வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமிழர்களுக்கு சொந்தமான காணியில் ‘விவசாயம் செய்யும் இலங்கை இராணுவம்”

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் இரத்துச் செய்யப்படாததால், அப்பிரதேசத்தின் பாரம்பரிய தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள கவலைக்கிடமான நிலைமையை வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 6,000 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி முன்னைய அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் சுமார் 3,000 ஏக்கர் காணிகளில் அதன் உரிமையாளர்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த வர்த்தமானி இதுவரை இரத்துச் செய்யப்படாததால் காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“2013 ஆம் ஆண்டு சுமார் 6,000 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதற்கு வர்த்தமானி மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், 2015-இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் காலத்தில், இந்த 6,000 ஏக்கர் வர்த்தமானி நடைமுறையில் இருக்கும் நிலையிலேயே சுமார் 3,000 ஏக்கர் காணிகளில் மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் சென்று அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு கட்டம் கட்டமாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மக்களின் காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்த இந்த வர்த்தமானி தடையாக உள்ளது. எனவே, அந்த வர்த்தமானியை இரத்துச் செய்து, தமக்கு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை வழங்குமாறு கோருவதுடன், எஞ்சியுள்ள 3,000 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தமிழ் மக்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தன்று வடமாகாண கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் முன்னெடுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

“36 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான தார்மீகப் போராட்டம்” என சிங்கள மொழியிலும் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியவாறு, மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலம் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேவாலயங்கள், பாடசாலைகள், கோவில்கள் உள்ளிட்ட தமது காணிகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் இராணுவத்தின் கீழ் இருக்கும் இந்தக் காணிகள் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், இராணுவம் இவற்றை பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்துவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

“தற்போது இராணுவத்தின் வசமுள்ள இந்த 3,000 ஏக்கர் காணிகளைப் பார்த்தால், அவற்றில் 80% புதராக காணப்படுகின்றன. எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அந்தக் காணிகள் பயன்படுத்தப்படுவதில்லை. அவை விவசாயம் போன்ற வேறு விடயங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்த மக்களின் கோரிக்கை நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானது. இலங்கை இராணுவம் இந்தக் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்காமல் வைத்திருப்பது இராணுவ பலத்தைக் காட்டுவதற்காகவே தவிர, அங்கு உண்மையில் பாதுகாப்புத் தேவை எதுவும் இல்லை. இது அவர்களின் இனவாதக் கொள்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறதே தவிர வேறொன்றுமில்லை.”

“கமாண்டர் பங்களா” என அழைக்கப்படும் வடமாகாண இராணுவக் கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லமானது, சுமார் 200 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்தியே கட்டப்பட்டுள்ளதாக போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் உறுப்பினர் தேவரட்ணம் அந்தனி சுபாஷ் அங்கு சுட்டிக்காட்டினார்.

About nakkeran 214 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply