கலீலியோ கலிலி

இன்று பிரபஞ்சமே ஏற்கிற உண்மை, ஏன் அது பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மையும் கூட, 16 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய மதத்தின் நம்பிக்கைக்கு எதிராக இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக வானவியலின் தந்தை மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

அந்த உண்மை, “பூமியும், மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியன் தான் மையம்” என்பதே!

“அதிக எடை கொண்ட பொருளையும், குறைந்த எடையுள்ள பொருளையும் கீழே போடும் போது இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடையும்”

கலீலியோ நிரூபிக்க நினைத்தது இதையும்தான். அதுவரை அரிஸ்டாட்டில் சொன்னதையே வேதவாக்காக எண்ணிக் கொண்டிருந்தவர்கள் கலீலியோ கலிலியை ஏளனமாகப் பார்த்தார்கள்.

ஒரு சிறிய மற்றும் பெரிய குண்டுகளைத் தூக்கிக் கொண்டு, நேரே பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்தில் விழுவதைக் கண்ட மக்கள் அந்த உண்மையை, கண்கட்டு வித்தை என்று சொன்னார்கள்.

அடிப்படையில் இயற்பியல் மற்றும் கணிதம் பயின்ற கலீலியோ கலிலி, தான் படித்த பிசா பல்கலைகழகத்திலேயே ஆசிரியரானார். மாணவனாய் தான் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியராய் ஆன பின்பும் விடை தேடினார். விளைவு மதம் அறிவியலை நசுக்கியது. அவர் பல்கலைகழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அவரின் கூற்றுகளை பொய் எனக் கூறி அவரை ஒத்துக்கொள்ள வைத்து அவமானப்படுத்தியது ரோமன் கத்தோலிக்க சபை.

தான் உளமாற உண்மை என நம்பும் ஒன்றை , தவறானது என்று சொல்லும்போது அவருக்கு எப்படி வலித்திருக்கும்?

அவற்றை எல்லாம்விட குறைவான வலியைத்தான் உடல்ரீதியான துன்பத்தில் அவர் உணர்ந்திருப்பார்.

1609 ஆம் ஆண்டு அவர் தொலைநோக்கியை கண்டுபிடித்த பிறகு , பல்வேறு உண்மைகளை கண்டறிந்தார்.

“பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகிறன .சூரியன் நடுமையமாக உள்ளது” என கிபி 1615-ல், தான் எழுதிய புத்தகத்தின் வாயிலாக சொன்னபோது கத்தோலிக்க சபை அவரை கடுமையாக சாடியது.

கலீலியோ சொல்கிறார்; “உணர்வுகள், ஆறாம்அறிவு ,பகுத்தறிவு இவற்றை எல்லாம் மனிதனுக்கு அளித்த கடவுள் அதனை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது”

பின் பிரான்ஸூக்கு குடிபெயர்ந்த அவர் 1632 ல் “The Dialogue Concerning the two Chief Worlds” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

சனிக்கோளின் வளையம், வியாழனின் துணைக்கோள்கள் ஆகிவற்றையும் கலீலியோ தன் தொலைநோக்கியின் வாயிலாக கண்டறிந்து சொன்னார். அறிவியல் வளராமல் இருக்க சிலரின் மூட நம்பிக்கைகள்தான் காரணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் கதைதானே… ஆம்.. திருச்சபையை அவமதிக்கிறார் என்று அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். 68 ஆம் வயதில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை என்ற பெயருக்கே இடமில்லாமல் 1642ல் தன் 77-வது வயதில் இறந்து போனார் கலிலி.

எண்ணிப்பாருங்கள்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நாம் சுதந்திரமான இறப்பைக் கூட அளிக்கவில்லை.

2000-ம் ஆண்டின் புத்தாண்டில் போப் இரண்டாம் ஜான்பால் இதுவரை திருச்சபையால் தண்டிக்கப்பட்ட அறிஞர்களுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் கலீலியோ கலிலியின் குரல் நம் காதுகளில் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறது?

நாம் இன்றிலிருந்து தினமும் அரைமணி நேரமாவது இரவு வானத்தை பார்ப்போம்.அங்கு நட்சத்திரங்களும், பிற கோள்களும் கலீலியோவிற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இன்று 15, பிப்ரவரி – கலீலியோவின் பிறந்தநாள்.

About nakkeran 199 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply