இலங்கநாதன் குகநாதன்

 ·

வடவெழுத்து ஒரீஇ

`தூயதமிழ் என்று ஒன்று இருக்குது என மடத்தனமான ஒரு குழு நம்பிக்கொண்டு மடத்தனமான தமிழுக்கு மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். Scotland என்பதனை `இசுக்கொட்லாந்து` எனவும், Russia என்பதனை `உருசியா` எனவும் மாற்றுகின்றனர் அந்த மூடக்கும்பல்` என எழுத்தாளர் செயமோகன் (ஜெயமோகன்) பேசியுள்ளார். அவர் சொன்ன எடுத்துக்காட்டுகளையே முதலில் பார்ப்போம். Scotland என்பதனை `இசுக்கொட்லாந்து`என எழுதுவதில் என்ன பிழை? அவரது வாதம் `ஸ்` என ஏன் முதல் எழுத்தினை எழுதக்கூடாது என்பதாகவே இருக்கின்றது. அவ்வாறு கிரந்த எழுத்துகளைத் தமிழ்ப்படுத்துவது மடத்தமிழ் எனில், கம்பன் `ஜானகி`யினை `சானகி` எனவும், லஷ்மணன் என்பதனை `இலக்குவன்` என எழுதினானே, கம்பனின் தமிழ் மடத்தமிழா! கம்பன் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிரந்த எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டனவே! ஏன் கம்பன் வடமொழிக் கதை மாந்தர்களின் பெயர்களை எழுதும் போது, கிரந்தம் நீக்கித் தமிழில் எழுதினான்? அவ்வாறு எழுதுவதுதான் தொல்காப்பிய மரபு.

` சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்`.

{ மூலச் சொல்லின் வடிவம் மாறினாலும் தமிழ் மொழிக்கும் ஓசைக்கும் பொருந்தி வருபவையே ஏற்கப்படும்}

`வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்க்கச் சொல்லாகும்மே”

{ வடவெழுத்து ஒரீஇ = தமிழில் இல்லாத வடமொழி எழுத்துகளை நீக்கிவிட்டு எழுத வேண்டும் }

இத்தகைய தொல்காப்பிய விதிகளுக்கேற்பவே கம்பன் பின்வரும் பெயர்களை மாற்றி எழுதினான்.

விபீஷணன் > வீடணன்

லக்ஷ்மணன் > இலக்குவன்

ஜானகி > சானகி

அதே போன்று தமிழில் சில எழுத்துகளில் சொற்கள் தொடங்காது அதனால்தான் `ராமன்` என எழுதாமல் `இராமன்` என்றே கம்பன் எழுதினான்.

இந்த வகையில் `இசுக்கொட்லாந்து`, `உருசியா` என எழுதுவதுதான் முறையான தமிழ்.

தமிழ்ச் சொற்களையே தமிழ் எழுத்துகளால் எழுதாமல், உரோமன் எழுத்து வடிவங்களால் ( ஆங்கில எழுத்துகளால்) எழுத வேண்டும் எனக் குத்தி முறிந்த செயமோகன், இப்படிச் சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதன்று.

கம்பன் மட்டுமல்ல, ஆழ்வார்களோ நாயன்மார்களோ கூடக் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமலே தமிழில் பாடினர். சம்பந்தர் ` சமஸ்கிருதம்` என்பதனையே `சங்கதம்` என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே நாமும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்துவோம்.

தமிழ் தனித்து இயங்கக்கூடிய மொழி, அதனால்தான் தமிழ் ஒரு செம்மொழி . செம்மொழிக்கான தகுதிகள் என பதினொரு தகைமைகளைப் பட்டியலிட்டால், ஏனைய செம்மொழிகள் ஏழு அல்லது எட்டுத் தகைமைகளையே நிறைவு செய்ய, தமிழோ பதினொரு தகைமைகளையும் நிறைவு செய்யும். அப் பெருமையினை இழக்காதிருப்போம்.

About nakkeran 257 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply