நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?
அண்ணா .: இங்குள்ள பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.
நிருபர் : இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?
அண்ணா .: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்த்துவிடலாம்.
நிருபர் : அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.
அண்ணா .: இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?
அண்ணா .: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.
நிருபர் : ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணா .: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.
நிருபர் : மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.
அண்ணா .: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.
காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.
– சென்னை வந்த இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா
அளித்த பேட்டியிலிருந்து ( 11 – 10 1950 )
See less

Leave a Reply
You must be logged in to post a comment.