தமிழக அரசியலில் நடைபெற்று வரும் குதிரைப் பேர அரசியலுக்கு முடிவு கட்டுவது எப்படி?

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு. (மூதுரை – 17)

நீர் நிரம்பிய குளத்தில் வாழும் பறவைகள், குளம் வற்றியவுடன் அதைவிட்டுப் பறந்து சென்று விடுகின்றன. அதுபோல, செல்வமும் செழிப்பும் இருக்கும் போது நம்மோடு இருந்து, துன்பம் வந்தவுடன் விலகிச் செல்பவர்கள் உண்மையான உறவினர்கள் அல்லர்.

ஆனால், குளத்தில் வேரூன்றி வளரும் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீர்ச்செடிகள், குளம் வற்றினாலும் அந்தக் குளத்தை விட்டு நீங்குவதில்லை. அதுபோல, இன்பத்திலும் துன்பத்திலும், வளத்திலும் வறுமையிலும் நம்மை விட்டு விலகாமல் துணையாக இருப்பவர்களே உண்மையான உறவினர்கள்.

அதாவது, “நல்ல காலத்தில் கூடிவருபவர்களை விட, கெட்ட காலத்தில் கூட இருந்து உதவுபவர்களே உண்மையான உறவினர்.”

இது மனித உறவுகளின் உண்மையான மதிப்பை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கும் அவ்வையாரின் சிறந்த நீதிப்பாடல்களில் ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு அரசியலில் இடம் பெறும் கட்சித் தாவல்களைப் பார்க்கும் போது இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலின் பின்னர், தோற்ற கட்சிகளில் இருந்து ஆளும் கட்சி தனது பக்கம் தேர்தலில் வென்றவர்களை மட்டுமல்ல, தோற்றவர்களையும் வலைவீசிப் பிடித்து வருகிறது. தமிழ்நாட்டு அரசியலில் காணப்படும் ஊழல், அதிகார மோகம், பதவி ஆசை மற்றும் குதிரைப் பேர அரசியல் ஆகியவை இப்போது வெளிப்படையாகப் புலப்படத் தொடங்கியுள்ளன.

சென்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. முடிவுகள் வெளிவந்தபோது, அதிமுக கூட்டணி மொத்தம் 53 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக 47 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 4 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 1 இடத்திலும், அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. வழக்கமாக இரண்டாவது இடத்தில் வரும் அதிமுக, இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்தத் தொடர் தோல்வியால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தலில் வென்று வந்த 47 சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் போர்க்கொடி தூக்கினர். சட்டசபையில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தின் போது, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதிமுக கூட்டணி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும், அது தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக 1,04,62,146 கோடி வாக்குகள் (21.21%) பெற்றிருந்தது. இதே தேர்தலில் திமுக 1,19,29,144 கோடி வாக்குகள் (24.19%) பெற்றிருந்தது. அதாவது, அதிமுகவை விட திமுக 14,66,998 இலட்சம் வாக்குகள் (2.98%) அதிகமாகப் பெற்றிருந்தது.

ஆனால் தோற்றது தோற்றதுதானே. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் நால்வர் தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு தவெகவில் சங்கமமாகிவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் எஸ்.பி. வேலுமணி உட்பட 16 பேர் கட்சிக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் சி.வி. சண்முகமும் விஜயபாஸ்கரும் கட்சிக்குத் திரும்பவில்லை. எஸ். விஜயபாஸ்கர் தமிழர் வெற்றிக் கழகத்தில் சங்கமமாகிவிட்டார். அவரது விராலிமலைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

அதிமுக ஊழல் கட்சி; அந்தக் கட்சியோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கும் தவெக, அதே கட்சியில் இருந்து தங்கள் பக்கம் வரும் தலைவர்களை மட்டும் புனிதர்களாக ஏற்றுக்கொள்கிறது. அதாவது தவெக ஒரு சலவை இயந்திரம்போல் செயல்படுகிறது. ஊழல்வாதிகள் அதற்குள் ஒருபுறம் நுழைந்து மறுபுறம் புனிதர்களாக வெளியே வருகிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிலும் சிலர் அதிமுகவை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில் அண்மையில் வெளியேறியவர் நடிகை கவுதமி. இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் தவெக பக்கம் தாவிவிட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர். இன்னும் பல நிர்வாகிகள் தவெக தலைமைக்கு கடிதம் கொடுத்துவிட்டு வேலி பாயக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட அதிமுக கூடாரம் நாளொருமேனி, பொழுதொரு வண்ணம் காலியாகி வருகிறது. அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகள் போல, தண்ணீர் உள்ள குளத்தை நோக்கிப் பறந்து செல்கின்றன.

கட்சி தாவுபவர்களுக்கும் வெட்கம், மானம், ரோசம் இல்லை; அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்து தங்களோடு அணைத்துக் கொள்ளும் தவெகவுக்கும் வெட்கம், மானம், உரோசம் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரையில், இந்தக் கட்சித் தாவல்களைத் தடுக்க வேண்டிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்பகர்ண உறக்கத்தில் இருப்பதாக அடிமட்டத் தொண்டர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவற்றைப் பார்க்கும் போது அதிமுகவின் எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது. சரியாகப் பார்க்கப் போனால், அதிமுக என்பது எம்ஜிஆரின் இரசிகர் மன்றத்தின் அரசியல் வடிவமே ஆகும். கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயரும், கொடியில் அண்ணாவின் படமும் இருப்பதால் மட்டும் அது சமூக நீதி, சாதி ஒழிப்பு, தமிழர் பண்பாடு, மொழி உரிமை, சுயமரியாதை, பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் சமத்துவம் போன்ற திராவிடக் கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

எம்ஜிஆர் ஜெயலலிதாவை கட்சிக்குள் கொண்டு வந்தது வரலாற்றுத் தவறாகும். அவர் மறைந்த பின்னர் ஜெயலலிதா முதலமைச்சரானார். அவர் ஊழலை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றார். எடப்பாடி பழனிசாமி, அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பின்தள்ளிவிட்டு, பாஜக ஆதரிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டதும் பலரால் துரோகமாகக் கருதப்படுகிறது.

அதிமுக தமிழர் பண்பாடு, மொழி உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் அரசியல், கல்வி மற்றும் சமூகத் தளங்களில் அதிமுக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெண்ணுரிமை, சமூகநீதி, பகுத்தறிவு போன்றவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்ட கட்சியாகவும் அது காணப்படவில்லை.

இதற்கான அரசியல் விலையை எடப்பாடி பழனிசாமி கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலே கூறியவாறு இந்த நிலை தொடர்ந்தால், அதிமுக கூடாரம் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் காலியாகிவிடும் போல் தெரிகிறது.

தமிழர் வெற்றிக் கழகத்தை எடுத்துக் கொண்டால், மற்றக் கட்சிகளில் இருந்து அணிமாறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. அதிமுக ஊழல் கட்சி என்றால், அதிலிருந்து அணிமாறுபவர்கள் மட்டும் புனிதர்களா?

எனவே, தவெகவின் இந்த ஊழல் குதிரைப் பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், திமுகவும் அதிமுகவும் தேர்தல் உடன்பாட்டுக்கு வர வேண்டும். வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெகவைத் தோற்கடிக்க இதுவே மிகவும் பயனுள்ள வழியாக அமையலாம்.

தமிழக அரசியல் நாளும் பொழுதும் நடைபெற்று வரும் குதிரைப் பேர ஆட்சிக்கு முடிவு கட்டுவது எப்படி?

About nakkeran 232 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply