கொழும்பில் கண்ணகி – நவகமுவ பத்தினிக் கோயில் :-

இலங்கையின் கொழும்பு மாவட்டத்திலுள்ள நவகமுவ ( Nawagamuwa ) என்ற இடத்தில் `நவகமுவ பத்தினிக் கோயில் ` (Nawagamuwa Pattini Devalaya) என்றொரு கோயிலுண்டு. `பத்தினித்தெய்யோ` என்ற பெயரில் சிங்களவர்களால் வழிபடப்படும் இக் கோயிலானது கண்ணகித் தெய்வத்துக்கு என எழுப்பப்பட்ட கோயிலேயாகும். நவகமுவா எனப்படும் இப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு, மேற்படை ஆய்வு என்பன இவ்விடத்தின் தொன்மையினை இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லுகின்றது. ஏறத்தாழ அதே காலப்பகுதியில்தான் இலங்கையிலிருந்து கயவாகு எனும் அரசன் தமிழ்நாட்டுக்குச் சென்று கண்ணகி வழிபாட்டினை இலங்கைக்குக் கொண்டு வந்ததாக அறிஞர் கருதுகின்றனர். செங்குட்டுவன் நடத்திய கண்ணகி விழாவுக்கு கயவாகு மன்னன் வந்த செய்தியினைச் சிலம்பும் கூறுகின்றது.👇

“கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,

‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்

நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்

வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட-

‘தந்தேன் வரம்!’ என்று எழுந்தது ஒரு குரல்”

: வரந்தரு காதை ,சிலப்பதிகாரம்.

நவகமுவ பத்தினிக் கோயிலில் சிலம்பும் முகன்மையான ஒரு வழிபடு பொருளாகவுள்ளது.

இக் கோயில் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பது தொடர்பான பல்வேறு கருதுகோள்கள் உள்ளன. 👇👇

👉கயவாகு மன்னன் 12000 வீரர்களுடன் திரும்பும் போது, பத்தினியின் சிலம்பினையும் கொண்டு வந்தான்.

👉அனுராதபுரத்துக்குத் திரும்பிச் செல்லும் போது, இவ்விடத்தில் கயவாகு மன்னன் ஓய்வெடுத்தான். அப்போது இங்கு சிலம்பினை வைத்துக் கோயிலைக் கட்டினான்.

👉பத்தினித் தெய்வமே (கண்ணகியே) 12000 பேருடன் இங்கு எழுந்தருளினாள்.

👉சேரளத்தில் இருந்து வந்த நீலப்பெருமாள் பண்டாரம் ( Neelaperumal Pandaram ) இக் கோயிலைக் கட்டினார்.

👆எது எவ்வாறாயினும் இது கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோயில் என்பது தெளிவாகின்றது. அதே போன்று அகழாய்வுச் சான்றுகளின் படி இவ்விடத்தின் தொன்மையும் உறுதியாகின்றது. தற்போதைய கட்டிடங்கள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும், பழமை பேணப்படுகின்றது. இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இக் கோயில் இப்போதுமுள்ளது.

இக் கோயிலின் முகன்மையான விழாவாக ஆவணி மாதத்தில் நடைபெறும் `கோன்-பிட்ட பெரகரா`= `Gonpita Perahera’ என்பது காணப்படுகின்றது. இந்த விழாவில் பத்தினித் தெய்வத்தின் சிலம்பு மற்றும் ஏனைய அணிகலன்கள் எருதின் மீது வைத்து எடுத்துச் செல்லப்படும். ஏனைய பல இடங்களில் பெரகரா (பெருவலம்) வின் போது யானையே பயன்படுத்தப்பட, இங்கு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இப் பெருவலம் ( `Gonpita Perahera’ ) ஏறத்தாழ 1500 ஆண்டுகளாகத் தொடர்வதாகச் செவிவழிக்கதைகள் கூறுகின்றன.

கயவாகு மன்னன் ஆண்டு தோறும் ஆடி மாதத்திலேயே பத்தினி தெய்வத்திற்கு விழா எடுப்பித்தான் என்பதும் , ஆடிமாதத்தினைச் சிங்களத்தில் `எசல` (Esala ) எனப்படுவதும், `எசலப் பெரகரா`{ Esala Perahera } (ஆடிப் பெருவலம்) என்பதே இலங்கையின் பெரும் திருவிழா என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

About nakkeran 198 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply