குற்ற ஆலம் – ஒரு பார்வை
நக்கீரன்
ஒரு நூல் வெளியீட்டு விழா என்றால் வரவேற்பு நடனம் இருக்க வேண்டும். மங்கள விளக்கேற்றல் இருக்க வேண்டும். பொன்னாடைகள் அல்லது மாலைகள் இருக்க வேண்டும். வரவேற்புரை, வாழ்த்துரை, அறிமுகவுரை இருக்க வேண்டும். இவை எல்லாம் இல்லாத நூல் வெளியீடு இருக்க முடியுமா?

கடந்த ஒக்தோபர் மாதம் 5 ஆம் நாள் நடந்த திரு அசை சிவதாசன் அவர்கள் எழுதிய குற்ற ஆலம் என்ற நூல் வெளியீட்டில் மேலே குறிப்பிட்ட சடங்குகள் இடம் பெறவில்லை. குற்ற ஆலம் சிவதாசன் அவ்வப்போது பல ஏடுகளில் எழுதி வெளிவந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். குற்ற காலம் என்ற கடைசிக் கதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.
நூலைப் படித்துவிட்டு அவைபற்றிய எனது பார்வையை சுருக்கமாய் பதிவு செய்யலாம் என நினைத்தேன். எனவே முதலில் குற்ற ஆலம் என்ற கதையைப் படித்தேன். எனக்குள் பல கேள்விகள். தொடர்ந்து குப்பி என்ற கதையைப் படித்தேன். மேலும் மனதுக்குள் பற்பல கேள்விகள். ஒரு நூலைத் திறனாய்வு செய்யும் போது அதனை முழுதும் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அறம் ஆகாது.
கதைகளில் வரும் கதைமாந்தர்கள் எல்லாம் நூற்றுக்கு எண்பது விழுக்காடு உண்மையானவர்கள் என்பது சட்டென்று புரிகிறது. அவர்களது பெயர்கள், ஊர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவ்வளவுதான். இதனை கதாசிரியரே தனது முன்னுரையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இரண்டாவது, கதை மாந்தர்கள் பேச்சுத் தமிழில் உரையாடுகிறார்கள்.
மூன்றாவது கதைகள் சமூகத்தின் இருண்ட பக்கத்தை – புறநடையை படம் பிடித்துக் காட்டுகின்றன.
தமிழ் இலக்கியத்தில் பலவிதமான உரை நடைகள் தொல்காப்பியர் காலத்தில் இருந்து வழக்கில் இருந்து வருகின்றன. நான்கு விதமான உரைநடைகள் இருந்ததாகச் சொல்கிறார். ஆனால் அந்த உரை நடைநூல்கள் இப்போது கிடைக்கவில்லை.
குற்ற ஆலம் கதை மாந்தர்கள் சங்கரப்பிள்ளை, அவரது மனைவி சரசு, பத்து வயது மகன் இராசன் மற்றும் ஊர்ப் பெரியவர் கந்தப்பர் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களைச் சுற்றியே கதை நகருகிறது.
சங்கரப்பிள்ளையார் கொழும்பில் புதுக்கோட்டையில் நான்காம் குறுக்குத்தெருவில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்க்கிறார். கல்யாணம் செய்த புதிதில் அடிக்கடி ஊருக்கு வாறவர் பின்னர் அதைக் குறைத்துக் கொண்டார். ஆண்டுகள் உருளுகின்றன. இப்படி ஒருமுறை ஊருக்கு வேலை நிமித்தம் வந்தபோது தூரத்தில் பறையோசை கேட்கிறது. வேறு யாருமில்லை. கந்தப்பிள்ளை சிவபதம் அடைந்து விட்டார். சங்கரப்பிள்ளையார் உடனே தனது மகனுக்கு குளிப்பாட்டி, வேட்டி உடுத்தி தனது மனைவி சரசுவுவோடு கந்தப்பரின் சாவீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். சாவீட்டுக்க வந்தவர்கள் தங்களுக்குள் குசு குசுத்துக் கொள்கிறார்கள். ஆனால் கந்தப்பரின் மனைவி அவர்களை வரவேற்கிறார். கந்தப்பரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இராசன் பாடைக்குப் பின்னால் கொள்ளிக் குடத்தோடு நடந்து செல்கிறான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சரசு முன்னமே வீடு திரும்பி விடுகிறாள். இராசன் பின்னால் வீடு வந்து சேருகிறான்.
கதையைப் படிப்பவர்களுக்கு இப்போது விளங்கியிருக்கும். இராசன் யாருக்குப் பிறந்த பிள்ளை என்று. அன்றிரவு சரசு சங்கரப்பிள்ளையாரின் காலில் விழுந்து “தெய்வமே என்னை மன்னித்துவிடுங்கோ. நான் பிழை விட்டுட்டேன்” என்று கதறி அழுகிறாள்.
“பிழைவிட்டது நீ மட்டுமல்ல. நானும்தான் புதுக்கக் கல்யாணம் செய்துவிட்டு கொழும்பில் படுத்துக் கிடந்த என்னிலும் பிழைதான். பிழை நடந்து விட்டது எனக்கும் தெரியும் “ என்றார்.
பிறகென்ன இருவருக்கும் இரண்டாம் கல்யாணம்.
கேள்வி என்னவென்றால் இந்தக் கதை மூலம் கதாசிரியர் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி என்ன?
கட்டிய மனைவி பிழை விட்டுவிட்டாள் என்று அறிந்தால் ஒரு சராசரி மனிதன் அவளை வீட்டை விட்டுத் துரத்திவிடுவான். அல்லது அவளையும் அடித்துக் கொலை செய்துவிட்டு தானும் கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து விடுவான். மிக அருமையாக அவளது கள்ளக் காதலனோடு சேர்த்து வைப்பான்.
இதில் ஒன்றேனும் சங்கரப்பிள்ளையாரின் தெரிவாக இருக்கவில்லை.
சிறுகதைகள் சமூகத்தை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மனிதர்களை நெறிப்படுத்துவதாக – ஒரு படிப்பினையை சொல்வாதாக – இருக்க வேண்டும்.
நான் எழுதிய சோதிடப் புரட்டு நூலில் சோதிடமும் சோதிடர்களும் புரட்டடர்கள் என்பதை எண்பிக்க ஒரு சிறுகதையைச் சேர்த்திருப்பேன். சிறுகதையின் பெயர் “இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல!” வாணி வார இதழ் 29-04-2001 இல் வெளிவந்தது. கதையாசரியர் சோதிடத்தையும் சோதிடர்களையும் கிழி கிழி என்று கிழித்துத் தொங்க விட்டிருப்பார்
நான் ஒரு பகுத்தறிவுவாதி என்ற அடிப்படையில் எனக்கு இந்தக் கதை பிடித்தமான கதை. நீண்ட கதை என்பதால் அதன் முக்கிய பகுதிகளை மட்டும் தர விரும்புகிறேன். கதையின் நாயகி தன்னிலை இல் இருந்து கொண்டு கதையைச் சொல்கிறார்.
“அந்தச் சந்தேகப் பேயுடன் எப்படியோ அய்ந்தாண்டு வாழ்ந்துவிட்டேன். இரண்டு குழந்தையும் பெற்றுவிட்டேன். இரண்டும் பெண் குழந்தைகள்.
எனக்கு என்னவோ வேறுபாடு தெரியவில்லை. இந்தக் காலத்தில் ஆண் என்ன? பெண் என்ன? இரண்டும் வீதியில் அலையத்தான் செய்கிறது. சொன்னால்தான் பெண் பிள்ளை என்று தெரிகிறது. கொள்ளி வைக்க ஆண் பிள்ளை வேண்டுமாம். பெண் பிள்ளை வைத்தால் கொள்ளிக் குடம் உடையாதா? ஆண் பிள்ளைதான் வாரிசாம்!
என் குடும்பம் பாண்டியப் பேரரசு இல்லையே! ஆண் பிள்ளைதான் கடைசிக் காலத்தில் கஞ்சி ஊற்றுவானாம்! அந்தக் காலந்தான் மலையேறிவிட்டதே! இறக்கை முளைத்ததும் அவனவன் பறந்துவிடுகிறான்!
எனக்கு மகிழ்ச்சிதான். என்றாலும் அதுக்கு மனதுக்குள் கவலை இருந்தது. ‘ஒரு ஆண் பிள்ளை வேண்டும்’ என்று அடிக்கடி சொல்லும்.
‘எந்தக் கோட்டையை ஆள?’ என்று நான் சிரிப்பேன்!
‘இரண்டு பெண் குழந்தைகளையும் சிறப்பாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து, நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தாலே போதும்’ என்பேன்.
அடுத்த குழந்தை வேண்டும் என்றும் நான் ஆசைப்படவில்லை. ‘வேண்டாம்’ என்றும் நினைக்கவில்லை. ஆனால் அடுத்ததும் பெண்ணாகப் போய்விடக் கூடாதே என்ற அச்சம் இருந்தது. என்னைவிட அதுக்கு இந்த அச்சம் அதிகம். எனவே, என்னை அதிகமாக நெருங்குவது கூட இல்லை.
இரண்டு குழந்தை பெற்றும் என் அழகு குறையவில்லை. இதைப் பார்த்து அது பொறாமைப்பட்டது. ‘உன்னைப் பார்த்தால், இரண்டு பிள்ளை பெற்றவள் என்று சொல்லவே முடியாது!’ என்று கூறும்.
இது புகழ்ச்சி என்று நான் நினைத்தேன். ஆனால், பொறாமை என்று பிறகுதான் தெரிந்தது. ஒரு நாள் அலுவலகத்திலிருந்து கிளம்ப நேரமாகிவிட, ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தேன்.
‘எங்கடி போய் விட்டு வருகிறாய்?’ என்று அது கேட்க, நான் ஒருமுறை முறைத்துவிட்டு உள்ளே போய்விட்டேன்.
அதோட நண்பருக்குக் குழந்தை பிறந்திருந்தது. ஆண் குழந்தை. தொட்டில் போடும் விழாவுக்கு இருவரும் போய் வந்தோம். வந்தது முதல் ஆண் குழந்தை ஆசை ஆலமரமாகப் படர்ந்துவிட்டது.
அது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு சோதிடரிடம் போயிற்று. சோதிடர் ஜாதகத்தைப் பார்த்து விட்டு “அடுத்த குழந்தை உனக்கு ஆண் குழந்தைதான்” என்று அடித்துச் சொன்னார்.
வாயெல்லாம் பல்லாக லொள்ளுவிட்டுக் கொண்டு அது வீட்டுக்குத் திரும்பியது. அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கி வந்திருந்தது. அன்றிரவு மீண்டும் ஒரு முதலிரவு போலிருந்தது.
முதல் இரு குழந்தைகளைத் திட்டமிட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை. சூப்பிப்போட்ட மாங்கொட்டை முளைப்பது போலப் பிறந்தவைதான். ஆனால், அடுத்த குழந்தைக்குத் திட்டமிட்டோம். மூன்றாம் மாதமே நான் குழந்தை உண்டானேன்.
அதுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. என்னைத் தாங்கு தாங்கு என்று தாங்கிற்று. ‘நம்ம வீட்டுக்கு ஒரு தம்பிப் பாப்பா வரப்போகிறது’ என்று பெண் குழந்தைகளிடம் பெருமை அடித்துக் கொண்டது.
‘நிச்சயம் இது ஆண் குழந்தைதான் – சோதிடர் அடித்துச் சொல்லிவிட்டார்’ என்று தம்பட்டம் அடித்தது.
என் மாமியார், மாமனார் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். ‘நாங்கள் மதுரையில் ஒரு சோதிடரிடம் கேட்டோம். அவரும் பேரன்தான் பிறப்பான் என்று சொன்னார்’ என்று கூறிவிட்டுப் போனார்கள்.
எனக்கேகூட நெஞ்சுக்குள் இன்பம் சுரந்தது. அது என்னவோ ஆண் குழந்தை என்றால் ஆசையாகத்தான் இருக்கிறது! நமது குருதியில் அப்படியே அது ஊறிப் போய்விட்டது.
மாதங்கள் ஓடின…மகிழ்ச்சியுடன்.
பத்தாவது மாதம்.
இடுப்பு வலி.
அது ஒரு மருத்துவ மனைக்கு என்னை அழைத்துக்கொண்டு போயிற்று.
போய்ச் சேர்ந்த அன்று இரவே குழந்தை பிறந்தது.
ஒரு இலக்கினம் தவறிப் போய்விட்டது – பெண் குழந்தை!
பெரிதாக ஊதிய பலூன் ‘படார்” என்று வெடித்தது போலிருந்தது!
எனக்கே முகம் செத்து விட்டது என்றால் அதுக்கு எப்படி இருந்திருக்கும்? நிறைய சாக்லெட்டு, வகை வகையான சாக்லெட்டு வாங்கி வைத்திருந்தது. அவற்றை அப்படியே கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதது! என்னையும் குழந்தையையும் பார்க்க அறைக்குள் அது வரவில்லை. அதோட அம்மா, அப்பாவும் வரவில்லை. இழவு வீடு போல இருந்தது. மூன்றாம் நாள் தோழி ஒருத்தியின் உதவியுடன் நான் வீட்டுக்கு வந்தேன்.
என் குழந்தைமீது எல்லோரும் பாராமுகமாக இருந்தார்கள். நாளாக நாளாகக் குழந்தையின் மீது வெறுப்புப் பெருகியது. அவர்களின் வெறுப்பு எனது விருப்பாக மாறியது.
முதல் குழந்தை பெற்றதுபோல மகிழ்ச்சியாக இருந்தேன். குழந்தையை வாரியெடுத்துக் கொஞ்சினேன். மற்றக் குழந்தைகளைப் போல இந்தக் குழந்தையையும் என் மார்போடு அணைத்துப் பால் கொடுத்தேன்.
வீட்டுக்கு வந்த பின்னும் அது என் முகத்தில் விழிக்கவில்லை. குழந்தையையும் பார்க்கவில்லை.
‘நான் என்ன தப்பு செய்தேன்?’ நான்தான் கேட்டேன். பதில் இல்லை.
‘அடுத்த குழந்தை நிச்சயம் ஆண் குழந்தைதான் என்று சோதிடன் சொன்னான் என்று நீங்கள்தான் சொன்னீர்கள். அதை நம்பித்தான் நானும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டேன்” என்று நயமாகச் சொன்னேன்.
அது எனக்குப் பதில் சொல்லாமல் அலட்சியப் படுத்திவிட்டுப் போயிற்று. என்னை ஒரு குற்றவாளியைப் போலப் பார்த்தது, நடத்தியது, நண்பர்கள் கேலி செய்தது வேறு அதன் மனதைப் புண்படுத்தியது.
அந்தக் கோபத்தில் ஜாதகத்தை பார்த்துச் சொன்ன சோதிடரிடம் ஆவேசமாகப் போயிற்று.
‘நீயெல்லாம் ஒரு சோதிடனா?’ என்று சண்டை போட்டிருந்தது.
‘கொடு ஜாதகத்தை’ என்று சோதிடர் வாங்கியிருக்கின்றார். வாங்கிப் பார்த்துவிட்டு ‘நான் சொன்னது சரிதான்’ என்று ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்திருக்கின்றார்.
‘என்ன சரி? ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னீர். பெண் குழந்தை அல்லவா பிறந்திருக்கிறது’ என்று இது கோபமாகக் கத்தியிருக்கிறது.
‘பொறு தம்பி’ என்றார் சோதிடர். உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றுதானே சொன்னேன்? இந்தக் குழந்தை உனக்குப் பிறந்திருந்தால் ஆண் குழந்தையாக இருந்திருக்கும்!’
இது திகைத்துப் போய் விட்டது.
‘அப்படியென்றால்…?’
‘இது உனக்குப் பிறந்த குழந்தை அல்ல! ஊருக்குப் பிறந்த குழந்தை!’ கொஞ்சம் கூடப் பயமில்லாமல் சோதிடன் சொன்னான்.
இது சும்மாவே சந்தேகப் பேய்! சும்மாவே ஆடும் பேய் உடுக்கு அடித்தால் என்ன ஆட்டம் ஆடும்! எரிகிற தீயில் எண்ணெய் வார்த்ததுபோல ஆயிற்று!
இதன் நினைவு பத்து மாதத்துக்கு முன் ஓடியிருக்கிறது. அப்போது வீட்டுக்கு யாராவது வந்திருந்தார்களா? அதோட மாமா ஒரு வேலையாக வந்திருந்தார். எங்கள் வீட்டில் நாலைந்து நாள் தங்கினார். அவரா இருக்குமோ?
அலுவலகத்தில் யார்கூடவாவது உறவு ஏற்பட்டு இருக்குமோ?
நான் வீட்டில் இல்லாத போது ஒரு நண்பன் தேடி வந்தானே.. அவனாக இருக்குமோ?
இப்படி ஆயிரம் சந்தேகங்களுடன் அந்தப் பேய் வீட்டுக்குத் திரும்பியது.
அதன் முகம் பேயடித்தது போல இருந்தது.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.
‘ஒன்றுமில்லை’ என்று மழுப்பியது.
பின்னால்தான் இதெல்லாம் எனக்குத் தெரியவந்தது.
நாலைந்து நாள் கழித்து என் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சோதிடரிடம் ஓடியது.
‘என் நடத்தை எப்படி?’ என்று பார்த்துச் சொல்லும்படி கேட்டிருக்கிறது. அவன் கில்லாடி சோதிடன்!
‘இவள் நடத்தை கெட்டவளாக இருப்பாள்’ என்று சொல்லி விட்டான்!
வீட்டுக்கு வந்தது. எதற்கு எடுத்தாலும் சட்டியில் போட்ட கடுகுபோல படபடவென்று வெடித்தது. என்னைத் திட்டியது, ‘என் முகத்தில் விழிக்காதே, போ” என்று விரட்டியது. பெண் குழந்தை பிறந்த ஏமாற்றம் போலிருக்கிறது என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.
பேறுகால விடுப்பு முடிந்து அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
‘வேலைக்குப் போக வேண்டாம் வேலையை இராஜினாமா செய்துவிடு’ என்று அது சொல்லிற்று.
எனக்கு ஒரே அதிர்ச்சி.
‘ஏன்?’
‘மூன்று குழந்தை ஆகிவிட்டதே! வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்’ என்று அது சொல்லிற்று.
‘ஆமாங்க மூன்று குழந்தை ஆகிவிட்டது. இனித்தான் நான் கட்டாயம் வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும்’ என்று சொன்னேன்.
‘வேலைக்குப் போக வேண்டாம்’ என்று அது சொல்ல…
‘தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்’ என்று நான் கெஞ்ச…
‘ஏன், கள்ளப் புருசனைப் பார்க்கக் கட்டாயம் போகவேண்டுமா?’ என்று அது கேட்க…
‘என்ன.. என்ன சொன்னீங்க..’ என்று நான் பதற…
‘எனக்கு எல்லாம் தெரியும்டி’ என்று அது எகத்தாளமாகப் பேச…
‘என்ன தெரியும்?’ என்று நான் கத்த…
‘ஜோசியக்காரன் எல்லாம் சொல்லிவிட்டான். இந்தக் குழந்தையே எனக்குப் பிறந்திருந்தால் ஆண் குழந்தையாக இருந்திருக்குமே! கள்ளப் புருசனுக்குப் பிறந்திருக்கிறது, அதுதான் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டது!’ என்று அது சொல்ல…
நெருப்பை அள்ளி என் தலையில் கொட்டியது போலிருந்தது!
‘எவன்டி அந்தக் கள்ளப் புருசன்?’ என்று அது கேட்க,
‘நீ ஆண் பிள்ளையாக நடந்துகொண்டால், நான் ஏன் அடுத்தவனிடம் போகிறேன்!’ என்று நான் ஆத்திரத்தில் கூற…
‘அவ்வளவு ஆகிவிட்டதா? உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை. இனி நீ என் மனைவியுமில்லை’ என்று கை நீட்டி என் கழுத்தில் கிடந்த தாலியை வெடுக்கென்று அறுத்துக் கொண்டான்.
ஒரு சந்தேகப் பேயுடன் வாழ்வதைவிடத் தனித்து வாழுவது சந்தோசம் என்று நான் நினைத்தேன்.
பச்சை மண்ணைக் கையில் எடுத்துக்கொண்டு, மற்ற இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, கட்டிய சேலையுடன் நான் கிளம்பினேன்.
‘என் குழந்தைகளை என்னிடம் கொடு!’ பெரிய குழந்தைகள் இருவரையும் அவன் பிடித்து இழுத்தான். நான் விடவில்லை. குழந்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.
‘எதுடா உன் குழந்தை? இப்போது சொல்லுகிறேன், இந்தக் குழந்தைகளும் உனக்குப் பிறந்தவை அல்ல ஊருக்குப் பிறந்தவை!’
அது திகைத்து நின்றது.
‘தொட்டுத் தாலி கட்டிய பெண்டாட்டியை நம்பாத உனக்குப் பிள்ளைகள் வேண்டுமா? தூ!’ என்று அதன் முகத்தில் காறித் துப்பினேன்.
என் பிள்ளைகளைக் கோழிக் குஞ்சுகள்போல அரவணைத்துக் கொண்டு வெளியேறினேன்.
இப்போது நான் தனி வீட்டில் வசிக்கிறேன், சம்பாதிக்கிறேன், என் பிள்ளைகளை இராஜாத்திகள் போல வளர்க்கிறேன்.
அவர்கள் பெண்பிள்ளைகள், நாளை அவர்களுக்குத் திருமணம், திருவிழா என்று நடக்கும். அப்போது ‘அப்பா யார்’ என்று கேட்பார்களே?
கேட்கத்தான் செய்வார்கள்! அப்படிப்பட்ட கேடு கெட்ட சமுதாயத்தில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! (ராணி வார இதழ் – 29. 04. 2001)
இந்தக் கதை கற்பனைக் கதையல்ல. உண்மைக் கதை. பத்துப் பொருத்தங்களில் 7 பொருந்தங்கள் பொருத்தம் எனச் சோதிடர் சாதகங்களைப் பார்த்துப் பச்சைக் கொடி காட்டிய பின்னர் நடந்த திருமணம். இவ்வாறு மனப் பொருத்தம் பாராது கோள், நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்துத் திருமணம் செய்து வைப்பதால் பிரிந்து போன குடும்பங்கள் ஏராளம்.
இன்று என்ன வாழ்கிறதாம்? சாதகப் பொருத்தம் இன்றி திருமணம் நடப்பதில்லை. பத்துப் பொருத்தங்களில் (கல்வி, அகவை, வேலை, அழகு, தோற்றம்……) இருந்தும் தோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தங்களில் (நட்சத்திரப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், யோனிப் பொருத்தம், தினப் பொருத்தம், இராசிப் பொருத்தம் ………) குறைந்தது ஏழு பொருத்தங்கள் இருந்தால் மட்டும் சோதிடர் பச்சைக் கொடி காட்டுவார். மேலும் பெண்ணுக்கு செவ்வாய் தோசம் இருந்தால் ஆணுக்கும் செவ்வாய் தோசம் இருக்க வேண்டும். இல்லையேல் சோதிடர் “மணப்பொருத்தம் இல்லை” என தள்ளி விடுவார்.
பெண் அல்லது ஆணின் தந்தையார் மறுபடியும் சாதகத்தை வைத்துக் கொண்டு செருப்புத் தேய நாயாய் பேயாய் அலைவார். அவர் அப்படி அலையும் போது ஆண்டொன்று போனால் ஆண் – பெண் இருவரது அகவை ஒன்று கூடிவிடும். கனடா போன்ற நாடுகளில் இந்த சாதகப் பொருத்தம் திருமணத்துக்கு எமனாக இருக்கிறது. அடுத்தது சாதி.
- இந்தக் கதை இரண்டு செய்திகளை உரத்துச் சொல்கிறது.
- சோதிடம் ஒரு குடும்பத்தை பிரித்து விடுகிறது.
(3) சோதிடர் மாட்டிக் கொள்ளும் போது பெண் மீது பழியைப் போடுகிறார்.
சரி. சங்கரப்பிள்ளையாரையும் சரசுவையும் விட்டு விட்டு முதல் கதையைப் படித்தேன். கதையின் தலைப்பு ‘குப்பி’. தலைப்பைப் பார்த்ததும் கதை இயக்கம் பற்றியது என்பதை எளிதில் புரிந்து கொண்டேன். கதாநாயகி பெயர் கயல்விழி. இயக்கம் வைத்த பெயர். பெற்றோர் வைத்த பெயர் சிவமணி. மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்தது. சில போராளிகள் குப்பியைக் கடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பெரும்பாலோர் ஆயுதங்களை கீழே வைத்து இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். புனர் வாழ்வுக்கு அனுப்பி வைத்த பல ஆயிரம் போராளிகளில் அவளும் ஒருத்தி. கதாநாயகன் பெயர் சின்ன வழுதி. இயற்பெயர் குருபரன். கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவன். பிரியுமுன் கயல்விழி அவனது இருப்பைக் கேட்டு அறிந்து கொள்கிறாள்.
இரண்டு ஆண்டுகள் புனர்வாழ்வு முடிந்து தனது சொந்த ஊருக்கு கயல்விழி போகிறாள். வீட்டில் வரவேற்பில்லை. ஊரிலும் சீருடையுடன் போன போது இருந்த வரவேற்பில்லை. ஒரு நாள் பஸ்சைப் பிடித்து மட்டக்களப்புக்கு போகிறாள். அங்கிருந்து களுவாஞ்சிக்குடியை அடைந்து தன்னிடம் இருந்த குறிப்புக்களை வைத்துக் கொண்டு வழுதியின் வீட்டை கண்டுபிடித்து விடுகிறாள். வழுதிக்கு ஒரே வியப்பு. அங்கிருந்து இருவரும் வவுனியாவுக்குப் புறப்படுகிறார்கள்.
வவுனியாவில் யாராவது முன்னாள் போராளிகள் இருக்கிறார்களா என விசாரிக்கிறார்கள். ஓட்டோ நிலையத்தில் நின்ற பெண் சாரதி ஒருவர் முன்னாள் போராளி என்பது தெரியவருகிறது. அவர் வழுதி, கயல்விழி இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறாள்.
அப்புறம் என்ன. கயல்விழிக்கு அம்மா உணவகத்தில் வேலை கிடைக்கிறது. வழுதிக்கு ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலை. சின்ன வீட்டொன்றை வாடகைக் எடுத்து குடிபுகுகிறார்கள். அடுத்த ஆண்டு இருவரும் சிறிய கோயிலில் ஐயர் யாரும் இல்லாது மஞ்சள் கயிற்றில் தாலிகட்டி திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. ஆனால் வலது குறைந்த பிள்ளை. அம்மா உணவகத்தில் கயல்விழிக்கு பழரசம் விற்கும் ஸ்டால் ஒன்று கிடைத்தது. அதை வழுதியின் துணையுடன் நடத்தி வந்தாள்.
கதையில் வரும் இன்னொரு பாத்திரம் செனிரவரத்தின. புனர்வாழ்வு முகாமுக்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரி. இப்போது ஓய்வு பெற்றுவிட்டான். அவனை எதிர்பாராத விதமாக வவுனியா குவீன்ஸ் பலஸ் ஓட்டலில் கயல்விழி சந்திக்கிறாள். அவர்களுக்கு இடையில் நீண்ட உரையாடல் நடைபெறுகிறது.
இதுவரை கதை யதார்த்தமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அடுத்து நடப்பது நம்பும்படியாக இல்லை.
வவுனியா நகரசபை மண்டபத்துக்குப் பின்னால் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் அழுகிய நிலையில் கயல்விழியின் சடலம். கொலையைச் செய்தர்கள் யார் என்பதற்கு விளக்கமில்லை.
கதாசிரியர் ஏன் கயல்விழியை சாகடித்தார் என்பதற்கு நம்பும்படியான காரணங்களைக் காணோம். கடுமையாக உழைத்து சிறிது, சிறிதுதாக போராடி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருந்த கயல்விழி மற்றும் வழுதி மேலும் மேலும் முன்னேறி அவர்கள் வேலை செய்த ஓட்டலைப் போல இன்னொரு ஓட்டலைக் கட்டி வாழ்ந்து காட்டினார்கள் – தெரியாத நிலையில் “விசாரணை தொடர்கிறது” என காவல்துறை அறிவித்தது.மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்தார்கள் – போராட்ட காலத்தில் பெற்ற பயிற்றி அந்த வைராக்கியத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தது எனக் கதையை முடித்திருக்கலாம். இப்படி எதிர்வினையாக கதையை முடித்திருப்பதன் மூலம் கதாசிரியர் என்ன செய்தியை படிப்பவர்களுக்கு – இந்த சமூகத்துக்கு – சொல்ல வருகிறார்?.
இந்தக் கதையை படித்த பின்னர் மிச்சக் கதைகளை படிக்க மனம் வரவில்லை. நான் ஒரு பகுத்தறிவுவாதி, முற்போக்குவாதி என்றாலும் அடிமனதில் நான் ஒரு பிற்போக்குவாதியா? அப்படி நான் நினைக்கவில்லை.
இலக்கியத்தின் முக்கிய நோக்கம் மக்களை இன்புறுத்துவதும், உயர்ந்த வாழ்வியல் நெறிகளை அறிவுறுத்துவதும், சமுதாயத்தை மாற்றி அமைப்பதும், பலரின் அனுபவங்களையும், கருத்துகளையும், உணர்வுகளையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துவதும், மொழியின் அழகியலைப் பகிர்வதுமாகும். இது, மக்களின் கருத்துப் பரிமாற்றத் திறனையும், சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பார்வையையும், வாழ்வின் எல்லைகளை விரிவுபடுத்தவும் உதவுகிறது.
சுருக்கமாக, இலக்கியம் என்பது வெறும் எழுத்து மட்டுமல்ல, அது சமூகத்தின் கண்ணாடியாகவும், வழிகாட்டியாகவும், அனுபவங்களின் களஞ்சியமாகவும் செயல்படுகிறது.
தொல்காப்பியர் பார்வையில் “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு.”
“உலகம் நடப்பதும், சமூக ஒழுக்கமும், அரசும் உயர்ந்த அறிவும் செல்வமும் கொண்டோரால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படுகிறது; மனிதன் நற்செயல், அறிவு, ஒழுக்கம் மூலம் தான் வாழ்க்கையை வளமாக்க முடியும்.”
உயர்ந்தோர் = அறிவு, ஒழுக்கம், அறம் உடையவர்கள் மாட்டு / பொதுமக்கள் = அவர்களை பின்பற்றுவோர்
திருவள்ளுவர் “எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்கிறார். ஆதாவது “உயர்ந்த எண்ணம் உயர்வே. நம் சிந்தனைகள் உயர்ந்திருக்க வேண்டும். உலகத்தை அதிகாரம், செல்வம், , திறைமை படைத்தோர் இயக்குகிறார்கள்.”
எனவே மறுபடியும் சொல்கிறேன் இலக்கியம் சமூக நன்மை – சமூக ஒழுக்கம், நல்லிணக்கம், நீதி, அறம் ஆகியவற்றை பரப்புதல் பரப்ப வேண்டும். சிந்தனை விருத்தி – மனிதன் தனக்குத் திரும்பி சிந்திப்பது, உயர்ந்த எண்ணங்களை வளர்ப்பது அவசியமாகும். தவறான வழிகள், கெட்ட பழக்கங்கள், தீமைகள் என்பவற்றை ஒழித்தல் வேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால்:
“இலக்கியத்தின் இலக்கு – மனிதன், மனம், சமூக அனைத்தையும் உயர்த்தி நல்ல வாழ்விற்கு வழிகாட்டுவது.”
அசை சிவதாசன் தன்னைச் சூழ உள்ள மனிதர்களையும் சூழலையும் சரியாக எடை போடுகிறார். தனது அனுபவங்களையும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். அவரது உரை நடை தனி நடை. மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியதாகத் தெரியவில்லை.
உடல் நலக் குறைவு காரணமாக ஒரே மூச்சில் இந்த விமர்சனத்தை எழுத முடியவில்லை. விட்டு, விட்டுத்தான் தொடர நேர்ந்தது.
மேலும் எழுதினால் இதுவே ஒரு புத்தகமாக உருவெடுத்து விடும். அந்த விடப் பரீட்சை வேண்டாம்.
எனவே இத்தோடு நிறுத்தி அவரது எழுத்துப் பணி தொடர என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply
You must be logged in to post a comment.