சாவு ஒரு பரம இரகசியம்

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்” என்பது பிறப்பு இறப்பு மற்றும் மறுபிறவி என்ற சுழற்சியைக் குறிக்கும் ஒரு நிலையான இயற்கை விதியாகும்.  இறந்தவர் மீண்டும் பிறக்கிறார் என திடமாகச் சொல்ல முடியாது. ஆனால் இறப்பு நிச்சயமானது. அதனை வெல்ல முடியாது. வென்றவர்கள் இல்லை

இதன் காரணமாக எமது சித்தர்களும் முத்தர்களும் – திருமூலர் தொடங்கி சிவவாக்கியார் வரை – நிலையாமை பற்றி நிறையப் பாடி  வைத்துள்ளார்கள். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு பற்றி அலசியிருக்கிறார்கள்.

எப்போது “உயிர்” இல்லை? (1) மூளை நிரந்தரமாகச் செயலிழக்கிறது. (2) செல்கள் திரும்ப முடியாத வகையில் சிதைகின்றன. (3) உயிரியல் ஒழுங்கு உடைகிறது. அப்பொழுது → உயிர் இல்லை.

உடல்  வேறு உயிர் வேறா? அல்லது உடலின் இயக்கமே உயிர் என்பது சரியா? உடல் என்னும் போது கை. கால்  என்றில்லை. அது மூளையைக் குறிக்கிறது. மூளையின் இயக்கம் நின்றுவிட்டால் மரணம் ஏற்படுகிறது. சமயவாதிகள் உடல்தான் அழிகிறது. உயிர் அழிவதில்லை. அதுதன் கர்மவினைக்கு ஒப்ப மறுபடியும் பிறக்கிறது.  ஆனால் இதற்கு சான்றுகள் இல்லை. வெறும் நம்பிக்கை மட்டுமே.

தமிழர்களது ஆன்மீக வரலாற்றில் பல சித்தர்கள் இந்த உடல் – ஆன்மா இரண்டுக்கும் இடையில் உள்ள உறவு பற்றி நிறையப் பாடியிருக்கிறார்கள். அதில் தலையானவர் திருமூலர். அவர் பாடிய திருமந்திரம் மூவாயிரத்தில் முதல் அதிகாரமே நிலையாமை பற்றியதுதான். இந்த  உடல், செல்வம், இளமை, புகழ் அனைத்தும் நிலையற்றவை என்று அவர் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

அரும்பொடு பூவும் அழிந்தன போல
உரும்பொடு தேகம் ஒடிந்து போமே
திரும்புதல் இல்லா சிதம்பர ரகசியம்
உரும்பொடு தேகம் உணர்ந்துகொள் நெஞ்சே.”

மலர் உதிர்வது போல உடலும் அழியும்.  மரணம் இயல்பு.  இதை உணர்ந்தால் வாழ்க்கை மாற்றம் பெறும்.

மரணம் என்பது எம்மைத் தொடரும் நிழல் போல. தப்ப  முடியாது. நேற்றிருந்தவர்கள் அல்ல, சில நொடிக்கள் முன்பிருந்தவர்கள் கூட மரணத்தை தழுவியுள்ளார்கள். . தூங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனால் எல்லாம் போச்சு. 

திருமூலர் யாக்கை நிலையாமை பற்றி மேலும் பல பாடல்கள் எழுதியுள்ளார். என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது:

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.
   (பாடல் #148 (திருமந்திரம்)

இந்தப் பாடல் யாக்கை நிலையாமை பற்றிப்  பேசுகிறது.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் — மனைவி சமைத்த உணவை கணவன் உண்டார்.

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் — மனைவியுடன் சேர்ந்து மகிழ்ந்தார்;

இடப்பக்கமே இறை நொந்தது என்றும் — இடது பக்கத்தில் கொஞ்சம் வலி இருப்பதாகச் சொன்னார்;

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே — உடல் வலி காரணமாக கிடக்கப் படுத்தவர் செத்தொழிந்தாரே.

இது உடலின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது — சுகமும் துன்பமும், உறவு மகிழ்ச்சியும் நீண்டதில்லை.
உடல் சிக்கலால் மனைவியுடன் சேரும் மகிழ்ச்சி, உடனே மரணத்துடன் முடிவடைகிறது.

இவ்வாறு நிலையாமை பற்றிப் பாடிய திருமூலர்

அடுத்து என்ன நடக்கிறது? அதனையும் திருமூலர் அடுத்த பாடலில் சொல்கிறார்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை  நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  
(பாடல் #145)

ஒருவர் இறந்ததும் அவருக்கு அருகிலிருந்த அனைவருமே ஒன்று கூடி சத்தமாக அழுவார்கள்.  இறந்தவரின் பெயரை நீக்கிவிட்டு  உடலைப் “பிணம்” என்று அழைப்பார்கள். உடலை ஊருக்கு வெளியே சூரையங்க காட்டு (சுடுகாடு) கொண்டு சென்று எரித்து விடுவார்கள்.

பின்னர் அந்த நினைவையும் நீரில் மூழ்கி மறந்து விடுகிறார்கள் — உடலும் நினைவும் நிலையற்றவை என திருமூலர் குறிப்பிடுகிறார். ஆனால் பின்னர் திருமூலர் இந்த உடம்பு இறைவன் வாழும் கோயில் என்கிறார். அதனை ஓம்ப வேண்டும் என்கிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
 (பாடல் #725 )

உடலை உருவான பொருளாகவும் நிலையற்றது போலவும் முன்னர் நினைத்தேன், இப்போது ஆன்மா/இறைவன் இருப்பதை உணர்ந்து,
உடலை சிவனின் கோயிலாகக் காண்கிறார், உடலை மரியாதையுடன் கருதி, ஆன்மிக வளர்ச்சிக்காக பயன்படுத்துவது தான் உண்மையான நோக்கம்.

திருமூலர் இந்த பாடலில் சொல்வது: முதலில் உடலை அகங்காரமான / நிலையானது எனக் கருத்து படுத்தாமல் குறைவாக எண்ணினேன்.  ஆனால் அதன் உள்ளே சிவன்/உயிரின் அடிப்பொருள் இருப்பது உணர்ந்தேன்.  அந்த உணர்வால் உடலை கோயிலாகக் கருதுகிறேன்,  அதை மரியாதையுடன்ப் பார்த்து, ஆன்மாவின் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறேன்.

மேலும் அவர் –

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் 
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் 
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே.  (பாடல்  # 1823)

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைக்கிறார். எனவே நீண்ட நாள் வாழ விரும்பினால் நாங்கள் எங்கள் உடம்பை கோயில் என நினைத்து அங்கே உத்தமன் குடியிருக்கிறான் என நினைத்து ஒழுகல் வேண்டும்.  ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் இல்லாத கல்வியால், ஒழுக்கம் இல்லாத பொருளால் பலனில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நூல்களை கற்பித்துக் கொடுக்க வேண்டும்.

அறம்செய்ய விரும்பு, முயற்சி திருவினையாக்கும்,  எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும், உலகத்தோடு ஒட்ட ஒழுக  வேண்டும், பொறாமைபடக் கூடாது, கனிவாகப் பேச வேண்டும், ஒருவர் செய்த நன்றியை மறந்துவிடக் கூடாது, தீமையை மறந்து விடவேண்டும், தந்தை தாயாரை பேணுதல் வேண்டும், வஞ்சகம் பேசேல், சூதாட்டம் கேடு தரும், செய்வன திருந்தச் செய், தீவினையை அகற்றல் வேண்டும், ஒற்றுமையோடு வாழ வேண்டும், மீதூண் விரும்பக் கூடாது, நேர்பட ஒழுக வேண்டும்,  களவாடாக் கூடாது,  வல்லமை பேசக் கூடாது, கடிவது (கோபம்)  மறக்க வேண்டும், நடுநிலையோடு வாழ வேண்டும் என்ற அறநெறிகளை இந்த நூல்கள் வலியுறுத்துகின்றன.

மேற்குலக நாடுகளில்  இந்த அறநெறிகள் கற்பிக்கப்படுவதில்லை. பணத்தை எப்படிச்  சேகரிக்கலாம், எப்படி பங்குச் சந்தையில்  கோடீசுவரனாகலாம்  என்பது கற்பிக்கப்படுகிறது.

ஆகவே கோவிலுக்குச்  செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதனைச் சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நீண்ட காலம் வாழ முடியும்.  நமது உள்ளம் சுத்தமாக இருந்தால், சுற்றுச்சூழல் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நாம் வாழும் உலகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் அறிவீனம்.

திருவள்ளவர் நிலையாமை பற்றி எழுதும் போது நேற்றிருந்த ஒருவரை இன்று காண முடியவில்லை என்கிறார். மேலும்,

குடம்பை தனித்தொழியப்  புட்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
             (அதிகாரம் – நிலையாமை. குறள் 338) 

பருவம் வந்ததும் முட்டை தனியே கிடக்க அதனுள் இருந்த பறவை பறந்து போவதைப் போன்றதே உயிருக்கும் உடம்புக்கும் உள்ள நட்பு.  

பாரதியார் மரணமிலாப் பெருவாழ்வு வாழ ஆசைப்பட்டார். ஆனால் தனது 39 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.  சாவு இயற்கைதான். அதனை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அமரர் சகுந்தலாதேவி தனது 60 ஆவது அகவையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டாரே. ஏன்? குறைந்தது இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ வேண்டியவர் ஆயிற்றே?

இன்று மருத்துவ அறிவியல் அசுர வேகத்தில் முன்னேறியுள்ளது. தீராது வியாதி என்று கைவிட்ட நோயாளிகள்  காப்பாற்றப்படுகிறார்கள். இருந்தும் அமரர் சகுந்தலாதேவியின் நோயை குணப்படுத்த நவீன மருத்துவ உலகம் தவறிவிட்டது. இதனால்தான் விதி வல்லது என்கிறார்களா?

மருத்துவம் உயிரை நீட்டிக்க உதவும், வலியை குறைக்கும், நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். ஆனால் உலகில் எல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியாது. வாழ்க்கையின் இயல்பு இது.

அன்புக் கணவன், ஆசைக் குழந்தைகள், உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு அளவிட முடியாததாகும். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. காலம்தான் புண்பட்ட மனங்களுக்கு மருந்தாக அமைய முடியும். காலம் அனைவருக்கும் இந்த இழப்பைத் தாங்கும் மனவலிமையை அருளட்டும். சாவு ஒரு பரம இரகசியம்.

Be the first to comment

Leave a Reply