Siraj Mashoor

Suggested for you · ·

கொழும்பிலிருந்து சோனகரின் வெளியேற்றம், கணிசமான எண்ணிக்கையில் சீதாவாக்கை ராச்சியத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர் என்பதையே குறித்து நின்றது.

பல வர்த்தகர்கள் கொழும்பில் இருந்து நகர்ந்து சீதாவாக்கை எல்லையை அண்மித்த நீர்கொழும்பு, புத்தளம், பேருவளை மற்றும் அளுத்கமை போன்ற மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களில் குடியேறினர்.

முஸ்லிம்கள் பல வழிகளில் மாயாதுன்னேக்கும், பின் அவனுடைய மகன் ராஜசிங்கனுக்கும் (1582-1592) உதவினர்.

அவர்கள் போர்த்துக்கேயருக்கு எதிரான போர்களில் பங்குபற்றினர்.

கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு-கேரளா) ஆட்சியாளர்களிடம் உதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தூதர்களாகவும், சிங்கள ராணுவத்தில் பற்றாக்குறையாக இருந்த துப்பாக்கி வீரர்களாகவும் பணியாற்றினர்.

போர்த்துக்கேயருக்கு எதிரான அனைத்துக் கிளர்ச்சிகளிலும், முஸ்லிம்கள் எதிரியின் பக்கத்திலேயே இருந்ததாக குயிரோஸ் கடுமையாக சாடியுள்ளார்.

1613 இல், போர்த்துக்கேய தளபதி ஜெனரல் டொன் ஜெரோனிமோ டீ அஸேவதோ, கோட்டையில் முஸ்லிம்கள் மேலும் குடியேறுவதைத் தடுக்கும் வகையில் ஓர் ஆணையைப் பிறப்பித்தான்.

1622, 1623, 1624 மற்றும் 1626 இலும், அதே ஆணை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏனெனில், அடிக்கடி சோனகர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து (போர்த்துக்கேய) சட்டங்களை மீறினர். உதாரணமாக, சோனகர் வருடம் தோறும் தளபதிக்கு 900 பாக்குகளை விநியோகித்து வந்ததால், வெளியேற்ற உத்தரவு தளர்த்தப்பட்டதாக அறியப்படுகிறது.

போர்த்துக்கேய எல்லைகளில் உள்ள கிராமங்களில், சோனகர்கள் விதானை மற்றும் கணக்குப்பிள்ளை பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டனர்.

கிறிஸ்தவர்களை மேலாண்மை செய்யும் பதவிகளுக்கு, முஸ்லிம்கள் நியமிக்கப்படுவது குறித்து, கோவா மாகாண சபையின் எச்சரிக்கைகளையும் உதாசீனம் செய்து, போர்த்துக்கேய அதிகாரிகள் இவ்வாறான செய்கைகளில் ஈடுபட்டனர்.

வெறுமனே கரையோரப் பிரதேசங்களில் தாங்கியிருந்து, தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மட்டுமன்றி,

முக்கிய பதவிகளை அடைந்து சமுதாயத்தில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் முஸ்லிம்கள், போர்த்துக்கேய அதிகாரிகளின் பேராசை மற்றும் ஊழல்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன.

சோனகர் பெரும் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். போர்த்துக்கேய வீடுகளில் முஸ்லிம்கள் நன்றாக நடத்தப்பட்டனர். அவர்கள் முக்கிய கிராமங்களில் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே, ஒரு கிறிஸ்தவராக மாறுவதை விட, முஸ்லிமாக மாறுவதே சிறந்தது என சிங்களவர் வாதிட்டனர். இதனால், சோனகர் தமது மதமாற்ற நடவடிக்கைக்கு தடையாக இருப்பதாகவே கிறிஸ்தவ குருமார் கருதினர். இது இரண்டு மதங்களையும் பின்பற்ற விரும்பாத சிங்களவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் என்பது வெளிப்படையாக இருந்தது.

….

போர்த்துக்கேய அதிகார பீடத்தின் மத்தியில் அத்தகைய முறைகேடுகள் இருந்த அதேநேரம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முஸ்லிம்களின் தேவை தவிர்க்க முடியாத நேரங்களில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

போர்த்துக்கேயரின் கப்பல்கள் முஸ்லிம்களின் கப்பல்களை விட, சிறப்பாகக் கட்டப்பட்டு ஆயுதம் தாங்கியதாக இருந்தபோதிலும், முஸ்லிம்களே இந்தியப் பெருங்கடலில் எஜமானர்களாக இருந்தனர்.

♦நன்றி:

பேராசிரியர் லோர்னா தேவராஜா,

‘இலங்கை முஸ்லிம்களின் 1000 வருட இன நல்லிணக்க வரலாறு.’

Sri Lankan Muslims: One Thousand Years of Ethnic Harmony.

By Prof.Lorna Dewarajah

♦இது எதைக் காட்டுகிறது?

✨முஸ்லிம்களின் காலனிய எதிர்ப்புப் போராட்டம்.

✨சிங்கள அரசர்களுடனான புரிதல், நல்லிணக்கம், இணைந்து பணியாற்றல்.

✨சீதாவாக்கை அரச படைகளில் பங்கேற்றமை.

✨வெளியுறவு: கேரள ஆட்சியாளர்களிடமிருந்து உதவி பெற இடைத் தொடர்பாளர்களாக இருந்தமை.

✨போர்த்துக்கேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னர், மாற்றுத் தந்திரோபாயங்களைக் கைக்கொண்டு,

தமது இருப்பையும் (Survival Strategy), வணிக நடவடிக்கைகளையும் தகவமைத்துக் கொள்ளல்.

✨உள்ளூர் நிர்வாகத்தில் பங்கெடுத்தல்.

✨தமது தேவையை/அவசியத்தை, தவிர்க்க இயலாததாக – இன்றியமையாததாக வைத்திருத்தல்.

✨கடல் வணிகப் போக்குவரத்து மேலாண்மை.

இதில் இன்றும் நமக்கு பல பாடங்களும் படிப்பினைகளும் உள்ளன.

About nakkeran 262 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply