கம்பன்கழகம்_பட்டிமன்றம்_ராமராஜ்ஜியம்
தமிழை வளர்க்கிறோம் எனும் பெயரில் பிராம்மணர்களின் ஆதிக்கத்தை வளர்ப்பது கம்பன் கழகம் போன்ற இலக்கிய மன்றங்கள்தான்.தமிழை விரும்பி,கம்பனின் கவிதைகளில் மயங்கி அதன் விளைவாக உள்நோக்கம் கொண்ட கம்பன் கழகத்தில் இணைந்து, பிராம்மண உயர்வை ஏற்று பட்டிமன்றத்தில் மதிமயங்கிப் போனவர்களே அதிகம்.இதன் விளைவாக ராமராஜ்ஜியம் போன்ற ஆபத்தான விசயங்களை ஆதரிக்கும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது.
பிராம்மணர்களின் உயர்வை,பெருமையைப் பேசும் நூல்களில் கம்பராமாயணம் முதன்மை நூலாகும்.
“ஶ்ரீராமனை எங்கு காண்பது எனும் கேள்விக்கு, அவன் ஏதாவது ஒரு பிராம்மணனின் காலில் விழுந்து கிடப்பான்” என இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக உபன்யாசகர் ஒருவர் கூறிய காணொளி Youtube ல் உண்டு.
பிராம்மணர்கள் இராமாயணத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் ஶ்ரீராமன் பிராம்மணர்களின் சொற் கேட்டு இராஜ்ஜியத்தை நடத்தியதுதான்.அவனது ஒவ்வொரு நகர்வும் பிராம்மணர்களின் வழிநடத்தலின்படிதான் நடந்தேறியது.ஶ்ரீராமன் பிராமணர்களை வணங்கினான் என்பதை விளக்குவதற்கே கம்பராமாயண நூல்கள் பயன்பட்டன. ஒரு மன்னனே பிராம்மணர்களை வணங்கி அவர்களது சொற் கேட்டு நடக்கையில் பாமர மக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?! இப்படித்தான் பிராம்மணர்களின் ஆதிக்கம் படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டது, அதன் தொடர்ச்சிதான் பிராமணர்களின் துதிபாடும் கம்பனை முன்னிறுத்தும் இலக்கிய மன்றங்கள்.
வேதங்கள் மட்டும் அழியாமல் இருந்தால் போதும், அதைக் கொண்டு பிரம்மா,விஷ்ணு,சிவ போன்ற தேவர்களை பிராம்மணர்களால் படைக்க இயலும் எனும் கதைகளும் உண்டு. இந்தக் கதையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்,தமிழ் ஆர்வலர்கள்,கம்பன் கழகத்தார் புகழும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிராம்மணர்களைப் புகழும் பாடல்களைக் கீழே தருகிறேன்.இப்பதிவில் உள்ள கம்பராமாயணப் பாடலுக்கான உரை வை.மு.கோபாலக்ருஷ்ணமாசார்யர் அவர்கள் எழுதிய கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் (1928 ஆம் ஆண்டு பதிப்பு) -மந்தரை சூழ்ச்சிப் படலத்திலிருந்து பெறப்பட்டதாகும். ஶ்ரீ ராமனுக்கு, குல குருவாகிய வசிட்டன்(வசிஷ்டர்) கூறும் அறிவுரைகளாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.
“கரிய மாலினுங் கண்ணுத லானினு
முரிய தாமரை மேலுறை வானினும்
விரியும் பூதமொ ரைந்தினு மெய்யினும்
பெரிய ரந்தணர் பேணுதி யுள்ளத்தால்.”
அந்தணரது பெருமை இந்தவுலகத்திலும் அடங்காது; ஏனெனின் வானுலகத்துத் தேவர்களினும் பெரியர் அந்தண ரென்று நூல்கள் ஒதுதலா லென்க. அந்தணர் பெருமையைக் கூறவந்தவர் சத்தியம் மிகச் சிறந்ததென்று அதன்பெருமையையும் பெற வைத்தார். மெய்யினும் பெரியர் அந்தண ரென்று அந்தணரைச் சார மெய்யை வைத்தது, அவர்க்குச் சத்தியம்வேண்டு மென்பதைக் குறிப்பிக்கும். மும்மூர்த்திகளெனவே,
பிரபஞ்ச காரணங் கூறியதாயிற்று; விரியும் பூதமொரைந்தெனவே, காரியமாகிய பிரபஞ்சங் கூறியதாயிற்று. மெய் – பிரபஞ்சத்திற்கு ஆதாரமாகிய சத்தியம்: இவை யனைத்தினும் உயர்ந்தோர் அந்தணரெனவே, அவரையன்றி உலகம் நின்று நிலவா தாதலின், உலகம் அளிக்கும் அரசர்க்கு அவரைப் பேணுதல் இன்றி யமையாத தென்றதாயிற்று.
“அந்த ணாளர் முனியவு மாங்கவர்
சிந்தை யாலருள் செய்யவுந் தேவரி
னொந்து ளாரையு நொய் துயர்ந் தாரையு மைந்த வெண்ண-வரம்பு முண் டாங்கொலோ”
தேவர்களில் அந்தணரின் முனிவால் இழிந்தோரும் அநுக்கிரகத்தால் மேன்மையடைந்தோரும் பலர் காணப்படுகின்றனரென்று காரணங்காட்டிக் கீழ்ச்செய்யுளில் தேவரைக்காட்டிலும் பெரியர் அந்தணரென்றதனை நிலைநாட்டு கின்றான் வசிட்டனென்க. நொந்துளார்க்கு – துருவாசமுனிவன் சாபத்தினால் இந்திரன் தன்பதமிழந்து தாமரைத்தண்டி லொளித்ததும், இந்திர பதவிபெற்ற நகுஷன் அகத்திய முனிவன் சாபத்தினால் மலைப்பாம்பாயின மையும் : அருளினால் மேம்பட்டதற்கு-பிருகு முனிவனால் திருமால் பரம்பொரு ளென்று விளக்கப்பட்டமையும் முதலியன காண்க.
“அனைய ராதலினையவிவ் வெய்யதீ
வினையி னீங்கிய மேலவர் தானினைப் புனையுஞ் சென்னியை யாய்ப் புகழ்ந் தேத்துதி யினிய கூறிநின் றேயின செய்தியால்.”
முதலில் அந்தணாளர் பெரியராதலால் அவரைப் பேணவேணுமென்று கூறி, கீழ்ச் செய்யுளால் தேவர்களைக்காட்டிலும் அவர் சிறந்தவரென்பதற்குக் காரணங் கூறி, இதனால் அந்த ஏழாஞ் செய்யுளிற் கூறிய விஷயத்தை முடிக்கின்றான்.
“ஆவ தற்கு மழிவ தற் கும்மவ
ரேவ நிற்கும் விதியுமென் றாலினி
யாவ தெப்பொரு ளிம்மையு மம்மையுந்
தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே.”
கீழ் இரண்டு செய்யுளிற் கூறியதே மனத்திற்படும் பொருட்டு வேறு வகையாகக் கூறப்படுகின்றது. நல்லொழுக்கமுடைய அந்தணர் ஒருவனைப் பார்த்து இவனுக்கு நன்மை பெருகவேண்டுமென்று கூறினாலும் இவன் அழிந்திடவேண்டுமென்று கூறினாலும், விதியும் அவர் ஏவலின்படி நிற்பதால் ஆவ்வந்தணரைக்காட்டிலுஞ் சிறந்தது எப்பொருள்? எதுவுமில்லை; தேவர்களைப் பரவுவது இவ்வந்தணரைப் பேணுவதைக்காட்டிலுஞ் சிறந்த அளவையுடையதாகுமோ? என்பது, பொருளாகும். ஆகூழ், போகூழ் என்பனபற்றி, ‘ஆவதற்கு மழிவதற்கும்’ என்றான். தெய்வமும் தான் அந்தணர்க்கு ஏவல் செய்யு மென்பதாம்.
“கரிய மாலினுங் கண்ணுத லானினு…”
எனும் மேலுள்ள கம்பராமாயணப் பாடலை, கரியமாலிற்கும்(திருமாலுக்கும்) அந்தணர் பெரியர்” என்பதை பாம்பன் சுவாமிகள் எழுதிய”சைவசமயசரபம்” நூல் முன்னுரை குறிப்பிடுகிறது.
கம்பராமாயணத்தின் மேலுள்ள பாடல்களை விமர்ச்சித்து மேலும் பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
இராமனின் பிறப்பு,சம்பூகனின் வதம்,வாலி வதம், சீதை தீக்குளிப்பு என ஆயிரம் சொல்லுங்க.. ஆனாலும் கம்பனின் வரிகள் போல வேறெங்குங்கும் இல்லையென மதிமயங்கி பட்டிமன்றம் எனும் பெயரில் பிராம்மண ஆதிக்கத்தை ஆதரித்து,சமூகத்திற்குத் தேவையற்ற கருத்தைத் திணிப்பவர்களே அதிகம்.


Leave a Reply
You must be logged in to post a comment.