“மொழி என்பது வெறும் கருவியதானா?”

-ராஜ்சிவா(ங்)

மதன் கார்க்கி, ‘நீயா நானா?’ கோபிநாத்திடம் கொடுத்த பேட்டியைக் காண நேர்ந்தது. மிகவும் சிறப்பான பேட்டி. அருமையான விளக்கங்கள். அட்டகாசமாய் இருந்தது. ரங்கராஜ் (பாண்டே) சொல்வதுபோல, ‘அதிலொன்றும் குழப்பமில்லை’.

ஆனால்….,

பேட்டியின் ஒரு இடத்தில், “மொழி என்பதில் பெருமைப்பட எதுவுமில்லை. அது வெறும் கருவிதான்” என்று சொன்னார். அதைக் கோபிநாத்தும் மீளுரைத்தார். அங்குதான் எனக்கான சிறிய முரண்பாடு தோன்றியது.

அப்படி அவர் சொன்னதற்குத் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இருக்காது என்று நான் நம்பினாலும், அக்கூற்றை மறுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர் சொன்ன கூற்றில், பாதிதான் உண்மை. பாதி மட்டுமே!

மொழி என்பது இரண்டு வகையானது. ஒன்று ‘தன் மொழி’ (தாய் மொழி) மற்றது ‘பிற மொழி’(கள்). பிற மொழிகளைத் தேவைக்கேற்பப் பயன்பாட்டின் நோக்கம் கருதிக் கற்றுக்கொள்ளலாம். அப்படிக் கற்கும்போது அம்மொழியின் இலக்கணத்தையே பெரும்பாலும் கற்றுக் கொள்கிறோம். கற்றபின் அதற்குத்தக நிற்கிறோம். அதைப் பேசத் தெரிந்தவனாகிறோம். எழுதத் தெரிந்தவனாகிறோம். அந்த அளவில் பார்க்கும்போது, ஆம்! மொழி ஒரு கருவிதான். நாம் ஆங்கிலம் கற்பதும், ஜெர்மன் கற்பதும் அந்த அடிப்படையில்தான். அம்மொழிகளை நாம் பயன்பாட்டுக்கான ஒரு கருவியாகவே அணுகுகிறோம். அவற்றில் பெருமைப்பட நமக்கு எதுவும் இல்லை என்பது உண்மைதான். தொழில் நிமித்தமாகவோ, வாழ்வியல் தேவை நிமித்தமாகவோ அவை கருவிகளாக இருக்கும். எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறோமோ அத்தனை கருவிகள் நம்மிடம் இருக்கும்.

ஆனால், தாய்மொழி என்பது வேறு. அது வெளியில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒன்றல்ல. அது உள்ளே இருந்து, நாம் குழந்தையாக இருக்கும்போதே நம்முடன் சேர்ந்து வளர்வது. ஒரு குழந்தை முதன்முதலில் “அம்மா” என்று சொல்லும்போது அது இலக்கணம் கற்றுக் கொண்டு அதைச் சொல்வதில்லை. அந்தக் குழந்தையின் உடம்புடனும், உயிருடனும் சேர்ந்து ஒலித்தபடி வளர்வது தாய்மொழி. அது ஒருவனின் வளர்ச்சியுடன் ஒன்றிப்போன அவன் உடம்பின், உயிரின் ஒரு பரிமாணம்.

ஒரு மொழியின் உண்மையான தரம் அதன் இலக்கியத்தில் குவிந்திருக்கும். இலக்கணம் ஒரு மொழியின் உடம்பு என்றால், இலக்கியம் அதன் உயிர். அதன் சிந்தனை. தமிழ் இந்த வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தது. தமிழின் சங்க இலக்கியம் என்பது வெறும் பழைய கவிதைத் தொகுப்பு இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதாதைத் தமிழர்களின் அன்பு, துயரம், வீரம் போன்றவற்றை இன்றும் நம்முடன் பேசிக் கொண்டிருப்பது. அவர்களின் குரல்கள் இப்போதும் அழியாமல் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு தமிழனாய்ப் பெருமை கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. வள்ளுவரின் வாக்கு வெறும் சொற்களல்ல. உலகின் எந்த மொழியிலும் காணப்படாத, இரண்டே வரித் தத்துவத்தைக் கொண்டு வந்த குறள் நமக்குப் பெருமை இல்லையா? தமிழின் தொன்மை, அதன் அடர்த்தி, அதன் இலக்கண/இலக்கிய ஆழம், எல்லாமே பெருமையின் உச்சம்.

உலகில் பல மொழிகள் பிறந்து மறைந்திருக்கின்றன. பல சமீபத்தில்தான் உருவாகியவை. ஆனால் தமிழ் என்றோ பிறந்து இன்றும் வாழ்கிறது, பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, படைக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழனுக்குப் புரிகிறது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த தொடர்ச்சி ஒரு நாகரிகத்தின் ஆளுமையைச் சொல்கிறது.

உலகில் பல மொழிகள் பிறந்து மறைந்திருக்கின்றன. பல சமீபத்தில்தான் உருவாகியிருக்கின்றன. ஆனால் தமிழ் என்றோ பிறந்து இன்றும் வாழ்கிறது, பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, படைக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழனுக்குப் புரிகிறது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த தொடர்ச்சி ஒரு நாகரிகத்தின் ஆளுமையைச் சொல்கிறது. அதன் மாறாத இளமையைக் குறிப்பது. இவையெல்லாம் பெருமைக்கான அடையாளங்களே!

மொழி என்பது வெறும் கருவியாக இருந்தால், அதை யாரும் எடுத்தாள முடியும். கருவிகளுக்கெனத் தனி அடையாளம் இல்லை. ஆனால், தாய்மொழி என்பது ஒருவனின் தனி அடையாளம். ஒருவன் தன் தாய்மொழியை இழந்தால், அவன் தன்னிடமிருக்கும் ஒரு கருவியை இழப்பதில்லை. அவனையே இழக்கிறான்.

எனவே, மதன் கார்க்கி, மொழியை ஒரு கருவி என்று சொன்னது, தமிழ் தாண்டிய இரண்டாம், மூன்றாம் பிற மொழிகளைத்தான் குறிப்பதாக நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இல்லை, அவர் தமிழைத்தான் சொல்கிறார் என்றாலும், அது அவரது உரிமை. ஆனால், என் பார்வையில், தமிழ் வெறும் கருவியல்ல. அது என் சிந்தனையின் வடிவம். என் நினைவுகளின் இல்லம். என் முன்னோர்களின் குரல். அதில் பெருமைப்படுவதற்கு எனக்கு பல்லாயிரம் இருக்கின்றன. இனியும் இருக்கும்.​​​​​​​​​​​​​​​​

*இங்கு தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நான், தமிழ் பற்றி எழுதியிருக்கிறேன். அதுபோல அவரவர்க்கு அவரவர் தாய்மொழி. அது அவர்களுக்கும் அவை கருவி அல்ல. பெருமைதான்.

-ராஜ்சிவா(ங்)

About nakkeran 202 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply