அன்புள்ள தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு..!
நீங்கள் உடல் – உள நலத்தோடு உரையாற்றிக்கொண்டிருக்கும் காணொளி ஒன்றினை சற்றுமுன் பார்க்க கிடைத்தது. அதில் நீங்கள், எதிர்ப்பு வந்தாலும் பறவாயில்லை எனத் தெரிவித்துவிட்டு இரண்டு விடயங்களை மிக “அழுத்தமாக” பதிவு செய்கிறீர்கள். உங்களுக்கு அதை நினைவுபடுத்த நீங்கள் சொன்னதை அப்படியே எழுத்தில் தருகின்றேன்.
“ரெண்டு விடயங்களை இந்த தமிழினம் என்றைக்கு மறக்கிறோதோ அன்றைக்குத்தான் இந்த இனம் உருப்படும். “
அதில் முதலாவது, “நடந்த போராட்டத்தை இந்த மக்கள் மறக்கவேண்டும். ஏன் மறக்க வேண்டும் என்றால், அதை சொல்லிச்சொல்லியே உங்களை கொதிநிலையில் வைத்து தங்கள் வாழ்வை வாழப் பார்க்கிறார்கள் சிலர். அதனால் அதை மறவுங்கள்.”
“இரண்டாவது விஷயம், என்றைக்கு புலம்பெயர்ந்த நாட்டு மக்களின் செல்வம் நம்மிடம் வருவது நிற்கிறதோ அன்றைக்குத்தான் எங்கள் இனம் உருப்படும். பழைய சமநிலை வரும் என்று நினைக்கிறேன்…”
இதனைக்கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. இதுவரைகாலமும், இந்த இரண்டு விடயங்களையும் வலியுறுத்திக்கொண்டிருந்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தத் தீவில் ஈ ழ த்த மிழ ர்களி ன் அரசியல் இருப்பு முற்றாக அ ழிக் கப்படவேண்டும் என்பதற்காக இரவு பகலாக வேலைபார்த்த தரப்பினரே உங்களின் இரண்டு விடயங்களையும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு நேரடி – மறைமுக அரசுகளின் ஆதரவு இருப்பதெல்லாம் நீங்கள் அறியாததல்ல. இப்போது அதே தரப்பினரின் பிந்திய ஊடகப் பேச்சாளராக உங்களைப் பார்க்க முடிகிறது.
நீங்கள் குறிப்பிட்ட போராட்டம் என்பது உங்கள் வீட்டு சொத்துமல்ல. முதுசமும் அல்ல. அல்லது உங்களுக்கு அடையாளமும், வாழ்வும் தந்த கம்பனுமல்ல. அது ஓர் இனத்தின் குருதி தோய்ந்த பல நூற்றாண்டு அடையாளம். பல நூற்றாண்டுத் தலைமுறைகள் அணையவிடது காத்து வைத்திருக்கும் தகிக்கும் தணல். அவ்வப்போது நிகழும் கால மாறுதல்களும், கூட இருந்தே நிகழ்த்தப்படும் குழி பறிப்புக்களும் அதனை சிதைத்திருக்கின்றன. ஆனால் அ ழி க்க முடியவில்லை. அ ழி க் கவும் முடியாது. ஏனெனில் அது ஆன்மாவில் கலந்திருக்கிருக்கிறது. அதனை அழித்துவிடவேண்டும் என துடிக்கும் தரப்பினரோ ஓய்ந்தபாடில்லை. எனவேதான் எம் அடையாளத்தை, விடுதலைத் தீயை அ ழி க்க நினைக்கும் தரப்பினரின் புதிய பேச்சாளர்களாக எங்களுக்குள்ளிருந்தே கோடாரிக்காம்புகள் பல களமிறக்கப்பட்டுள்ளன.
முதலில் இந்த விடயத்தில் கருத்து சொல்ல அல்லது தமிழ் சமூகத்திற்கு அறிவுரை சொல்லுமளவுக்கு நீங்கள் தகுதியான பட்டிமன்ற பேச்சாளரா என்பதை பரிசீலனை செய்து பாருங்கள். நீங்கள் குறிப்பிடும், போராட்டத்தை வைத்து உசுப்பேற்றி பிழைப்பு நடத்துகிறார்கள் என்கிற வாதத்தை, கம்பரும், தமிழ் ஆச்சியும் உங்களை நோக்கி முன்வைத்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது என எடுத்துக்கொண்டால், நீங்கள் இங்கே குற்றவாளிகளாகக் காட்ட விழையும் தரப்பினரின், வேலையைத் தானே கம்பனை வைத்தும் தமிழை வைத்தும் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்..!
இப்படியான நீங்கள், சந்ததி சந்ததியாக அழிக்கப்பட்டதும், கொ ல் ல ப்ப ட்ததும் போக எஞ்சிகிடந்தோர் அதற்கெதிராக திரும்பியடித்ததை எப்படி மறக்கச்சொல்ல இயலும். பட்டிமன்ற பேச்சாளரான நீங்கள் அதைச் சொல்வதற்கான நெஞ்சழுத்தத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? தமிழ் சமூகத்தை வழிநடத்தவல்ல காத்திரமான தரப்பொன்று இங்கிருந்திருந்தால் அதனை நீங்கள் சொல்ல முடியுமா?
சரி, நீங்கள் சொல்வதைப்போல அதை வைத்து அவர்கள் பிழைப்பே நடத்தி விட்டு போகட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? இந்த இனம் கடந்த காலத்தில் எதிர்கொண்ட அழிவை நினைவுபடுத்தவும், நினைவுகூரவும் எவ்வளவு சவால்களை, அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கடக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் ஈ ழ த் தமிழர்கள் கொ ல் லப் பட் ட நினைவுகள் இங்கே பலவுண்டு. அதனையெல்லாம் நினைவுகூரத் தொடங்கினால் கலண்டரில் நாட்கள் இராது. அவ்வளவு பெரிய தமிழ் மானுட அ ழி ப் பு இங்கே நடந்துள்ளது. கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி அதனை நினைவுகூரவே பேரும் போராட்டம் நடத்தவேண்டியிருக்கிறது. அப்படியான வேளைகளில் எல்லாம் உங்கள் போன்ற பேச்சாளர்களின் நாவாதுவாரங்களும் நிரந்தரமாக மூடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்படியான நீங்கள் என்ன தகுதியின் அடிப்படையில் எங்களுக்குப் புத்திமதி சொல்லப் புறப்படுகிறீர்கள்?
ஓர் இனம் தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீ தி களைக் கொதிநிலையில் வைத்திருப்பதில் என்ன குற்றத்தைக் கண்டீர்கள். தன் வரலாற்றை நினைவு வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது எனக் கருதுகிறீர்கள். தமிழினம் எவ்வளவு மோசமாக அ ழி க்கப் பட்டா லும் அதனை நல்லிணக்கத்தின் பெயரில் மறந்துவிடவேண்டும். நினைவில் வைத்திருக்க கூடாது என்பது தானே இலங்கை அரசின் நிலைப்பாடு. அதைத்தானே தற்போது நீங்கள் சொல்கிறீர்கள்.
இப்போது புதிதாக ஒரு கருத்தியல் கலாசாரம் நம் மத்தியில் உருவாகிவருவதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். ஈ ழ த் தமிழர்களுக்குள்ளிருந்து பலநூறு கருத்துச் சொல்லிகள், புலமையாளர்கள் என்கிற வேடத்தோடு வெளிவருகின்றனர். அவர்கள், கடந்த காலத்தில் தமிழர்கள் நடத்திய போராட்டமே தவறானது, இங்கே நடந்திருப்பது போராட்டமே அல்ல, அதில் ஜனாநாயகம் இல்லை, அதனை தமிழர்கள் மறந்துவிட்டு, இலங்கையர்களாக இணைய வேண்டும் என்கிற கருத்துக்களை நச்சுத்தனமாக விதைக்கிறார்கள். இத்தரப்பினர் தன் சொந்த இனத்துக்கு எதிராக நடைபெற்ற எந்த அ ழிப் பு க்கு எதிராகவும் வாய்திறக்கமாட்டார்கள். ஆனால் தன் சொந்த இனத்தை சதாகாலமும் பழிபோட்டுக்கொண்டிருப்பார்கள். அதாவது உள்ளிருந்து புரட்சி செய்கிறார்களாம். அண்மையில் யாழ்ப்பாண இடப்பெயர்வு நாள் கடந்து போனது. யாழ்ப்பாண இடப்பெயர்வு என்பது உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்று. ஆனால் அதற்கு ஒரு நினைவேந்தல் செய்து சந்ததி கடத்த விரும்பாத தரப்பினர், அதே நாளில் முஸ்லிம் மக்களுக்கு இங்கே இன ச்சு த்தி கரிப் பு நடந்திருக்கிறது என்று ஆராய்ச்சிக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.
பட்டிமன்ற பேச்சாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே..! இந்த தரப்பினரின் இன்னொரு முகமகத்தான் தற்போது நீங்கள் வெளிவந்திருக்கிறீர்கள் என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துகின்றேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டாம் விடயம், புலம்பெயர் தமிழர்கள் தம் தாயகத்திற்கு நிதியளிப்பது தொடர்பானது. உங்களுக்கு நிதியளிக்க அமைச்சர்கள் உண்டு. அரசுகள் உண்டு. நீங்கள் கம்பனையும், தமிழையும் வைத்து எப்படியாவது பிழைத்துக்கொள்வீர்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் நிலையோ பரிதாபம்.
2009ஆம் ஆண்டில் தமிழர்கள் மாத்திரம் அ ழி க்க ப்படவில்லை. இந்த இனம் மீண்டு எழவே கூடாது என்ற நோக்கோடு அவர்களின் பொருளாதார இருப்பும்தான் அ ழி க் கப்பட் டது. அதிலிருந்து தப்பித்து கொழும்பிலும், வவுனியாவிலும், திருகோணமலையிலும் வாழ்ந்த தமிழ் தனவந்தர்கள் கப்பம் கட்டியே மாண்டு போனார்கள். அல்லது தம் பிள்ளைகளை வெள்ளை வான்களிடம் பறிகொடுத்தார்கள். இந்த இனத்துக்கு இழைக்கப்பட்ட பொருளாதார குற்றங்கள் உலகின் வேறு ஒரு இனத்திற்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் உலக வரைபடத்தில் ஒரு புள்ளியில் இருந்து கூட இருந்திருக்கமாட்டர்கள். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட மிகப்பெரிய பொருளாதார குற்றமிழைப்பு மட்டக்களப்பில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நீங்கள் செல்வம் மேடைகளில் முழங்கும் பசுக்களும், எருதுகளும் தமிழர்களிடம் இருந்தமையால் சுட்டும், வெட்டியும் கொல்லப்படுகின்றன. அவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுகின்றன. அதற்கு எதிரான போராட்டத்தில் பண்ணையாளர்கள் மூன்று வருடங்களுக்கு மேலாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். கோ மாதா எங்கள் குல மாதா என முழங்கும் நீங்கள் என்றைக்காவது அவை கொல்லப்படுவதற்கு எதிராகப் பேசியிருக்கிறீர்களா?
இதனையெல்லாம் எதிர்கொண்டு போர் முடிவுற்று 17 ஆண்டுகளுக்குள் ஓரளவுக்கேனும் ஈ ழ த் தமிழினம் நின்று பிடிக்கிறது என்றால் அதற்கு புலம்பெயர் தமிழர்கள் இரவு பகலாக உழைத்து தன் தேசத்துக்கு அனுப்பும் செல்வம்தான் காரணம். இப்போதும் வடக்கு, கிழக்கு, மலையாகம் எனத் தமிழ் மக்கள் எங்காவது ஒரு மூலையில் சிரமப்படுகிறார்கள் என ஒரு பதிவை எழுதினால் போதும், உதவிகள் உலகம் முழுவதுமிருந்து வந்து சேரும். அவ்வளவுக்கு தமிழ் புலம்பெயர் தளம், தன் தேசத்தினதும், தன் இனத்தினதும் துயரில் பங்கெடுப்பதில், அதிலிருந்து விரைவாக மீட்டெடுப்பதில் முன்நிற்கிறது. இந்த நற்பண்பு உலகின் வேறெந்த இனத்திற்கு வரும்..! இந்த நற்பண்பெல்லாம் யாருக்கு இங்கே பிரச்சினையாக இருக்கிறது எனில், அது தமிழர்களின் பொருளாதார பலத்தையும், எழுச்சியையும் முற்றாக அழிக்க நினைக்கும் தரப்பினருக்குதான். நீங்கள் துணிந்து வழங்கிய அறிவுரையில் அத்தரப்பாருக்கு சேவகம் செய்திருக்கிறீர்கள்.
முடிவாக, இதனைப் புரிந்துகொண்டு, இனி வரும் நாட்களில் தமிழ் சமூகத்திற்கு அறிவுரை சொல்ல வராதீர்கள். அப்படியும் அறிவுரை சொல்ல வந்தால், இந்த இனம் எதிர்கொண்ட எந்த துயரத்திலாவது, அத்துயரத்திற்கு எதிரான போராட்டத்திலாவது நான் கலந்துகொண்டிருக்கிறேனா என உங்களுக்குள் கேட்டுப்பாருங்கள். பேச்சின் திசைவழியை மாற்றிக்கொள்வீர்கள்.
– ஜெரா
·அருமையான பதிவு! ஆழமான, ஆணித்தரமான கருத்துகள்!
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு கம்பனையும் கம்பராமாயணத்தையும் விட்டால் வேறோர் உலகம் இருப்பதாகத் தெரியவில்லை. இலக்கியத்தில் அவருக்குள்ள புலமை, வரலாற்றிலும் அரசியலிலும் அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருப்பதாகப் பொருளாகாது.
வரலாறு ஏன் எழுதப்படுகிறது? ஏன் படிக்கப்படுகிறது? ஏன் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது? கடந்த காலத்தை மறந்துவிடுவதற்காகவா? அல்லது கடந்த காலத்தின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்று, எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவற்றை எடுத்துச் செல்வதற்காகவா?
உலகில் ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறுதான் ஓர் இனத்தின் அடையாளம்; அதன் நினைவாற்றல்; அதன் இருப்புக்கான அடித்தளம். அப்படியிருக்க, தமிழர்கள் மட்டும் தங்கள் வரலாற்றையும் விடுதலைப் போராட்டத்தையும் ஏன் மறக்க வேண்டும்?
யூதர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தங்களின் வரலாற்று, சமய, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து வந்தார்கள். அந்த வரலாற்று நினைவும் தேசிய உணர்வும் நவீன இஸ்ரேல் உருவாவதற்குப் பின்னணியாக அமைந்த பல காரணிகளில் முக்கியமானவை. அவர்கள் தங்கள் வரலாற்றையும் அடையாளத்தையும் முற்றாக மறந்திருந்தால், ஒரு யூதத் தாயகத்தை உருவாக்கும் எண்ணம் தலைமுறைகளைக் கடந்து நிலைத்திருக்குமா?
வரலாற்றை மறந்த இனம் தனது அடையாளத்தை இழக்கும். வரலாற்றை நினைவில் வைத்திருக்கும் இனம்தான் தனது உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது மறந்துவிடக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வல்ல. அது ஓர் இனத்தின் உரிமைக்கான போராட்டம்; அதன் அரசியல் வரலாற்றின் பிரிக்க முடியாத அங்கம். அந்தப் போராட்டத்தின் வெற்றிகளையும் தோல்விகளையும் தவறுகளையும் தியாகங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டியது நமது வரலாற்றுக் கடமை.
வரலாற்றை மறப்பது நல்லிணக்கமல்ல; வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நீதியை நிலைநாட்டுவதுதான் உண்மையான நல்லிணக்கம்.
எனவே, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தமது அறிவுரைகளைக் கம்பனோடும் கம்பராமாயணத்தோடும் நிறுத்திக்கொள்வது நல்லது. ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் மறந்துவிடுமாறு அறிவுரை கூறுவதற்கு முன்னர், அந்த வரலாற்றின் ஆழத்தையும் அதன் பின்னணியில் இருக்கும் மக்களின் துயரங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.
கம்பராமாயணத்தைப் பேசுவது உங்கள் உரிமை. ஈழத் தமிழர்களின் வரலாற்றை மறக்கச் சொல்லுவது உங்கள் உரிமையல்ல!

Leave a Reply
You must be logged in to post a comment.