பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்

1961ஆம் ஆண்டு தி.மு.க.வி லிருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து, தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அதன் தொடக்க விழா மாநாடு சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் (தற்போது புறநகர் தொடர் மின்வண்டி நிலையம் இருக்கும் இடம்) நடந்தது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு அரசியல் கட்சியின் தொடக்க விழா மாநாடு என்றாலும் அது பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் கடவுள் – மதம் குறித்து விவாதித்த மாநாடாகவே மாறிவிட்டது. கருத்து மாறுபாடுகளை எவ்வளவு நாகரிகத்துடன் உரையாடல்களாக பெரியார் நடத்தினார் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது. இந்த நிகழ்வை மறைந்த சுயமரியாதை சுடரொளி திருவாரூர் தங்கராசு, ‘தந்தை பெரியார் வாழ்வில்’ என்ற தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

“அடிகளார் தமது பேச்சை மிகப் பக்குவமாகத் துவக்கி அய்யா அவர்களையும் தோழர் சம்பத் அவர்களையும் பிரிந்து வந்த தோழர்களையும் பாராட்டிவிட்டு தனது பக்தி மார்க்கப் பிரச்சாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு விட்டார்! கட்சியோ புதியதாகப் பிறந்த அரசியல் கட்சி அருகிலோ முழு முதல் கடவுள் மறுப்பாளராகிய தந்தை பெரியார் அவர்களும் அவரது தோழர்களும் அடிகளார் இந்தச் சூழ்நிலையைச் சிறிதும் பொருட்படுத்தாது தமது கருத்தை வலியுறுத்தி கடவுள் நம்பிக்கை ஒன்றுதான் மனிதனை முன்னேற்றும் என்றும், மதம் இன்றி மனிதன் வாழ்தல் இயலாது என்றும் அப்பரைப் போன்று பொதுத் தொண்டு, இறைத் தொண்டு செய்பவர்களை இப்போது காண்பது அரிதாகிவிட்டது என்றும், பகுத்தறிவு வாதம் என்பது அல்லது கடவுள் மறுப்பு என்பது ஒரு விவாதக் கருத்தாகக் கொண்டு வாதம் செய்ய உபயோகப்படுமே தவிர வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சிறிதும் உதவாது என்றக் கருத்துப்பட பேசி கடவுள் நம்பிக்கையை அவரளவில் மிகமிக ஆணித்தரமாகப் பேசி முடித்தார்.

அடுத்து தந்தை பெரியார் பேச அழைக்கப்பட்டார். அய்யா அவர்கள் வழக்கம்போல சம்பத் மற்றும் கண்ணதாசன் அவர்களையும் பலபடப் பாராட்டி பேசிவிட்டு புதிதாக தோன்றியிருக்கும் தமிழ் தேசியக் கட்சி தமிழ் மக்களின் திராவிட மக்களின் மேம்பாட்டுக்காக அரசியல் பொருளாதார சமுதாய மேம்பாட் டுக்காக நல்லவண்ணம் பாடுபடும் என்று நம்புகிறேன் என்று கூறி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் அடிகளார் கூறிய கடவுள் பற்றிய தத்துவக் கருத்துக்கு பதில் கூறும் வகையில்

“இங்கே நமது பெரும் மதிப்புக்குரிய சன்னிதானம் (அடிகளாரை அய்யா அவர்கள் அப்படித்தான் முன்னிலைப்படுத்துவார்) அவர்கள் பேசும்போது கடவுள் நம்பிக்கைப் பற்றி கொஞ்சம் அளவுக்கதிகமாகவே விளக்கம் கொடுத்து கடவுளை நம்புவதும் வழிபடுவதும் தான் மனித வாழ்க்கையின் முக்கியத் தேவை என்பதாகக் குறிப் பிட்டார்கள். மகா சன்னிதானம் அவர்களை மிகப் பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மனித சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக உள்ளபடியே பயன்படக் கூடிய கடவுள் பெயரைச் சொல்லி அதற்கு ஆதாரமான சாஸ்திரங்களைக் கூறி சன்னிதானம் அவர்களது திருக்கையாலே இப்பொழுது இந்த மேடையிலேயே விபூதியோ, குங்குமமோ கொடுத்தால் அந்த வழியிலேயே பாடுபடக் காத்துக் கொண்டிருக்கிறேன். மகாசன்னிதானம் அருள்கூர்ந்து எனக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறேன், பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி அடிகளார் பக்கம் திரும்பி (உம் சொல்லுங்கள்) என்பது போல தனது பார்வையைச் செலுத்தினார். குன்றக்குடி அடிகளார் அவர்கள் வாயைப் பிளந்து சிரித்த படியே மேலேயும், கீழேயும் அய்யா அவர்களையும் பார்த்தபடியே சில நொடிகளைப் போக்கிவிட்டு மௌனம் சாதித்துவிட்டார்! அய்யா அவர்கள் ஒரு சில மணித்துளிகள் பொறுமையாக இருந்துவிட்டு பிறகு தொடர்ந்து பேசலானார்கள். இப்படித் தானுங்க! கடவுளை பத்தி அதோட சக்தியைப் பற்றி லீலைகளைப் பற்றி ரொம்ப விளக்கமாகப் பேசுவாங்க. பக்தி இல்லா விட்டால் மனித சமுதாயமே அழிந்து போய்விடும், பக்தி இல்லாதவனுக்கு மோட்சம் கிடைக்காது, நரகம் தான் கெடைக்கும் என்றெல்லாம் சாபம் கொடுப்பாங்க. நெருங்கிக் கேட்டால் பேசாமல் வாயை மூடிக்குவாங்க! நம்ப மகாசன்னிதானமே இப்படியிருந்தா மத்தவங்களப் பத்தி நான் என்ன சொல்ல இருக்குது! ஒன்றை மட்டும் மனசுலே தெளிவா புரிஞ்சுக்குங்க, கடவுள் பக்தி இல்லைன்னாலோ நம்பிக்கையில் லேனாலோ மோட்சம் கிடைக்காது, நரகம் தான் கிடைக்கும்னு சொல்றாங்க! எனக்கு பக்தி கிடையாது. போனால் போகட்டும் எனக்கு நரகம் கெடைக்குமுனா அது என் ஒருத்தனோட போயிடும். ஆனால் எனக்கு ஒழுக்கம் இல்லைன்னாலோ அது நமது சமுதாயத்தையே பாதிக்குமே அதைப் பத்தி சன்னிதானம் போன்றவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்! பக்தியைவிட ஒழுக்கம் – ஒழுக்கம்தான் மனித வாழ்க்கைக்கு அவசியமானது, தேவையானது என்பது வெளிச்சமா நல்லாவே புரியுமே!

மனித வாழ்க்கைக்கு கடவுளைவிட கடவுள் பக்தியைவிட நல்ல ஒழுக்கம், உழைப்பு இது இரண்டுதான் முக்கியம். அவசியம், அதைவிட்டு விட்டு கடவுள் பக்தி வெங்காயம் அது, இது இதையெல்லாம் நம்பாவிட்டால் நரகம் கெடைக்கும். நாசமா போயிடுவோமுன்னு பயங் காட்டுறாங்களே! ஏன் இந்த வீண் வேலை? சாயபுகளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டுன்னாலும் அதற்கு உருவம் இல்லைன்னு சொல்லிப் போட்டாங்க. கிறிஸ்தவனும் ஏசநாதரை தேவகுமாரன்னு சொல்லி அவர் பேர வைச்சுப் பொழப்பு நடத்துறாங்க – நம்ம கடவுள்களை எடுத்துக்கிட்டா எந்தக் கடவுளுக்காவது ஒழுக்கம் இருக்கா! கொலை பண்ணாத அடுத்தவன் பெண்டாட்டியை கெடுக்காத யோக்கியமான கடவுள் ஏதாவது ஒன்றையாவது காண்பிச்சு வச்சுருக்கானா? எல்லாமே காட்டுமிராண்டி காலத்திலே கற்பிக்கப்பட்ட யோக்கியமோ ஒழுக்கமோ இல்லாத கடவுள்கள்! இதுங்களை நம்பாமல் போனா என்னா குடியா முழுகிப் போகும் என்று தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக மிகத் தெளிவவாக விளக்க உரையாற்றினார்கள்.

அடிகளார் வாயைத் திறக்காமல் மிகவும் ரசித்துக் கேட்டபடியே கடைசி வரை இருந்தார். சம்பத் அவர்களுக்கோ அரசியல் மேடையை அய்யா இப்படி முற்றாக மூட நம்பிக்கை ஒழிப்பு மேடையாக மாற்றி விட்டாரே என்று சிறிது வருத்தம் இருந்தாலும் சிறிதும் கூட்டம் கலையாமல் ஆரவாரமாக ரசித்துக் கேட்டதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டார்.

About nakkeran 197 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply