உயிர்பிச்சை கேட்டு மன்றாடியவர்களைச் சுட்டுக்கொன்ற இந்தியப்படையினர் 77-87

உயிர்பிச்சை கேட்டு மன்றாடியவர்களைச் சுட்டுக்கொன்ற இந்தியப்படையினர்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-77) – நிராஜ் டேவிட்

யாழ் குடாவில் இந்திய இராணுவத்தின் படை நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கென்று ஐந்து முக்கிய இராணுவ அதிகாரிகள் தமது படையணிகளுடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது பற்றி இத்தொடரின் 75வது பாகத்தில் ஆராய்ந்திருந்தோம்.
இதில் பிரிகேடியர் மஜித் சிங் தலைமையிலான 41வது காலாட் படைப்பிரிவிற்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்த பின்னடைவு பற்றியும் அந்தப் படைப்பிரிவு மேற்கொண்ட படுகொலைகள் பற்றியும் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

யாழ் குடாவைக் கைப்பற்றுவதில் இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்திய இராணுவத்தில்; முனன்;ணி வகித்த ஐந்து உயரதிகாரிகள் அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் அவர்களது பிரத்தியோகப் படை அணிகளும் இலங்கையில் வந்திறங்கின.
பிரிகேடியர் மஜித் சிங் தலைமையிலான 41வது காலாட் படைப்பிரிவும் யாழ் குடாவில் வந்திறங்கியது. இந்தப் படைப்பிரிவு ஏற்கனவே களத்தில் இருந்த இந்தியப் படையின் 72வது காலாட் படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டது. யாழ்பாணத்தின் வடகிழக்கு திசையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இந்த படைப்பிரிவுகளுக்கு பிரிகேடியர் மஜித் சிங் நேரடியாகவே தலைமை தாங்கினார்.
கவச வாகனம் ஒன்றினுள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு களமுனைகளில் படை நடவடிக்கைகளை இவர் நெறிப்படுத்தி வந்தார்.
கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது போன்று கள முனைகளில் பல்வேறு தர்மசங்கட நிலைகள் இந்தியப் படையினருக்குத் தோன்றியிருந்தன. ஏற்கனவே களத்தில் இருந்த 72வது படைப்பிரிவு புதிதாக வந்திறங்கிய 41வது பிரிவுடன் இணைக்கப்பட்டது மட்டுமல்லாது, புதிதாக வந்திறங்கிய 41வது படைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் மஜித் இனது தலைமையின் கீழ் செயற்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இது இந்தியப் படையணியினரிடையே பலத்த குழப்ப நிலையைத் தோற்றுவித்திருந்தது.
பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் மட்டத் தளபதிகள் பிரிகேடியர் மஜித்தின் கட்டளைகளை ஏற்பதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். யாழ் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாது பிரிகேடியர் மஜித் இடும் கட்டளைகள் இந்திய ஜவான்களின் உயிர்களை அநியாயமாகவே காவுகொண்டுவிடும் என்றே அவர்கள் நினைத்தார்கள். பயப்பட்டார்கள்.
புதிதாக களம் இறங்கியிருந்த பிரிகேடியர் மஜித்திற்கு கெரில்லாத் தாக்குதல்களில் புலிகள் எந்த அளவிற்கு முன்னேற்றகரமானவர்கள் என்பது பற்றி எந்தவித அறிவும் இருக்கவில்லை. சகட்டுமேனிக்கு உத்தரவுகளாக இட்டுத்தள்ளிக்கொண்டு இருந்தார்.

கடந்த சில நாட்களாக களத்தில் இருந்து, புலிகளின் புதிய தாக்குதல் முறைகளினால் திகைப்படைந்திருந்த இந்திய ஜவான்களுக்கு அது முட்டாள்தனமாகவே பட்டது.
பிரிகேடியர் உத்தரவுப்படி முன்னேறுவது என்பது நிச்சயம் தம்மை கொலைக்களத்திற்கு கொண்டு செல்லும் ஒரு செயல் என்றே நினைத்தார்கள்.
உத்தரவிற்கு கிழ்ப்படிய மறுத்தார்கள். சில சதி வேலைகளிலும் இறங்கினார்கள். கண்டபடி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு எதிரில் புலிகள் வந்ததாகத் தெரிவித்தார்கள். பொதுமக்கள் மீது தமது இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய ஜவான்களின் உண்மை நிலையைப் புரிந்துகொண்ட இரண்டாம் மட்டத்தளபதிகள் பிரிகேடியரிடம் நிலமையை விளக்க முயன்றார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய களநிலை யதார்த்தத்தை எடுத்துரைத்தார்கள்.
ஆனால் எதனையும் கேட்கும் நிலையில் பிரிகேடியர் இருக்கவில்லை. இந்தியப் படையினரின் விஷேட நடவடிக்கைக்குத் தலைமைதாங்க இந்திய இராணுவ மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முக்கிய ஐந்து அதிகாரிகளுள் தானும் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதையிட்டு மிகவும் பெருமைப்பட்ட அந்த உயரதிகாரி, தன்மீது இந்திய இராணுவத் தலைமையும், இந்திய அரசியல் தலைமையும் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதறடிக்க விரும்பவில்லை. எப்படியாவது தனது துணிவைக் களமுனையில் நிரூபித்து பெயர்வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே சென்றார். தனது உத்தரவுகளை சரியானமுறையில் கடைப்பிடிக்காத சில இராணுவ உத்தியோகத்தர்களைப் பதவி நீக்கம் செய்துவிடவும் அவர் தயங்கவில்லை.
அவரின் கீழ் பணியாற்றிய பிரிகேட் மேஜர் (Brigade Major) மற்றும் சமிஞைகளுக்குப் பொறுப்பான அதிகாரி (Signals officer) போன்றவர்களும் இவரால் பதிவி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இறுக்கமாக உத்தரவுகளுடன் அவர் படை நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். பல வெற்றிகளைக் கண்டார். அவரின் கீழ் இருந்த படையணிகள் வேகமான பல முன்னேற்றங்களைக் கண்டன. யாழ் படைநடிவடிக்கைகளில் இவர் வெளிப்படுத்தியிருந்த வீரத்தையும், திறமையையும் கருத்தில் கொண்டு பின்நாளில் இவருக்கு வெற்றிகரமான இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற உயர் இராணுவ விருதான ஷமகா வீர சக்ரா| (Maha Vir Chakra -MVC) விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றியின் பின்னால்:
ஆனாலும் இவரது வெற்றியின் பின்னால் கவனிக்கப்படாத வேறு பல செய்திகளும் காணப்படவே செய்தன.
பிரிகேடியர் மஜித் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவரின் கீழ் செயற்பட்ட படைஅணியைச் சேர்ந்த 272 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டு அல்லது மோசமாகக் காயம் அடைந்து யுத்தக்களத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள்.
இது அவரின் கீழ் செயற்பட்ட மொத்தப் படையினரில் 17 வீதம் என்று கூறப்படுகின்றது.
அடுத்ததாக யாழ்குடாவில் இந்தியப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல மனிதப் படுகொலைகள் உட்பட வேறு பல மனித அழிவுகளிலும் இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட படையினரே சம்பந்தப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

புலிகளின் அறிவிப்பு
இவை ஒரு புறம் இருக்க, அக்டோபர் 24ம் திகதி, விடுதலைப் புலிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தியப் படையினரின் மோசமான தாக்குதல்களில் 900 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 451 பொதுமக்கள் மிக மோசமாக் காயமடைந்துள்ளதாகவும், 144 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
இந்தியப் படையினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
பிரச்சார ரீதியாக புலிகளின் குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை ஒரு வகையில் பாதித்திருந்தாலும், தனது நடவடிக்கைகளின் வீச்சைக் குறைப்பதற்கு இந்தியத் தலைமை சிறிதும்; விரும்பவில்லை.
ஷஷஇழப்புக்களைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்ளூ புலிகளை அழித்தொழித்து யாழ்க்குடாவைப் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள்|| – என்று புதுடில்லியில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் இந்தியக் களமுனைத் தளபதிகளுக்கு பறந்தன.

யாழ் ரயில் நிலைய தாக்குதல்:

இந்தியப் படையினர் யாழ்பாணத்தில் மேற்கொண்ட மனித படுகொலைகளுள் யாழ் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த அகதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.

இந்தச் சம்பவம் அக்டோபர் மாதம் 22ம் திகதி இடம்பெற்றது.

யாழ்பாணத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்கள் சுற்றிவழைப்புக்கள் என்பனவற்றால், வீடுகள் பாதுகாப்பான ஒரு இடமாக மக்களுக்கு தென்படவில்லை. வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கு இந்தியப் படையினர் இழைத்த அநீதிகள் பற்றி யாழ்மக்கள் மத்தியில் செய்திகள் பரவியிருந்தன. அதனால் வீடுகளில் தங்கியிருக்க மக்கள் பெரிதும் பயந்தார்கள்.


அதேவேளை கோயில் மற்றும் பாடசாலை அகதி முகாம்களும் ஜனவெள்ளத்தால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தன.
பலர் தங்குவதற்கு ஓரளவு வசதியாகத் தென்பட்ட, அதேவேளை மறைவாகவும் இல்லாத இடங்களையெல்லாம் பாதுகாப்பு மையங்களாகக் கருதி அங்கு தஞ்சமடைய ஆரம்பித்திருந்தார்கள்.
யாழ் புகையிரத நிலையத்திலும் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்து இருந்தார்கள்.
ஆரம்பத்தில் புகையிரத குடிமனையில் தங்கியிருந்த புகையிரத நிலைய ஊழியர்களின் குடும்பங்கள்தான் புகையிரத நிலையத்தில் ஒன்று கூடித் தங்கியிருந்தார்கள். பின்னர் படிப்படியாக பல குடும்பங்கள் சேர்ந்து நூற்றுக்கணக்காணவர்களைக் கொண்ட ஒரு அகதி முகாமாகவே யாழ் புகையிரத நிலையம் மாறியிருந்தது.
அப்பிரதேசத்தில் இருந்த பெரிய கட்டிடம் என்பதாலும், அது மறைப்பில்லாத கட்டிடம் என்பதாலும், முன்னேறி வரும் இந்தியப் படையினருக்கு அது அகதிகள் தங்கியிருக்கும் ஒரு இடம் என்பது இலகுவாக விளங்கிவிடும். எனவே ஆபத்தில்லை என்று அங்கு வந்து தங்கியிருந்த மக்கள் நினைத்திருந்தார்கள்.
அத்தோடு புகையிரத நிலைய மேடைகளின் இடைநடுவே அமைந்திருந்த சுரங்கப் பாதை, ஆபத்திற்கு பாதுகாப்புத் தேடிக்கொள்ள சிறந்த இடம் என்பதால் பலர் புகையிரத நிலையத்தை நல்லதொரு பாதுகாப்பு புகழிடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
அத்தோடு புகையிரத நிலையம் யாழ் பிரதான பாதைகளில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாகவே இருந்ததால் அந்தப் பக்கம் இந்தியப் படையினர் வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்றே அங்கு தங்கியிருந்த சுமார் 600 இற்கும் மேற்பட்ட அகதிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்தியப் படையினர் இரயில்; தண்டவாளங்கள் வழியாகவே முன்னேறிக்கொண்டிருந்தது பாவம் அவர்களுக்கு தெரியாது. வீதிகளில் விடுதலைப் புலிகள் கன்னிவெடிகளைப் புதைத்துவைத்துக்கொண்டு பதுங்கிருப்பதால், வீதிகளைத் தவிர்த்து இந்தியப் படையினர் கூடிய வரையில் புகையிரத பாதைகளையே உபயோக்க ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகளுக்குத் தெரியும்:
ஆனால் இந்தியப்; படையினர் இரயில் பாதைவழியாக முன்னேறிக்கொண்டிருந்த விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர்கள் தொலைத் தொடர்புக் கருவிகள் இந்தியப் படையினரின் நகர்வுகள் பற்றிய விபரங்களை ஒலித்தபடியே இருந்தன.
ஏற்கனவே காங்கேசன்துறையில் இருந்து இரயில் பாதை வழியாகப் பயணம்செய்த இந்தியப்படையினர், கொக்குவில் பிரதேசத்தில் புலிகளினால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த பராக் கெமாண்டோக்களை மீட்டுக்கொண்டு சென்றதை அறிந்த புலிகள், இரயில் பாதைகளிலும் ஒரு கண்ணை வைத்திருந்தார்கள். இந்தியப் படையினர் தமது முன்னேற்றத்திற்கு இரயில் பாதைகளை நிச்சயம் பயன்படுத்தியே தீருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

புலிகளின் தாக்குதல்:
காங்கேசன் துறை பகுதியில் இருந்து முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் யாழ் புகையிரத நிலையத்தை நெருங்கும் போது புலிகளின் கன்னிவெடித்தாக்குதலுக்கு உள்ளானார்கள். கன்னிவெடித்தாக்குதலில் அகப்பட்டு தடுமாறிய இந்தியப் படையினர் மீது அங்கு பதுங்கியிருந்த புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டார்கள். இந்தச் சம்பவத்தில் பல இந்தியப் படையினர் கொல்லபட்டார்கள்.
சிறிது நேரம் சண்டை செய்து இந்தியப் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு, புலிகள் பின்வாங்கிச் சென்றுவிட்டார்கள்.

இப்பொழுது இந்தியப் படையினரின் கோபம் பொதுமக்கள் மீது திரும்பியது. சகட்டுமேனிக்குச் சுட்டுக்கொண்டு யாழ் புகையிரத நிலையம் இருந்த பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
பெருமளவு மக்கள் தங்கியிருந்த யாழ் புகையிரத நிலையம் அவர்களது கண்களில் பட்டது.
அவர்கள் சுமந்து வந்த 2 மி.மீ. மோட்டார்களை நிலத்தில் நிறுத்தி முதலில் செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
அவர்கள் ஏவிய முதலாவது செல் சரியாக புகையிரத நிலையத்திலேயே விழுந்து வெடித்தது. ஒரு தாயும் மகளும் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார்கள்.
தொடர்ந்து ஏவப்பட்ட செல்கள் புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த வீடுகள் தெருக்கள் என்று பல இடங்களிலும் விழுந்து வெடித்தன.

புகையிரத நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் அல்லோல்ல கல்லோல்லப்பட்டார்கள். என்னசெய்வதென்று புரியாமல் திகைத்தார்கள்.
புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் சிலர் சென்று பதுங்கிக்கொண்டார்கள்.
சிலர் பாதுகாப்பான வேறு இடங்களுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள்.
யாழ் ரயில் நிலையத்தில் இரண்டாவது புகையிரதம் நிறுத்தும் மேடைக்குச் செல்லுவதற்காக நிலத்தடி சுரங்கப்பாதை ஒன்று இருந்தது. பலர் அந்தச் சுரங்கப்பாதையினுள் சென்று தம்மைக் காப்பாற்றிக்கொண்டார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் பலர் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

இந்தியப் படையினரின் கைகளில் அகப்பட்டு மடிந்தவர்கள் இவர்கள்தான்.

சுட்டுக்கொண்டே புகையிரத நிலையத்திற்குள் வந்த இந்தியப்படையினர் பொதுமக்களைக் கண்டும் கூட சுடுவதை நிறுத்தவில்லை.
நின்றவர்கள், படுத்துக்கிடந்தவர்கள், ஓடியவர்கள், முழங்கால்படியிட்டு இறைவனை வழிபட்டவர்கள், தங்களுக்கு உயிர்ப் பிச்சை வழங்கும்படி இந்திய வீரர்களிடம் மன்றாடியவர்கள்…. – அனைவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இந்தச் சம்பவத்தில் சுமார் 50 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

தொடரும்…


இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள்;அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-79) – நிராஜ் டேவிட்

இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு தர்மசங்கடமான நிலை எனக்கு ஏற்பட்டது. ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி விரிவாக எழுதுவதா அல்லது மேலோட்டமாக ‘ஈழத்தில் இந்தியப் படையினர் பாலியல் வன்முறைகள் புரிந்தார்கள்| என்று மட்டும் எழுதிவிட்டு நிறுத்திக்கொள்வதா என்று பலத்த போராட்டமே எனக்குள் ஏற்பட்டது.
ஏனெனில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் மேற்கொண்ட பாலியல் கொடூரங்கள் பற்றிய உண்மைகளை எழுதப் போகும் போது, எமது மானத்தமிழ் பெண்கள் பலர் அசௌகரியப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படும். இதனால் இந்த விடயம் பற்றி எந்த அளவிற்கு விபரிப்பது என்று பலத்த தடுமாற்றம் எனக்கு ஏற்பட்டது.
ஈழப்பிரச்சினையில் இந்தியா மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தொடர்பாக பிற்காலத்தில் எந்த ஒரு சமாதானத்திற்கும், அல்லது எந்த ஒரு உடன்பாட்டிற்கும்கூட ஈழத்தமிழர்களால் வரமுடியாமல் போனதற்கு, இந்தியப் படைகள் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
எனவே இந்த விடயம் பற்றி ஓரளவாவது விபரித்தே ஆகவேண்டிய தேவையும் இந்தத் தொடருக்கு இருக்கின்றது.
ஆதலால் ஈழத்தில் இந்தியப் படையினரின் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி அக்காலத்தில் ஷமுறிந்த பனை| உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியான ஒரு சில விடயங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


என்னைப் பாதித்த சம்பவம்

இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில், இந்தியப் படையினர் மீது மிகவும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியதான அனுபவம் ஒன்று எனக்கு ஏற்பட்டிருந்தது.
குறிப்பிடத்தக்க ஒரு பாரிய சம்பவமாக அது இல்லாவிட்டாலும் கூட, எனது அடி மனதில் இந்தியப் படையினர் மீது முதன்முதலில் ஒரு வெறுப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக அது அமைந்திருந்தது.
இந்தியாவே எமது தாய்நாடு, இந்தியத் தலைவர்களே எமது தலைவர்கள், இந்திய ஹீரோக்களே எமக்கும் ஹீரோக்கள், இந்தியக் கிறிக்கெட் அணியே எமது அபிமான கிறிக்கட் அணி, இந்திய அமைதிகாக்கும் படையினரே ஈழத்தின் அசைக்க முடியாத மீட்பர்கள் என்று பெரும்பாண்மையான ஈழத்தமிழர்களைப் போன்று நானும் நினைத்துக்கொண்டிருந்த காலத்தில், முதன்முதலில் எனது மனதில் எதிர்மறையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சந்தர்ப்பம் அன்று எனது காண் முன் நிகழ்ந்தது.
அன்றைய தினம் எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தைத் தொடர்ந்துதான் நான் இந்தியப் படையினரையும், ரஜீவ்காந்தி தலைமையிலான இந்திய அரசையும் மிகவும் அதிமாக வெறுக்க ஆரம்பித்திருந்தேன்.

‘செக் பொயின்ட்|
இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டிருந்த நான் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்தேன்.
1988ம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து செங்கலடி-பதுளை வீதி வழியாக கொழும்புக்குப் பயணம் செய்யவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. பேரூந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது இந்தியப் படையினரின் கொடுவாமடு சோதனைச் சாவடியில் பஸ்வண்டி பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் இறங்கிச் செல்லவேண்டும் என்று இந்தியப் படையினர் உத்திரவிட்டார்கள். பெண்கள் மாத்திரம் இறங்கவேண்டியதில்லை என்று அவர்கள் கூறியிருந்தார்கள். (அக்காலத்தில் பெண்களை மதிக்கும் ஒரு நாடாக இந்தியா தன்னை வெளிக்காண்பித்துக்கொண்டிருந்த வேடிக்கையும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வினோதமும் இலங்கையிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சோதனைச் சாவடிகளில் பெண்கள் வாகனத்தை விட்டு இறங்கவேண்டியதில்லை என்ற சலுகைள் சில சோதனைச் சாவடிகளில் வழங்கப்பட்டிருந்தது.)


அனைத்து ஆண்களும் பஸ்வண்டியை விட்டு இறங்கி சோதனைக்காக கொட்டும் வெயிலில் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
பஸ்ஸில் வந்த பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் மனமகிழ்ந்து பஸ் வண்டியை விட்டு இறங்கவில்லை.
இந்தியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எனக்கு ஓரளவு ஹிந்தி தெரியும். பிரபல்யமான இந்திய கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவ அடையாள அட்டையும், இந்தியப் போக்குவரத்து |பாஸ்| உம் என்வசம் இருந்ததால், அவற்றை வைத்துக் கொண்டு இந்தியப் படையினரின் சோதனைச் சாவடிக் கொடுமைகளில் இருந்து அனேகமாக நான் தப்பித்து விடுவேன்.

விதியாசமான ‘செக்கிங்|:
பஸ்வண்டியைப் பரிசோதிப்பதற்கென்று இரண்டு இந்தியச் சிப்பாய்கள் நான் அமர்ந்திருந்த பஸ்ஸினுள் ஏறினார்கள். முதலில் அவர்கள் என்னைப் பார்த்து முறைக்க ஆரம்பிக்க நான் எனக்குத்தெரிந்த ஹிந்தியில் என்னை அடையாளம் காண்பித்து இந்தியாவில் நான் கல்வி கற்பது பற்றி தெரிவித்து சமாளித்து விட்டேன்.
தொடர்ந்து அந்தச் சிப்பாய்கள் பஸ் வண்டியில் அமர்ந்திருந்த பெண்களைப் பரிசோதிக்கச் சென்றார்கள்.

அவர்கள் அந்தப் பெண்கள் கொண்டு வந்திருந்த பொதிகளைப் பற்றி அக்கறை காண்பிக்கவில்லை. “உங்களிடம் ‘பொம்| இருக்கின்றதா?|| என்று கேட்டு அந்தப் பெண் பிள்ளைகளின் ஆடைகளுக்குள் கைகளை விட்டு சோதனை செய்தார்கள்.

“இங்கும் குண்டுகள் ஏதாவது மறைத்து வைத்திருக்கின்றீhகளா?|| என்று கேட்டபடி அந்தப் பெண்களின் கால்களுக்கிடையேயும் சோதனை செய்து வேதனை கொடுத்தார்கள்.

இந்திய இராணுவத்தின் கைகளைத் தட்டிவிட முயன்ற ஒரு இளம் பெண்ணுக்கு கன்னத்தில் ‘பளார்| என்று பலமான அடி விழுந்தது. இதனால் மற்றவர்கள் எதுவும் முரண்டு பிடிக்கவில்லை.
இதில் வேதனை என்னவென்றால் பஸ்ஸினுள் ஏறிய இரண்டு சிப்பாய்கள் இதபோன்ற சேஷ்டைகளைப் புரிவதை வெளியில் காவலுக்கு நின்ற மற்றய சில சிப்பாய்களும், ஒரு அதிகாரியும் வேடிக்கை பார்த்து சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
சோதனை முடிந்து பஸ்வண்டியை விட்டு இறங்கிய இந்தியச் சிப்பாய்கள் அடுத்த வண்டியைச் சோதனை இடுவதற்காகச் சென்றார்கள்.
அவர்கள் அவ்வாறு செல்லும் போது, பஸ்ஸினுள் இடம்பெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாகவும், பஸ்ஸில் இருந்த பெண்கள் சங்கோஜப்பட்டது தொடர்பாகவும் நடித்துக் காண்பித்து கேலிசெய்து கொண்டு சென்றார்கள். பின்னர் பஸ்சை விட்டு இறங்கியும் யன்னல் வழியாக அந்தப் பெண்களை எட்டிப்பார்த்து அவர்கள் அங்கங்கள் பற்றி மிகவும் கேவலமாக விமர்சித்து, கைகளால் சைகை காண்பித்து கேலி செய்தார்கள். இவர்களது சோதனைகளின் போது அந்தப் பெண்கள் நெளிந்து சங்கடப்பட்ட விதங்களை வெளியில் நின்ற மற்றச் சிப்பாய்களிடம் நடித்துக் காண்பித்து மகிழ்ந்தார்கள். எனக்கு ஹிந்தி ஓரளவு தெரிந்திருந்தால் அவர்கள் பேசிய அநாகரீமான வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருந்தது. கோபம் கோபமாக வந்தது. எதுவும் செய்யமுடியாத எனது இயலாமையை நினைத்து வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது.

யாரிடமும் சொல்லவேண்டாம்:
பஸ் வண்டியில் இந்தியப் படையினரின் தொல்லைகளுக்கு உள்ளாகி இருந்த பெண்களின் கண்களில் கண்ணீர் மல்கியது. ஒரு இளம் பெண்னுடன் வந்திருந்த தாய் என்னருகில் வந்து, “தம்பி, இங்கு இந்தப் பெண் பிள்ளைகளுக்கு நடந்த அவமரியாதையை தயவுசெய்து ஊரில் எவரிடமும் சொல்லிவிட வேண்டாம்.. எனது பிள்ளையின் வாழ்க்கை பாதித்துவிடும்..|| என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
அதேபோன்று எனக்கு தெரிந்த அக்கா ஒருவரும் அந்த பஸ்ஸில் வந்திருந்தார்.
அவருடன் வந்த அவருடைய கணவன் சோதனைக்காக பஸ்சைவிட்டு இறங்கிச் சென்றிருந்தார். அந்த அக்கா என்னிடம், “நிராஜ்.., அண்ணணிடம் மட்டும் இது பற்றி ஒன்றும் சொல்லிவிடவேண்டம். அவர் மிகவும் கோபக்காரர். அவர் ஏதாவது செய்யவெளிக்கிட்டு, அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடலாம். தயவு செய்து அவருக்கு இதுபற்றி ஒன்றும் கூறவேண்டாம்|| என்று என்னிடம் இரந்து கேட்டுக்கொண்டார்.

பஸ்ஸில் இருந்து இறங்கிய ஆண்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்று சோதனையை முடித்துக்கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்தது.
அதுவரை பஸ் வண்டியில் எவருமே பேசவில்லை. பயங்கர அமைதி நிலவியது. வெளியில் நின்ற இந்திய ஜவான்களினது கேலிப் பேச்சுக்களை விட வேறு எதுவுமே எங்களுக்கு கேட்கவில்லை.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இந்தியப் படையினரின் மிகக் கொடுரமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுடன் ஒப்பிடும் போது, இங்கு நடந்தது ஒன்றும் பாரதூரமான விடயம் இல்லைதான் என்றாலும், அந்தச் சிறிய சம்பவம் என்னில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
கண்முன்னால் நடந்த அந்த அநீதியை எதிர்ப்பதற்கோ, அல்லது தட்டிக் கேட்பதற்கோ எனது வயதும், சந்தர்ப்ப சூழ்நிலையும் என்னை அன்று அனுமதிக்கவில்லை.
கையாலாகாதவர்களாக இதுபோன்ற கொடுமைகளை வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு நிலைதான் என்னைப் போன்ற சாதாரண ஆண்களுக்கு அன்று ஏற்பட்டிருந்தது.

ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றி இத் தொடரில் எழுதியேயாகவேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்கு ஏற்படுத்தியதும், இந்தச் சம்பவம் பற்றி என் மனதில் பதிந்திருந்த நினைவுகள்தான்.
கற்பிற்கு இலக்கனம் வகுத்த எமது தமிழ் பெண்களுக்கு இந்தியப் படையினர் இழைத்த கொடுமைகள் பற்றி அடுத்த வாரம் முதல் சற்று விரிவாகப் பர்ப்போம்.
தொடரும்..


செக்கிங்’ என்ற பெரில் இந்தியப் படையினர் செய்த கொடுமைகள்அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-80) – நிராஜ் டேவிட்

ஈழத்தில் இந்தியப் படையினர் சிறுமிகள், வயது வந்த மூதாட்டிகள் என்று எவரையுமே விட்டு வைக்கவில்லை. பெண் என்ற மானுடப் பிறப்பு முழுவதுமே பாலியல் வல்லுறவிற்கான இயந்திரங்களாகவே அவர்களுடைய கண்களுக்குத் தென்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர், யாழ்ப்பாணத்தில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இது காம வெறி பிடித்தலைந்த இந்தியப் படை ஜவான்களுக்கு நல்ல சந்தர்ப்பமாகவே அமைந்து விட்டது.
தேடுதல், ‘செக்கிங்| என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட பாலியல் வேட்டைகள் எழுத்தில் எழுத முடியாதவை.

‘ஆச்சி|க்கு நேர்ந்த கொடுமை:
1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி நிகழ்ந்த ஒரு கொடுமை இது.
யாழ்ப்பாணத்தில் வறிய றோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வசிக்கும் ஒரு பகுதியில், ஒரு 55 வயது மூதாட்டியையும், 22 வயதுடைய மற்றொரு பெண்ணையும் இரண்டு இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவு புரிந்த கொடுமை பற்றிய பதிவு இது.
ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இந்தியப் படையினர் முகாம் அமைத்து நிலைகொண்டிருந்தார்கள்.
அங்கு நடமாடிய அந்த 55 வயது பெண்மணிதான் முதலில் இந்தியப் படையினரின் கண்களில் தென்பட்டிருக்கின்றார்.
அந்தப் பெண்மணி ஏதோ ஒரு வேலையாக வெளியில் சென்றுவிட்டு தனது குடிசைக்குத் திரும்பியபோது, அவளைப் பின்தொடர்ந்து குடிசைக்குள் புகுந்த இந்தியப் படைவீரர்கள் இருவர் தமது வீரத்தை அந்தப் பெண்மணியிடம் காட்டினார்கள். அந்தப் பெண்மணியை, அவரது வயதையும் பொருட்படுத்தாது பாலியல் வல்லுறவு புரிந்தார்கள்.
அந்தப் பெண்மணி கத்த முற்பட்ட போது, அவரது வாயைப் பொத்திப்பிடித்தபடி அந்த அட்டூழியத்தை மேற்கொண்டார்கள்.


அந்த நேரத்தில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்காக வெளியில் சென்ற 22 வயது இளம் பெண் வீடு திரும்பியிருந்தாள். வீட்டின் பின்வாசலை அடைந்த அந்தப் பெண் வீட்டில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்பதை உணர்ந்து, “ஆச்சி..||, “ஆச்சி..|| என்று அழைத்திருக்கின்றாள்.
பின் கதவு மெதுவாகத் திறக்கட்டது. கதவில் இருந்து நீண்ட கரங்கள் அந்தப் பெண்ணையும் உள்ளே இழுத்தது. அங்கு இருந்த இரண்டு சிப்பாய்களில் ஒருவனால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்து “காப்பாற்றுங்கள்..|| “காப்பாற்றுங்கள்..|| என்று கத்தினாள். தேம்பித்தேம்பி அழுதாள். வீதியில் அவள் வந்து நின்ற கோலமும், அவளது நிர்கதி நிலையும் அயலில் இருந்தவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆத்திரத்துடன் திரண்ட சுமார் 400 இற்கும் மேற்பட்ட மக்கள் கோபாவேசத்துடன் இந்தியப் படை முகாமிற்குள் புக ஆரம்பித்தார்கள்.
இந்தியப் படையினர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதட்டத்துடன் இருந்த இந்தியப் படைவீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடுவதற்குத் தயாராக வைக்க ஆரம்பித்தார்கள்.
அடையாள அணிவகுப்பு:
தமது முகாமை நோக்கித் திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை சுட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை வழங்குவதற்குத் தயாரான அந்த முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரி, திடீரென்று “சுடவேண்டாம்|| என்ற உத்தரவை தனது ஜவான்களுக்குப் பிறப்பித்தார்.
திரண்டு வந்த கூட்டத்தின் மத்தியில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் வருவதை அவதாணித்ததைத் தொடர்ந்தே, அந்த அதிகாரி அப்படியான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
ஆம், அருகில் இருந்த தேவாலயத்தின் பங்குத் தந்தையான அந்தப் பாதிரியார் தலைமையில்தான் அந்தக் கூட்டம் அங்கு வந்திருந்தது.
சந்தர்ப்பவசமாக அந்த அதிகாரி ஒரு கிறிஸ்தவராக இருந்து விட்டதால், ஒரு பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.
கூட்டத்தை நோக்கித் தனியாகச் சென்ற அந்த அதிகாரி, பாதிரியாரிடம் தன்னை அறிமுகம் செய்துவிட்டு, என்ன விடயம் என்று விசாரித்தார். அந்த முகாமைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மேற்கொண்ட அந்தத் துர்நடத்தை பற்றி பாதிரியார் விளக்கிக் கூறினார்.
அந்தப் பெண்ணையும் அழைத்து அந்த அதிகாரி முன்னர் நிறுத்தி, அவளுக்கு நேர்ந்த கொடுமைக்காக அந்தப் பாதிரியார் நியாயம் கேட்டார்.


குடிசையில் இருந்த அந்த வயதான பெண்மணியையும் அங்கு அழைத்துப் போனார்கள்.
அங்கிருந்த இந்தியப் படையினரிடையே ஒரு அடையாள அணிவகுப்பை நடாத்துவதற்கு அந்த அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.
அடையாள அணிவகுப்பில் அந்தப் பாதகர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டார்கள்.
அவர்களிருவருக்கும் தண்டணை வழங்கப்படும் என்ற அந்த அதிகாரியின் உறுதிமொழியை நம்பி கூட்டம் கலைந்தது.
ஆனால் உண்மையிலேயே அந்தப் பாதகர்கள் தண்டிக்கப்பட்டார்களா, அல்லது அது வெறும் கண்துடைப்பா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
வரலாற்றுப் பெண்கள்:
ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணிற்கு நடந்த கொடுமை மிகவும் கொடூரமானது.
ஒரு காலத்தில் அவளது வீடு விடுதலைப் புலிகளின் முகாமாக இருந்தது. இந்தியப் படையினருடன் துணை வந்ததமிழ் குழு உறுப்பினர் இதனை இந்தியப் படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
‘செக்கிங்| என்று கூறிக்கொண்டு அந்த வீட்டை முற்றுகையிட்ட இந்தியப் படையினரின் கண்களில் அந்த 13 வயதுச் சிறுமி தென்பட்டுவிட்டாள்.


வீட்டிலிருந்த மற்றவர்களை மிரட்டிவிட்டு, அந்தச் சிறுமியைத் தனியே அழைத்துச் சென்று அவளைப் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கினார்கள். அந்தச் சிறுமியின் கதறல் அருகில் இருந்தவர்களின் காதைச் செவிடாக்கின.
பின்னர் அந்தச் சிறுமியின் குடும்பம் முழுவதும் கொழும்பிற்கு இடம்பெயர்ந்துவிட்டன.
இந்தியப் படையினர் தமக்கு இழைத்த கொடுமைகளை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு, தமது அன்றாட வேலைகளைக் கவணிக்க அரம்பித்த புத்திசாலித்தனமான எத்தனையோ பெண்கள் இன்னமும் இங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தம்மீது தமது விருப்பதையும் மீறி பட்ட கொடிய கரங்களின் அடையாளத்தை ‘தூசி|தட்டிவிட்டு, தமது வரலாற்றுக் கடமைகளை மேற்கொள்ள ஆரம்பித்த எத்தனையோ வீரப் பெண்களும் எமது சமூகத்தில் காணப்படவே செய்கின்றார்கள்.
அதேவேளை தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி வேண்டிப் போராடிய வீரப் பெண்கள் பலரது கதைகளும் பரவலாகக் காணப்படவே செய்கின்றன.
அவை பற்றி அவகாசம் கிடைத்தால் இந்தத் தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

அவலங்கள் தொடரும்…

About VELUPPILLAI 3405 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply