·

`இராசராச – இராசேந்திர சோழனின் ஆட்சியானது எவ்வாறு மதசார்பற்ற ஆட்சியாக இருந்தது, அப்போது எவ்வாறு மத நல்லிணக்க ஆட்சி நிலவியது` என்பது பற்றி நான் பூநகிரியான் மணி விழா மலரில் எழுதிய கட்டுரை கீழே உள்ளது. கீழே படங்களாக இணைக்கப்பட்டுள்ள தாள்களிலுள்ள கட்டுரை வடிவம் எழுத்து வடிவில் வருமாறு…………………………………………………………………………………………………………………….

மத நல்லிணக்கத்தினைக் காட்டி நிற்கும் இராச ராச – இராசேந்திர சோழர்களின் மதசார்பற்ற ஆட்சி :-

சங்ககாலத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் ஆட்சி புரிந்த சோழர்களையே `பிற்காலச் சோழர்`எனப் பொதுவாக அழைப்பர். ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டளவில் உச்சம் பெற்ற இச் சோழப் பேரரசின் முதன்மையான அரசர்களாக இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் திகழ்ந்தனர். இவர்களின் ஆட்சியானது சைவ சமயம் சார்ந்ததொரு ஆட்சி என்ற ஒரு பொதுவான மனநிலை பலரிடமுள்ளது, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த மனநிலை அதிகரித்துமிருக்கலாம்; ஆனால் உண்மையில் எந்தவொரு தனித்த மதத்தினையும் சாராது , எல்லா மதங்களையும் அணைத்து ஒரு மதசார்பற்ற- மத நல்லிணக்க ஆட்சியினையே சோழர் வழங்கியிருந்தனர். அதற்கான சான்றுகளை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

சோழர்களிடம் பல படையணிகள் இருந்தன, இவ்வாறு இராசாசன் வைத்திருந்த முகன்மையான படையணி ஒன்றின் பெயர் `மூன்று கை மகாசேனை`என்பதாகும். `மூன்று கை மகாசேனை` என்ற படையணியானது முழுக்க முழுக்க அல்லது மிகப் பெரும்பான்மையாக வைணவர்களைக் கொண்ட ஒரு படையணியாகும்; அதாவது இன்றைய இந்தியப் படையில் சீக்கியர்களைக் கொண்ட பஞ்சாப் படையணி , கூர்க்காக்களைக் கொண்ட கூர்க்காப் படையணி போன்ற ஒரு படையணியாக வைணவர்களைக் கொண்டு ` மூன்று கை மகாசேனை ` என்ற படையணி இருந்துள்ளது. சைவமும் வைணவமும் வைதீக மதங்களாக ஒன்றிணைந்த இன்றைய நிலையில், வைணவத்தினைச் சோழர் அணைத்துச் சென்றமை வியப்புக்குரியதல்ல. வைதீகத்துக்கு எதிரான பவுத்தம், சமணம் போன்ற மதங்களையும் பிற்காலச் சோழர் தாங்கிப் பிடித்துள்ளனர். தஞ்சைப் பெருவுடையர் கோயிலிலுள்ள சிற்பங்களிலே கூடப் புத்தர் தொடர்புடைய நிகழ்வுகள் காணப்படுகின்றன, காட்டாகக் கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரத்தின் சோழர் கால ஓவியங்களிலுள்ள தியான நிலையிலான புத்தரினைச் சொல்லலாம். நாகபட்டினத்தில் இராசராசனால் கட்டப்பட்ட `சூடாமணி விகாரம்` எனும் புத்த பள்ளியானது சோழர்கள் பவுத்தத்தினைத் தாங்கிப் பிடித்ததற்கான மிகப் பெரிய சான்றாகும். இந்தப் புத்த பள்ளி (விகாரை) தனியே வழிபாட்டு இடமாக மட்டுமல்லாமல் ; கலங்கரை விளக்கமாக, மருத்துவ சேவை வழங்குமிடமாக, அறிவுரை வழங்குமிடமாக எனப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளது. இப் பள்ளிக்கான செலவு முழுவதையும் ஆனை மங்கல மக்களே வழங்கியுள்ளனர். விரிவாகச் சொன்னால் சைவ-வைணவ மக்களைப் மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு ஊரின் மக்கள் புத்த பள்ளியொன்றுக்குக் கொடை வழங்கியுள்ளனர். இது பற்றி `லெய்டன் செப்பேடு` என்றழைக்கப்படும் ஆனைமங்கலச் செப்பேடு என்ற செப்பேடு விரிவாக விளக்குகின்றது. நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற இச் செப்பேடானது நாகபட்டணத்தில் சோழனால் கட்டப்பட்ட புத்த பள்ளிக்குக் கொடை அளிப்பதற்காக ஆனைமங்கல ஊரகப் பொறுப்பாளர்களுக்கும் சோழ அரசுக்கும் இடம் பெற்ற ஒரு உடன்படிக்கை பற்றிப் பேசுகின்றது. சோழர்கள் தமது அரசுக்கு வர வேண்டிய வரியினையே பள்ளிக்குச் செலுத்துமாறு மக்களைத் திருப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இராசேந்திர சோழனால் கட்டுவிக்கப்பட்ட அல்லது புத்தாக்கம் செய்யப்பட்ட புத்த பள்ளிகள் பலவாகும், இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக `வெல்கம் விகாரை` என்ற பள்ளியின் சோழர் காலத்துப் பெயர் `இராசராசப் பெரும்பள்ளி` என்பதாகும். சோழர் ஆட்சியின் போது புத்தாக்கம் செய்யப்பட்ட இப் புத்த பள்ளியானது `திராவிடக் கட்டிடக்கலை` சார்ந்தே கட்டப்பட்டுள்ளது. குலோத்துங்கன் சார்ந்த கல்வெட்டுகளைப் புத்த சமணப் பள்ளிகளில் காணக் கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சோழரும் இசுலாமும் :-

சங்ககாலத்திலேயே பாரசீகத்துடன் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்துள்ளது, அதாவது பாரசீகர் இசுலாமினைத் தழுவ முன்னரே தொடர்பு இருந்துள்ளது. இதனால் தமிழர் பாரசீகத்தில் சென்று தங்கியிருந்துள்ளனர் { காட்டாக – எகிப்திலுள்ள க‌சீர் அல் க‌டீம் [Quseir-Al-Qadim]” என்ற இடத்தில் கிடைத்த பானையோட்டில் `பானை உறி` என்ற எழுத்துகள் தமிழியில் பொறிக்கப்பட்டிருந்தமை, ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் `நந்தை கீரன்` என்ற தமிழிப் பொறிப்பு, ……}. தமிழர் அராபிய நாடுகளுக்கு வணிகம் செய்யச் சென்று தங்கியது போல , அங்கிருந்தும் இங்கு வந்து அராபியர் தங்கியிருந்தனர். இசுலாம் மதம் தோற்றம் பெற்ற பின்னரும், இசுலாமினைக் கைக்கொண்ட முசுலீம்கள் சிலர் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வந்து தங்கியிருந்தனர். இவர்களில் பலர் இங்கு மணம் முடித்துத் தமிழர்களுடன் கலந்து விட்ட போதும், `சோனகர்` என்ற அடையாளத்தினையும் `இசுலாம்` மதத்தினையும் பின்பற்றியே வந்தனர். எனவே இராசராசன் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டில் இசுலாமியத் தமிழர் இருந்துள்ளனர் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை.

ஏற்கனவே நாம் பார்த்த ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேட்டிலுள்ள ஒரு செய்தி கவனிக்கத்தக்கது. நாகபட்டணத்தில் சோழனால் கட்டப்பட்ட புத்த பள்ளிக்குக் கொடை அளிப்பதற்காக ஆனைமங்கல ஊரகப் பொறுப்பாளர்களுக்கும் சோழ அரசுக்கும் இடம் பெற்ற ஒரு உடன்படிக்கை பற்றி இச் செப்பேடு பேசுகின்றது. பல்வேறு சபைகளின் சார்பாக, பொருள் கொடுக்க உள்ளூராட்சித் தலைவர்கள் பலர் அந்தந்த ஊரின் சார்பில் ஒப்புக் கொண்டிருந்தனர். அந்த வகையில் `சன்ன மங்கலம் பிரமதேயம் `என்ற சபையின் சார்பில் கையெழுத்திட்டவர் யார் தெரியுமா? துருக்கன் கமுதன் ; ஆம் துருக்கி நாட்டிலிருந்து வணிகத்துக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறி வாழ்ந்த ஒரு இசுலாமியர் (இவரின் பெயரினை `மத்தியஸ்தன் கமுதன் துருக்கனேன்` என ஆ.சிவசுப்பிரமணியன் எனும் பண்பாட்டு ஆய்வாளர் குறிப்பிடுவார்). சைவ சமயத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர் மக்கள் தமது வருமானத்திலிருந்து புத்தப் பள்ளி ஒன்றுக்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டு பொருள் கொடுக்கின்றனர், இதில் ஒரு சிற்றூரின் சபைப் பொறுப்பாளராக ஓர் இசுலாமியர் இருந்துள்ளார்.

சோனகன் சாவூர் பரஞ்சோதி எனும் இசுலாமியத் தமிழனை ஒரு சைவக் கோயிலின் முகன்மையான பொறுப்பில் இராசராசன் பணியமர்த்தியிருந்தான். இராசேந்திரனும் அதனைத் தொடருகின்றான். இராசேந்திரனின் கல்வெட்டுகளில் `கந்திருவப் பேரரையன்` என்ற பட்டத்துடன் சோனகன் சாவூர் பரஞ்சோதி குறிப்பிடப்படுகின்றான். இப் பட்டத்தின் பொருள் `செவ்வியல் இசையில் மாமன்னர்` என்பதாகும். இவர் முதலில் தஞ்சாவூருக்குப் புறத்தேயிருந்த `இராச வித்யாதரப் பெருந் தெரு`வில் வாழ்ந்து, தஞ்சைக் கோயிலில் அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார். பின்னர் இராசேந்திரனால் பதவியுயர்வு வழங்கப்பட்டு கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றலாகிப் போகின்றார். அங்கு `திருமந்திர ஒலை நாயகம்` எனும் அரசனின் அரசாணைகளை மேற்பார்வை செய்யும் நம்பிக்கைக்கு உரிய பணியினை மேற்கொள்ளுகின்றார். இராசராச சோழனுக்கு இசையிலும் நடனத்திலுமிருந்த ஈடுபாடு காரணமாக, இவர் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும், இவர் தஞ்சைக் கோயிலுக்குக் கொடைகள் வழங்கியதாகவும், தஞ்சைக் கோயிலிலும் பின்னர் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலிலும் அதிகாரியாகப் பணியாற்றியதாகவும், கோயிலில் மட்டுமன்றி அரசாட்சி முகாமையிலும் பங்கேற்றிருந்ததாகவும் கல்வெட்டுகளும் வரலாற்று ஆய்வுகளும் கூறுகின்றன. முடிவாக: இராச ராச மற்றும் இராசேந்திர சோழர்களின் மதசார்பற்ற ஆட்சிக்குச் சான்றாக – சோனகர் ஒருவரை சைவக் கோயிலின் முகாமை அதிகாரியாகப் பணிக்கமர்த்திய செயல் விளங்குகின்றது. இற்றைக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன் எத்தகைய மத நல்லிணக்கம் எமது தமிழ் மண்ணில் நிலவியுள்ளது என நினைத்து நாம் உறுதியாகப் பெருமைப்படலாம், அதை விட முகன்மையானது இந்த மத நல்லிணக்கத்தினைத் தமிழர் தொலைத்து விடாமலிருப்பதே!

துணை நின்றவை.

1) ராஜராஜனின் ஆட்சியில் ஒரு முசுலீம் ஓலை நாயகம்` – சுடலைமுத்துப் பழனியப்பன் (டேலஸ் நகரத் தெற்காசிய ஆய்வு}

2) Ponniyin Selvan’s Chola king didn’t see Islam as foreign, made a Muslim a temple superintendent – by Sudalaimuthu Palaniappan

President at South Asia Research and Information Institute

Dallas, Texas, United States

3) சோழர் காலத்தில்தான் பெரும் சமூகக்கலப்பு நடந்தது- ஆ. சிவசுப்பிரமணியன்

………………………………………………

குறிப்பு – திரு. முருகவேள் பொன்னம்பலம் Murugaverl Poonagari Ponnampalam எனும் தமிழறிஞரின் மணிவிழா மலருக்காக இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஐயா முருகவேள் அவர்கள் பூநகரி எனும் தொல்லியல் முதன்மை வாய்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ தமிழ் மீதும் அதன் தொன்மை மீதும் ஆழ்ந்த பற்று உடையவர். தமிழர்கள் தமிழில் பெயரிட வேண்டும், தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும், கிரந்த எழுத்துகள்- கிரந்தச் சொற்களை விலக்கி வைக்க வேண்டும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தமிழில் வழிபாடு வேண்டும் என்பன போன்ற தனது கொள்கைகளுக்கமையத் தமிழுலகுக்கு அரும் பணியாற்றி வருபவர். பல தமிழ் இளையோரை அற வழியில், தமிழ் வழியில் நெறிப்படுத்திவரும் ஐயா அவர்கள் இன்னமும் பல பதிற்றாண்டுகள் வாழ்ந்து, தமிழ்ப் பணி செய்திட வாழ்த்துகின்றேன். ஐயாவின் மணிவிழாவும் விழா மலரும் சிறப்புறவும் வாழ்த்துகின்றேன்.

About nakkeran 301 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply