரு சுதந்திர இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படாது என்று டி.எஸ் சேனநாயக்க கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழ் சட்ட சபை உறுப்பினர்கள் இலங்கை சோல்பரி அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அப்போது சட்ட சபையில் உரையாற்றிய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா பின்வருமாறு பேசினார்.
“நான் வழக்கமாக ஒரு சிங்களராகப் பேசுவதில்லை; சடட சபையின் தலைவரும் தன்னை ஒரு சிங்களப் பிரதிநிதியாகக் கருதக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் இம்முறை, ஒரு சிங்களராகப் பேச விரும்புகிறேன். என் முழு வலிமையுடனும் கூற விரும்புவது என்னவென்றால், ஒரு சமூகத்தின் நலன் எல்லா சமூகங்களின் நலனாகும். நாம் இனம் அல்லது மதம் எதுவாயினும், ஒன்றுக்கொன்று உடன்பிறப்புகள் ஆக இருக்கிறோம்.”
தமிழர்களையும் பிற சிறுபான்மை சமூகங்களையும் சோல்பரி அரசியலமைப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்ட அவர் “நீங்கள் இலண்டனிலிருந்து ஆளப்பட விரும்புகிறீர்களா? அல்லது இலங்கையர்களாக இருந்து இலங்கையை ஆளுவதில் பங்கேற்க விரும்புகிறீர்களா? இலங்கை தேசிய காங்கிரஸின் சார்பிலும், எனது சார்பிலும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு நான் உளமார்ந்த உத்தரவாதம் அளிக்கிறேன்—சுதந்திர இலங்கையில் எங்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.”
ஆனால் சேனநாயக்கா அவர்கள் உதட்டில் தேனும் உள்ளத்தில் நஞ்சும் வைத்துப் பேசினார் என்பதை அன்றைய அப்பாவித் தமிழ்ப் பிரதிநிதிகள் அறிந்திருக்கவில்லை. சேனநாயக்கா பேசியதை வேதவாக்காக நம்பினார்கள். சேனநாயக்காவின் வேடம் இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் கலைந்தது. அதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் வாக்களித்த 8 இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை 1948 ஆம் ஆண்டு சேனநாயக்காவினால் சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட இலங்கை குடியுரிமை சட்டம் இல. 48 இன் மூலம் பறிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின் முதல் வாசிப்பு ஓகஸ்ட் 04 ஆம் திகதி. இரண்டாம் வாசிப்பு ஓகஸ்ட் 19, மூன்றாம் வாசிப்பு ஒகஸ்ட் 20, 1948, சட்டமான திகதி நொவெம்பம்பர் 20, 1948. மொத்தத்தில் நாடு சுதந்திரம் பெற்று 285 நாட்களுக்குள் 700,000 இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். இந்த சட்டத்தை தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்துப் பேசினார்.
“You are now hitting at the weakest section of the Tamils. You are hitting at the innocent and weak that labouring in the chill and the cold of the plantations producing your wealth. We will know where we stand… when our turn comes next …We will know when the next piece of legislation in this series comes…… The one dealing with our language.”
“நீங்கள் இப்போது தமிழர்களில் மிகவும் நலிந்த பிரிவினரைத் தாக்குகிறீர்கள்; உங்கள் செல்வத்தை உருவாக்கும் தோட்டங்களில் கடுங்குளிரிலும் ககடுமையான சூழலிலும் உழைக்கும் அப்பாவி மக்களை, நலிந்தவர்களைத் தாக்குகிறீர்கள். அடுத்ததாக எங்கள் முறை முறை வரும்போது நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்… இந்தத் தொடரில் அடுத்த சட்டம் வரும்போது, அதாவது எங்கள் மொழியைப் பற்றிய சட்டம் வரும்போது, நாங்கள் அறிந்து கொள்வோம்.”
இந்தச் சட்டத்தை எதிர்த்து திரு ஜிஜி பொன்னம்பலம் வாக்களித்தாலும் அதற்கு முன்னரே திரைமறைவில் அவர் டி.எஸ். சேனநாயக்கா அவர்களது அமைச்சரவையில் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். தந்தை செல்வநாயகம் இந்தச் சட்டத்தை எதிர்த்து பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த திரு ஜிஜி பொன்னம்பலம் அவரது வேட்டியைப் பிடித்து “Chelva don’t burn the boats” (“செல்வா, படகுகளை எரிக்க வேண்டாம்.”) என்று தனது வேட்டியைப் பிடித்து இழுத்த வண்ணம் இருந்தார் என தந்தை செல்வா எம்மிடம் ஒரு முறை சொன்னார். Don’t burn the boats means avoid irreversible actions; keep your options open என்பதன் பொருள் உங்கள் பின்வாங்கும் வாய்ப்புகளையும், சமரசம் செய்யும் வாய்ப்புகளையும், எதிர்காலத் தேர்வுகளையும் நீங்களே அழித்துக்கொள்ள வேண்டாம் என்பதாகும். பச்சையாகச் சொன்னால் நான் அமைச்சர் அவையில் அமைச்சராகச் சேர சேனநாயக்கா அவர்களோடு பேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் அதனைக் கெடுத்துவிடாதே” என்று பொருள்.
நான் ஏற்கனவே சொன்னது போல இலங்கை குடியுரமைச் சட்ட வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நிறைவேற்றப்படுகிறது. அதே ஆண்டு செப்தெம்பர் மாதம் 09 ஆம் திகதி பொன்னம்பலம் மீன்பிடி, கைத்தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த இரண்டகத்தை மனதில் வைத்துத்தான் தந்தை செல்வநாயகம் டிசெம்பர் 19, 1949 அன்று இதஅக தொடக்கப்பட்ட போது தனது தொடக்க உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“சென்ற காலங்களில் தலைவர்களின் உறுதியற்ற நிலையே, எமது பலவீனத்துக்குக் காரணமாயிருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்தாலன்றி, எமது கட்சியும் தோல்வியுறும். ஐரிஷ் தேசியவாதிகளைப்போல, சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை, “பதவி ஏற்கவே மாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமுமாக யாம் இருத்தலாகாது.”
இலங்கைக் குயுரிமைச் சட்டத்தை அடுத்த ஆண்டு (1949) இலங்கை நாடாளுமன்ற தேர்தல் (திருத்த) சட்டத்தில் ஒற்றைவரித் திருத்தம் கொண்டுவரப்பட்டது. “நாட்டின் குடிமக்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க உரித்துடையவர்கள்” என்பதே அந்தத் திருத்தம் ஆகும். இந்தச் சட்டத்தினால் 8 இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்தார்கள்.
அடுத்துப் பேசிய முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு அஸ்மின் அயூப் “ தந்தை செல்வா தமிழர்களின் தலைவர் மட்டுமல்ல; தமிழ்பேசும் அனைத்து மக்களினதும் தலைவராகக் கருதப்பட வேண்டிய ஒருவராவர்.
முஸ்லிம் சமூகத்தையும் அவர் தனது அரசியல் சிந்தனையில் இணைத்தார். வடக்கு–கிழக்கு முஸ்லிம் மக்களை ஒரு தனித்த “தேசம்” என அடையாளப்படுத்தியவர் அவர். தமிழ்–முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்க பல முன்னுதாரணங்களை உருவாக்கினார். “தேசம், தாயகம், சுயநிர்ணயம்” என்ற மூன்று அடிப்படைகளை அவர் முன்வைத்தார். தமிழ்பேசும் மக்களின் அரசியல் அங்கீகாரத்தை உலகளவில் எடுத்துச் சென்றார். சிங்கள அரசியல் ஆதிக்க எண்ணத்தை அவர் சவாலிட்டார். 1949 முதல் 1976 வரை ஒருங்கிணைந்த அரசியல் பாதையை வழிநடத்தினார்.
திரு அஸ்மின் அயூப் அவர்களைத் தொடர்ந்து மருத்துவர் மைதிலி வில்சன், ஊடகவியலாளர் திரு சாமி அப்பாத்துரை, பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினார்கள். திரு அருள் எம் இராசேந்திரன் அவர்கள் 1978 இல் எழுதி வெளியிட்ட SJV Chelvanayakam a tribute என்ற நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. அதன் முதல் படியை அனைத்துலகப் பேரவையின் தலைவர் திரு நிமால் விநாயகமூர்ர்த்தி பெற்றுக் கொண்டார். கனடா ததேகூ இன் பொருளாளர் திரு நடா. நாகேஸ்வரன் வருகை தந்த அனைவருக்கும், நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி உதவிய East FM, CMR, கனடா உதயன் ஊடகங்களுக்கும் நன்றி நவின்றார். கனடா ததேகூ இன் செல்குழு உறுப்பினர் திரு நாதன் வீரவாகு முழு நிகழ்ச்சியையும் சிறப்பாக தொகுத்தளித்தார்.

Leave a Reply
You must be logged in to post a comment.