சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர்
சீதாவாக்கை அரசின் முதலாம் இராசசிங்க மன்னன் (~1600) அவையில் இருந்த ஒரு அலுவலர் “அழகியவண்ண முகவெட்டி”. அவர் பல்வேறு சிங்கள இலக்கியங்களைப் படைத்தவர். சிங்கள அரசு மீது போர் தொடுத்து போர்த்துக்கேயத் தளபதி “கொன்’ச்டான்டி சூசா” ( Constantine De Sa De Noronha) தோற்றுப் பின்வாங்கியதைப் பாடும் “கொன்சுதாந்தினு ஃகட்டன” இவர் இயற்றிய சிங்கள இலக்கியங்களில் புகழ்பெற்றது. இதைப் பின்பற்றி பல “கட்டன” இலக்கியங்கள் சிங்களத்தில் பாடப்பட்டுள்ளன.
இவரது இன்னொரு நூல் சுபாசிதம். தமிழ் – சங்கத மொழி நீதிநூல்களில் இடம்பெற்ற பல செய்யுள்கள் சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
“அழகியவண்ண முகவெட்டி” என்ற பெயரிலுள்ள முகவெட்டி என்பது ஒரு பதவிப் பெயர். சோழர் காலத்தில் தமிழகத்திலும் முகவெட்டி என்ற அரச பதவி நீடித்தது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவருகிறது.

அப்பதவியிலிருந்தோரின் பணி என்னவென்பது தமிழகத்தில் தெளிவில்லை. ஆனால் இலங்கையில் இருந்த முகவெட்டிகள் பெரிதும் அரச தொடர்பாடல்களில் மொழிமாற்றத்திலும் ஆவணப் பதிவுகளிலும் உதவியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்களின் முதன்மைத் தொழில் பிறமொழி ஆவணங்கள், பிறமொழிக் தூதர்களின் செய்திகளை மொழிமாற்றிக் குறிப்பெடுப்பதாகவும் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அழகியவண்ணரும் அவ்வாறு சிங்கள அரசவையில் தமிழில் மொழிபெயர்ப்பாளராக இருந்து பின் அந்தச் சிங்கள மொழித் தேர்ச்சியால் இலக்கியங்கள் படைத்திருக்கக்கூடும்.
முகவெட்டி என்பது பின்னாளில் சிங்களத்தில் திரிந்து “மொகொட்டி” என்றும் “மொகொத்தால” என்றும் மாறியது. மொகொத்தால என்பது “மொகொட்டி (முகவெட்டி)+ஆள்” என்ற இன்னொரு தமிழ்ச்சொல் தான். அப்பெயர்களை தங்கள் முழுப்பெயரில் “வாசகம” குடும்பப் பெயராக இணைத்துக்கொள்ளும் பலர் இன்றும் இருக்கிறார்கள்.
சிங்களப்புத்தாண்டில் வருடம் பிறக்கும் விழு நேரத்தில் தமிழர் தலையில் மருத்துநீர் வைத்து நீராடும் வழக்கம் போலவே சிங்களர் நல்லநேரம் கணித்து தலைக்கு எண்ணெய் வைத்து நீராடும் வழக்கம் இருக்கிறது. அந்த நேரத்தைக் கணித்துச் சொல்லும் சோதிடருக்கு கண்டி தலதா மாளிகையில் “நகத் மொகொத்தால” என்று பெயர். நகத் என்றால் நட்சத்திரம். நட்சத்திர முகவெட்டியாள். சோதிடக்கணிப்பு செய்தவர்கள் பெரிதும் தமிழ், வடமொழி சோதிட நூல்களைப் பயன்படுத்திய காலக்கணிப்பாளர்கள் என்பதால் நட்சத்திர முகவெட்டியாளும் முன்பு ஒரு தமிழ் அறிந்த அலுவலராகவே இருந்திருக்கலாம்.
படம்: கண்டி அரசு பிரித்தானியர் கைகளில் வீழ்ந்த பின்னர் 1816.03.19 அன்று பிரித்தானிய அலுவலர் யோன் டி ஒயிலிக்கும், கண்டி அரசை வீழ்த்த உதவிய சிங்களப் பிரதானிகளான எகலப்பொலை, மொல்லிகொடை, கப்புவத்தை ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் இடையே இடம்பெற்ற முதன்மையான அரசுசூழ்கை கலந்துரையாடலைச் சித்தரிக்கும் கோட்டு வரைபடம். செய்தெண்மை (AI) உதவியுடன் புகைப்படமாக்கப்பட்டது.
இதில் “கண்டியச் செயலாளர்” (Candyan Secretary) என்று குறிப்பிடப்பட்டிருப்பவர் அந்தக் கலந்துரையாடலை குறிப்பெடுக்கும் கண்டி அரசின் முகவெட்டி ஒருவர். கண்டி அரசன் சிறைப்பிடிக்கப்பட்டபோது இராணி வெங்கடரங்கம்மாளின் செவியை அறுத்து அவ்வம்மையார் காதணியை அபகரித்த கொடூரச் செயலைச் செய்தவனும் “கிரிபோருவ” எனும் முகவெட்டி பதவி வகித்த ஒருவன் தான்.

Leave a Reply
You must be logged in to post a comment.