அரசியலில் இது சாதாரணமப்பா

சட்டப்பேரவைத் தேர்தலோ, மக்களவைத் தேர்தலோ, பொதுவாக தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைந்ததும், எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சிக்குச் சென்று இணைவார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலும் ஆளும் கட்சியில் இருப்பவர்கள்தான் எதிர்க்கட்சிகளுக்கு தாவுவார்கள்.

நேர்மாறாக இப்போது எதிர்க்கட்சிகளில் இருந்தவர்களில் பலர், குறிப்பாக அதிமுகவினர், ஆளும் திமுகவில் தொடர்ந்து சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் ஆளும் கூட்டணிக்குச் சென்றுவிட்டது.

அது எப்படி முடியும்? என்று பலரும் நம்பத் தயாராக இல்லாத நிலையிலும் துணிந்து திமுகவில் இணைந்திருக்கிறார் மூன்று முறை முதலவராக இருந்தவரான அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வத்துக்கும் வேறு வழியில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் என்னதான் செய்வார்? அதிமுகவில் இருந்து வெளியேறி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. “ஒற்றுமை, ஒற்றுமை, ஒன்றுபட்ட அதிமுக” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவரை வழிநடத்துவதாக கூறப்பட்ட பாரதிய ஜனதா கட்சியும் கூட அதிமுகவினர் அனைவரையும் ஒன்றிணையுங்கள் என்றுதான் அறிவுறுத்தியதாக கூறினார்கள்.

ஆனால் ‘முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? நடக்கவே நடக்காது’ என்ற பன்னீர்செல்வத்துடனும் செங்கோட்டையனுடனும் இணைந்து தோன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பாளர் டிடிவி தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் கூடவே கூடாது என்று கூறிவிட்டார்.

ஒரு கட்டத்தில் இவையெல்லாம் அவர்களின் உள்ளக கட்சி பிரச்சினை என்று கரைத்துக் கொண்டதுடன், பன்னீர்செல்வம் பற்றியும் பாரதிய ஜனதா கவலைப்படாமல் கைவிட்டுவிட்ட நிலை.

அதிமுகவில் இடமில்லை என்றாகிவிட்ட நிலையில், தனியாக கட்சி நடத்த வேண்டும். ஆனால் உடனிருந்தவர்கள் எல்லாரும் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது த.ந.த.க உடன் கூட்டணி பற்றி யோசிக்கலாம். பாரதிய ஜனதா கட்சியில் சேரலாம் அல்லது திமுகவில் சேரலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லிக்கொண்டிருக்க சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதுபோல் நேராக அறிவாலயத்துக்கே சென்றுவிட்டார் ஓ. பன்னீர்செல்வம். சொன்னதைச் செய்து கொண்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்திருக்கலாம்.

தாய்க் கழகம், தளபதியின் ஆட்சி சிறப்பு, அதிமுக இனி அவ்வளவுதான் என்று முடிவு செய்து அறிவித்துவிட்டார்.

ஏற்கனவே பன்னீர்செல்வத்துடன் இருந்த ஆர். வைத்தியலிங்கம், பி.எச். மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் எல்லாரும் திமுகவினராகிவிட்டார்கள். தற்போது பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து இணைந்தவர்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படலாம். உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர்களாகத்தான் போட்டியிடப் போகிறார்கள். இழப்பு எதுவுமில்லை.

பாரதிய ஜனதா கட்சியில் இணையாமல் திமுகவில் இணைந்ததன் மூலம் தொடக்கத்தில் சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தொடர்ந்து திராவிடக் கொள்கையைப் பேசிக்கொண்டே ஒரு மரியாதையான அரசியலைச் செய்ய முடியும் என்று ஓ. பன்னீர்செல்வம் கருதுவதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“ஓபிஎஸ், பாஜக போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது அவரது மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. பாஜகவோடு நெருக்கமாக இருக்கிறார், பாஜக சொல்வதைச் செய்கிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் அவரது மீது இருந்தன. ஆனால் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு, அவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதைக் உறுதிப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, எஸ். ரகுபதி, பி.கே. சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், டி.எம். செல்வகணபதி போன்றோர் கருணாநிதி காலத்திலும், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, டாக்டர் வி.எஸ். விஜய், அன்வர் ராஜா, நிலோபர் கபில், கார்த்திக் தொண்டைமான் போன்றோர் தளபதி ஸ்டாலின் காலத்திலும் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் செல்வாக்குடனும் அதிகார மையங்களாகவும் திகழ்கின்றனர்.

திமுகவைப் பொருத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணி என்ற மனநிலையை மக்களிடம் உருவாக்கத் தேவையான காய்களை எல்லாம் நகர்த்துகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இருந்தாலும் எந்த வாய்ப்பையும் எதிர்த்தரப்பினருக்கு விடுவதில்லை என்ற திட்டத்தில் திமுக செயல்படுகிறது.

நீட் தேர்வு போன்ற, நினைத்திருந்த வரை ஜெயலலிதா எதிர்த்து கொண்டிருந்த திட்டங்களுக்கு, பின்னால் ஏற்பட்ட அதிமுக அரசு எவ்வாறு ஒப்புதல் அளித்தது? எத்தகைய நெருக்கடிகள் தரப்பட்டன என்பதுபற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஒருவேளை சொல்லலாம், குறைந்தபட்சம் சொல்லிவிடக் கூடும் என்ற அச்சத்தை எதிர்த்தரப்பினருக்கு ஏற்படுத்த முடியும்.

மத்திய மாவட்டத் தொகுதிகளிலும் எதிர் அணிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக பிற தொகுதிகளில் திமுகக்கு கூடுதலாக எத்தனை ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலும் நல்லதே. மாறாக, எத்தனை ஆயிரம் அல்லது நூறு வாக்குகள் குறைந்து விடுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி – அதிமுக கூட்டணிக்கு நல்லதல்ல.

ஏற்கனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிய கம்யூ., இந்திய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என… கூடுதலாக தேமுதிகவும் சேர்ந்திருக்கிறது. அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியினரும் இணைந்துவிட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி – தோல்வியை மிகக் குறைந்த – சில ஆயிரங்கள், சில நேரங்களில் சில நூறுகள் என – வாக்குகளே தீர்மானிக்கும்.

நிலைமை இவ்வாறிருக்க, கொஞ்சம் வாக்குகள் என்றாலும் இனி கூட்டணிக்குள் கட்சிகளையும் நபர்களையும் கொண்டு வந்துவிட வேண்டும் என்றே திமுக கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கின்றன.

எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து கிடப்பதை முழுவதுமாகத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது திமுக.

நடிகரும் தமிழர் வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கும், மனுவில் அவர் தெரிவித்து இருக்கும் விஷயங்களும் தேர்தலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் உடனடியாக மதிப்பிட முடியாது.

தவிர, சசிகலாவும் தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்? யாருடன் அணி சேரத் திட்டமிடுகிறார் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 1950-களில் தேர்தல் போட்டியென்பது காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் என இரு துருவங்களாக இருந்தது. அடுத்தடுத்த காலகட்டங்களில் திமுகவின் தோற்றம் மற்றும் வளர்ச்சியால் 1960-களில் காங்கிரஸ் – திமுக என்றானது; கூட்டணிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் தேடின.

அதுவே பின்னர், எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கவும் காமராஜர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் வலுவிழக்கவும் 1970-களில் திமுக – அதிமுக என்று இருமுனைப்பட, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸும் கூட சேர்ந்து கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகிவிட்டது.

இப்போது திமுக கூட்டணி இருக்கிறது. அதிமுக கூட்டணியா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியா? என்று பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பார்கள் பாரதிய ஜனதா தலைவர்கள். அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்பார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 30 பேர் வரை எம்.எல்.ஏ.க்களாக சட்டமன்றம் செல்ல வாய்ப்பு இருந்தால் அமைச்சர்களாவோம் என்று தெரிவித்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை.

இன்றைக்கு சொன்னால் யாராலும் நம்ப முடியாத பேரதிர்ச்சி ஒன்று 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிகழ்ந்தது!

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக் (ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை) முன்னெடுத்தார்.

அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் திமுக தலைவர் மு. கருணாநிதியும் நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினர் (தனியாக விரிவாக எழுதப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு!).

தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகளாகத் திகழ்ந்த இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்திக்கும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவைத் தேர்தலுக்காக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவானது – புதுவை உட்பட காங்கிரசுக்கு 23 தொகுதிகள், திமுக மற்றும் தோழமைக்கட்சிகளுக்கு 17 தொகுதிகள்.

என்ன காரணத்தாலோ இணைப்பு முயற்சி தடைபட்டுவிட, அதுடன் திமுக – அதிமுக இணைப்பு எண்ணங்களும் முடிவுக்கு வந்துவிட்டன.

ஒருவேளை இணைந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் திசைமாறி, மீண்டும் திமுக, காங்கிரஸ் என போட்டி இருந்திருக்கலாம்.

இப்போது இன்னும் யார் யாரெல்லாம் எந்தெந்த கட்சிகளில் இணையப் போகிறார்கள்? த.வெ.க. கூட்டணி அமைக்குமா, தனித்தே போட்டியிடுமா? பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் என்ன செய்யப் போகிறார்கள்? வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா?

அது சரி, எது நடந்தாலும் அரசியலில் எல்லாமே சாதாரணம்தானே!

Be the first to comment

Leave a Reply