ஆய்வு முடிந்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி வீரமணி, “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்தார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளை பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையின் முடிவில் அந்த சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய சோமாஸ் கந்தர் சிலையிலும் எள்ளளவும் இல்லை. இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் உத்தரவுப்படி இந்த சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஸ்தபதி முத்தையா சோமாஸ் கந்தர் சிலையில் 75 சதவிகிதம் வரை தங்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். இந்தப் பரிசோதனை மூலம் அவர் சொன்னது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மேற்கொண்டு சிலை தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். சிலை செய்வதற்காக எவ்வளவு தங்கம் வசூல் செய்யப்பட்டது என்பது புலன் விசாரணையில் முடிவில் தெரியவரும்” என்கிறார்.
கோயில் பெருச்சாளிகளே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் கோயிலில் இருக்கும் சிலை கடவுள் அல்ல கருங்கல் என்று!